–    மோனிகா

1. இசை

மொழியில்லா மனமொழியாய்

உணர்வில் இழைந்துப் பரவும்

ஆன்ம விகசிப்பில் தனது

இருப்பைக் கரைத்து

இல்லாததொரு வெளியின்

சிறுதுரும்பாகிப் போகும் உள்ளம்.

அரூப மாயைகளை தனதாக்க

யாசகம் கேட்டலையும் அது,

உருகியும், உறைந்தும்,

உடல் சிலிர்த்தும்.

பருண்மையிற்கண்டிருந்த

பல பொருட்கள்

கண்களின்று மறையும்.

பழகிச் சுமந்தலைந்த பிம்பங்கள்

பார்த்திராததுபோல்

பருண்மை கொண்டு தாக்கும்.

பரவத்திலாழ்த்தும் போதை

இன்னும் இன்னுமென.

எங்கோ இட்டுச் செல்வதாய்

இதயம் புகுந்து என்னுள் கலந்து

கடக்கும் இந்துஸ்தானி இசை.

அதனலைகளைப் பற்றி

மேலெழுந்து கீழிறங்கிப்

பதப்படும் பயணக்கடைசியில்

ஆனந்தமயம் பெரும் அகிலம்

ஒவ்வொரு முறையும்.

 

2.   பிறக்க முடியாத ஒரு குட்டிக் கடவுள்

காமமுற்ற எல்லா இரவுகளும்

எனக்கு நினைவிருப்பதில்லை.

அந்த ஒரு இரவை மட்டும்

நினைவுக்கு கொடுத்தது

நினைப்பிலடங்காத நீ மட்டும்தான்.

இயற்பியல் விதிகள், பிரபஞ்சச் சுழற்சி,

புவியீர்ப்பு விசை போன்ற

அறிவியல்கள் சில அறிவேன்.

காய்ந்து உருகும் கடலும்,

கண்ணிலிருந்து மறையும் பூமியும்

மானுடம் தேடி வீழும் அவலமும்

நன்கு அறிவேன்.

உன் மழலையும் முத்த வனங்களும்

என்னை அழைக்கும் முன்னரே,

முனைப்புடன்

அழிவுகளின் சாட்சியாக நீ வேண்டாம்

என்றழித்துவிட்டேன்.

என்னென்று உனை அழைக்க

எனதன்றி எனைமாய்க்கும்

பிறக்க முடியாத ஒரு குட்டிக் கடவுளே?

 

3. நேசம்

மயிலின் கொடூரமான அகவலை

நகரின் நிகரில்லா இரைச்சலை

கோடையின் சுட்டுத்தெறிக்கும் வெப்பத்தை

இரவின் தனிமையில் எழும்

மின்விசிறியின் கிறீச்சிடலை

துலக்கத் துலக்கத் துப்புறவு வேண்டும்

என் சமையலறைப் பாத்திரங்களை

தினமும் வேலை நேரத்திற்கு முன்பு

என்னை வீட்டிலிருந்து துரத்தும் மணிக்கூண்டை

இப்படி எல்லாவற்றையும்

நேசிக்கக் கற்றுக் கொண்டேன்,

வாழ்வு ஒன்றை நேசிப்பதற்காக.

 

4. முத்தம்

மின்தூக்கியறைக்குள்

முகம் மறைத்து கொடுத்த முத்தம்,

தொடர்வண்டி வேகத்தில்

தேகம் சிலிர்த்த முத்தம்,

புகைச்சுருளின் வாசனையில்

போதை கொடுத்த முத்தம்

புதியதொரு காதலனின்

புறங்கையைத் தழுவும் முத்தம்

என முத்தங்கள் பல இருந்தும்

ஒவ்வொரு முறையும் என்னை

உயிர்த்தெழச் செய்வதெல்லாம்

தன் பிஞ்சுக்கரங்களால் கரங்கள் பொத்தி

அப்பஞ்சு உதடுகள்

பதிக்கும் முத்தம்.

5. ஆஹிர் பைரவி

அன்றவர் அறையிற் சென்றபோது

விளக்குகளை ஒளிரச்செய்து

விரல்களாற் தட்டினார்

அந்த இசைப்பெட்டியின் ஆன்மாவை.

ஆஹிர் பைரவி, யமன் கல்யாண்,

மால்கெளன்ஸ் என

அதனின்று எழுந்த இசை

சன்னல்களிலூர்ந்து சிறு

சந்துகலெங்கும் நிறைந்து வழிந்ததில்

சோடியம் விளக்குகளும்

அழகில் மிளிர்ந்தன.

காற்றில் கரைந்துக் கரையும்

இதுபோன்ற மற்றொன்றான

சாராயம் கொண்ட கோப்பைகளில்

அதனைச் சரியாக கலக்கத்

தெரிந்திருந்தது அவருக்கு.

இசையின் ஏற்ற இறக்கமெல்லாம்

உயிர்த்தலின் புது நொடிகளாய்க் காட்டி

பாவித்த அம்முகத்தின் ஒவ்வொரு

நொடியையும் இறுக்கிக் கொள்வன

வாழ்வைத் தழுவும் ஏதோ நம்பிக்கைகள்.

இன்று இசையும் இசைவுமிருக்கிறது.

அவரில்லை.

வாழ்விற்கான ஒரு இனிய

முகாந்திரத்தைன் சாவியை

எமக்களித்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.

ஆதார சுருதிகளின்

தோற்றுவாயை நோக்கி.

(நண்பர் பலராமனின் நினைவிற்காக)

Advertisements