கை வீசுங்க, கை வீசுங்க, ஊருக்குப் போகலாம் கைவீசுங்க.

தர்மினி-

புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள்,போர் முடிந்து விட்டது ,ஆகவே பயமின்றி நாட்டுக்குப் போய் வரலாமெனச் சொல்வதைப் போலவே, இராணுவம் ஊருக்குள் இல்லை என்பதும் தேவையாகவுள்ளது.

இனி வரும் இரு மாதங்களும் வெய்யிலும் வெளிச்சமுமாக மக்கள் கோடையைக் கொண்டாடித் திளைப்பார்கள். எந்தத் திகதியில் எங்கே போவது? எவ்வளவு காலந் தங்குவது ? என்ற அடுத்த இரண்டு மாதங்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து விடுவார்கள்.

கடந்த வாரத்தில் இறுதி வகுப்பு. எங்களுக்கு விடுமுறை ஆரம்பமாகி விட்டது. கடைசி நாளில் எல்லோரிடமும் கேட்கப்பட்ட கேள்வி ‘இவ்வருட விடுமுறைக் காலத்தின் திட்டங்கள் என்ன?” என்பது தான். எங்கள் ஆசிரியர் தனது கோடைக் காலத்தை அழகிய கடற்கரைப் பிரதேசமொன்றில் கழிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். மிகுந்த ஆர்வத்துடன் பிரான்சின் வரைபடத்தைச் சுவரிற் கொழுவினார். அதிலே தான் தெரிவு செய்திருந்த பிரான்சின் மாகாணங்களில் ஒன்றாகவிருக்கும் பிரிட்டனின் (Breton) கடலோர நகரமொன்றைத் தொட்டுக்காட்டி  அது வளைவுகளும் நெளிவுகளுமாகக் கடலோரத்தைக் கொண்டிருப்பதாகவும் படகு விளையாட்டுகளுக்குச் சாதகமான காற்று வீசும் இடமெனவும் சொன்னார்.

ஒவ்வொருவரும் தங்களுடைய நேர அட்டவணை நாட்களிடமிருந்து தப்பித்து, வெய்யில் சுடும் நாட்களைச் சந்திக்கப் போவதையும் தமது திட்டங்களையும் சொல்லிக் கொண்டிருந்தனர். மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் அடுத்துவரும் இரண்டு மாதங்களையும் தன் கிராமத்தில் கழிக்கப் போவதாகச் சொன்னார். அதே போல் அல்ஜீரிய நாட்டவர்கள் தம் நாட்டிற்குச் சென்று தங்குவது பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தனர். இவ்வாறே எகிப்து நாட்டுப் பெண் ஒருவரும் விடுமுறைக் காலத்தை தன்நாட்டில் அனுபவிப்பதைக் கண்கள் விரித்து விபரித்தார்.
ஆனால் , இவர்கள் எல்லோரும்  ஒவ்வொருஆண்டும் சென்று வருபவர்களே. அவை அதிக செலவுகளற்றதும் இலகுவான,  குறைந்த தூரப் பயணங்களுமாக  இருப்பவை.

ஆனால் ,  என் சகாக்களைப் போல அந்நாட்டவர்கள் எல்லோரும் இல்லை.  கோடை காலத்தில் ஓய்வெடுக்கக் கூடிய வேலையிலில்லாதவர்களும் பொருளாதாரத்தில் பின் நிற்பவர்களுமான மொரோக்கோ,அல்ஜீரிய ஏனைய நாட்டவர்களுக்கு இது சாத்தியமில்லைத் தான். அவர்களின் கனவும் ஏக்கமுமாக அது இருக்கும். வேலை, வசிப்பிடம் , செலவுக்குப் பணம் என்று செட்டிலாகி விட்டவர்கள் ஓய்வைக் கொண்டாடிக் கொள்கின்றனர்.

எங்கள் நாட்டிலிருப்பதைப் போல எப்ப? எங்க? நம் உயிருக்கு எதுவும் நடக்கலாமோ? என்ற அச்சமின்றி வெருட்சியில்லாத நாட்களாக அவர்களுக்குத் தம் நாட்டுப் பயணம்அமைந்திருப்பதைப் போல  நானும் கற்பனை செய்து பார்க்க அந்த ஊருக்குப் போகும் பயணக் கதைகள் என்னைத் தூண்டின.

