-மோனிகா


சினிமா அல்லாத ஒரு தமிழ் சினிமாவை யாரும் எடுக்க முடியுமா?

நேற்று நந்தலாலா பார்த்தேன். இதுவரை மாற்று மொழிப்படங்களைத் தழுவி தமிழ் மொழியில் எடுத்திருக்கிறார்கள். இதுவோ தமிழில் எடுக்கப்பட்ட மாற்றுதேச(உணர்வு)/மொழி(காட்சி மொழி) படம்… குழம்பவேண்டாம். காரணங்கள் கீழ்வருமாறு:

1. இதனில் வரும் இந்திய/தமிழ்நாட்டு கிராமம்/வீதிகள் எங்கேயும் காணமுடியாத ஒன்று. ஆடு, மாடு, காகம், சேவல் ஏன் வெளியில் மனித நடமாட்டமே கூட இல்லாத “அன்னவயல்” கிராமத் தெரு. அதனை ஒத்த சாலைகள்.

2. தன்னுடைய நிலையை சொல்லி இரக்கப்பட்டு அழும் ஒரு நொண்டியும், பாலியல் தொழிலாளியும் அவ்வளவு கொச்சையாக தங்களது வாழ்வைப்பற்றி யோசித்தால் அவர்களது வாழ்வே சாத்தியப்படாது என்கிற பட்சத்தில் மிகவும் “artificial” ஆன ஒரு சமாச்சாரமாக மனதை எரிச்சலூட்டச் செய்கிறது.

3. கூத்துப்பட்டறையில் பயிற்றுவிக்கப்படும் நவீன நாடகப்பாணியில் எடுத்தாளப்படும் வசனங்களும், நடிப்பும், நடையும் திரைக்குப் பொருந்தாமல் நம்மை ஒவ்வொரு காட்சியுடனும்  தொலைவு படுத்தி விடுகின்றன.

4. லாஜிக் அற்ற கதையோட்டம் ஆஸ்பத்திரியில் தன்னை சேர்த்ததற்காக தனது அம்மாவை பழிதீர்க்கவேண்டும்  என்று கிளம்பும் நாயகன் அதே ஆஸ்பத்திரியில் அம்மாவை விட்டுவிட்டு சென்றுவிடுகிறான்! One flew over the Cuckoo’s nest என்கிற படத்தை நினைவுகூர்ந்து பார்த்தேன். மனநிலை பிறழ்வை புரிந்துகொள்வதில் அதன் வெளிப்பாட்டில் கால் சதவீதம் கூட இதனில் ஏன் இல்லை?

5. மோட்டார் வாகனத்தில் வரும் குண்டு மனிதர்கள் கொஞ்சம் இந்தக் குழந்தையுடன் சிரித்துப் பேசினால் என்ன குடியா மூழ்கிவிடும்?

6. கதையின் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் மேற்கத்திய இசை (அதனளவில் நல்ல இசையாக இருப்பினும்) கதையின் புவியியல் களத்திற்கும், பிராந்தியத் தன்மைக்கும் சிறிதும் ஒவ்வாமலிருப்பது மிகவும் இடரலாக இருக்கிறது.

7. Solaris படத்தின் முதல் காட்சியில் வரும் “தண்ணீரில் புற்கள்” அசைவது போன்ற பிம்பம் நம்மை நல்ல படத்தை நோக்கிய ஒரு நம்பிக்கைக்கு இட்டுச்செல்கிறது. பிறகு அப்பிரம்மாண்டமான காட்சிப் பிம்பங்களையே வைத்து நிரவி விடலாம் என்ற சூட்சுமம் விளங்குவதற்கும் முன்னோடி- யாகிப்போகிறது அக்காட்சி.

தழுவல் பற்றியெல்லாம் நமக்கு ஒன்றும் கவலையில்லை. ஆனால், கதை முழுவதும் யதார்த்தத்துக்கு புறம்பாக மாறி ஓட வைத்தது இதுவே முதன்முறை! இக்கதையைப் பார்த்து உலக சினிமாவைப் புரிந்து கொள்ள யாரானும் முயல்வார்களானால் அவர்களின் நம்பிக்கையில் மண்விழும் என்பது உறுதி. தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது?

Advertisements