-மோனிகா

காற்றில் மிதந்தபடி இருக்கிறது

என் கனவு மரம்.

அதற்கு நேரமோ, இடமோ இல்லை

நல்லதொரு மனசாட்சியோ இருப்பதாய்

எனக்குத் தெரியவில்லை.

முற்றத்து நிழல் நோக்கி பாய்ந்த

அதன் கிளைகளில் படபடத்தவாறு

பேசிக்கொண்டிருக்கும் புறாக்கள்

கறுப்பு வெள்ளையென பிராய்டு சொல்கிறார்.

வான் நோக்கி வளரும் அதன்

பரந்த கிளைகளூடே அது வளர வளர

ஓடியவாறும் ஒளிந்தவாறும் செல்கிறான் ராஸ்கல் நிகோவ்.

கிளையின் உயர்ந்த்தொரு பூக்கற்றையின் அருகே

நிலவைப்பார்த்து நீண்ட்தொரு மாலையின் ராகத்தை

இசைத்தவாறிருக்கிறாள் யமுனா.

கிளையின் பொந்தொன்றில் அமர்ந்து தனது

இருபத்துமூன்றாவது காதலியிடன்

விழுப்புண்கள் பற்றி

கதைத்துக் கொண்டிருக்கிறான்

ரொக்கிராஜ்.

அடியிலுள்ள வேர்களிலமர்ந்து சருகுகள் சரியாவண்ணம்

சேகரித்து வைக்கிறாள் ஒரு தாய்.

நாளடைவில் கனவின் நிலப்பரப்பும்

பரிச்சயமாகிப்போகவே

கண்திறத்தலுக்கு அவசியமே இல்லாமல்

ஒரு தேர்ந்த குருடியைப்போல

கிளைகளினூடே

நடைபயில்கிறாள் என்னுள் ஒருத்தி.

Advertisements