-மோனிகா

இந்தியக் கலை வரலாற்றைப் பற்றிய எந்த ஒரு ஆவணமும் ராம் கிங்கர் பேஜ் என்ற ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றிக் கூறாவிட்டால் முழுமையடையாது என்பது உண்மை.

இந்திய கலை வரலாற்றில் கற்சிற்பங்களையும் சுவரோவியங்களையும் பார்த்து அதனால் உந்தப்பட்டு ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் கொண்டோர் பலர். தமிழ்நாட்டின் ஓவியப் பிதாமகனாகிய தனபால் அவர்களை அதற்கு உதாரணமாகக் கூறலாம். அவரைப் பற்றியும் அவரது ஆசான் ராய் செளத்ரி, பணிக்கர் ஆசியோரைப் பற்றியும் நாம் வரப்போகும் இதழ்களில் காண இருக்கிறோம்.

அதே நேரம், சுதைகளிலும் சிறுபான்மைக் கோயில்களிலும் உள்ள பிரதிமைகளின் வடிவமைப்பை கண்டு அதன் அழகில் தனது மனதைப் பறிகொடுத்த மேற்கு வங்கத்தின் ஜுகிபூரா என்னும் ஊரில் பிறந்த ஒரு ஆதிவாசிச் சிறுவனின் கதை ஒரு அற்புதமான கதை. அவன் தான் பிற்காலத்தில் ஒரு மாபெரும் கலைஞனாகத் திகழ்ந்த ராம் கிங்கர் பேஜ்.

பிஷ்ணுபூர் கோயில்களிலுள்ள சுடுமண் சிற்பங்களைக் கண்டு உத்வேகம் பெற்ற ராம் கிங்கர் ஆனந்த சூத்ரதார் என்னும் உள்ளூர் ஸ்தபதியை தனது ஆசானாகக் கொண்டு அவர் சிற்பங்கள் வடிக்கையில் பக்கத்திலிருந்து தானும் அதைப் போலவே சிறு சிற்பங்களைச் செய்து மகிழ்ந்தார். தன்னுடைய பள்ளிப் படிப்பு முடிவடையும் வரை சினிமா போஸ்டர்களும், உள்ளூர் நாடகங்களுக்கு திரைச் சீலைகள் வடிப்பதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த அவருக்கு தனிப்பட்ட மக்களின் உருவப்படங்களை வரையும் ஓவியப் பணியும் அவ்வப்போது கிடைத்தது. முழு பெருங்காயத்தை மூடியிட்டு அடைக்க முடியாதென்று சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? அது போல்தான் ராம் கிங்கர் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

அவரது பதினாறாவது வயதில் ராம் கிங்கரை பிரபாஸி, மாடர்ன் ரிவ்யூ போன்ற பத்திரிக்கைகளின் ஆசிரியரான ராமானந்த சட்டோபாத்தியாய பார்த்துவிட்டு சாந்தி நிகேதனின் கலாபவனத்தில் 1925ம் ஆண்டு மாணவனாகக் கொண்டு சேர்க்கிறார். அதேவருடம், அவருடைய பதினாறாவது வயதில், லக்னோவில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில் ராம்கிங்கர் வெள்ளிப் பதக்கம் பெறுகிறார். தங்கப் பதக்கம் வேறு யாருக்குமல்ல அவரது ஆசிரியர் நந்தலால் போஸுக்குப் போய் சேருகிறது. அத்தனை சிறுவயதில் அளவுகடந்த ஆற்றலைப் பெற்ற ராம்கிங்கர் தனது சமூகத்தின் மேலும் அது பேணி வந்த அழகியலின் பாலும் பெரும் மதிப்பினைக் கொண்டவராய் இருந்தார்.

