அதிகாலை 1.23

அவளின் அழுகுரல் …அழுகுரல் ……அழுகுரல் எண்ணிக்கைகளற்று இன்னும் நீண்டு செல்கிறது.
சொட்டிக் கொண்டிருக்கிறது துயர்.
உடல் நடுங்கிச் சாகும்… சாகும்…நித்தம் அவள் செத்துக் கொண்டிருக்கிறாள்.
வாழ்வின் உப்புக் காடி சுவைத்தபடி
அவள் கதைகளும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
அவை நரகத்து முட்களைச் சூடிய ராணியாகிய கதைகளும் பாடல்களும் கிளைக்கதைகளுமாக.
அவளது நாக்கு இரத்தம் ஊற்றிய படியிருக்க இதுவல்லவோ குரலென்று விம்மிவிம்மிப் பாடுகிறாள்.

“உப்புக் காடியை நான் குடித்து முடித்து விடுவேன். உனக்கில்லை…உனக்கில்லை”

எப்போதும் முதல் வரியைப் பாடிக் கொண்டிருப்பாள்.
மற்றுமொரு வரிக்கான காத்திருப்பில் பயனில்லை.
அவளே அறியாத வரியொன்றை எங்ஙனம் பாடுவதென்கிறாள்.
கன்றிப் போன தோல் ஊதா நிறம் படரும் பேய் என்பாள்.
கொல்ல ஊரும் பாம்பு விசிறிய பாதையென்றாள்.
கோடுகளால் வட்டங்களால் ஊதாவாகி
சிதறிய இரத்தத் துளிகளின் நிலம் வரைந்த வடிவமாக மெது மெதுவாகக் கரைந்ததைக் கண்டேன்.
சிவப்பாகி அவள் உடலில் வடிவதும் இரத்தம் தான்.
நித்திரையில்லா என் உறங்கும் நேரம்
காணப் போகும் வன் கனவின் பயம்
அவளின் கன்றிய முதுகைக் காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
உறக்கத்தில் இடைபுகுந்து நடுங்கச் செய்யப் போகும் கனவைத் துரத்திக் கொண்டிருந்தேன்.

தனக்காக அழுவதற்கும் விழிப்பதற்கும்
இருக்கின்ற என்னிரு கண்கள் பற்றி  அறிவாள்.

தர்மினி