என்ன தான் சண்டை முடிந்து விட்டதாக எவர் சொன்னாலும், அதற்குப் பின்னால் விளக்கும் அரசியற் கதைகளை நினைக்காமல் விட்டாலும், இராணுவம் படை படையாகப் பாய்ந்து வந்ததைப் பார்த்தவர்களுக்கு, கைது செய்து கண்ணைக் கட்டி இழுத்துச் சென்றதை அனுபவித்தவர்களுக்கு அல்லது அதையெல்லாம் கண்டவர்களுக்கு, சரசரவென வானத்திலிருந்து  தலைக்கு மேலே குண்டுகள்  விழுந்த வாழ்க்கை அனுபவித்தவர்களுக்கு, எரிக்கப்பட்டும் சுடுபட்டும் உடல்கள் கிடந்ததைக் கண்டவர்களுக்கு, பாலியல் வன்முறையை  இன்னும் பல கொடுமைகளை  அந்நாட்டில் கேட்டும் அனுபவித்தும் வாழ்ந்தவர்களுக்கு, அந்தப் பச்சை உடுப்புகளும் துப்பாக்கிகளும் பயமுறுத்துபவையாகவே இருக்கின்றன. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள்,போர் முடிந்து விட்டது ,ஆகவே பயமின்றி நாட்டுக்குப் போய் வரலாமெனச் சொல்வதைப் போலவே, இராணுவம் ஊருக்குள் இல்லை என்பதும் தேவையாகவுள்ளது. இதே போல கடற்படை,கட்டுக்குள் அடங்காத படைகளின் அட்டகாசங்கள் பயமுறுத்தும் அனுபவங்களும் இருக்கின்றன.

எமது வகுப்பிலிருந்த தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் லண்டன், யேர்மனி, சுவிஸ், சொந்தக்காரர்களின் வீடுகள் தான் இருந்தன. ஆனால், இப்போது கூட்டங் கூட்டமாகக் கொழும்பில் இறங்கிக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்து வேரூன்றி விழுது பரப்பிய தமிழர்களின், விடுமுறைக் காலத்திற்குச் செல்லும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகி விட்டது. முன்னைய பந்திக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாததாகவே தோன்றும்.அது அவரவர் சந்தித்த துயரங்களின் அளவையும் தப்பித்து வந்து விட்ட காலத்தையும் பொறுத்ததும் மற்றுமோர் நாட்டின் பிரசையாகி விட்ட காரணமுமாக இருக்கலாம்.

அவற்றைத் தவிர  அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாத இலங்கைத் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவ்விதமான உல்லாசப் பயணிகளின் தொகை அதிகரித்தால் அகதி நிலைக்காகக் காத்திருக்கும் தங்கள் விண்ணப்பங்களின் கதி என்னாவது? நாட்டுக்குப் போய் விடுமுறையைக் கழிக்கும் மக்களால் அவ்விண்ணப்பங்களுக்கு உலை வைக்கப்படக் கூடுமென்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, ஏனைய நாட்டவர்களால் கேட்கப்பட்ட கேள்வி ‘உங்கள் நாட்டிலிருந்து வந்து எத்தனை வருடங்களாகின்றன?” நாம் ஒவ்வொருவரும் பதினைந்து,பத்து,எட்டு என்று சொன்னதை அவர்களால் செமித்துக் கொள்ள முடியவில்லை. ‘பெற்றோரைப் பார்க்காமல், உங்கள் வீதிகளில் வேற்றாளாக நானில்லை என்ற உணர்வுடன் உலாத்தித் திரியாமல் எப்படித் தான் வாழ்கின்றீர்கள்?” என்று கேட்டுக் கேட்டுப் பரிதாபப் பார்வைகள் பார்த்தனர்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்களும் வருடத்துக்கொரு தடவை , இரண்டு வருடங்களுக்கொரு முறையெனப் போய் வருவார்கள். எங்கள் ஆசிரியர் ‘பாண்டிச்சேரிக்கு ஒரு தடவையாவது போக வேண்டுமென்பது தன் வாழ் நாள் கனவாக இருக்கிறது” எனச் சொன்னார்.

இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதையிருந்தது. தாங்கள் ஊரைப் பார்க்க முடியாத ஏக்கத்தைத் திரும்பத் திரும்ப அரசியற் பிரச்சனை தங்களைப் பல விதங்களிலுமாக அள்ளிக் கொண்டு வந்து போட்டதைப் போட்டி போட்டுச் சொல்லிக் கொள்கிறோம். பின்வரும் கேள்விகள் அங்கே கேட்கப்பட்டன.