காலம் காலமாய் கலை வடிவம் என்பதன் மதிப்பு அதன் அழகியலின் பெரும் பகுதியாக பாரம்பரிய சமூகத்தினைப் பற்றிய வர்ணனையையும் அந்த வர்ணனையின் வெளிப்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் கொண்டு நிர்ணயிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணமாக, சுடுமண் சிற்பங்களுள்ள சுதைகளைவிட கற்கோயில்களும், கற்சிற்பங்களைக் காட்டிலும் வெங்கலச் சிற்பங்களும் அதிக மதிப்பைப் பெறுவதுடன் அதிகக் கலை நயம் பொருந்தியதாகக் கருதப்படுவன. தமிழ்நாட்டில் சமணர்களின் வரலாற்றைக் காட்டிலும் சோழர்களின் காலம் முன்னிறுத்தப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். உபயோகத்திற்குரிய மண்பாண்டங்கள்/பொருட்கள், மண் பொம்மைகள் இந்த வர்க்க ரீதியிலான வாயிலை உடைத்து உள்ளே செல்ல முடியாமல் இருப்பது இன்றளவிலும் உண்மையான ஒன்று. பைபர் கிளாஸ் என்ற சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் போன்ற ஒரு பொருளால் உருவாக்கப்பட்ட சிற்பங்களைவிடவும் சூழலுக்குகந்த சுடுமண் சிற்பங்கள் குறைத்து மதிப்பிடப்படுவது வருந்தத்தக்க ஒன்றே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நமது மூதாதையர் உபயோகித்து வந்த சுடுமண் கலன்களின் வில்லைகளை அருங்காட்சியகங்களில் வைத்து பூசிக்கும் நாம் அந்த ஆரோக்கியமான நடைமுறையை தொடர்வது குறித்து யோசிக்காமல் போனது துரதிஷ்டவசமானது.

ராம்கிங்கரைப் பற்றி கூறும்போது மேற்கண்ட விவாதத்தை கொண்டு வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அது யாதெனில் ராம் கிங்கர் தனது படைப்பிற்கான மூலப்பொருளாக சிமெண்டு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ்மற்றும் களிமண்ணையே பெரிதும் பயன்படுத்தினார் என்பதே அது. பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ஓவியப் பாணியை பின்பற்றிய நந்தலால் போஸின் மாணவனாக இருந்த போதும் அவர் தனது இனமான சந்தால் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையையே சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் படைத்தார். வங்காள ஓவியப் பள்ளியின் அடையாளங்களான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் போற்றுதல், நீர்வர்ணம், தைல வர்ணம் போன்ற உன்னதமான வரை பொருட்களைக் கையிலெடுத்தல் போன்றவற்றிலிருந்து விலகி ஒரு கலகக்காரனாக தனது பாணியை மாற்றி அமைத்துக் கொண்டார் ராம்கிங்கர். ஆஸ்திரியாவைச் சார்ந்த லிஸா வான் பாட், பிரிட்டனைச் சார்ந்த மில்ட்ரெட் போன்ற கலைஞர்கள் சாந்திநிகேதனில் மாணவர்களைச் சந்தித்து பாடம் சொல்லிக் கொடுத்த காலம் அது. புகழ்பெற்ற ஓவிய வரலாற்றியலாளர் ஸ்டெல்லா கிராம்ரிஷும் அங்கு ஓவிய வரலாறு குறித்த விரிவுரைகளை வழங்கி வந்தார். எமில் அந்தொய்ன் பூர்தெல் என்ற பிரெஞ்சுக் கலைஞரின் மாணாக்கரான லிஸா, பூர்தெல்லின் நாடகியத் தன்மையுடைய பிம்பங்களை படைப்பதில் வல்லவராயிருந்தார். தன்னுடைய மார்பளவு பதுமையை வடிப்பதற்கு அவரைக் கேட்டுக் கொண்ட தாகூர் மில்ரெட்டின் திறமையைக் கண்டு அவரை ஒரு ஆசிரியராக சாந்தி நிகேதனில் சேர்த்துக் கொண்டார். அப்போது சாந்தி நிகேதனில் குறைந்த காலமே பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ராய் செளத்ரி எடுவார்ட் லாண்டரி என்ற பிரெஞ்சு கலைஞரின் மாடலிங் பற்றிய ஒரு புத்தகத்தை மாணாக்கர்களுக்கு பரிந்துரை செய்தார் (Edourd Lanteri: A guide to modeling for teachers and students). லாண்டரி விவசாயிகளை சிற்பமாக வடித்த பாங்கும்

