தூமை – கற்பனைகளும் கட்டமைப்புகளும்

-மோனிகா-

தூமை குறித்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அறிய சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைகழகத்தினால் நடத்தப்பட்ட வளர்சிறுமிகளுக்கான கையேடு தயாரிக்கும் கருத்தரங்கு பெருமளவில் உதவியது. பல்கலைக்கழகத்தின் பெண்கல்வித் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கிற்கு பேராசிரியைகள், தாய்மார்கள், கிராமத்துச் செவிலியர்கள், அங்கன்வாடிப் பொறுப்பாளர்கள், பள்ளிச் சிறுமிகள், உடல் ஊனமுற்ற பெண்கள், பெண் மருத்துவர்கள் என பல தரப்பினர்களும் வந்திருந்தனர்.

சில பல குழுக்களாகப் பிரிந்தும் ஒன்று சேர்ந்தும் அனைவரும் தூமை, மாதவிடாய் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ‘மாதவிலக்கு’ என்ற வார்த்தைக்கான புரிதலிலேயே தவறு இருப்பதாலும் பெண்கள் தனியே விலக்கப்படுவது குறித்தும் இது கருதப்படுவதாலும் மாத விடாய் என்பதே சரியான சொல்லாக இருக்க முடியும் என பலர் கருத்துக் கூறினர்.

மாதவிடாயின் அறிகுறிகளான வெள்ளைப்படுதல், முகப்பரு வருதல், கடுமையான வயிற்றுவலி,  ஒற்றைத் தலைவலி போன்றவற்றைப் பற்றிக் கருத்து கூறுகையில் வெள்ளைபடுதலைக் குறித்து, பெண்கள் பயப்படத் தேவையில்லை என்றும் அது தயிர் புளித்தலைப் போன்று ஒரு அமிலத் தன்மையின் மாற்றம் என்றும் மருத்துவர் மீரா கூறினார்.

மற்றபடி, வயிற்றுவலி மற்றும் ஒற்றைத்தலைவலி போன்றவை உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு நடப்பவை என்பதால் அவற்றுக்கு உகந்த மாத்திரைகளை உட்கொள்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறினர். மாதவிடாயின்போது கருத்தரிப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் முகமாகக் கருப்பையின் சுவர்களைச் சுற்றி ஒரு திரை ஒன்று உருவாகிறது. இது கருத்தரித்தால் அதனைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னரே உருவாக்கப்படும் ஒன்று. கருத்தரிக்காத பட்சத்தில் ஒரு குறிப்பிட்ட நாளன்று தானாகவே இது வெளியேறத் தொடங்கிவிடுகிறது. அப்படி வெளியேறும் போது அது சுருங்கியும் விரிந்தும் அந்த இரத்தத் திரையை/படலத்தை வெளியேற்றுவதனால் வலி உண்டாகிறது. அந்த நாட்களின் உடல் பலகீனமாகவும் மென்மையாகவும் இருப்பதால் தலைவலி போன்றவை உண்டாகின்றன. எனவே, இந்த நாட்களின் வழக்கத்திற்கு அதிகமாக ஓய்வு தேவைப் படுகிறது அந்த ஓய்வே பிறகு தீட்டெனக் கொள்ளப்பட்டு பெண்களை ஊருக்கு ஒதுக்குப் புறத்திலோ அல்லது வீட்டு புழக்கடையில் மின்சார வசதி கூட இல்லாத ஒரு இடத்திலோ சென்றமர்த்துவது போன்ற பழக்கங்கள் நாளடைவில் தோன்றின.

முதல் முதலில் பூப்படையும் பெண்களைத் தனியே உட்கார வைத்து விடுவது அதுவரை முட்டையே சாப்பிடாத பெண்களையும் பச்சைமுட்டை சாப்பிடுமாறு தினமும் கட்டாயப் படுத்துவது நல்லெண்ணையைக் கொடுத்துக் குடிக்கச் சொல்வது , மாமன் வரும்வரை சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவது போன்ற வழக்கங்கள் மாதவிடாய் புரிதலுக்கு ஆட்படவேண்டிய பெண்களை மேலும் அச்சத்திலாழ்த்துகின்றன.

மாதவிடாய் குறித்த மூடப்பழக்க வழக்கங்களோ ஒன்றோ இரண்டோ அல்ல.

1.   அந்நேரத்தில் ஆண்கள் தங்களைப் பார்த்து விட்டால் பரு உருவாகும் என்பதால் தலை குனிந்து யாரையும் பாராமல் நடக்கவேண்டும்.

2.   அந்த நேரத்தில் பெண்கள் சாப்பிட்டு மீதம் வைக்கும் உணவை நாயோ பூனையோ சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பிறக்காது.

3.   கீரை விதையைக்கொடுத்து குடிக்கச் சொல்லுதல். சில சமயங்களில் அதனுள் புழு பூச்சிகள் இருக்கவும் வாய்ப்புண்டு.

4.   தூமைச் சீலையை பாம்பு தீண்டினால் தோஷம்.

5.   கழுகு அதன் மேல் பறந்து கழுகின் நிழல் விழுந்துவிட்டால் தோஷம்.

