தர்மினி

ஒரு வருடத்திற்கு முன்னரே “நாடோடிகள் நல்ல படம்” என்று பலரும் சொன்னார்கள். அதைப் பற்றித் ‘திறமான ‘ திரைப்படமென விமர்சனம் எழுதினார்கள். நானும்  இவை போன்ற ஆர்வமூட்டல்களாலும்-ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா – பாட்டைக் கேட்டதிலிருந்தும் அப்படத்தைப் பார்க்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். வெய்யில், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், பூ, பசங்க, வெண்ணிலா கபடிக்குழு வரிசைப்படங்களில் வைத்துக் கதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது தான் நாடோடிகள் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் அப்படத்தைப் பார்க்கத் தொடங்கியதிலிருந்து நல்ல குணமாக ஒரே நினைப்புடன் நல்ல படத்தைப் பார்க்கிறேன் என்று நம்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் , சொல்வழி கேட்காமல் என் இரசனை குழப்படி செய்து இடறி இடறிப் போனது.மற்றவர்கள் சொல்லை மதிப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, காலங் கடந்தாலும் பரவாயில்லையென்று ஏமாந்து போனதைஎழுத முடிவெடுத்தேன்.

இயக்கம் சமுத்திரக்கனி. கிராமம் ஒன்றைக் கதைக்குள் கொண்டு வந்து விடுவதும் அதனால் அப்படம் எளிமையாகத் தெரிவதும்  அப்படத்தைச் சிறந்ததொரு படமென்று பரவலாகக் கதைக்க வைக்கிறது போலிருக்கிறது. இயல்பான பாசாங்கற்ற வாழ்வை அடிமனம் விரும்புவது கூட இயற்கையோடிணைந்த கிராமப் படங்கள் என்றவுடன் நல்லது என மேலோட்டமாகச் சொல்லி விட்டு போகக் காரணமாகவிருக்கலாம். அன்றாட வாழ்வில் சவால்களை எதிர்கொள்ளும் எளிய மக்களின் கதையொன்று செருகப்பட்டுவிட்டால் தரமானதெனச் சனங்கள் இரசிப்பரென்று முன்முடிவுகளுடன் படம் எடுப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகின்றது.

சிறிது காலத்திற்கு முன்னர் வரை மலையாளத் திரைப்படங்கள் இத்தன்மைகளுடன் எடுக்கப்பட்டதால் அவை அழகியலும் யதார்த்தங்களும் நிறைந்த சினிமாக்களெனப் பார்க்கப்பட்டன. இப்போது தமிழ்த்திரைப்படங்கள் எளிமையான மக்களையும் கிராமத்தையும் காட்டத் தொடங்கி யதார்த்தம் நிறைந்த கதைகளுடன் வளரத் தொடங்கி விட்டதாக மகிழ்ந்து போய்விட்டார்கள்.

அப்படியான ஆரோக்கியமான சினிமா தான் நாடோடிகளென்று ஏன் சொல்லப்பட்டது? மூன்று நண்பர்கள் சேர்ந்து பாடுபட்டு மற்றுமொரு நண்பனுக்குக் காதல் கல்யாணத்தைச் செய்து வைக்கத் தங்களுடைய உடல், உத்தியோகம் , காதல் ,கல்யாணம், வெளிநாட்டுப் பயணம் என்று அனைத்தையும் துச்சமாக மதித்துப் புறப்படுகின்றார்கள். அறிந்த நாலைந்து நடிகர்களைத் தவிர்த்து மற்றைய அனைவரும் புதுமுகங்களாகத் தெரிவதும் கூட பாத்திரப்படைப்புகள் பற்றிய முன்அனுமானங்களின்றிப் படம் பார்க்கும் சுவாரசியத்தைத் தருகின்றது. எல்லாவற்றையும் மீறி அதிலிருக்கும் முக்கியமான தொனியைக் கவனிக்க மறந்தவர்களாகவே இரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பாராட்டி எழுதியுமிருக்கிறார்கள்.
கர்ணா என்ற கதாபாத்திரம் மாமன் மகளை லூசு…லூசு என்று படம் முழுக்க விளித்தபடியே இருக்கிறது. அக்தாபாத்திரத்தின் பெயரே ஞாபகத்திற்கு வரமுடியாதளவு லூசு என்றும் மிகமலிமையான மாமன் மகளாகவும் தோன்றச் செய்ய கதையில் எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை.அலட்டுத்தனமான எல்லாப் படங்களிலும் இருப்பதைப் போல மாமா…மாமா என அப்பெண் துரத்தித் திரிகின்றார்.அக்காட்சிகளில் ஒன்று கூட உருப்படியாக இல்லை. அப்பெண்ணை ஏளனப்படுத்தும் செய்கைகளாலும் வார்த்தைகளாலும் கர்ணா கேவலப்படுத்துவது தான் அதிகமாகத் தெரிகின்றது. ‘அது லூசு சார்” என்ற வசனம் எல்லாம் தேவையின்றி அப்பெண்ணை ஏளனஞ் செய்வதாகும். உண்மையாகவே எவ்வித எதிர்மறை எண்ணங்களுமற்றுப் படம் பார்த்தால் ஆரம்பத்தில் இவ்வாறான காட்சிகள் இன்னுமோர் திசைக்கு மெதுவாக நகர்த்திக் கொண்டு போனது.
ஆபாசமெனவும் அரைகுறை ஆடைகளெனவும் சொல்பவர்களுக்குப் படம் முழுக்கப் பாவாடை தாவணியோடு வசனங்களிலும் உடல் மொழியிலும் அப்பெண்ணை ஆபாசமாகக் காட்டியிருப்பது தெரியவேயில்லை போல. நல்ல படம் என்ற அடைமொழியிலிருந்து அந்நியப்பட்டு நிற்க வைக்கின்றன பல காட்சிகள்.

