தேவதைகளின் தேவதை

moovalur-800x1200
தர்மினி-
‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்’
என்ற இந்நூலை எம் வீட்டிலிருக்கும் புத்தக
அடுக்குகளிலிருந்து சில மாதங்களின் முன்
கண்டுபிடித்தேன். மூவலூர் இராமாமிர்தம் என்ற
பெண்மணியின் பெயரையும் அவரது போராட்டங்கள்
பற்றியும் ஓரளவே அறிந்திருந்த எனக்கு, ‘பெண்களின்
சுயமரியாதைக்காகப் போராடியவரின் வரலாறு முதல்
முறையாக நூல் வடிவில்’ என்ற குறிப்பைப் படித்ததும்
ஆவல் உந்த வாசிக்க ஆரம்பித்தேன். இப்புத்தகத்தைப்
பெரும் தேடல்களுடனும் நிறையத் தரவுகளுடனும்
எழுதியவர் பா. ஜீவசுந்தரி அவர்கள்.

1883ம் ஆண்டில் பிறந்து 1962ம் ஆண்டு வரை
வாழ்ந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
அந்தக் காலத்திலே இப்படியொரு பெண் சீர்திருத்தக்
கருத்துகளுடன் வாழ்ந்தாரா என்று ஆச்சரியப்படும்
வகையில் போராட்டங்கள், சொற்பொழிவுகள்,
அரசியல் ஈடுபாடு, எழுத்து, புதிய சிந்தனைகள்
எனத் தாம் வாழும் காலத்தைச் சமூகத்திற்காகவே
செலவிட்டுள்ளார்.

இப்புத்தகம் பற்றிய சிறுகுறிப்பொன்றை எழுத
நினைத்து மாதங்கள் கடந்து போயின. ஆனாலும்
அம்மையாரின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும்
இந்நூல் பலராலும் படிக்கப்பட வேண்டும் என்ற விருப்பினால் இதை
எழுத முனைந்தேன்.
மூவலூர் அம்மையார் பெயரால் திருமண உதவித் திட்டம் ஒன்று
தொடங்கப்பட்டது. மற்றபடி பாடப்புத்தகங்களிலும் இந்திய வரலாற்று நூல்களிலும் எந்தளவு இவரது போராட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்க வரலாற்றில் அழுத்தமாக இவரது பெயர் எந்தளவு இடம் பெற்றது என்பன இந்நூலாசிரியரின் கேள்விகள். இது ‘மறைக்கப்பட்ட வரலாறு’ எனக் குறிப்பிடுகிறார். தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத்தில், தன் சமூகப் பெண்களை அதிலிருந்து மீட்கக் களப்பணி செய்த இவரது பெயரை, டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி அம்மையார் பற்றிக் குறிப்பிடுமளவு கூட, வரலாறுகளில் பதிவு செய்யப்படவில்லை என்று ஆதங்கத்தோடு எழுதுகிறார். தமிழக வரலாற்று நூல்கள்  மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை முழுமையாகப் புறக்கணிப்புச் செய்துள்ளன என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்.
மறைக்கப்பட்ட வரலாறுகளைப் புதுப்பிப்பதிலிருந்தே புதிய வரலாறு
தொடங்குகிறது. அத்தகைய புதிய வரலாறு எழுதும் முயற்சி தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூரும் இந்தச் சிறிய நூல் என்கிறார் பா. ஜீவசுந்தரி.
திராவிட இயக்கப் பத்திரிகைகள், மயிலாடுதுறை, மூவலூர் போன்ற
இடங்களில் கள ஆய்வு, கையெழுத்துப் பிரதிகளைத் தேடித் தொகுத்தல்,கடைசி முப்பது ஆண்டுகள் அவரோடு இருந்த பேரன் செல்வராஜ் கூறிய தகவல்கள் எனத் திரட்டி எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
அத்தோடு சமூகச் சிர்திருத்தவாதியாக வாழ்ந்த ஒருவர் பற்றிய வாழ்க்கைத் தகவல்கள் போதியளவு கிடைக்காதது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாகவும் வருத்தமுடன் குறிப்பிடுகிறார்.
பொட்டுக்கட்டும் தேவதாசிகள் சமூகத்தில் இராமாமிர்தம் அம்மையார் பிறந்த போதும், அவரது பெற்றோர் அந்தப் பழக்கத்தை எதிர்த்து வாழ்ந்து பெரும் வறுமைப்பட்டனர். தாங்க முடியாத வறுமையினால் தந்தை வீட்டை விட்டுப் பிழைப்புத் தேடிச் செல்ல, பத்து ரூபாய்க்கும் பழைய புடவை ஒன்றுக்கும் அய்ந்து வயதான மகளைத் தேவதாசி ஒருவரிடம் விற்றுவிட்டு தாயும் தந்தையைத் தேடிச் சென்று விடுகிறார். அவர் வளர்க்கப்பட்ட வீட்டில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், நாட்டியம், சங்கீதம் பயிற்றப்படுகிறது. பதின்மூன்றாவது வயதிலேயே அனைத்திலும்
தேர்ச்சி பெற்று ஆடல் பாடல்களில் புகழ்பெற்றார்.  பதினேழு வயதில் கோயிலில் பொட்டுக்கட்ட வளர்ப்புத் தாய் முயற்சித்தார். வெளியூரைச் சேர்ந்ததாலும் தாசிச் சமூகத்தின் ஆண் வாரிசுப் பெண் என்பதாலும் கோயிலில் பொட்டுக்கட்ட அனுமதிக்க முடியாதென அவ்வூர்த்தாசிகள் பிரச்சினையை ஏற்படுத்தியதால் அதிலிருந்து தப்பிவிட்ட இராமாமிர்தம், வயோதிபர் ஒருவரைத் திருமணம் செய்வதிலிருந்தும் தப்பிவிடுகிறார்.