1.  இலங்கைத் தீவில் உங்கள் கிராமம்   தலைநகரத்திலிருந்து       எத்தனை  கிலோமீற்றர் தொலைவிலிருக்கிறது?

2.  மூன்று மொழிகள் பேசும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி என்ன?

3.  பள்ளிக்கூடத்தில் என்ன மொழியில் கல்வி கற்கிறீர்கள்?

குத்து மதிப்பாக அவரவர் ஊர்களிலிருந்து தலைநகரம் இருக்கும் தூரத்தைச் சொன்னோம்.சிங்களமும் தமிழுமென அரசாங்கம் சொல்கிறதாகவும் ,அவரவர் தாய் மொழியில் படித்தோம் என்றும் சொன்னதைக் கேட்டவர், சிங்களவரும் தமிழரும் சந்தித்தால் என்ன மொழியில் பேசுவீர்கள் என்ற கெட்டித்தனமான கேள்வியைச் சரேலென வீசினார்.அதற்காகத் தானே இரு இனத்தவரும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் படித்திருக்கிறோம் என்று விடாமல் சொன்னதும்,அலட்சியமான சிரிப்பொன்றுடன் ஆங்கிலேயர்களின் காலனியின் கீழ் தானா இரு இனங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன? ஏன் பெரும்பான்மைச் சமூகத்துடன் கலந்து முன்னேற அவர்களது மொழியைக் கற்காமல் விட்டீர்கள் ? என்றவர் தொடர்ந்து, ‘பிரான்சிலும் முன்னர் ஏறக்குறைய ஆறு பிரதான மொழிகளும் அவற்றின் உட்பிரிவுகளுமாகப்  பாவனையில் இருந்தன. ஆனால் , தற்போது பிரெஞ் மட்டுமே என்ற நடைமுறையால் நாட்டின் சகல பகுதியினரும் பின் தள்ளப்படாமல் அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சலுகைகளும் உரிமைகளும் பெற்று சிறுதொகையினர் என்ற அடைப்பிலிருந்து மொழியினால் ஒன்றாக்கப்பட்டு எல்லாவற்றிலும் பங்களிக்கக் கூடியதாக இருக்கிறதெனச் சொல்லியவர், இதுவரை காலங்களாகப் பல பேச்சு வார்த்தைகளும் ஒப்பந்தங்களும் ,இந்தியாவும் நோர்வேயும் தலையிட்டும் தீர்த்து வைக்கப் படாத இலங்கைத்தீவின் இனப் பிரச்சனையை, அதை மிக இலகவாக முடித்திருக்கக் கூடிய கருத்தொன்று சொல்கிறேன் என இவ்வாறு சொன்னார் .  “இலங்கை மக்கள் எல்லோரும் ஒரே மொழியில் கல்வி கற்பது ஒன்றே இதற்கான ஒரே தீர்வு”.  இதைச் சொல்லி விட்டு பெரும் அலையொன்றுக்கு எத்துப்பட்டு தூக்கியெறியப்பட்ட படகைப் போல உதடுகளை ஒரு பக்கம் சாய்த்து     வெற்றிச் சிரிப்பொன்றை முற்றுப் புள்ளியாக்கினார்.

மக்கள் புரட்சி செய்து சனநாயகம் பிறந்த  பிரான்ஸ் நாட்டில் அது சாத்தியமே. மக்களுக்கு எல்லா உரிமைகளுக்கும் வழிவகை செய்த பின்னர் ஒரு மொழியின் கீழ் ஒன்றித்தலில் பிரச்சனையில்லைத் தான். பொருளாதாரமும் மக்களிடையிலான உயர்வு தாழ்வும் சமனில்லாத நாட்டில் அவரவர் மொழியைக் கைவிட்டு விடுதல் அடக்கப்படுதலையும் ஒடுக்கப் படுவதையும் பலப் படுத்துமேயன்றி வேறென்ன? வலிந்து திணிக்காத மொழி தான், இனங்களை ஒன்றாக்கும். இங்கே மொழியல்ல உரிமையே பிரச்சனைகளுக்கான காரணமாகி நிற்கின்றதென எங்களுடைய நாட்டில் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளிலிருந்து தொடர்ந்த வரலாறு சொல்ல அந்த ஒரு நாள் போதுமானதாயில்லை.

One thought on “கை வீசுங்க, கை வீசுங்க, ஊருக்குப் போகலாம் கைவீசுங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s