ஆயினும் , இப்படம் முழுவதும் பிடித்து இருத்தி வைத்திருப்பது பாண்டி  கதாபாத்திரம் ஒன்று மட்டுமே. கிளிஞ்சல்கள் திரைப்படத்தின் -விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்- பாடலை இனிக் கேட்கும் போதெல்லாம் பாண்டி தான் நடனமாடுவார்.ஆர்ப்பாட்டம், கத்தல், குளறல் எதுவுமில்லாத நகைச்சுவையும் முகபாவங்களும் எனப் பாண்டியை மட்டுமே உருப்படியாகக் காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி . பரணி தான் நல்ல நடிகரென நிரூபித்திருக்கிறார்.பாண்டி தான் இறுதி வரை நான் அப்படத்தைப் பார்க்கக் காரணகர்த்தா.

ஆரம்பம் இப்படிப் போகிறதென்றால் நாடோடிகள் திரைப்படம் சாறு பிழிந்து எடுத்து வைக்கும் கதையின் சக்கை -கல்யாணம் கட்டிய பின்னர் பிரியக் கூடாது-. இதைச் சொல்ல நண்பர்கள் , நகைச்சுவை , வெட்டுக்குத்து, கடத்தல், கால் போவது ,காது செவிடாவது என்று சமுத்திரக்கனி கஷ்ரப்பட்டிருக்கிறார்.
இதைத் தானே நாட்டிலே வீட்டிலே காலங்காலமாகச் சொல்லி வந்தனர்.காலாவதியாக வேண்டிய மையக் கருவை எடுத்துப் ‘பிரியக் கூடாது பேசாமல் குடும்பம் நடத்தவேணும்” என அறிவுரை சொல்லும் பிற்போக்குத்தனமான படமிது.

‘அவனவன் தன் கல்யாணத்தை வேலைவாய்ப்பை இழந்து வீட்டில் திட்டை வாங்கிச் சினேகிதனுக்குப் பொம்பிளையைக் கடத்தி வந்து கல்யாணஞ் செய்து வைத்தால் நீங்கள் கொஞ்சக் காலம் வாழ்ந்து பார்த்து விட்டுப் பிடிக்கவில்லை பிரிந்து போவோம் என்று சுலபமாகப் போய்விட முடியுமா?’ இது தான் நாடோடிகள் படத்தின் நாலு பேருக்கு நல்லது சொன்ன கருத்து. இதைத் தான் பெற்றவர்களும் உடன்பிறந்தவர்களும் ஊரும் கல்யாணம் செய்த சகலரையும் பார்த்து எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதிலென்ன புதுமையை இல்லாததைப் விளங்காததைப் பார்த்ததாக நாடோடிகள் படம் நல்லதென்று வதந்தியைப் பரப்பினார்கள்?

நண்பர்கள் தம் நலன்களையிழந்து இரத்தஞ் சிந்திக் கடத்திக் காதலித்தவர்களை ஒன்று சேர்த்ததை நியாயப் படுத்துவது போலவே தான் , பெற்றவர்கள் தம் பக்க நியாயங்களைச் சொல்லிப் பிரியக் கூடாதென்கிறார்கள். எதுவானாலும் என்னவானாலும் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டு காலந்தள்ளிக் கிழண்டிச் சாவதே மேலானது ,கௌரமானது எனக் குடும்பமும் சமூகமும் மிரட்டுவதைப் போலவே நாடோடிகளில் சினேகிதர்கள் மிரட்டுகின்றார்கள்.

காதலித்துக் கல்யாணம் செய்தால் மட்டும் பிரியவே கூடாதா? வெறும் மடைத்தனம். ஒன்றாக வாழும் போது ஏற்படும் முரண்களில் பிரிந்து, அவரவர் வீடுகளில் இயல்பாக வாழத் தொடங்கும் அந்த ஆணையும் பெண்ணையும் மீண்டும் கடத்தி வந்து கட்டாயப்படுத்தி வாழ வைக்க வேண்டுமென்கின்றனர் நண்பர்கள். அதெப்படி நாங்கள் கஷ்ரப்பட்டுக் கடத்திச் சேர்த்து வைக்க நீங்கள் பிரியலாம்? சண்டை பிடித்துப் பிடித்துச் சாகும் வரை வாழ்ந்து தீருவதே வழியென மூர்க்கமாக அவ்விருவரையும் திரும்பவும் கடத்தி வந்து ஒரு பொட்டலில் தட்டத் தனியே விட்டுவிட்டுப் போகிறார்கள் நாசமாகப் போன நண்பர்கள். இனிமேலும் எவராவது நல்ல படங்களுக்கு உதாரணம் சொல்லும் பட்டியலில் நாடோடிகளைச் சேர்க்கக் கூடாதென்ற ஒரு ஆவேசம் தான் இதை எழுதக் காரணமாக இருந்தது.

Advertisements