சுமதி ரூபனின் உறையும் பனிப்பெண்கள்

-தர்மினி

       கனடாவில் வசிக்கும் சுமதி ரூபன் குறும்பட இயக்குனர், நாடகநெறியாளர், நடிகை மற்றும் எழுத்தாளர் எனப் பன்முகங் கொண்டவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி’. கடந்த ஆண்டில் வெளியாகிய இரண்டாவது தொகுப்பு ‘ உறையும் பனிப்பெண்கள்’. இதில் பன்னிரண்டு கதைகள் அடங்கியுள்ளன.

புலம்பெயர்ந்தவர்கள் தாம் அந்நியராக உணரும் வாழ்வுகள் , ஏக்கங்கள், ஞாபகங்கள், குற்றவுணர்வுகள்,போலித்தனங்கள், இயந்திரத்தனங்கள் என பலவற்றை அனுபவங்களை அறிந்தவற்றை  படைப்புகளாக்குகின்றனர்.சில நேரத்தில் அந்த இயங்குநிலை ஓய்ந்தது போன்று தோன்றும். புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பொன்றைப் படிக்கும் போது நாம் உயிர்ப்புடன் இருப்பதாக மீண்டும் நம்பிக்கை ஏற்படுகிறது.சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பும் அதைத் தருகிறது.

             பொதுவாகவே பெண்களின் எழுத்துகள் என்று ஆண்களால் இரகசியமாகவும் சிலவேளைகளில் பகிரங்கமாகவும்  புறந்தள்ளப்படுகின்றன.அந்த எழுத்துகள் சொல்வதென்ன என்பதை விளங்கிக் கொள்ள முன்னர்,அந்த எழுத்தாளர் ஒரு பெண்ணாயிருப்பின் ஆண்கள் அப்படைப்பைப் பார்க்கும் விதமே வேறாகிவிடுகின்றது. ஒன்றுக்கும் உதவாதது என ஒதுக்கிவிடப்படும்.அவர்களிடம் அவை பற்றிய முன் முடிவுகள் இருக்கின்றன. இலக்கிய ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் புறந்தள்ளியும் அலட்சியப்படுத்தியும் தமக்குள் குசுகுசுப்பார்கள்.பெண்களின் எழுத்து என ஒதுக்குதலும் அதையே நாம் பெண்மொழி எனப் பெருமையாகப் பேசுதலும் இங்கு வேறுவேறானவை.

எழுத்தைப் பெண்மொழி எனப்பிரித்துப் பார்ப்பதில் உடன்படாத பெண்களும் உண்டு. சமூகத்தில் நாம் ஒடுக்கப்படும் பாலினமாக இருக்கும் வரை எமது பிரச்சைனைகளைப் பேச பிரித்துப் பார்க்க வேண்டுமென்பதே என் கருத்து. எழுத்தாளர் எனும் பொதுவகையில் பேசுவோமாயின் காலகாலமாக பெண்களை வீட்டில் இருத்தி விட்டு அனைத்திலும் முன்நகர்ந்த ஆண்களுடன் பொதுமைப்படுத்தப்படும்.நாம் போராடிப் பெற்றவை சிறிதே. இன்னும் செல்லும் தூரம் அதிகமுண்டு.சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண்களுக்குக் கிடைக்கும் சலுகைகளைக் கொண்டு படைப்புகளைச் செய்கின்றனர். சமூகத்துடனும் குடும்பச் சுமைகளுடனும் போராடித் தம் படைப்புகளைச் செய்யும் பெண்களுடைய படைப்புகளை வேறுபடுத்தி பெண்மொழி எனச் சொல்வதில்,பெண்களின் தனித்தன்மையை,திறமையை வேறாக்கி மதிப்பிடுதலில் தவறில்லை என்பது என் அபிப்பிராயம். உணர்வுகள்,பிரச்சனைகள் வேறானவை.அவற்றை ஆண்களும் பெண்களும் உணரும் விதமும் வெவ்வேறு விதங்களில் தான்.பெண்களது பல விடயங்களையும் நுணுக்கமாக வெளிப்படுத்துவதும் பெண்களாலே இயலும். நமது கதைகள் வித்தியாசமானவை. அவை சொல்லும் அர்த்தங்கள் வேறு.

                    சுமதிரூபனின் கதைகளிலும் தனித்தன்மைகளும நுட்பங்களும் நிறைந்துள்ளன.புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பன்னிரு கதைகளும் பேசுகின்றன.படிக்கச் சோர்வேற்படுத்தாத கதைகள்.சுவாரசியமான வசனங்களும் சம்பவங்களும் கொண்டு  சொல்லப்படுகின்றன. இலகுவாகக் கதைகளினுள் நம்மால் நுழைந்து கொள்ள முடிகிறது. அவர் ஒரு குறும்பட இயக்குனராகத் திறமையாகச் செயற்படுவது கதைகளிலும் மிளிர்கின்றது.சுமதிரூபன் காட்சிகளை விபரிக்கும் போது கச்சிதமாக அழகாக அமைகின்றன.சுவாரசியமாகவும் செறிவுடனும் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.அவர்களின் மனப் போராட்டங்கள். மூடி மறைக்கும் மனித மனசின் மறைவுகளைச் சற்றும் தயக்கமின்றி நம் முன் வைக்கிறார்.கேள்விகளை எழச் செய்கிறர்.

