தர்மினி

ஒரு கவிதை, கதை அல்லது கட்டுரையோ
எதுவாயினும் நானெழுத
எனக்குத் தரப்பட்ட காலக்கெடு
நாற்பத்தெட்டு மணி நேரங்கள்.

இப்போதைக்கு ,
ஏறத்தாழ இருபத்து நான்கு மணிநேரங்கள் முன்னதாக
என் கட்டிலைச் சுற்றியிருந்த இருட்டில்
சோர்ந்து போன உடலை மீறி
சொற்கள் சுறுசுறுப்பாக ஊரத் தொடங்கியிருந்தன.

நாற்சுவர்களிலும் படர்ந்திருந்தன.
சன்னற் சீலைகளில் ஆடின.
உச்சிக்கு நேராகத் தொங்கிய விளக்கில்
மிச்சங்களும் ஒட்டியிருந்தன.

அவற்றைச் சேகரித்து
இருளில் சிந்தும் என் கதையொன்றை
என்னை விளங்காத உனக்குச் சொல்லி
செருக்காய்ப் பரிசொன்று பெறுதல்
என் திட்டம்.

அப்பொழுதை இழக்கப் பிடிக்காத
என் காலருகில்
தலையணை கீழ்
எழுதத் துண்டுக் கடதாசியில்லை.
அசைவில் குலைந்துவிடும் வார்த்தைகளை நினைத்து
நான் கட்டிலில்.
மனப்பாட வரிகளுடன்
என் கதையை இறுக்கிச் சேர்த்து
உறங்கி விழித்தலில்
ஒரு குறைக் கனவைப் போலவும்
எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.

இதோ சரியாக
இப்போதிலிருந்து இருபத்து நான்கு மணிநேரங்கள் முன்னதாக
அதை எழுதி முடித்திருந்தேன் என்பதையாவது
அறிவிக்கின்றேன்.

Advertisements