ஆடு ஜீவிதம்- நாவலைப் பற்றி…

தர்மினி

வல்லினம் : இதழ் 29  , மே 2011

நான் கடந்த மூன்று நாட்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். சாப்பிடும் போது, பஸ்சுக்காகக் காத்திருக்கும் போது, பயணிக்கையில் , வரிசைகளில் நிற்கும் போது , படுக்கையில் என விரித்து வாசித்தபடியிருந்தேன்.அவ்வாறாகத் தான் நேற்றும் என் குடும்ப வைத்தியரின் நோயாளர் காத்துக் கொண்டிருக்கும் அறையிலும் படித்துக் கொண்டிருந்தேன். ஒருபோதும் அவசரப்பட்டு மருத்துவரிடம் ஓடிப் போகிறவள் நானல்ல. அந்நேரத்தில் பல வேலைகளைப் பார்க்கலாமெனக் கை வைத்தியங்களில் ஈடுபடுவேன்.அல்லது வலி நிவாரணிகளை யோசிக்காமல் விழுங்கிவிடுவேன். கடந்த குளிர் காலத்தைக் காய்ச்சல் , சளி இல்லாமல் சமாளித்ததாக மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

மூன்று நாட்களாகத் தான் தலைவலிக்கத் தொடங்கியிருந்தது. என்னைச் சுற்றி நெருப்பு எரிவதைப் போன்ற வெப்பத்தை உணர்ந்தேன்.அனல் என் நெற்றியினின்று வீசியதாகத் தோன்றியது.ஆனால், இதோ… இப்போது தான் மெதுமெதுவாக வெய்யில் படரத் தொடங்கியுள்ளது. பொதுவாக ஆடி-ஆவணி மாத வெய்யிலில் தான் தலையிடி எனக்கு ஆரம்பிப்பது வழக்கம்.என்ன தான் தலை வலித்தாலும் -ஆடுஜீவிதம்- என்ற இப்புத்தகத்தைப் படிப்பதை நிறுத்தவும் முடியவில்லை. இதைப் படித்து முடித்தே ஆக வேண்டும் என்ற திட்டமெதுவும் போடாமலே அது என்னை வாசிக்கச் செய்தது.

நான் இந்தத் தலையிடிக்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட போது ,அது நான் கைகளில் காவித் திரிந்த புத்தகமாக இருந்தது. நானதை உள்வாங்கியிருந்தேன் . அது ஓர் கற்பனைக் கதையல்ல.

நஜீப் என்ற மனிதன் தன் அடிமை வாழ்விலிருந்து தப்பித்தோடி வருவதற்கான மூன்றரை வருடப் போராட்டமது. அவரது வாழ்க்கையின் வெப்பம் தான் என்னைச் சுட்டுக் கொண்டிருந்தது. நானும் நஜீப்புடன் பாலை மணலில் ஓடினேன். வனாந்தர வெப்பத்தில் குளிக்க முடியாமல் வேர்த்துக் கிடந்தேன்.தாகத்தில் வாடினேன்.ஆடுகளோடு உரையாடினேன். புளுக்கைகளும் மூத்திரவாடையுமாகச் சுவாசித்தேன்.தப்பிக்க வழியொன்று தெரியாது அழுதேன்.அவரது வாழ்வின் வெம்மையை நானுணர்ந்தேன்.என் தலையோ சுத்தியலால் அடிப்பதைப் போல வெப்பம் தாங்காது வலித்தது.