பூர்தெல்லின் கரடுமுரடான பள பளவென்று மெருகு தீட்டப்படாமல் வடிக்கும் முறையும் ராம் கிங்கரைப் பெரிதும் பாதித்தது. மொழு மொழுவென்று வெங்கலத்தால் பதிக்கப் பெறும் சிற்பங்களின் அழகியலை எதிர்த்து லண்டனைச் சார்ந்த ஜேக்கப் எப்ஸ்டீன் கரடு முரடாக கல்லும் சிமெண்டும் கொண்டு வடித்த சிற்பங்கள் அவருக்கு முன் மாதிரியானவை. அவர்களிடமிருந்து ஐரோப்பிய பாணியையும் நவீனத்தையும் கற்றுக் கொண்டு அதனைக் கையிலெடுக்காமல் தனது பாணியிலேயே முழு கவனம் செலுத்தினார் ராம்கிங்கர்.

முதலில் களிமண் சிற்பங்களை உருவாக்கிக் கொண்டு பின்னர் அதனை பிளாஸ்டரில் அச்செடுத்துக் கொண்டு பின் அதனை சிமெண்டில் வார்த்து எடுத்தார் ராம்கிங்கர். பிற்காலத்தில் இரும்புக் கம்பிகளை வைத்து அடிப்படை வடிவங்களைக் கட்டி அதன் மீது சிமெண்டை வார்த்தெடுத்தார். அந்த மொத்தையான சிமெண்ட் உருவங்களில் தான் பெற நினைக்கும் நுட்பங்களை உளி கொண்டு செதுக்கினார் அவர். தான் சிமெண்டை உபயோகிப்பதற்கு ஒரு எளிய காரணம் தன்னிடம் வெங்கலச் சிற்பங்கள் அமைக்கப் போதுமான வசதிகள் இல்லாமையே என்றும் கூறியுள்ளார் அவர். சிமெண்டுக் கலைவையினால் ஏற்படும் கரடு முரடான வெளிப்பாடு வெறும் தொழில் நுட்பம் மட்டுமல்ல அது ஒரு வெளிப்பாட்டிற்கான அம்சம் என்பது அவரது கருத்து. அவரது படைப்புகளின் கருப்பொருளுக்கும் அவற்றின் மூலப் பொருட்களுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதாகவே விமர்சகர்களும் கருதினர்.

அதிகாலை வயல் வேலைக்காக கையில் ஏர் கொண்டு செல்லும் குடும்பத் தலைவன் அவனுடன் கையில் கஞ்சிக் கலையத்துடன் தூளியுளுள்ள குழந்தையைக் கொண்டு நடக்கும் தாய் அவர்களைத் தொடரும் மற்றொரு சிறுவன். அவர்களுடன் ஒரு நாய். சிமெண்டால் உருவாக்கப்பட்ட “சந்தால் இனக் குடும்பம்” என்னும் இச்சிற்பம் ராம்கிங்கரின் பாணிக்கு ஒரு சான்று.

ராம்கிங்கரின் காந்தி எட்டி அடிவைத்து நடப்பவர். அவரது தாகூரோ தனது நீளமான அங்கிக்குள் மறைந்து நிற்கும் ஒரு மனிதர். இச்சிற்பங்களைக் கொண்டு அவர் இத் தலைவர்களைக் குறித்து யோசித்தமையைத் தெள்ளத் தெளிவாகக் காணலாம்.

