ஈழத்து மெல்லிசை மற்றும் துள்ளிசைப் பாடல்களைக் கேட்பதற்கு இப்போதும் விருப்பமாக இருக்கிறது. அதே போல நாடகங்கள் ,கூத்துகள் ,வில்லுப்பாட்டுகள்,  புத்தகங்களும். அவை ஒரு தனித்த ருசியைத் தருவன. இப்போது படிக்கும் பெரும்பாலான புத்தகங்களும் தமிழகத்திலிருந்து எழுதப்படுபவை அல்லது ஏதாவதொரு புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து தமிழில் எழுதப்பட்டவையாகவே கிடைக்கின்றன. ஓர் இலங்கை நாவலைப் படிப்பதென்றால் எனக்கு அதுவொரு தனி இன்பத்தைத் தரக்கூடியது. நமது பேச்சுத் தமிழ்,அந்தச் சூழல்,பாசாங்கற்ற கதை சொல்லல்,அப்புத்தகம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் நெருக்கமாகத் தோன்றும்.

நான் வாசிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வீரகேசரிப்பிரசுரம்   வெளியிட்ட பல புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. அப்போது அவை என் மனதுக்கு நெருக்கமானவையாக இருப்பதை உணர்வேன். வன்னியில் காடு வெட்டிக் கமம் செய்த மக்களின் வாழ்க்கையைப்  பற்றி செங்கைஆழியன் எழுதியிருப்பதைப் படிக்கச் சுவாரசியமாக இருக்கும்.தி.ஜானகிராமனின் காவிரியாறோ அக்கிரகாரமோ எனக்குத் தொலைவாகத் தானிருந்தன. அப்போது வாசித்த புத்தகங்களில் இப்போதும் ஞாபகத்திலிருப்பவையென வாடைக்காற்று-போராளிகள் காத்திருக்கின்றனர்-குருதிமலை-அக்கரைப்பச்சை-நிலக்கிளி-வெயிலில் நனைந்து மழையில் காய்ந்து-சுமைகள் எனப் பல நாவல்களின் பெயர்களைச் எழுதிக் கொண்டே போகலாம்.அப்படியொரு அனுபவிப்பை எதிர்பார்த்துத் தான் உமாவரதராஜன் எழுதிய மூன்றாம் சிலுவை நாவலைப் படிக்க ஆர்வமாயிருந்தேன். என்னுடைய நாட்டுக் கதையொன்றை நாவலாகப் படிக்கப் போகிறேன் என்பது மகிழ்ச்சியைத் தந்தது. இலங்கையிலிருந்து எழுதப்பட்ட சஞ்சிகைகள் -சிறுகதைத் தொகுப்பு எனச் சமீபத்தில் படித்திருப்பினும் ஒரு நாவலைப் படிக்கும் வாய்ப்பு  மூன்றாம் சிலுவையைப் படிக்கும் வரை கிடைத்திருக்கவில்லை.

மிக ஆர்வத்தோடு அப்புத்தகத்தை வாசிக்க எடுத்தேன். முன்பு த.ஜெயகாந்தன் எழுதிய புத்தகமொன்றைப் படிக்க எடுத்தவுடன் அவர் நீளமாக எழுதிய முன்னுரையை விரும்பி வாசிப்பேன். அதுவொரு நல்ல கட்டுரையாகவோ நம்முடனான உரையாடலாகவோ இருக்கும்.எம்மைச் சிந்திக்க வைக்கும்.நாமே நம்மிடம் கேள்விகளைக் கேட்க வைப்பார்.தார்மீகக் கோபங்கள் நிரம்பிய பாசாங்கற்ற பக்கங்களாயிருப்பன. நல்ல உணர்வொன்றை அனுபவித்து அதை வாசிக்கலாம்.அந்நாவலையோ சிறுகதைகளையோ படிப்பதற்கு நிகரான திருப்தியை அம்முன்னுரையும் தந்துவிடும். அது போலொரு அனுவத்தை  மூன்றாம் சிலுவை நாவலுக்கான பிரபஞ்சனின் முன்னுரையிலும் கிடைக்கப் பெற்றேன். அந்நாவலுக்குப் பெறுமதி முன்னால் அந்த முன்னுரை இருப்பது தான் என்று கூடச் சொல்லலாம்.

