தர்மினி

1.

அது அங்கே தான் இருக்கிறது.
நம்பிக் கொண்டிருக்கிறேன்.
வருடங்கள் கடந்து விட்டன
வேறு வேறு குடியேறி
பல சுவர்களுடன் என் அலைச்சல்.
என் வீடோ நெடுந்தொலைவுக் கிராமம் ஒன்றில்.

நீ எந்த ஊர்?
யாராவது அடிக்கடி  கேட்கிறார்கள்.
இடம் விட்டோடி இருபதாண்டுகள் போயின.
ஆனாலும் அவ்வூரவள் நானென்கிறேன்.

உறவினர் வீடொன்றில் உறங்குதல் போலும்
எவரோ ஒருவரின் இடத்தில் ஒழிந்திருப்பதைப் போன்றும்
அந்தரித்த வாழ்வு.

அடுக்கிய உடுப்புகள் ஒரு பயணம் நோக்கியதாக
வீடு போக விருப்பம்.

2.

அதைப் பற்றிப் பேசுவார்களா?
ஊருக்குப் போனதாக ஒரு படம் தருவார்களா?
வீட்டோரமாக
றோட்டில் நடந்து போனதாகச் சும்மா சொல்ல மாட்டார்களா?
நான் வீடில்லாதவள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

3
அவர்கள் வந்தனர்.
ஊரைப் பார்த்தீர்களா?
வெறுந்தரவை,பனங்கூடல் வேறென்ன? என்றனர்.
வீட்டைக் கண்டீர்களா?
வீடே இல்லையென்று விசாரித்தால் சொல்கிறார்களே……(பதிலாம்)
ஓம்! எனக்கும் தெரியும்.
ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறில் சாம்பலானது.
மரங்கள்,நான் உலவிய மணல் பரவிய முற்றமொன்றுண்டு.
அவர்கள் சொல்வதில் உண்மையில்லை.

நன்றி:புதுவிசை

Advertisements