தர்மினி-

என் தோழி ஆவேசமாக ஒரு வேண்டுகோளை வைத்தாள்.

எந்திரன் பற்றி  உடனடியாக எழுதுவதை  அவ்வளவு தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன என்றேன். அத்திரைப்படம் வெளியாக முன்னரே அப்படியொரு ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றது . அத்திரைப்படம் மட்டுமே மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காவிக் கொண்டு வந்திருப்பதைப் போன்ற ஆவலும் கனவுகளும் கதைகளுமாகச் சனங்களை எதிர்பார்ப்புகளுடனும் ஏக்கங்களுடனும் நடமாட, காத்திருக்க  வைத்திருப்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறதென்றாள். அவளது பயணத் திட்டமிடுதலை எரிச்சலை (பொறாமையல்ல) ஏற்படுத்தும் விசயமொன்று குறுக்கிட்டு அங்குமிங்கும் நடமாடப் பெரும் தொல்லை கொடுப்பதைப் போல நறுமினாள். அவளால் சகிக்க முடியாமல் இருக்கிறது அந்தப் -படங்காட்டலின்- படங்காட்டுகள்.

அடுத்த கிழமை  வெளியாகும் திரைப்படத்தைப் பற்றி இப்போது எப்படி எழுத முடியும்? இது என்ன சின்னப் பிள்ளை போல அடம்பிடித்தல் என்ற என் கேள்வி -அவளது ஆவேசத்தைக் கலை கொண்டெழும்ப வைத்துத் தொலைபேசியில் சன்னதமாடினாள், “ட்ரெயிலர் வெளியீட்டு விழாவே நடத்துறாங்கள்”.

கோடிகளைக் கொட்டி எடுத்த படத்தில் கோடிகளைச் சம்பாதிக்கும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு வெறும் பேய்க்காட்டல்களே மிஞ்சும். அதற்கான அலட்டல்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் ஆரம்பித்தன. சில துணுக்குகளை பெட்டிச் செய்திகளை வைத்து அவர்களும் வியாபாரஞ் செய்தனர்.ரஜனி என்ற நடிகனை நாசமாக்கியதில் ஒரு பங்கு இவர்களுக்கும் உண்டு.

ரஜனியை அளவு கணக்கில்லாமல் புகழும் கவிஞர் வைரமுத்து மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஒரு பக்கமென்றால் , அவருடைய எந்திரன் படத்தின் வெற்றிக்காகக் கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையை திருப்பூர் வரை நடாத்துகிறார்களாம். முழங்கால் தேய , பெருமாளிடம் ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்களாம்.ட்ரெய்லரை யானை மேல் காவி கொண்டு திரிவதென்ற மடைத்தனங்களை எல்லாம் செய்யுமளவுக்கு ரஜனி இரசிகர்கள் சினிமா என்ற சில மணிநேர பொழுதுபோக்கை வாழ்வின் அரிதான மணிநேரங்கள் போன்று கொண்டாடித் திளைக்க அது தகுதியானது தானா?அவர்களது இரசனையைத் தனிமனித வழிபாடாக்கிச் சம்பாதிப்பது கோடிகளைப் புதைத்து வைத்துக் காவல் காக்கும் இதே சினிமாப் பிரபலங்கள் தானே.அந்தஏழை இரசிகர்களுக்கு மிஞ்சுவது சில மணி நேரப் பேய்க்காட்டுதல் தான்.

கறுப்பு – வெள்ளைப்படங்களில் நடித்த ரஜனியை எனக்குப் பிடித்திருந்தது. பதினாறு வயதினிலே, முள்ளும்மலரும்  போன்ற படங்களில் ஸ்ரைலும் நடிப்பும் கவர்ந்தது. பின்னர் சில   திரைப்படங்கள் சில அவரது வித்தியாசமான பேச்சு , நடை,  வாயசைத்த பாடல்களுக்காக என்று இரசிக்க வைத்தன. அண்மைய காலத்தில் வெளியாகிய படங்கள் சட்டத்துக்கு அளவாக வெட்டப்பட்ட புகைப்படங்களைப் போல இருக்கின்றன.அவற்றைப் பார்த்து வெறுத்துப் போகும் நேரங்களிலெல்லாம் பழைய ரஜனியின் பாடல்களைப் பார்த்தாலோ கேட்டாலோ  ஆறுதலாக இருக்கிறது.

இவ்வாறு பழைய படங்களைப் பற்றி எழுதிச் சமாளித்தும் தப்பிக்க முடியாதாவென யோசித்துக் கொண்டிருக்கும் போது ; இலவசமாக எங்களைப் பார்க்க வைக்கும் சனலொன்று எந்திரன்  விளம்பரத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.  சில விளையாட்டுப் பொருட்களை நிலத்தில்  தேய்த்து விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளை ; விளம்பரச் சத்தத்தில் தொலைக்காட்சியைக் கண் விரியப் பார்த்து விட்டு, அவசரஅவசரமாகக் கேட்டான் “இது சின்னப்பிள்ளைகளின்ர படம் தானே கட்டாயம் இந்த சீடியை வாங்கித் தரவேணும்”

சிந்தித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் போல கருத்துகள் , வாக்குகள் சிலருக்குத் தோன்றுமாமே. அதைப் போல எனக்கும் தோன்றியது “இதை விட வேறென்ன ?”

அவ்வாறே ,சூப்பர் ஸ்ராரும் முன்னாள் உலக அழகியும் குழந்தைகளுக்கான படமொன்றில் நடித்திருந்தால் அதைப் பாராட்டத் தான் வேண்டும்.

Advertisements