சமீப காலங்களில்  பிரான்சில் ‘வேலை நிறுத்தம்’ அடிக்கடி பாவிக்கும் சொல்லாகி விட்டது. பிரான்சிலும் ஏன்? ஜரோப்பிய நாடுகள் அதைச் சுற்றியிருக்கும் நாடுகளிலென்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலை நிறுத்தம் பெருங் கவனஈர்ப்பைத் தன் மீது திருப்பியுள்ளது.

கடந்த செப்ரம்பரில் தொடங்கிய போராட்டங்கள் பல நிலைகளைத் தாண்டித் தற்போது தொடர்ந்து ,முடிவை நோக்கி நடாத்தப்படுகின்றது. அக்டோபர் 12 இல் மிகப் பெரிய அளவில் பல இலட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கிப் பங்கு கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தைக் காட்டியது. காவல்துறையினரைப் பற்றிக் கவலைப்படாத மக்களின் தொகை அதிகரித்தது. அரசுக்குத் தொழிலாளர்களின் போராட்டம் வலியது என்பதை நம்பச் செய்யக்கூடியதாக, அது தொடர்ந்து நடைபெறும் எனத் தோன்ற, இன்னும் அதிகமானவர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தொழிலாளர்கள் கொண்டிருக்குமளவு ஆதரவு பெருகியது.

எங்கெங்கு நோக்கினும் வேலைநிறுத்தம் பற்றிய அறிவித்தல்கள் ,பேச்சுகள் என்றும் பணிமுடக்கத்தினால் மக்கள் பாதிக்கப்படுதல் என நாளாந்த வாழ்வு இந்த வேலைநிறுத்தத்தின் பாதிப்பின்றி நகர முடியாதிருக்கின்றது. குறிப்பிட்ட அளவேயான சேவைகள், நெருக்கடிகளை நாளாந்த வாழ்வில் ஏற்படுத்தியுள்ளன. இந்தப் போராட்ட நிலை நீடிக்குமானால் நாடு முழுவதையும பாதிக்கும்.
சார்க்கோஸியின் அரசு மக்களை இவை சோர்வடையச் செய்யும் என நம்புகின்றது.

ஓய்வூதியம் பெறுபவர்களின வயதெல்லையை மேலும் 2 வருடங்களினால் அதிகரிப்பது என்பது தொடரும் பல விளைவுகளையே ஏற்படுத்தும்.ஓய்வூதிய வயது அதிகரிப்பினால் வேலை வாய்ப்பை மாணவர்கள் சில வருடங்கள் கழிந்து பெற வேண்டும்.தன் ஓய்வூதியக் கொடுப்பனவை அரசு மிச்சம் பிடிக்க, மறுபக்கமாக வேலையற்றோர் அதிகரிக்கின்றனர்.

அரசாங்கத்தை எதிர்த்துப் பெருமளவில் நாடு முழுவதிலிருந்தும் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்றனர்.ஓய்வூதிய வயதெல்லை நீடிப்பின் காரணமாக ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்படுகின்றன என நம்பப்படுகின்றது.

தொடரும் ஆர்ப்பாட்டங்களினால் அசாதாரண நிலையைப் பொதுமக்கள் அனுபவிப்பார்கள் என்றும் அத்தோடு போராட்டக்காரர்கள் சலிப்படைந்து போய் விடுவார்களென்றும் சார்க்கோஸியின் அரசாங்கம் நினைக்கிறது.ஆனால் ஒன்றுபட்ட எழுச்சிகளை எதிர் கொள்ளும் அரசு விரைவில் நீதியை நிலைநாட்டியே தீரவேண்டும்

Advertisements