 

 

 

 

1934ல் சுஜாதா என்னும் ஒரு தனித்து நிற்கும் சிற்பத்தை செதுக்கிய அவர் சந்தால் ஆதிவாசித் தம்பதியர், கிருட்டிண கோபி என்னும் சுடுமண் சிற்பங்களையும் செதுக்கினார். உஸ்தாத் அலாவுதீன் கானை சந்தித்து அவரின் உருவச் சிலையை வடித்தார். 1942ல் இரண்டாம் உலகப் போருக்கு எதிரான ஓவியங்கள் பலவற்றை வரைந்தார் அவர். 1943ல் ஆங்கிலேயர் காலத்தில் வங்காளம் ஒரு பெரும் பஞ்சத்தை எதிர்கொண்டது. கிட்டத்தட்ட முப்பது லட்சம் பேரின் உயிரை காவு கொண்டது அது. அமர்த்தியா சென் தனது அறிக்கையில் அப்போது வங்காளத்தில் இயற்கையாக நேரும் பஞ்சமே இருக்கவில்லை என்று கூறுகிறார். 1941ல் பஞ்சம் இல்லாதபோது இருந்த அரிசியின் இருப்பைவிடவும் 1943ல் அரிசியின் இருப்பு அதிகமாக இருந்தது. இருந்தும் போரின் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடும் என்ற வதந்தி பெருமளவு உயர் அதிகாரிகளும் பணம் படைத்தோரும் அரிசியைப்  பதுக்கிவைப்பதற்கு காரணமாகியது. இதனால் ஏழை எளிய மக்கள் பலர் அரிசி வாங்குவதற்கு வழி இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது என்கிறார் அவர்.

சிட்டொபிரஸாத், ஜைனுல் அபிதீன், சோம்நாத் ஹோர் போன்ற ஓவியர்கள் பஞ்சத்தின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு அதன் கொடுமைகளை ஓவியங்களாக வடித்தனர். ராம்கிங்கரோ அந்த நேரத்தில் “அறுவடை செய்பவன் (harvester)” என்னும் சிமெண்டு சிற்பத்தை வடித்தார். அதன் மூலம் வெள்ளாமை செய்பவன் யார்? பின் அது யாரைச் சென்றடைகிறது என்ற ஒரு முரணான கேள்வியை எழுப்பினார் அவர்.

பிற்காலத்தில் சாந்தி நிகேதனிலேயே ஆசிரியராய் சேர்ந்த அவர் தாகூரின் நாடகங்களில் நடித்ததுடன் நாடகங்களுக்கான திரை-மேடை அமைப்பு போன்றவற்றையும் மேற்கொண்டார். 1970 ம் ஆண்டு பத்மபூஷன் பெற்றவர் 1980ல் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்.

பயிலும் பள்ளி என்பது ஒரு ஒளி விளக்கைப் போன்று சில பிரதிமைகளை மாணவர்களின் முன் நிறுத்துகிறது. அந்த பிரதிமைகளை அவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள். அவற்றை எப்படி அணுகுகிறார்கள், ஆராதிக்கிறார்கள்? அந்த ஆராதனையின் நடுவே தங்களை தாங்களாகவே எவ்வளவு பேர் வெளிக் கொண்டுவருகிறார்கள் என்பது ஒரு பெரும் சவால். அதன் ஆழிப் பேரலையின் நடுவே நங்கூரமிட்டு நிற்கும் ஒரு சிலரில் ராம்கிங்கரும் ஒருவர். வங்காள ஓவியப் பள்ளியின் வளர்ப்பாயிருந்த போதிலும் அதன் அழகியலின் நடுவே தனக்கேயான ஒரு அழகியலை தனித்து ஒளிபெறச் செய்த அவர் என்றும் தனக்குறிய இடத்தில் கம்பீரமாக நிற்கக்கூடியவர்.

நன்றி: தீராநதி

Advertisements