125 பக்க நாவலில் 8 பக்கங்கள் பிரபஞ்சன் முன்னுரையை எழுதியிருக்கிறார். ஒற்றைப்பரிமாணம் உள்ளதாக ஒரு நாவல் இருப்பதில்லை எனக் குறிப்பிட்டு-‘இந்த நாவலை ஒரு உடைந்த,நிறைவேறாத காதல் கதை எனலாமா என்றால்,அதில் அர்த்தம் கூடுகிறதே தவிர அடர்த்தி கூடுதல் இல்லை. உடைந்ததும் நிறைவேறாததுமான காதல் எனும் போது உடையாமலும் நிறைவேறியும் தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.”என்று கைக்கிளை , பெருந்திணையை விபரிக்கிறார்.

கைக்கிளை பற்றி இவ்வாறு ‘கைக்கிளையே காதலின் முதல்படி.அந்த இருவருக்குமே ஒரு கணத்தில், ஒரு நேரத்தில் காதல் லபித்து விடும் சாத்தியம் இல்லை.புனைவுகளில் அது நேரலாம்.யதார்த்தம் அப்படி இல்லை.இருவரில் யாரோ ஒருவர் முதலில் காதல் வயப்பட்டு,அடுத்தவர்க்கு அதைப்பரவ விடும் முயற்சியில் தான் காதல் பிறக்கிறது. காதலை அறிவிக்காமலேயே இருந்துவிடும் சூழலும் நேர்வதுண்டு. அதனாலேயே, அறிவிக்கப்பட்டு இணையாத காதல், காதல் அல்ல என்றும் ஆகிவிடாது. காதல் என்பது ஒரு உயிரின் உரிமை சார்ந்த, அறம் சார்ந்த விழுமியம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுமானால், கைக்கிளை காதலின் ஓரங்கம் என்பதில் நாம் மாறுபட மாட்டோம்.”

‘பெருந்திணை இரண்டு சாகைகளில் நடக்கிறது.ஒன்று வயது முதிர்ந்தோர் தமக்குள் கொள்ளும் காதல்.மற்றது வயது குறைந்தோர் வயது முதிர்ந்தோர் கொள்ளும் காதல். இவை இரண்டுமே காதல் செயற்பாடுகள் தாம். மனித குலத்தின் மிக யதார்த்தமான இந்த நிகழ்வுகள், குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டு பயங்காட்டும் பூதங்களாகி வந்தன” என்று பழந்தமிழ்ப் பாடல்கள் பற்றி மிக அருமையாகத் தம் முன்னுரையில் எழுதிச் செல்கிறார் பிரபஞ்சன்.

இந்த முன்னுரையைப் படித்து விட்டு ஆர்வம் மேலெழுந்து நாவலைப் படித்தால் அதுவோ வேறொரு மனநிலையைத் தான் தந்தது. தன் தவறுகளெல்லாம் பெரிசாக ஒன்றுமேயில்லை என்ற எண்ணத்தோடு சற்றும் நீதியற்ற ஒரு ஆண் தன்னை விரும்பிய பெண்ணை விட்டுப் பிரியும் சூழ்நிலை வரும் போது துரோகி, வஞ்சகி , வலைவிரிப்பவள், ஏமாற்றுக்காரி எனத் தூற்றுவதும் அதை நியாயப்படுத்துவதைப் போல ஒரு நாவலாசிரியர் கதையொன்றை எழுதியிருப்பதும் அருவருப்பைத் தான் ஏற்படுத்துகிறது. விஜயராகவன் என்ற மனிதன் சுயபச்சாதபத்தோடு சொல்லும் கதைகளைப் படிக்கப் படிக்கச் சற்றும் காதலின் வேதனை தெரியவில்லை. காமமும் மோகமும் கொண்டவனின் கள்ளத்தனம் தான் தெரிகிறது. அந்நாவலில் காதலே இல்லை.பின் எப்படிக் காதலின் வேதனையில் துயருற முடியும்?