தன் சங்கீத ஆசிரியரான நாட்டுப்பற்றும் பகுத்தறிவுடையவருமான
பேரளம் சுயம்புப்பிள்ளை என்பவருடன் எவ்விதச் சமய சடங்குகளுமற்று நெய்விளக்கில் சத்தியம் செய்து வாழத் தொடங்கினர்.

சுயம்புப்பிள்ளை அவர்களின் தலைமையிலேயே மூவலூரில் முதற்
தேவதாசி முறை ஒழிப்பு மகாநாடு நடைபெற்றதென்பதும் அந்நாட்களில் மதுரையிலிருந்து வந்து இளவயதுப் பெண்ணாயிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவரைச் சந்தித்துச் சென்றது போன்ற சம்பவங்களும் இங்கு குறிப்பிடப்படுகிறது.
அக்காலத்தைய தேவதாசிகளின் வாழ்வு, பின்னணி, காரணிகள்,
காங்கிரஸ் மற்றும் பெரியாருடனான சுயமரியாதை இயக்கத்துடன்
இணைந்த பணிகள் என ஏராளம் தகவல்களும் அவரின் கையெழுத்துப்பிரதிகளின் சில பக்கங்கள், புகைப்படங்கள் அத்துடன் 01.07.1939ல் எழுதி அம்மையாரால் சொந்தமாக வெளியிடப்பட்ட ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’  என்ற பிரசுரமும் பின்னிணைப்பாக இதிலே உண்டு.

இராமாமிர்தம் அம்மையாரால் 1936ல் எழுதப்பட்ட ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலின் ஒரு பகுதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
அந்நாவலின் பதிப்புரையில் அவர் எழுதியிருந்ததில் சில வரிகள்
“தேவதாஸி முறையை ஒழித்தால் சாஸ்திரம் போச்சு நாத்திகம் ஆச்சு என்று தலைகளில் அடித்துக் கொள்கிறார்கள் இனி தாஸிகள் வீடுகளே மோட்சம் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜமீன்தார்கள் பிரபுக்கள் முதலியவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. தேவதாஸி முறையை ஒழிப்பதற்கு எதிரிடையாகத் தங்களுடைய அதிகாரமும் செல்வமும் எவ்வளவு தூரம் பாயுமோ அவ்வளவு தூரம் உபயோகிக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத்துறையிலும் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை விபசாரத்திற்குத் தயாராக்கி கொலைப் பாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும்.” இவ்வரிகள் அம்மையாரின் எழுத்து வன்மைக்குச் சிறு உதாரணம்
மட்டுமே.

