தர்மினி

சத்தமில்லாத மழை

முன்வாசற் கதவொன்று
அயல்வீட்டுச்சுவர்கள் இருபுறங்கள்
சன்னல்களிரண்டு பின்புறம்

அங்கிருந்து வெளியேறும் போதும்
உள்நுழைந்த பின்பும்
திறப்புக் கொண்டு பூட்டப்பட்டதாக.

திரைகள் இழுத்து மூடிச்சாத்திய சன்னல்களுடன்
கதவைத் தாளிட்டு
உள்ளே என் வாசம்.

மின்னி ஒரு வெளிச்சம் மங்கலாக
என் முன் விழ
சன்னற் திரை விலக்கி வானம் பார்த்தால்
மழைக்கயிறுகள் இறங்கி மண்ணில் கரைந்து கொண்டிருந்தன.


மழைச்சத்தம்

முன்னொரு காலம்
மழை சத்தமிடுவதைக் கேட்டேன்.

ஓலைக் குடிசையொன்று
மூடக்கதவில்லை
சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள்
அதிலே
குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன.
சாரைப்பாம்பும் சரசரக்கும்.

ஓலைக் கூரையில் மழைக்குதியோசை.
நடுக்கூரை மழையொழுக
டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் .

தாழ்வாரம் குந்திக் கை நனைக்க
முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும்
என் முகத்திலடிக்கும் சாரல்.
மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி
கிணறு தழும்ப
நெல்லி முறிந்து
முருங்கை சரியும்
மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ
பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும்
சற்று நேரத்தில் புதிய காட்சி.

கூதலும் சத்தமுமாக
கிராமத்து மழை கணகணக்கும்.

http://www.vallinam.com.my

இதழ் 31 ,ஜுலை 2011

Advertisements