தர்மினி

நெருப்பருந்தி வித்தைசெய்து                                                                                                                             தின்று தீர்க்க முனைதல்   -அதெல்லாம்                                                             எண்ணிப் பிழை விட்ட கணக்கு .

வெறும் மாய்மாலம் – வெளிவேசம்
நினைத்துப் புளித்துப் போக
எல்லாம் போகட்டும் போ.

ஒரு குற்றத்தைப் போல பல.
நீவிர் நிந்தைகள் செய்ய -அதை
மென்று தீர்க்கும் என் ஆசைகள்.

போகட்டும் போதுமென்று பொய் சொல்லவா?
தூரத் தொலைவீர்
என்னை மெய் கூறச் சொல்வோர்.

அது கிடக்கும்
கொழுப்பெடுத்த என் கேடுகெட்ட கதை.

ஆனால் விட முடியாது
பேச்சு
சுற்றிச் சுழன்று ஒன்றே தான்.

போகட்டும் போதுமெனப் புளுகவா?

நித்திரையில் வந்து
வீட்டின் மேல்
முகிலில் மிதந்து
நின்று போகும்  வெளிச்சமெனக்  கதை கேட்பீர்.

அது அடிக்கடி வரும் நிலவென்று
கவர்ச்சியாய் வைப்போம்-
சுகமான உதாரணம்.

முகடு உரசி ஒழிந்து
தொலைந்திடுமாம்.
விடியலில்
நானறியாப் பொழுதென்று விட்டுவிட
அதை  நான் எழுதுதல்…… நடவாது.

கழுத்துக்குள் கனத்து நிற்க
என்ன சொல்ல?
போதும் போ.

இரவு என் அறைக்குள் இறங்கிக் கொஞ்சம்
கொட்டி விட்டா போகும்?

உடைந்த சுவரால் எட்டிப் பார்க்க
கசக்கி எறிந்த கடதாசியில்
கீறிக் கிடக்கும்
அமாவாசை இருட்டொன்று.

கழுத்துக்குள் கனத்து …….
என்ன சொல்ல?
போதும் போ.

Advertisements