இரு கவிதைகள்
bird
1.
சில குரல்கள் தொடர்ந்து கதைக்கச் சொல்கின்றன.
காதில் விழும் ஒரு பாடல் எப்போதாவது என்னையும் பாடச்சொல்கிறது.
நட்புக் கொண்ட பறவையின் சிறகுகளாக  புத்தகப் பக்கங்களை அணைத்து வருடத் தோன்றுகின்றது.
பிடித்த முகங்கள் விழித்திரைகளில்  சிரித்தபடி ஒட்டிக்கிடக்கின்றன  புன்னகை செய்ய அவை போதும்.
என்றாவது ஒரு முறை தான், கவிதை ஒன்றைப் படித்தவுடன் அது போலொன்றை எழுதக் கடதாசி-பேனை தேடும் அவசரமும் வருகிறது.
2.
தோழ,
கதைத்துக் கன நாட்கள் கனத்த மனதும் எனது தான். நினைப்பும் எழுத நேரமில்லாச்சுமைகளும்… மன மூலையில் நேசம் கதகதப்பைத் தருகிறது. சலிப்பு – களைப்பு என மாறி மாறி வாழ்வு. இடைக்கிடை எழுதாத குறுகுறுப்பு. வறண்ட மூளையைப் பிய்த்தெறிய ஏலாமை. அரசியல், குடும்பம், குழு எல்லாம் தவிர்த்து உம் ஆதுரம் தந்த வரிகள் – இப்பொழுதின் மெலிய காற்றை என் மேல் தடவிச் சென்றதற்கு காரணமாயின. அதுபோகட்டும் காலங்கள்.
எதாவதொரு பறவை போல பறக்க அவ்வப்போது பயன்படட்டும்.
வறண்ட காற்றைக் கலைக்கட்டும் என் கிழட்டுச் சிறகுகள்.
-தர்மினி-
Advertisements