தர்மினி

வாசிப்பு திறக்காத பல கதவுகளைத் திறந்து விடுகின்றது. புத்துயிர்ப்புத் தருணங்களை நல்ல புத்தகங்கள் ஒவ்வொரு தடவையும் தந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுடனான உரையாடல் என்பது வேறுலகு  போலப் பிரமையைச் சில புத்தகங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. மீளவும் ஓடிப் புதைந்து விடும் தலையுடன் இருக்கத் தோன்றும். வாழ்வின் ஏக்கங்கள்,புறக்கணிப்பு,தனிமை எல்லாம் புதியதொரு புத்தகத்தில் சற்றே தீர்ந்துவிடும்.

அப்போதெல்லாம் நான் தனித்து விடப்பட்டவளாகவே உணர்ந்தேன்.பொழுதைப் போக்குவதற்கு தென்னைகளைச் சுற்றியும் மாமரங்களின் கீழுமாக உலாத்திக் கொண்டிருப்பேன்.அயலில் எவருடைய வீட்டுக்கும் போகவோ நினைத்தபடி ஊரைச் சுற்றிவரவோ வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். காரணம் பொம்பிளைப்பிள்ளை.ஆகவே கையில் கிடைக்கும் சீனிச்சரை, தேயிலைச்சரைக்  கடதாசிகளெல்லாம் ஏதாவது கதையொன்றைச் சொல்லாதாவென்று வரிவரியாகப் படித்துக் கொண்டிருப்பேன். மௌனமாக இருந்து இருந்து மற்றவர்களுடன் பேசுவதே பெரும் மிரட்சியாக இருக்கும்.நான் மௌனமாக்கப்பட்டவளாயிருந்தேன்.  பயமில்லாமல் எல்லோரோடும் பழகுவதற்கு விருப்பமாக இருக்கும்.ஆனால் அது ஒரு பயங்கரமான செயலைப் போல வெருட்சி மிதமிஞ்சியிருந்தது .ஆதலால் மௌனமாக உரையாடும் எழுத்துகள் எனக்கு நெருக்கமாகின. இன்னும் இன்னும் ஒதுங்கியவளாகப் புத்தகங்களுடன் மட்டும் பேசத் தொடங்கினேன்.
ஊரில் இருந்த அந்தச் சிறு நூலகம் அற்புதங்களையெல்லாம் கொண்ட அரண்மனையைப் போலத் தெரிந்தது.


அப்படியொரு நாளில் தான் ‘மஞ்சரி’ என்ற மொழிபெயர்ப்புக் கதைகளைக் கொண்ட  சஞ்சிகை வீட்டிற்கு வந்தது. நான் அதைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன்.வேறுவேறு  கதைக்களம். வித்தியாசமான மனிதர்கள் என்னுடன் பேசினார்கள்.அதிலொரு கதை தான் ‘மதிலுகள்’.அக்கதையின் நாயகியான நாராயணியை “நாராயணி ….நாராயணி…” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன்.வைக்கம் முகமதுபஷீர் என்ற எழுத்தாளரை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. மதிலுகளும் நாராயணியும் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியதாகச் சொல்லலாம். அவை காட்சி காட்சியாகக் கதை விரிந்து போகும் எழுத்துகள். நாராயணியைச் சந்திக்காத அந்த நாயகனை, எப்போதுமே என்னால் பார்க்க முடியாத என் நாயகனைப் போலவே நினைந்து வேதனையுறுவேன். அந்த நாராயணியைப் போலவே வீடென்ற சிறையில், வேலிகளான மதில்களின் பின்னால் ஒரு கைதியாக என்னை நினைத்து நானும் விம்மிக் கொண்டிருந்தேன். வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் கதையைப் படித் தால், நாராயணி… நாராயணி…என்று உங்கள் காதுகளிலும் அக்குரல் ஒலிக்கும்.