இருவருக்கும் 22 ஆண்டுகள் வயது வித்தியாசமோ அல்லது இரு மனைவியரும் பிள்ளைகளும் இருக்கக் கூடியதாக ஓர் இளம் பெண் மீது விருப்பம் ஏற்படுவதோ நமக்கு அதிர்ச்சி தரும் விடயங்களல்ல. காதல் வயப்பட்டுள்ளேன் எனும் உணர்வு எந்த வயதிலும் எவருக்கும் வரலாம். ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ இன , மத ,சாதி, பால், வயது வேறுபாடு நோக்காது மற்றொரு நபர் மீது அது ஏற்படுவது மனித இயல்பு.அதே போல் ஒருவருக்கு ஒரு முறை தான் காதல் ஏற்படவேண்டுமென்பதுமல்ல.முடிவற்றுக் காதல் செய்யட்டும் உயிர்கள். கல்யாணத்தோடு காதல் முற்றுப் பெற்று விடுமென்பதுமல்ல.அவரவர் மனநிலைகளுக்கு அவரவர் சூட்டும் பெயர்களெல்லாமவை. குடும்ப நிறுவனத்துக்கான  ஒப்பந்தத்தை மீறுவதும் மீறாததுமாகக் அக்காதல் ஆதரிக்கப்படுவதும் அவதூறு செய்யப்படுவதுமாக இருக்கிறது.

வறுமையான இளம்பெண் வேலை கொடுத்த மேலதிகாரிக்கு வளைந்து கொடுத்துப் போக வேண்டி ஏற்படுகிறது. ஜூலிக்கு விஜயராகவன் மீது காதலா? இல்லையா?என்று கேட்டால் கூட, காதலாகத் தான் இருக்கட்டுமே. அவள் சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்தால் தன் வாழ்வு எப்படி எனத் தீர்மானித்தால் வஞ்சகியா? பெறுமதியான பொருளும் பணமும் கொடுத்துத் தன்னை விட்டுப் போகாமலிருக்கச் செய்வதும், ‘வீட்டிலே என்னுடன் வந்திருங்கள்’ எனக் கேட்டவளைத் தவிர்த்துத் தன் காமம் தீர்க்க அடிக்கடி வந்து போகும் விஜயராகவன் தன்னை விட்டுவிட்டுப் போய் விட்டாளெனப் புலம்பி அழுவதும் அதைக் காவிய நயத்துடன் உமாவரதராஜன் எழுதியிருப்பதும் மணிஃஆப் செட் அச்சடித்த தாள்களுக்கு ஏற்பட்ட கேடு.

இரண்டு மனைவிகள்,  பெண் பிள்ளைகள் மூன்றாவதாகவும் அன்பு செய்யும் பெண் என்று பெண்களை உறவுகளாகக் கொண்ட விஜயராகவனுக்கு பெண்கள் மேல் பயங்கர வெறுப்பு. ஜூலியின் மம்மி குடிகாரி, தலைமுடியைக் கட்டையாக வெட்டியவள், மெல்லிய சட்டையைப் போட்டிருப்பவள் என வர்ணிக்குமளவு வெறுப்பு. ஜூலியின் அக்கா ஆண்கள் பலரை ஏமாற்றுபவளாக பலருடன் உறவு கொள்பவளாகக் கெட்டவளாகத் தெரிகிறார்.

படுக்கையறைக் காட்சிகளை விபரித்து எழுதிப் புரட்சி ஒன்று செய்து விட்டதாக நினைக்கவும் ஒன்றுமில்லை.அவை வலிந்து செருகப்பட்டவையாகத் துருத்திக் கொள்கின்றன.குரும்பூர் குப்புசாமியும் புஷ்பாதங்கதுரையும் அந்தக் காலத்தில் எழுதாதவையா?
ஆபாசவிபரிப்புகள் மூன்றாம் சிலுவையில் விரவிக் கிடக்கின்றன. மலேசியாவிலிருந்து வெளிவந்த நயனம் பத்திரிகைக்கு, அறுபதுகளிலேயே  ‘தீ‘ நாவல்  எழுதிய எஸ்.பொ.அளித்த பேட்டியொன்றில் ‘தீ’ நாவலைப் பற்றிக் கேட்கும் போது இவ்வாறாகப் பதிலளிக்கிறார்.

