திரைச்சீலைகளை ஊடுருவி வெளிச்சம் படர்கிறது
கூதலுக்கு இதமான போர்வையோ மடித்துக் கிடக்கிறது.
Printemps  என்னிடமும் உற்சாகத்தை மலரச்செய்கிறது.

குறைவான உடைகள் என்னுடலைப் பாரமற்றதாயுணர்த்துகிறது.
அல்லது இளவெயிற் சூடு சுறுசுறுப்பைத் தந்திருக்கலாம்.
இன்னும் été வருவதற்கு இருமாதங்கள்.
ஆடி ஆவணிக்கு மரநிழல் தேடி இருக்கச் சுகமாயிருக்கும்.

மருத்துவரின் வரவேற்பறைச் சுவரொட்டியில்                   அதிக நீரருந்த  வேண்டும்.
தொப்பி, குளிர்கண்ணாடி போட்டு வெய்யில்கிரீம் பூசி
வெளியே போக அறிவுறுத்தல்.

இருநாட்கள் கவனிக்காத இடைவெளியில்
குசினிச் சன்னலோர மரம் இலைகள் நிறைத்து நிற்கிறது.

எப்போது துளிர்த்தன?                                                                     நினைவு படுத்தமுன்னர் நடைபாதையோரச் செடிகள் சடைத்து நிற்கின்றன.
சில மரங்கள் கொப்புகள் முழுதும் பூக்களாகி
மென்சிவப்பு ,வெள்ளை ,மஞ்சளெனப் பச்சை மறந்து நிற்கின்றன.

காசு ,கைத்தொலைபேசி, பஸ்ரிக்கற் வைக்க
ஜக்கற் பொக்கட் இல்லையென்ற கவலை தவிர
இனி நானுமொரு பறவை போலத் திரிவேன்.

தர்மினி

Advertisements