1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி

ந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும்  கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் சொல்லப்பட்டது.அப்போதெல்லாம் அந்தப் பக்கம் விமானம் குண்டு போட்டுவிட்டுப் போனால் இந்தப் பக்கத்து ஒழுங்கையால் ஓடிப் போய் என்ன நடந்தது என்று பார்க்குமளவு யுத்தமும் சத்தமும் எனக்குப் பழகிப் போயிருந்தது. மேலே எது வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் அது பற்றிக் கவலையின்றிக் கீழே றோட்டில் சைக்கிளில் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த நிச்சயமற்ற நாட்களில் வாழ்ந்ததை நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது.வேறு வழியில்லை வருவது வரட்டும் என்ற துணிச்சலில்லை.என் போன்ற சனங்களுக்கு அதை எதிர் கொண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்கவில்லை.

சில நாட்களாக ஒரே ஷெல்லடிச் சத்தமும் வானிலிருந்து குண்டுகள் விழும் சத்தங்களும் தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்தன.இனி மேல் ஷெல்லடி அறம்புறமாக இருக்கப் போகுதெனச் சனங்கள் கதைத்துக் கொண்டனர்.ஆகவே தனியாக இருக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு வரலாமென்று சென்றேன்.சில நிமிடங்களில் உறவினரான நிமலராஜனும் அங்கு வந்தார்.அவர் அப்போது ஈழநாதம் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்.அவர் வந்த படியால் ஏதாவது முக்கிய நியூஸ் இருக்குமென எதிர்பார்த்தோம். அவரும் அவசரஅவசரமாகத் தான் வந்ததாகவும் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நீங்களும் ஏதாவது வழியைப் பாருங்கள் என்றார். ‘ஈழநாதத்தில் இருந்த அச்சு இயந்திரங்கள் ஏற்கனவே கிளிநொச்சிக்கு ஏற்றிச் செல்லப்பட்டுவிட்டன’ என்ற போது தான் அதை உண்மை என நம்பினோம். தீவுப்பகுதி முக்கியமற்ற பிரதேசமென்று கைவிட்டதாகச் சொன்னவர்கள். யாழ்ப்பாணத்தையும் கை விட்டுச் செல்வார்கள் என என்னால் நம்ப முடியாமல் இருந்தது.யாழ் மக்களும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்வதை நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

உடனடியாக இதை என் பெற்றோருக்குச் சொல்ல வேண்டுமெனப் புறப்பட்டேன். வழியில் பாண்டியன்தாழ்விலிருந்த அன்ரன்பாலசிங்கத்தின் காம்பில் ஏதும் அசுமாத்தம் தெரிகிறதா? என சைக்கிளிலிருந்து எழும்பி நின்று பார்த்தேன்.அப்படி எட்டிப்பார்த்தும் தெரியாதளவு உயரத்தில் அஸ்பெஸ்டாஸ் சீற்றுகளால் மிக உயரமாக வளவு அடைக்கப்பட்டிருந்தது.அதிகாலைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் நாய்க்குட்டியுடனும் பாதுகாவலர்களுடனும் வெளியே வருவதைப் பார்த்திருக்கிறேன்.ஆதலால் அங்கே அவர்கள் வசிப்பதாக நம்பினேன்.

வீதிகளில் மக்கள் பொருட்களைச் சைக்கிள்களில் வைத்துக் கட்டியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கூட்டங்கூட்டமாகப் போகிறார்கள்.குழந்தைகளும் வயோதிபர்களும் அந்த இருட்டில் நடக்கிறார்கள்.நான் வேகமாக வீட்டுக்குள் போன போது அப்பா என்னைத் திட்டினார். ‘ஊர்ச்சனமெல்லாம் ஓடுதுகள் நீயெங்க உலாத்திப் போட்டுவாறாய? உடனடியாகச் சாப்பிட்டுப் போட்டு வா நாங்களும் எங்கையாவது போவம்’என்றார்.அம்மா சாறி உடுத்தி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார். சில மணிநேரங்களில் எல்லாமே மாறிப்போயிருந்தது. -இன்றிரவு நாவற்குழிப்பாலம் உடைக்கப்படும்.அதற்கு முன்னர் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.-என்ற அறிவிப்பு வீதியில் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.

இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.

அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள்  உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம்

ஆயர் இல்லத்தில் யாழ்ப்பாண பிஷப் இருக்கிறார்.நாங்கள் மறைக்கல்வி நிலையத்தில் தங்கப் போவோம் என்று சொன்னவர்களுடன் சேர்ந்து கொண்டோம்.ஏற்கனவே அங்கும் மக்கள் கூடியிருந்தனர்.  இடம்பிடித்து நித்திரை செய்தோம்.இடையிடையே ஷெல் சத்தங்கள் கேட்டன.விடிந்ததும், ஆமிநடமாட்டம் இருக்குமோ இரவில் வந்து விட்டிருப்பார்களோ என்று யோசித்துத் தான் அவரவர் வீடுகளுக்குச் சமைக்கச் சென்றோம்.இயக்கம் பின்வாங்குகிறோம் என்று அந்தப் பிரதேசத்தை விட்டு விட்டுப் போனால் இராணுவமும் விடியற்காலையில் சத்தம் போடாமல் வந்து படலையில் நிற்கும் என்பது என் அல்லைப்பிட்டி அனுபவம்.

இப்படியாக மூன்று நாட்களானது. 30 ஆம் திகதி இரவென்று சொன்னதைப் போல நாவற்குழிப் பாலம் இன்னும் உடைபடவில்லை.ஆனால் நெரிசலால் வயோதிபர்கள் ,குழந்தைகள் இறந்தனர்.சிறுவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது அந்த இரவு போடப்பட்ட குண்டுகளாலும் பலர் காயமடைந்தனர் , இறந்தனர்.மக்கள் பெரும்அல்லோகலப்பட்டதாகவும் அறிந்தோம்.ஆகவே சற்று கூட்டம் குறைந்ததும் வெளியேறலாம் என முடிவெடுத்திருந்தோம். சமைக்கவோ சாப்பிடவோ இயலாதளவு தொடர்ந்து ஷெல்லடி.

தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாதவர்களை, ‘எமது அறிவித்தலை மீறி எவராவது யாழ்ப்பாணத்தில் தங்கினால் அவர்கள் இராணுவத்தின் உளவாளிகளாகக் கருதப்படுவர் ‘ என இயக்கம்  சொன்னது.ஆவேசத்துடன் முன்னேறிவரும் இராணுவத்தை எதிர் கொள்வதன் ஆபத்தையும் நாமறிவோம்.வேறு எங்கும் போக மாட்டோம் என அடம்பிடித்தாலும் ஆமிக்கு உளவாளி என எமக்கு எதுவம் நடக்குமெனவும் எமக்குத் தெரியும்.ஆகவே சற்றுச் சனக்கூட்டம் வீதியில் குறைத்திருக்கக் கூடுமென்ற நம்பிக்கையில் நாங்களும் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டோம்.

இடம்பெயரத் தொடங்கி ,மூன்று நாட்களாகிய போதும் மக்கள் அடிமேல் அடி வைத்தே நகர்ந்து கொண்டிருந்தனர்.நாங்களும் சைக்கிள்களில் கொஞ்சம் உடுப்புகள், பாத்திரங்கள் ,சமையற் பொருட்களென்று வைத்து உருட்டிக் கொண்டு போனோம்.மத்தியானம் நடக்கத் தொடங்கி இரவில் சாவகச்சேரியை அடைந்தோம். பள்ளிக்கூடங்கள் ,பொதுக்கட்டடங்கள் அனைத்தும் ஏற்கனவே யாழ்ப்பாண அகதிகளால் நிரம்பியிருந்தன. சாவகச்சேரியில் உறவினர்கள், நண்பர்கள் எவருமில்லை.எவர் வீட்டுக்கும் போக முடியாது. சூசையப்பர்  மரியாளுடன்  குளிர்கால இரவில் தங்க இடம் தேடி அலைந்ததையொத்த காட்சிகளுக்கு அங்கே பஞ்மிருக்கவில்லை. கடைகளில் பிஸ்கட் கூட பல மடங்கு விலை.பிளேன் ரீ வாங்கிக் குடித்துவிட்டு நாள் முழுவதும் நடந்த களைப்பும், இனி என்ன? என்ற மனச்சோர்வுமாகப் படுக்க இடம் தேடினோம். கடைசியாக ஒரு சங்கக்கடை வாசலில் நித்தரை செய்து கொண்டிருந்த மக்களிடையில் ஒரு இடத்தைக் கேட்டு நித்திரையானோம்.

