நினைவிலிருந்து அழிந்த கனவொன்றை
காண விரும்புகிறேன்.

துக்க நாளொன்றில்
கசங்கிய இமைகளோடு நானிருக்க
என் வாழ்வின் நீள் இரவொன்று துரத்தி வந்தது.

களைத்த கால்களை
தனித்த கரங்களைத் தன்னிருளின் விரல்களால் அளைந்தது.
மனசின் குருதிக் கறைகளைத் துடைத்தது.

அமைதியாக உறங்கினேன்
கனவுகளால் தூக்கிச் செல்லப்பட்ட  உடல்
தரையெங்கும் தன் சிறகுகளை உதிர்த்தது.

நீள் கனவு
அறுந்த இரவின் மிச்சத்தில்
ஒட்டிக் கிடந்தன  சின்னக் கதைகள்.

நினைத்து நினைத்து
ஒரு நாள் அது முடிந்து போக                                                           என் கனவும் மறைந்து சென்றது.

நினைவிலிருந்து அழிந்த கனவை விரும்புகிறேன்.

தர்மினி

Advertisements