அமானுஷ்ய சாட்சியங்கள்,40 பிளஸ்,ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நஷ்டஈடு, சூட் வாங்கப் போறன் ஆகிய கதைகளில் ஆண்களின் போலித்தனங்களும் மனப் போராட்டங்களுமாகவும் சொல்லப்படுகின்றன. அமானுஷ்ய சாட்சியங்கள் ,பெண்கள் நான் கணிக்கின்றேன்,உறையும் பனிப் பெண்,இருள்களால் ஆன கதவு,மூளி,எனக்கும் ஒரு வரம் கொடு ஆகிய சிறுகதைகளில் பெண்களின் வெப்புசாரங்களும் சொல்லாத் துயர்களும் பரவிக் கிடக்கின்றன.

மூளி , எனக்கும் ஒரு வரம் கொடு…கதைகள் சாமத்தியச்சடங்கு, பிள்ளைப் பேறு , கோயிலில் பார்ப்பனக் குருக்களுக்குப் பணிவிடை செய்தல் பற்றிப் பேசிய போதும் , நம் சமூகம் புலம்பெயர்ந்தும் கொண்டு செல்லும் மூடத்தனங்களையே சாடுகின்றன.அவை பெண்களை ஒதுக்கி வைப்பதும் தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்வதுமாகத் துன்புறுத்துகின்றன.

பெண்கள் நான் கணிக்கின்றேன்- என்ற கதையின் உரையாடல்களில் ஏன் கல்யாணஞ் செய்யாமல் வாழ்கிறாய் எனக் கேட்டுக்கொண்டிருக்கும் தோழியைப் பார்த்து அப் பெண இவ்வாறு கேட்கிறாள்’ஏன் கல்யாணம் கட்டினனீ?பிள்ளைகளைப் பெத்தனீ?எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என்பது இச்சமூகத்தை நோக்கிக் கேட்கும் கேள்விகள்.திரும்பத் திரும்ப குடும்பம் ,குழந்தைகள் என்ற கட்டுகளைப் போட்டு இப்படி வாழ்வதுதான் பிறப்பின் அர்த்தம் என்று சொல்லித் தானே வளர்க்கப்படுகின்றோம்.

முற்றிலும் வேறான காலநிலைகள், கலாச்சாரங்கள்,மொழிகள், மனிதர்கள், சட்டதிட்டங்கள்,அகதிஅந்தஸ்து கோருதல்,வேலைகள் என அகதிகளாகிக் குடியேறிய நாடுகளில் புலம்பெயர்ந்த இச்சனங்களின் பிரச்சனைகளோ பல. அவற்றை எதிர் கொள்ளும் குடும்பங்களில் ஏற்படும் உரசல்களும் உளப்பிரச்சனைகளும் இன்னும் பல. இவற்றை நுண்மையாக இக்கதைகள் சொல்கின்றன.அவை பற்றித் தொடர்ந்தும் யோசிக்க வைக்கின்றன.ஏனெனில் இவை எதுவும் பொய்யாகவோ புனைவாகவோ இருப்பதாய் நினைக்கத் தோன்றவில்லை.நாளாந்தம் இவ்விதமான மனிதர்களைச் சந்திக்கின்றோம்.ஏன் நம்மிடம் கூட அவர்களைக் காணலாம்.

கருப்புப்பிரதிகள் வெளியீடாகிய இத்தொகுப்புப் பற்றி நீலகண்டன் “எந்த முன்முடிவுகளும், பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும், இருப்புசார் சூழலின் மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும் நுண்அலகுகளால் நெய்யப்பட்டிருக்கின்றன” என்கிறார்.

உறையும் பனிப் பெண்கள்
முதற்பதிப்பு : செப்டம்பர் 2010
வெளியீடு : கருப்புப்பிரதிகள்
செல்பேசி : 009444272500

நன்றி:வல்லினம் நவம்பர் 2011

2 thoughts on “சுமதி ரூபனின் உறையும் பனிப்பெண்கள்

  1. சுமதி ரூபனின் அமானுஷ்ய சாட்சியங்கள்- நீண்ட காலத்தின் பின் ஓர் சிறுகதை வாசித்த நிறைவு!!!!!!!!
    ரெக்ஸ் என்றொரு நாய்குட்டி- விளங்கவில்லை, விளங்கவே இல்லை!!!!!!!
    மீதம் படித்து விட்டு சொல்கிறேன்!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s