6.   இஸ்லாமியக் குடும்பங்களில் குங்கிலியத்தை பாலில் கலந்து கொடுப்பது. துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்காக.

7.   எச்சி இறக்கவைக்கும் தூமை துடைக்க வைக்கும் என்ற பழமொழி.

8.   சுடுகாட்டின் பக்கம் போனால் காத்து கருப்பு பிடித்துக் கொள்ளும்.

9.   கோயிலுக்குப் போகக் கூடாது.

10.  தீட்டுடன் சொல்லாமல் யாரும் வீட்டில் இருந்துவிட்டால் பூரான், தேள் போன்றவை வரும்.

11.  தீட்டுப் பட்ட பெண்கள் பிறந்த குழந்தைகளைத் தொடலாகாது.

12.  தாய் , பெண்ணின் தீட்டைப் பார்க்கக் கூடாது.

13.  பார்ப்பனீய மரபில் பெண்கள் ஆண்களை விட்டு பத்தடி தள்ளியே இருக்கவேண்டும். வீட்டிற்குள் வரலாகாது. நான்காம் நாள் குளித்துவிட்டு வரும்போது பயன்படுத்திய பாய், தலையணை, படுக்கை பாத்திரம் எல்லாவற்றையும் மஞ்சள் நீர் தெளித்தபின் கழுவிவிட்டு தலைக்குக் குளித்தபின் வீட்டினுள் வரவேண்டும்.

இது மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் இதுகுறித்த பல மூட நம்பிக்கைகள் இருந்து வந்தன. அருகின்றன.

ஆப்பிரிக்கர்களிடையே பெண்களில் காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக வயிற்றிலும் இனப்பெருக்க உறுப்புகளிலும் தையல் போட்டுக் கொள்கின்றனர். பாலை வனத்தின் நடுவே உள்ள மாலி நாட்டில் பெண்களுக்காக ஊரின் வெளியே கூரையில்லாத ஒரு தனிக் குடிசை அமைக்கப்படுகிறது.

யூதர்கள் வழக்கப்படி தாய் முதல் முதலாக பூப்படைந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட வேண்டுமாம். வேற்று ஆடவர்களுடன் தவறில் ஈடுபட்டுவிடாதே என்பதற்கான ஒரு அறிவுரை குறித்த சடங்காம் இது. நம்மூரிலும் தாய்மார்கள் பூப்படைந்த பெண்ணைப் பார்த்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதும் அது என்னென்று தெரியாமல் அப்பெண் பேந்த பேந்த விழிப்பதும் வழக்கமான ஒன்று.

பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ஐரோப்பாவில் தூமைச் சீலைகளை மாதவிடாய் நிற்கும்வரை துவைக்கக் கூடாது. அப்படி துவைத்தால் அது நின்றுவிடும் என்ற நம்பிக்கை நிலவியதாம். தெற்கு அமெரிக்க பழங்குடியினர் மனித இனம் நிலாவின் இரத்தத்தில் உருவானது என்ற கருத்தினைக் கொண்டிருந்தது. எகிப்தியர்களோ மாதவிடாயின் இரத்தப்போக்கு பற்பல அழகிக் குறிப்பிற்கு பயன்படுத்தப்படலாம் என்று கருதினர்.

பல்வேறு உரையாடல்களுக்கு நடுவில் தூமை குறித்த விழிப்புணர்வையும் சுகாதாரத்தையும் பள்ளி, கிராமப்புற மக்களுக்கு எடுத்துச் செல்வது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அது குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. வந்தவர்களிலேயே கிராமப்புற அங்கன்வாடி சேவகர்களின் நேர்மையும் அக்கறையும் என்னை வியப்படையச் செய்தது. அவர்களது ஆழ்ந்த ஈடுபாடும் கடின உழைப்பும் நகரத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்தால் நகரம் இப்படி நரகமாக இராது எனத் தோன்றியது. விலை அதிகமாததால் மக்களுக்குக் கிடைக்காமல் போகும் நாப்கின்களை மலிவு விலையில் தயார் செய்யும் சுய உதவிக் குழுக்கள் பல வந்திருந்தன. அதில் ஹெச். ஐ. வியால் பாதிக்கப்பட்டோரால் நடத்தப்படும் யூனிட்டுகளைப் பற்றிக் கேட்க ஆச்சரியாமாகவும் அதே நேரம், மகிழ்ச்சியாகவும் இருந்தது. திண்டுக்கல் காந்திகிராமத்தினைச் சார்ந்த ரேவதி அவர்களைக் கொண்டு “ப்ளை ஆஷ்” எனப்படும் ஒரு வகை செங்கல்கள் தயாரிக்கும் ஆலையும் நடத்தப்படுவதாக்க் கூறினார்.

இனி எல்லோரும் சகஜமாக தலைவலி கால்வலி என்பதுபோல் பேசக் கூடிய ஒரு விடமாகவே மாதவிடாயும் மாற்றப்படவேண்டும் அதைப்பற்றிய புரிதல் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் ஏற்படவேண்டும் என்ற உணர்வுடன் இப்பட்டறையை விட்டு அனைவரும் வெளியேறுவதை என்னால் பார்க்க முடிந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s