ஆடுஜீவிதம் எனும் புத்தகம் பென்யமின் என்ற பிரபல மலையாள எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ளது.தமிழில் எஸ்.ராமன் மொழிபெயர்த்திருக்கிறார்.அது நஜீப் என்ற சாதாரணத் தொழிலாளியின் வாழ்வின் மூன்றரை வருட வாழ்வில் நடந்தவைகளைச் சொல்லும் உண்மை கதை. நாம் கற்பனை செய்ய முடியாத சம்பவங்களும் சூழலுமாக அது இருக்கிறது.ஆம் , உண்மைகள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதுண்டு.ஆடுகளிடையில் ஒரு ஆடாக நஜீப் வாழ்ந்தார். ஆடுஜீவிதத்துக்கு 2010 கேரள சாகித்ய அகாடமி வழங்கப்பட்டுள்ளது. கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம் அத்துடன் கேரள மாநில பத்தாம் வகுப்பு ஆகியவற்றில் பாடப் புத்தகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் மேற்குலகிற்கு அகதிகளாகப் புலம்பெயர்வதற்கு முன்னர் வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் வேலை பெற்றுச் செல்வது கனவாயிருந்தது. அது ஒரு சீஸன் . ஊரிலிருந்து பலர் புறப்பட்டனர்.தொழில் முகவர்களிடம் காசு கொடுத்து ஏமாறுவதும் கேள்விப்படும் கதைகளாக இருந்தன. வேலை கிடைத்துப் போனவர்கள் சில வருடங்களிற்குப் பின்னர் தொலைக்காட்சிப் பெட்டி, நகைகள், உடுப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என கொண்டு வந்திருப்பதை அயலிலுள்ளவர்களும் ஆர்வத்துடன் ஓடிச் சென்று பார்ப்பது வழமை.அது மிச்சமுள்ளவர்களையும் தூண்டிவிடும்.விடுமுறையில் வந்தவர்கள் திரும்பிச் செல்ல மனமின்றியிருப்பார்கள். குடும்பத்தவர்களைப் பிரிந்து வாழும் தனிமையும் வெய்யிலில் கடும் உழைப்பும் அவர்களால் விரும்பி ஏற்கப்படுபவையா? ஒரு கல்வீடு கட்டவும், சகோதரிகளுக்குச் சீதனம் கொடுக்கவும் , ஊருக்குள் கொஞ்சம் பணக்காரராக வேண்டுமெனவும் தானே செல்கின்றனர். அப்படித்தான் நஜீப் கூட தன் வீட்டுக்கு மேலும் ஒரு அறையைக் கட்டவும் கொஞ்சம் கடன்களை அடைக்கவும் வளைகுடா நாடொன்றுக்குச் சென்றார்.

மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட நாவலென்ற எவ்வித நெருடலுமற்று நாவல் படிக்கக் கூடியதாயிருக்கிறது. பென்யமினின் எழுத்துநடையும் வாக்கியங்களும்  வாசிப்பைச் சுவாரசியப் படுத்துகின்றன. நஜீப்பின் பாலைவன வாழ்வும் இதுவரை படித்த கதைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. நமது வாழ்க்கையிலிருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு பிடித்து வாழ வேண்டுமென நினைக்கச் செய்யும் மனிதராக நஜீப். அவரது மனவுளைச்சலும் அதிலிருந்து அச்சூழலுக்கு இயைபாக்கமடைவதும் சிந்திப்புகளும் சுயஎள்ளல்களுமென விறுவிறுப்பான புத்தகமிது. கடைசியில் தப்பித்தோடுவதும் கூடப் பெருஞ்சாகசமாக இருக்கின்றது.

1995 ஆம் ஆண்டில் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ரியாத் விமானநிலையத்தில் இறங்கிய அன்றிலிருந்து நஜீப்புக்கு வெளியுலகின் தொடர்பற்றுப் போனது.அரபி ஒருவன் சட்டத்துக்குப் புறம்பாக மொழி தெரியாத நஜிப்பை விமானநிலையத்திலிருந்து  கடத்திச் செல்வதைப் போலக் கொண்டு சென்று அடிமையாக வைத்து வேலை வாங்குகிறான். பாலைவனத்தில் கண்  விழித்ததிலிருந்து களைத்து உறங்கும் வரை ஒட்டகங்களை ஆட்டுக்கிடையைப் பராமரிப்பது தான் வேலை.ஆனால், அந்த வேலைக்காக அவர் வரவில்லை. பாலைவனத்தில் ஆடுகள் எதை மேயும்? அவற்றுக்குப்  பட்டியில் தீனிகள் கொடுக்கப்படும்.பால் கறக்கப் படும்.அவை இறைச்சிகாக விற்கப்படும். அவைகளை நடைப்பயிற்சி போல பாலை மணலில் ஓட்டிச் செல்ல வேண்டும்.

நஜீபைக் கண்காணிக்க அவரால் அர்பாபு எனக் குறிப்பிடப்படும் ஒரு மனிதனும் கூட இருக்கிறான்.அவனது வேலை பெல்ட்டால் நஜீபை அடிப்பதும் குபூஸ் எனப்படும் ரொட்டியை ஒத்த உணவை எறிவதும் பைனாகுலரில் அந்த மணல்வெளியில் ஆடுகளைக் கூட்டிச் செல்லும் நஜீப்பைத் துப்பாக்கியுடன் குறி பார்த்துக் கொண்டிருப்பதும் தான்.அவர்களிடையில் மொழி இல்லை.பெல்ட்டால் அடித்து அடித்தே நஜீப் ஒரு மிருகத்தை ஒத்தவராக எண்ணி நடாத்தப்படுகிறார். நாவலில் அது இவ்வாறு விபரிக்கப்படுகின்றது ‘ மொழிச்சிக்கல் எதுவுமில்லாத பதில்”.