தேவதாசி முறை ஒழிந்து அச்சமூகம் முன்னேற்றமடைய
வேண்டும். அவ்வாறான பெண்ணடிமைத்தனத்தைத் தமக்குச் சாதகமாக்கித் தம் குடும்பங்களைப் பற்றிய அக்கறையில்லாமல் தாசிகள் வீடே கதியெனக்கிடக்கும் ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள் போன்ற பணமுடையவர்களின் வாழ்வு அதிலே மூழ்கி நாசமாக வேண்டாம் என்பது நாவலின் பிரதான கருத்து எனலாம். தேவதாசிகளின் வாழ்க்கை, வயோதிபக் காலத்தில் தங்கள்
பாதுகாப்புக்கெனத் தம் பெண் குழந்தைகளை இதில் தள்ள வேண்டிய
நிலையிலிருந்த தாய்மாரின் அவலம், அதிலிருந்து பெண்கள் மீண்டு
வருவதற்கு வழி, சாகசக்காரிகளாக அப்பெண்கள்  நாடகமாடுவதன் துயரம், இப்படித் தாசிகளை நோக்கிச் சென்று மாதக்கணக்காக வீடு, மனைவி, பிள்ளைகளை மறந்து கிடக்கும் மைனர்களின் மதி மயக்கம், அவ்வாறு ஒரு பணக்கார மைனர் மனம்மாறி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகிறார்,
தேவதாசியாகத் தொழில் செய்ய மறுத்த பெண் அதையழிக்கப்
பாடுபடுவது எனச் சுவாரசியமும் கதையோட்டமுமாகச் சுயமரியாதைக் கருத்துகளையும் உள்ளடக்கி 1936ஆம் ஆண்டிலே 239 பக்கங்களில் இந்நாவல் வெளிவந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும்.
மூவலூராரின் வரலாற்றில் ‘தேவதாசிகளின் சமூகப் பின்னணி’ என்னும் அத்தியாயத்திலே அச்சமூகப் பெண்கள்  எவ்வாறு அதிலே தள்ளப்படுகிறார்களென விபரிக்கப்படுகிறது. கோயிலின் கடவுளுக்கு அடிமை எனச் சடங்கு செய்யப்படும் சிறுமி நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள், கோயில் அறங்காவலர்கள் போன்றோர்களுக்கு பாலியல் இன்பம் அளிக்கும் கடமை உடையவளெனப்படுகிறாள். அவர்கள் பார்ப்பனர்களாகவும் உயர்சாதி இந்துக்களாகவும் இருப்பர். தம் பாலியல் வேட்கைக்காகக்  குறிப்பிட்ட சமூகப் பெண்கள் திருமணம் செய்வது குற்றமென்றும் தம் இன்பத்திற்கானவர்களென்றும் வரையறுத்து, அச்சமூக ஆண்கள் தங்கள் சகோதரிகளில் தங்கியிருந்து உதவிகளைப் புரிவதும் இசை வாத்தியங்களை வாசிப்பதுமே வாழ்வுக்கான வழியென்றும் இந்து மதமும் அக்கால ஆண்களும் காலங்காலமாக அவர்களைத் தம் நலன்களுக்காகவே உபயோகித்துள்ளனர்.

கோயிற் சொத்திலிருந்து வரும் வருமானத்தை இவர்கள் பெற்றுக்
கொண்டாலும் தம் வாரிசை உருவாக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. இல்லையெனில் கோயிலிலிருந்து வரும் வருமானம் வழிவழியாகக் கிடைக்காது. தேவதாசிப் பெண்கள் தத்தெடுப்பதற்கான உரிமையை இந்துச்சட்டம் அனுமதித்தது. அப்போது கோயில்களின் நோக்கமே குறிப்பிட்ட சமூகப்பெண்களைப் பொட்டுக்கட்டிக் கோயிலுக்கு
அடிமையாக்கி அறங்காவலர்கள், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்கள்
அவர்களை அனுபவிக்க உதவுவதாகவே இருந்துள்ளது.