கேள்வி : அந்த நாவலைப் படைக்கும் போது, சொல்ல வந்த விஷயம் வெற்றிபெறணும் என ஆசைப்பட்டீர்களா?…அல்லது உங்களுடைய புதிய உத்தி மக்களை அடையணும்னு நெனைச்சிங்களா?

எஸ்.பொ. : அதில ரெண்டு பிரச்சனை அப்போ இருந்தது.-தீ- நாவல் பாலுறவு சிக்கல்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதிலும், அது உணாச்சியைத் தூண்டும் ஒரு படைப்பாக அமையக் கூடாது என்பதில் அக்கறை இருந்தது எனக்கு!… ரெண்டாவதாக இந்தப் பாலுறவு சிக்கல்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதிலும்,அதில் இலக்கியத் தாக்கத்தை எற்படுத்தக் கூடிய விசாரணையாக அமைக்கலாம் என்பதை வாசகர்களும் இலக்கிய விமர்சகர்களும் எற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு எனக்கு இருந்தது. மூன்றாவது பொதுமக்களுடைய ரசனையை விட, தரமான இலக்கிய விமர்சகர்களின் சுவையையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டுமென்று நினைத்தேன்!…

பொதுவாகப் பலரும் தம் மனதைப் பற்றி மட்டுமே கவலைப்படுவர்.அவரால் விரும்பப்பட்ட பெண் தன் வழியே போகும் போது, ஏமாற்றப்பட்ட ஒரு அப்பாவியின் அழுகையை அழுகிறார்.’மனிதர்கள் இப்படித் தான்’ எனச் சொல்வதென்றால் அம்மனிதன் பவித்திரமான காதலில் துடிக்கும் பாவப்பட்ட சீவன் என்ற தொனியில்  அவனுடைய கதையை எழுதியிருப்பது தான் சினத்தை ஏற்படுத்துகின்றது.

ஆண்திமிர் எங்கும் விசிறிக்கிடக்கும் இந்நாவலின் கடைசிக்கு முதற்பக்கத்தில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

“அவளோ தான் நிகழ்த்திய துரோக நாடகத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு,திரைச்சீலையைக் கீழிறக்கி விட்டு ,அடுத்த கேளிக்கை நிகழ்ச்சிக்கு மேடையைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறாள். ஒப்பனை அறையில் உட்கார்ந்து முகத்தைச் சிறிது சிறிதாக மாற்றத் தொடங்குகின்றாள். பொய்மை நிரம்பிய தன் முகம் பளிச்சிடுவதை எதிரேயுள்ள நிலைக்கண்ணாடியில் பூரிப்புடன் பார்த்து ரசிக்கின்றாள்.அவள் நடிப்புத் திறன் பற்றிய புகழ் கண்டம் விட்டுக் கண்டம் தாவிப் பரவுகின்றது.”
ஒரு பெண் தான் கொண்ட உறவைத் தான் விரும்பிய போது விலக்கி விட்டுச் செல்வது அந்த ஆணுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதாம்.அது பெரும் ஒழுக்கக் கேடாக முன்வைக்கப்படுகிறது.அவளொரு சுத்துமாத்துக்காரி, குணங்கெட்டவள், குடும்பமே அப்படித்தான் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

பெண்கள் மேலான அருவருப்புக்கும் வன்மத்துக்கும் ஆணென்ற அகம்பாவத்துக்கும்   கிடைத்த சிலுவைத் தண்டனையோ என்று தோன்றுகிறது. ஆனால், இதைப் படித்த எனக்கு நான்கு சிலுவைகள் தண்டனை.

தர்மினி

நன்றி : www.vallinam.com.my

Advertisements