பஷீர் என்ற சிறைக் கைதி. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயலாற்றியதால் கொடுக்கப்பட்ட தண்டனையுடன் புதிய சிறைச்சாலையொன்று மாற்றப்பட்டு வருகிறான்.சிறைக் கண்காணிப்பார்களுடன் நட்பாகி ஓரளவு சலுகைகளைப் பெற்று டீ,பீடி ,தோட்டம் அமைப்பது என்று சில ஆறுதல்களுடன் வாழுகிறான் பஷீர்.உயரிய மதிலுக்கு மேலால் தெரியும் நகரின் வாழ்க்கை வேதனையை எழுப்பும்.அவனுடன் இருந்த அரசியற் கைதிகள் விடுதலையாகும் போது பஷீர் மட்டும் தனித்து விடப்படுகிறார்.தப்பித்துப் பொகும் வழிகளைத் தேடும் மனிதனாக சுதந்திரத்திற்காக அவாவுகிறது மனசு.தப்பிக்கத் திட்டமிட்ட போது தான் தற்செயலாக மதிலுக்கு மறுபுறம் இருக்கும் பெண்கள் சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் இவனுடன் உரையாடுகிறது.
ஒரேயொரு ரோஜாச் செடியைத் தருவீர்களா என்று பேச்சு ஆரம்பிக்கிறது.தனித்த அவர்களுக்கிடையில் நேசம் பூக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பொன்று மதிற்கற்களை மீறிக் கசிகிறது. மதிலுக்கு மேலாகக் கம்பு தெரியும் போதெல்லாம் தான் காத்திருப்பதாக எண்ணி வர வேண்டும் என்கிறாள் நாராயணி.அக்கதையில் வரும் இப்பகுதியைப் பாருங்கள்.
-அறைக்குத் திரும்பினான். அன்றுதான் அறை மிகவும் குப்பையாக இருப்பதை உணர்ந்தான். எல்லாம் சரிசெய்து வைத்தான். உலகம் திடீரென்று அழகாக மாறிவிட்டதைப் போல இருந்தது. தொடர்ந்துவந்த பகல் பொழுதுகளில் அவன் மதிலைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருந்தான். ஒரு நாள் அந்த திவ்யக்காட்சி அவனுக்குத் தெரிந்தது. மதில்மேல் ஒரு கம்பு தலையைச் சிலுப்பிக் கொண்டு நின்றது. பஷீர் பாய்ந்து சென்றான்.-
இடையில் வார்டன் வந்து விட்டதால் கம்பைக் கண்டவுடன் போக முடியாமல் தவிக்கிறான் பஷீர்.தொடர்ந்த வசனங்கள்…..

“பிறகென்ன.. எத்தனை நேரம் உங்களுக்காக காத்திருப்பது இந்தக் கம்பைக் கையில் பிடித்துக் கொண்டு… கைகளே கடுப்பெடுக்கத் தொடங்கிவிட்டன!!”

“நான் வேண்டுமானால் கையைத் தடவிக் கொடுக்கட்டுமா?”

” எங்கே தடவிக்கொடுங்கள் பார்ப்போம்” என்று தன் கையை மதில்சுவரின் மீது வைக்கிறாள். பஷீர் மதிலின் மறுபுறம் சுவரைத் தடவிக் கொடுக்க கண்களில் நீர் பெருகுகிறது.

பல மாதங்களாக மதிலூடாக உரையாடல் தொடர்கிறது. இப்போது தப்பித்துப்போகவோ சிறையைவிட்டு வெளியேறவோ அவனுக்குப் பிடிக்கவில்லை.அச்சிறையே இனிமையான தருணங்களைத் தந்து கொண்டிருந்தது.  எப்படியாவது இருவரும் சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். வியாழக்கிழமை ஆஸ்பத்திரியில் சந்திக்க ஆளுக்காள் அடையாளத்தையும் சொல்லிக் கொண்டனர்.அந்த வியாழனில் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக விடுதலை என்று சொல்லப்படுகிறது. இப்போது விரும்பாத பொழுதில் விடுதலை என்று வெளியேற வேண்டியதாகிறது.
அறை இழுத்துப் பூட்டப்பட்டது. மதிலுக்குப் பின் கம்பு உயர்ந்தவண்ணமே இருந்தது. கனத்த இதயத்துடன் தனது பன்னீர்த்தோட்டத்தின் மத்தியில் நின்றான். அதில் ஒரு ரோஜாவைக் கிள்ளி கையில் வைத்துக் கொண்டான். கண்களில் நீர் மல்கியது. சிறையின் பெரிய இரும்புக் கதவுகள் பயங்கரமான சப்ததத்துடன் பஷீரின் முதுகுக்குப் பின்னால் சாத்தியது…என்று கதை முடிகிறது.
பொதுவாகப் பஷீரின் ஏமாற்றமும் விரும்பி வேண்டாத விடுதலையுமே கதையின் மிச்சமாக மனதில் நிற்பதாகச் சொல்வார்கள்.ஆனால் எனக்கு நாராயணியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தான் கதையை முடிக்கவிடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கச் செய்கிறது.மதில்களுக்குப் பின்னிருந்து அக்கைகள் கம்பை உயர்த்திக் கொண்டேயிருக்கின்றன.