-மோனிகா

சாவித்திரி கோலம்போடும்போது

வாசலிற்கிடந்தது அந்த

சிகரெட்டு கொளுத்தும் ‘லைட்டர்’.

நமத்துப் போகாத தீப்பெட்டியாய்

சட்டென்று எரியும் மெழுகுவர்த்தியாய்

என்று பலவாறு அதனை

சிலாகித்து மகிழ்ந்தாள் அவள்.

சாமி விளக்கு அடுப்பென்று சகலமும்

பற்றவைத்து குதூகலித்தாள்.

மெலிதான அதன் கண்ணாடி

தேகத்துள் சிறைபடும்

திரவத்தை நினைத்து வியந்தாள்.

சிலசமயம் யாரும் இல்லாப்பொழுதில்

புகைப்பதுபோல் நடித்தும் நகைத்தும் பார்த்தாள்.

பிறை, அலமாரி, ஐந்தரைப்பெட்டி

எங்குமன்றி ரகசியமாய்

தன் முந்தானைத் தலைப்பில்

ஒளித்துவைத்தாள்

அந்த முகம் தெரியாத ஆடவனின்

அதிசயப் பொருளை அவள் யாருமறியாமல்.

ஓவியம்:மோனிகா

 

Advertisements