– மோனிகா

நமது வாழ்வின்

தகவமைப்புகளை வடிவமைக்க வல்லது

அக்கோட்டை.

நம்மை அதன் விளிம்புகளில் வைத்து உரசி

அதில் காயம்பட்ட சிறாய்ப்புகளால்

நம்மில் தொடர்ந்து அதன் இருப்பினை

நினைவுபடுத்த வல்லது.

நம் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும்

நமது நிகழ்தகவுகளையும்

வாழ்வாதாரங்களையும்

குறித்த தகவல்களை

தனது பூதக்கண்ணாடிகளால்

உற்று நோக்கி பதிவு செய்ய வல்லது.

கலைந்து கிடக்கும் காரம்போர்டு

வட்டங்களை நாம் எவ்வளவு முறை

ஒன்றுகூட்டினாலும்

தனது ஒரே வட்டத்தைக்

கொண்டு அதனை திக்குக்கு ஒன்றாய்

சிதறடிக்க வல்லது.

ஆதிகாரங்களால் அஸ்திவாரமிடப்பட்ட

அதன் அகழிகளுக்குள்

பிரவேசித்த எவருமே

அதனைவிட்டு வெளியேறியதாய்

சரித்திரம் காணாத இக்கோட்டை

காஃப்கா என்ற கலைஞனை தனக்கு

வெளியிலிருத்தியே வேட்டையாடியதுண்டு.

அவனை கரப்பான் பூச்சியாக்கி கட்டிலுக்கடியில்

பதுங்கச் செய்ததும் உண்டு.

எண்ணற்ற சூறாவளிகளையும், சுனாமிகளையும்

சதுப்பு நிலக்காடுகளையும் போன்று

மறைந்துவிடாமல்

பச்சோந்தியைப்போல் உடலும் நிறமும் மாற்றும்

இதற்கு இனி நீயும் நானும் மட்டும்

தீண்ட கிடைக்காமல் போகலாம்

மனக்கோட்டைகளைக் கொண்டு அதன் இருப்பை

மறுத்தோ மறைத்தோ வைக்கும்வரை.

 

 

 

Advertisements