ஊரில எந்த இடம்?


தர்மினி

இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் முன்பின் அறிமுகமற்ற ஒருவருடன் சந்தித்து உரையாட வேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்கள் அனேகமாகக் கேட்கும் கேள்வி-ஊரில நீங்க எந்த இடம்?- எனபதாகத்தானிருக்கும். அவர்கள் தனக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவராக இருப்பாரோ?நண்பர்கள் எவரையாவது அறிந்தவராக இருக்கலாமோ?அல்லது நன்கு பழக்கப்பட்ட ஊரைச் சேர்ந்தவரென்றால் அறிந்தவர்களைப் பற்றிய செய்திகளைக் கேட்கலாமோ என்பதையெல்லாம் தாண்டி தொடரும் கேள்விகள் அவரது நோக்கை எமக்குப் புரிய வைத்து விடுகின்றன.

இப்படித் தான் சில நாட்களுக்கு முன்னர் நண்பரொருவரின் வீட்டில் தற்செயலாக ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. பக்கத்தில் வந்து இருந்தவரிடம் நான் அகப்பட்டுக் கொண்டேன். அதுவும் அவரும் ஒரு தீவானாக இருந்து விட்டார். ஆகவே வெகு உற்சாகமாக என்னிடம் கேள்விகளை வீசிக் கொண்டேயிருந்தார்.எனக்கும் அவரது தோற்றமும் கதைகளும் ஒரு அனுபவத்தை அனுபவிப்பது போல இருந்தது. கருநீலக் காற்சட்டை-கறுப்புச் சப்பாத்து-மஞ்சள் நிறத்தில் கோர்ட் அதில் சிவப்பு நீலம் எனக் கோடுகள.நெற்றியில் அப்படியே அள்ளிப் பூசிய நீறு.வெட்டி ஒட்டியதைப் போல சந்தனப் பொட்டு. அதைத் தெளிவாகக் காட்ட வேண்டுமென்பதைப் போல பின்னோக்கிப் படிய வாரியிழுத்த சொச்சம்  தலைமுடி.இரண்டு கைகளிலும் சேர்த்து நான்கு மோதிரங்கள்.பவுண் நிறத்தில் மணிக்கூடு. கழுத்திலிருந்தும் குனிந்து நிமிர மின்னிமின்னித் தெரிந்தது. எப்பவும் இப்பிடியே தான் இருப்பாரோ அல்லது தமிழாட்களின் வீடுகளுக்கு விசிட் செய்யும் போது அலங்கரிப்பாரோ என நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.புலம்பெயர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாகி விட்டதாம்.

முன்னரெல்லாம் எங்கள் கிராமத்தைப் பலரும் அறிந்திருக்குமளவு அது பிரபலமான எதையும் தன்னகத்தே கொண்டிருந்ததில்லை.அதன் பின்னர் யுத்த அவலங்களின் பொருட்டு பத்திரிகைகளில் அந்தப் பெயரும் அச்சாகியது.பலராலும் பேசப்பட்டது.சில வருடங்களாக நாட்டுக்குப் போய் வருபவர்கள் தீவுப் பகுதிக்குச் செல்வதென்றால் உங்கள் ஊரின் கடற்படைச் சோதனைச் சாவடியைத் தாண்டித் தான் போவர்கள்.அப்போது அது பிரபலப்பட்டது.மற்றும்படி எந்தப் பிரசித்தமும் இல்லாத ஊரது.பக்கத்து ஊரான மண்டைதீவுக்கோ சாட்டி வெள்ளைக் கடற்கரைக்குப் போனவர்களும் அல்லைப்பிட்டிககும் வந்து போனதாக கணக்கில் சேர்த்து நான் கேள்விப்படாத யாரையாவது தெரியுமா எனக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த மனிதர் நான் எவ்விடம் என்று அறிந்து கொண்டதும் சுவாரசியமாகி விட்டதை வைத்து ஆகா ஊரில யாரையோ ஆளுக்குத் தெரியும் போல என நினைத்துக் கொண்டேன்.

பொட்டு வைக்காத என் நெற்றி தான் அவருக்கு வாய்ப்பாகிப் போனது.’தங்கைச்சி நீங்கள் வேதமா? சைவமா?” என்று தான் கதையைத் தொடக்கினார்.

