தர்மினி

பெரும்பாலும் பிரசுரிக்கப்பட்ட புகைப்படங்களிலும் அட்டைப்படங்களிலும் எழுத்தாளர்கள்  மேசைக்கு முன்னால் ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டிருந்து கன்னத்தில் கை வைத்துக் கொண்டோ ,  நாடியைத் தாங்கிப் பிடித்தபடியோ அல்லது பேனையை எழுதுவதைப் போல கையில் பிடித்துக் கொண்டோ பாவனை செய்தபடியே   போஸ் கொடுக்கிறார்கள்.  ஆமாம், அப்படியிருந்து எழுதுவதை நினைத்தால் அழகான ஒரு சம்பவமாகத் தானிருக்கிறது.  அதுவொரு ஓவியம் போன்றதொரு காட்சியாகத் தோன்றுகிறது.  இல்லையேல் , ஒரு  புகைப்படக்காரரின் திட்டமிட்ட கணமொன்றைக் காட்டுகின்றது. அந்தச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களாகப் பல பெண்களுக்கும்  சூழல் அமைவதில்லை.  பீறிட்டெழுந்து பேனா மையிலிருந்தோ கீபோர்ட்டிலிருந்தோ எழுத்துகளாக உதிருமா? எவராவது குறுக்கீடு செய்யும் எழுதும்  நேரத்தில் ,அதிகாரத் தொனியில் அடக்குவது கூட பெண்ணுக்கும் ஆணுக்குமாகப் பெரும் வேறுபட்ட பார்வையில் தான் பார்க்கப்படும்.அதுவும் பெண்களாயிருந்தால் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து விட்டு மிஞ்சிய நேரத்தைத் தன் திருப்திக்காக என்று செலவளித்தால் அதைப் பொழுது போக்காகக் கூடக் கணக்கிலெடுக்க மாட்டார்கள்.அவளை நேரத்தை அநியாயஞ் செய்யும் குற்றவாளியைப் போல தான்  குடும்பத்தினர் பார்க்கப் பழகியிருக்கின்றனர்.
அது போலவே உணர்வுகள் உருப்பெறும் விடயத்தை , எவராவது கெடு விதித்து எழுதுமாறு சொல்வது அந்நாள் தூக்குத் தண்டனை  நாளைப் போன்று நினைத்து நினைத்து வதைபட வைக்கும் செயலாக மனசிலிருந்து பிதுக்கி எடுக்கும் விருப்பற்ற ஒரு செயலாகவிருக்கும். ஆனாலும், ஒரு படைப்பாகி நிறைவுறும் போது பெரும் களைப்புத் தீர்ந்ததாக இருக்கிறது. பெண்களுக்கு வாயாலோ எழுத்திலோ வெளிப்படுத்த வழி கிடைத்து விட்டால்  வாழ்வதற்கு மற்றுமொரு நாள் அதிகரித்து விட்டதாகும்.

அள்ளியள்ளி வழங்கும்
என் கைகளிலிருந்து
காற்றில் பறக்கின்றன
நமக்கான வாக்கியங்கள்.

அலட்சியமாக
நீ ஒரு விரலால் தட்டிச் செல்ல

அதெல்லாம் மழைத் துளிகளைப் போல
உடல் மீது பட்டு வழிகின்றன.

அவை எனக்கு மட்டுமாக
இரகசியத்தைப் பேசுகின்றன.

மலர்ச்சியை முளைவிட அது போதும்.

Advertisements