குடும்பத்துடன் தொடர்பில்லை, சம்பளமில்லை ,போதிய உணவில்லை,அடிகள், மூன்றரை வருடங்களாக உடலில் சொட்டுத் தண்ணீர் படவில்லை,பிறரது அன்பில்லை,மாற்றி உடுத்த ஆடையில்லை.இந்த ஆடுகள் கூடத் தன்னை விடச் சுத்தமாக இருக்கின்றனவே என நஜீப் நினைக்கிறார்.மனநேயாளியாகாது ஏறத்தாழ மூன்றரை வருடங்கள்  அச்சூழலை ஏற்றுக் கொண்டு வாழும் மனத்திடத்தைப் பெறுவது அசாத்தியமானது. ‘எல்லையில்லாமல் பரந்து கிடக்கும் பாலைவனம்.அது நீண்டு நீண்டு அடிவானத்தைத் தொட்டு நிற்கிறது.அந்தக் காட்சிக்கு இடையூறாக ஒரு சின்னஞ்சிறு மரம் கூட அங்கில்லை” இது நஜீபின் வர்ணிப்பு.

அவருக்கு வனாந்தரமும் வெய்யிலும் மெதுமெதுவாகப் பழகிப் போகிறது.ஆடுகளுக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டி அவையுடன் பேசுகின்றார் நஜீப். ‘எனக்கென்ன குறைச்சல்?சாப்பாடு கிடைக்கிறது. பிரியத்துக்குரிய ஆடுகள் இருக்கின்றன.வேலை செய்தால் போச்சு. ‘ என ஆடுகளுடன் சீவிக்கத் தன்னை மாற்றவும் முயலும் மனித மனதின் உயிர் வாழும் வேட்கையை என்னவென்பது?அது எப்படியெல்லாம் மாறுகின்றது?அதே நேரம் உயிரும் உணர்வுமுள்ள மனிதனாகப் பார்க்காத அந்த முதலாளியின் வக்கிரத்தின் அளவுகோல் எதுவுமுண்டா? நஜீப் மட்டுமில்லை. அப்பாலைவனத்தில் இதே போல அகப்பட்டு அடிமைகளாக வாழ்ந்து செத்துப் போகிறார்கள் இவரைப் போன்ற இன்னும் சில மனிதர்கள் என்பதும் இந்நாவலில் குறிப்பிடப்படுகிறது.

நீண்டு வளர்ந்த சிக்குப்பிடித்த தாடியும் தலைமுடியும்.அவரது உடலெங்கும் ஆடுகளின் ஈரும் பேனும் தெள்ளுகளும் என ஆடுகளோடு ஆடாகத் தன்னை உணரும் அம்மனிதன் ‘புல்காரி ரமணி’ எனக் கிண்டலாகத் தன்னால் பெயர் வைத்து அழைக்கப்பட்ட ஆட்டுடன் ஓரிரவு புணருகின்றார். அம்மனிதனின் மனதின் அவலங்களும் வாழ்தலுக்காகப் போராடுதலும் 238 பக்கங்களாக விரிந்து செல்கின்றன.

நல்ல சந்தர்ப்பமொன்றில் தப்பித்தோடும் நஜீப் பாலைவனத்தைத் தாண்டுவதிலும் புது அனுபவங்களைக் அடைகிறார். பாலைவனப் புயல், பறக்கும் ஓணான்கள்,ஆயிரக்கணக்கில் பெரியதொரு அலை போலப் படையெடுத்து வந்த பாம்புகள், அளவில் பெரிய சிலந்திகள் என நாட்கணக்கில் தண்ணீரின்றி நடை. பாலைவனத்தில் பயணிக்கப் பல சமயோசிதங்கள் தேவைப்படுகின்றன.

அவரது கதையைக் கேட்டு பென்யமின் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால் , வாசிப்பில் எத்தடங்கலையும் அது தரவில்லை. பின்குறிப்பில், பென்யமின் இவ்வாறு எழுதியுள்ளார் ‘ பல மணி நேரம் அவரைப் பேச வைத்தேன்.அந்த அவல வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மிகக் கவனமாகப் பதிவு செய்தேன்.அப்போது தான் எனக்கொன்று புரிந்தது.இதுவரை நாம் கேட்டிருந்த கதைகளெல்லாம் எத்தனை போலியானதென்று‘.
நஜீப் என்னோடும் கதைத்தார்.நானும் வெய்யிலிலும் பாலையிலும் ஆடுகளின் பின்னால் ஓடினேன்.தாகம் உயிரைக் குடிக்கப் பாலைவனத்தினூடாகத் தப்பித்தோடினேன்.

உயிர்மை பதிப்பக வெளியீடு : ரூ .140
ISBN :978-93-81095-36-2

நன்றி : வல்லினம்

2 thoughts on “ஆடு ஜீவிதம்- நாவலைப் பற்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s