நான் ஒரு சமயமும் இல்லை என்றேன்.வயசுக்கு மூத்த ஆளோட பகிடியா விடுகிறாய் என்ற ரேஞ்சில் ஒரு பார்வை பார்த்து விட்டு “அதென்னெண்டு அப்பிடியிருக்கிறது? சரி உங்கட அப்பா அம்மா என்ன சமயம்?” என்று கேட்டு என்னை மடக்கி விட்டதாகக் கூர்ந்து பார்த்தார். நான் நினைக்கிறேன் சொண்டுக்குள் சிரித்துக் கொண்டிருப்பர் போல.அவர்கள் வேதக்காரர் தான்.ஆனால் நான் இப்ப இல்லை என்ற என் பதில் அவருக்குத் தேவைப்படவேயில்லை. பொட்டு வைக்காததால வேதக்காரராகத் தான் இருக்கும் எண்டு நினைச்சனான்.அது சரியாகத் தான் இருக்கு என்று தன் கெட்டித்தனத்தை மெச்சியபடியே அடுத்த கேள்வி ‘அப்பாவின்ர பெயர் என்ன?” என்பதாக வந்தது.யேசுதாசன் எனச் சொன்னது சற்றுக் குழப்பமடைய வைத்திருக்க வேண்டும்.பெயரை வைத்து என் சாதி நிலையை மதிப்பிடக் கடினமாகியிருந்திருக்க வேண்டும்.ஏனென்றால் அல்லைப்பிட்டியில் வேதக்காரர்களில் மூன்று சாதியினரும் இருப்பதை அறிவார் போல.

அப்பாவின் பெயரை வைத்து நாங்கள் எந்தப் பகுதியாட்கள் என்பதைக் கணிப்பிட முடியாத அந்நபர், உங்கட வீடு எதுக்குப் பக்கத்தில இருக்கு?என்றார்.

வேதக்காரர்கள் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் எல்லோரும் வெள்ளாளர்கள் அல்லாதவர்கள் எனவும் இப்படிப் பலர் தாங்களே முடிவு செய்து கொள்வார்கள்.அல்லது ஒருவனின்-ஒருத்தியின் நிறம் நல்ல கறுப்பாக இருந்து விட்டால் அவர்கள் வேளாளராக இருக்க மாட்டார்கள் என்பதுடன் தகப்பனின் பெயரையோ அந்நபரின் பெயரையோ வைத்தும் முடிவெடுத்து விடுவார்கள்.தாங்களாகவே பொன்னையா என்ற பெயரை பொன்னன், கந்தையா என்ற பெயரை கந்தன் எனவும் செபஸ்தியாம்பிள்ளை என்ற பெயரை சேவேத்தி எனவும் மாற்றிக் கூப்பிடப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.அது போல கறுப்பு நிறத்தையும் ஸ்ரைலான அன்ரனி என்ற பெயரை அந்தோணி என்று தாங்களாகவே தலித் பெயராக்கி நினைத்துவிட்டு அந்த ஆள் தலித் இல்லை என விசாரித்துத் தெளிவடைந்து கொண்டு தங்களின் ஆதிக்க சாதி மனதில் மனிதர்களை எடைபோடும் இழிவுகளைப் பற்றி வெட்கப்படாமல் பேசிக் கொண்டிருப்பவர்களையும் உதாரணத்துக்குச் சொல்லலாம்.

அப்பாவின் பெயரை வைத்து நாங்கள் எந்தப் பகுதியாட்கள் என்பதைக் கணிப்பிட முடியாத அந்நபர் உங்கட வீடு எதுக்குப் பக்கத்தில இருக்கு? எனக் கேட்டதற்கு-அது சில வீடுகளிற்குப் பக்கத்திலிருந்தது என நான் சொல்லியிருக்கலாம்.ஆனால் என்னை விடமாட்டார் போல இருந்தது.பொதுவாகச் சொல்வதென்ற முடிவில் பள்ளிக் கூடத்திற்குப் பக்கத்தில் வீடென்றேன்.ஆள் ஊரின் வரைபடத்தைக் கையில் வைத்த விசாரிக்கும் ஒப்றாவ(OFPRAFrench Office for Protection of Refugees and Stateless Persons)-விடத் தெளிவான வரைபடத்தை வைச்சிருப்பார் என நினைக்கிறேன்.எந்தப் பள்ளிக்கூடமென்ற அடுத்த கேள்வியைத் தூக்கிப் போட்டார்.கெட்டித்தனமாகக் கேட்டு விட்ட தோரணையில் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தார்.வேதப்பள்ளிக் கூடம் சைவப்பள்ளிக் கூடமென்று இரண்டு இருந்ததையும் தெரிந்திருக்கிறார்.

உடையார் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளியோ முருகன் கோயிலுக்குக் கொஞ்சத் தூரத்திலோ என்றால் நிம்மதியாக மனிசன் வந்த வேலையை முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேருவார் என விளங்கியது.அவருக்குத் தீனி போட விருப்பமில்லாமல்  வாய்காட்டிக்(வாயாடி) கதைத்துக் கொண்டிருந்தது எனக்குப் பிடிச்சிருந்தது.

அதனால் , இடப்பக்கம் வேதப் பள்ளிக்கூடமும் வலப்பக்கம் சைவப் பள்ளிக் கூடமும் என்று சொல்லி அவருடைய மப்பையே (map)குழப்பிவிட்டேன்.

நன்றி : வல்லினம் ஏப்ரல்-இதழ் 28

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s