சூரிய வெளிச்சத்தில் கண் கூச எழும்பிப் பக்கத்திலிருந்த வீட்டுக் கிணறொன்றில் தண்ணீரள்ளி முகம் கழுவினோம்.இருக்க வீடில்லை.எங்கே போவதெனத் தெரியாத நிலை.அடுத்த நேரச் சாப்பாடு எப்படி? எல்லா மக்களின் பிரச்சனையும் இவை. அத்துடன் காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பெற்றோரின் துயரம்.அதற்கான ஒலிபெருக்கி அறிவிப்புகள் சாவகச்சேரி நகரில் கேட்டுக் கொண்டிருந்தன. நோயாளிகளும் குழந்தைகளும் பெருந் துன்பம் அனுபவித்தனர்.அம்மா ,அப்பாவுடன் றோட்டில் நின்று எங்கே இனிப் போவதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.மறுபடியும் ஒலிபெருக்கி அறிவிப்பு. சாவகச்சேரியில் சனநெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் வன்னிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது. இப்போது வன்னிக்குக் கிளாலி கடல் நீரேரியைக் கடந்து செல்வதைப் பற்றி மக்கள் கதைக்கத் தொடங்கினர். நாங்களும் கிளாலி பயணித்தோம். அங்கும் சோகக் கதைகள்.பல நாட்களாகப் படகுப் பயணத்துகுப் பதிந்து விட்டு கொட்டில்களிலும் தென்னைமரங்களின் கீழும் ஏராளமானோர் காவலிருந்தனர். ஒரு கிழமையாகக் கூட காத்துக் கொண்டிருந்தனர்.கடற்படையின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து அடுத்த கரையை அடைவது உயிரைப் பணயம் வைத்துத் தான்.அங்கு சாப்பாடுகள் விற்கப்பட்டன. கையில் காசிருந்தால் வாங்கலாம். நாளாந்தம் கூலி வேலைக்குப் போய் உழைப்பவர்கள் என்ன செய்வார்கள்?

படகுகளில் மக்கள் பயணிக்க வானிலிருந்து குண்டுகள் விழுகின்றன. ஷெல்கள் வெடிக்கின்றன. காயங்கள் , மரணங்கள்.ஆனாலும் கிளாலிக்கரையில் எத்தனை நாளிருக்க இயலும்?உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறுகரை அடைகிறோம்.இரவு அங்குள்ள கொட்டகையில் உறங்கி எழுந்து அடுத்து எங்கே போவதென யோசிக்கிறோம்.கிளிநொச்சியில் தூரத்து உறவினர்கள் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது.ஆனாலும் இத்தனை வருடங்களாகப் பழகாமலிருந்து விட்டு எந்த உரிமையில் போவதென தயங்கினாலும், வேறு இடமில்லை.ஒரு நாள் முழுவதுமாக சைக்கிளை உருட்டியும் ஓடியும் மெதுமெதுவாக அவர்களின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தோம்.அவர்களின் ஆதரவான வரவேற்பு ஆறுதற்படுத்தியது.எங்களைப் போல இடம்பெயர்ந்து வந்து ஏற்கனவே மூன்று குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தனர். ஆனாலும் சற்றும் சலிப்பின்றி இங்கு தராளமாக இருக்கலாம் என இடமொன்று ஒதுக்கித்தந்தனர். ஒரு இடம் கிடைத்த மகிழ்ச்சி. பல நாட்களாகச் சோறில்லாமல் இருந்த எங்களுக்குக் குத்தரிசிச்சோறும் முயல் இறைச்சிக்குழம்பும் தீராப்பசியைத் தீர்த்தன.அது ஒரு போதும் உண்ணாத மிகச் சுவையான சாப்பாடாக ருசித்தது.

தர்மினி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s