கொல்கொத்தா என்னும் மண்டையோடு.
அவருக்கு அறையப்பட்டவை
மூன்று ஆணிகளா?
அப்படித்தான் இருக்க வேண்டும்.
வலது ,இடது கைகளிலாக இரண்டு ஆணிகள்.
இருகால்களும் சேர்த்துப் பாதங்களின் மீதாக மூன்றாவது.
மேலுமதிகமாக முள்முடி.
சிலுவையென்ற தண்டனை மரத்துண்டங்களில்
உயிர் போக அறையப்பட்டவை.

அது
இரண்டாயிரத்துப் பத்து வருடங்களாக நீண்டும்
மனிதர்களை இரட்சிக்க  அறைந்த மூன்று ஆணிகளாம்.

ஆரியவதிக்கு                                                                                                                                           இருபத்து மூன்று மிக அதிகம்.
இரத்தமும் சீழும் சிந்தியது ஒரு குடிசைக்கு.

அவர்கள்-
பணப் பெட்டகங்களிலிருந்து ஆணிகள் பிடுங்கி
ஊழியக்காரிக்குக் குற்றங்களைப் பொறித்தனர்.

வீட்டுப் பணிப் பெண்களாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களால் அந்நியச் செலாவணியைச் சம்பாதிக்கும் அரசு அவர்களது பாதுகாப்புப் பற்றி அக்கறைப்படுவதேயில்லை.இது மட்டுமல்ல முன்னரும் பணிப் பெண்களைக் கொடுமைப்படுத்துவது ,கொலை செய்வது ,நோய்ப்பராமரிப்பின்றிக் கைவிடுவது, பாலியல் துன்புறுத்தல்களை வேலை செய்யும் வீட்டுரிமையாளர்கள் செய்வது, சம்பளங் கொடுக்காமல் உடல் முறிய வேலை வாங்குவது எனப் பல பெண்கள் நாடு திரும்பித் தங்கள் துன்பக் கதைகளைச் சொன்ன போதும் அந்த ஏழைப் பெண்களின் மீது அரசு அக்கறைப்படவேயில்லை. உண்மையாகவே சரியான நடவடிக்கைகளை எடுத்திருப்பின் பலர் துயருற்று ஏமாற வேண்டியதில்லை. உடல் வருத்திய பணத்தை வேண்டாம் என்று, தப்பிப் பிழைத்தால் போதுமென மீளவும் வறுமையோடு வாழத் திரும்ப வேண்டியவர்களாக அப்பெண்கள் இருக்கிறார்கள். ஏழைத் தாய்மார்கள் மொழி தெரியாத வழி அறியாத நாடுகளில் உழைப்பின் பெறுமதியை விடக் குறைந்த தொகைக்கு ஓய்வற்று உழைத்துத் தங்கள் குழந்தைகளை வளர்க்கப் பாடுபடுகிறார்கள்.பணத் தரகுக்காகச் சரியான முறைப்படி ஒப்பந்தங்களை மேற் கொள்ளாமல் அப்பெண்கள் வேலைக்காரிகளாக இறக்கி விடப்படுகின்றார்கள். அறிவுறுத்தல்கள் , உதவி வேண்டித் தொடர்பு கொள்ள வழிவகை இல்லாமல் சிறைப் பட்டவர்களாக வாழ நேரிடுகிறது.

பணம் கொழுத்தவர்களால் தமது சொந்த வீட்டில் சமைக்கவோ பிள்ளைகளைப் பராமரிக்கவோ சோம்பேறித்தனம் பெருகிக் கிடக்க.ஒரு பெண்ணால் அத்தனை வேலைகளும் முடிக்கப்பட வேண்டுமெனக் கட்டளைகளிடப்படுகின்றன. கூலி கொடுக்கும் முதலாளி என்ற திமிரும் எவருமற்ற இன்னொரு நாட்டவள் என்ற ஏளனமும் இருபத்து மூன்று ஆணிகளை அடித்துக் கொடுமை செய்து வேலை வாங்குகின்றன. இது பணம் குவிந்த மிதப்பில் முளைத்த வன்முறை.மனிதர்களை இரக்கமற்றவர்களாக மாற்றி ஏழையின் எளியவளின் துயரைச் சற்றும் உணர முடியாத மேல்தட்டு வெறி. ஒருவருக்குத் தோன்றும் வன்முறையல்ல இது. எசமானர்களாகிய எல்லோரிடமுள்ள குரூரங்கள் இவை.வெவ்வேறு வடிவங்களில் எல்லா இடங்களிலும் நாடுகளிலும் ஒவ்வொரு வகைக் கொடுமைகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னிலும் குறைந்த மனிதரை மற்றுமொரு உயிரியாகப் பார்க்காத பணக்கார முதலாளிகள் இருக்கும் வரை அடிமைகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக நாகரிக மனிதர்கள் கதைக்கக் கூடாது.
தர்மினி

Advertisements