அந்நேரத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்கள் பல்லாயிரக்கணக்கான இசைவேளாளர் குடும்பங்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தன என்ற தகவல்களும் இதிலுள்ளன.
நாகபாசத்தார் சங்கம் உருவாக்கி பின் அதை இசைவேளாளர் சாதி எனக் குறிப்பிடுமாறு பெயர் மாற்றியவர்களும் சுயம்புப்பிள்ளையும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சின்னக்குத்தூசி அவர்களால் எழுதப்பட்டுள்ள அணிந்துரையில்
முதற் பந்தியே இவ்வாறு தான் தொடங்குகிறது. “திராவிடர் இயக்க
வரலாற்றினை யார் எழுதினாலும் அதிலே தந்தை பெரியாருடன்
பணியாற்றியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதிலே முதல்
வரிசையில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாருக்கு ஒரு முக்கிய இடம் தராமல் எழுத முடியாது” என்பதோடு ‘தேவதாசிகள் முறையை ஒழிக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டதென்றால் அதன் பின்புலமாகவும் மூளையாகவும் இருந்து அது சட்டமாக அமல் செய்யப்பட
சூத்திரதாரியாக இருந்து செயற்பட்டவரும் அவரே’ என்றெழுதியிருக்கிறார்.
மேலும், சட்டசபையில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு
வரப்பட்ட போது அம்மையாரைச் சாட்சியத்திற்கு அழைத்திருந்தனர்.
தீரர் சத்தியமூர்த்தி தாசித்தொழில் சமூகத்தில் இருக்கவேண்டும் என்ற வாதத்துடன் சட்டத்தை எதிர்த்ததற்கு “இதுவரை எங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து விட்டனர். இந்தியப் பண்பாட்டைக் காக்க இனிமேல் உங்கள் விட்டுப் பெண்களைச் சிறிது காலம் தேவதாசிகளாக இருக்கச் செய்யுங்கள்” என்று பேசும்படி முத்துலெட்சுமி ரெட்டிக்கு இராமாமிர்தம் அம்மையார் ஆலோசனை அளித்து அவ்வாறு சட்டசபையில் பேசிய பிறகே சனாதனிகளின் வாய் அடைபட்டதென்ற விடயமும்
இந்நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் சமூக இழிவாகப் பரவியிருந்த பொட்டுக்கட்டி
தேவரடியார்களாக்கும் பெண்ணடிமைத்தனத்தைத் தன் ஆயுள் முழுவதும் தீவிரமாக எதிர்த்துப் போராடியவர் இராமாமிர்தம் அம்மையார்.
சுயமரியாதைத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள், விதவை மறுமணம் ஆகியவற்றை ஆதரித்து ஊர்ஊராகச் சொற்பொழிவுகளைச் செய்தவர் இவர். ஆடம்பரத் திருமணங்கள், வரதட்சணை போன்றவற்றை எதிர்த்தும் மேடைகளில் பேசினார்.

இந்து மத மூட நம்பிக்கைகளே பெண்களின் இழிநிலைக்குக் காரணம்
என்று பகிரங்கமாகப் பிரச்சாரங்கள் செய்ததைப் பொறுக்க முடியாத இந்துசனாதனக் கூட்டம் மேடையில் ஏறி மூவலூர் அம்மையாரின் கூந்தலை அறுத்து எறிந்து தம் ஆத்திரத்தைக் காட்டியது என இப்புத்தகத்திலே குறிப்பிட்டுள்ள விடயம் அக்காலத்தில் இருந்த அடக்கு முறையின் உச்சத்தைக் காட்டுகிறது. அன்றிலிருந்து இறுதிக்காலம் வரைத் தன் கூந்தலை நீளமாக வளர்க்காமல் தானே அதைக் ‘கிராப்’ செய்துகொண்டார். சென்னையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் வேலூர் சிறையிலடைக்கப்பட்டு விடுதலையான போது அவருடன் சிறைப்பட்ட பெண்கள் ஊர் திரும்ப பணமில்லாமல்
நின்றபோது தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை விற்று அனைவரையும் ஊர்களுக்கு அனுப்பினார். அதன்பின் இறுதிக்காலம் வரை தங்க நகைகளைஅவர் அணியவுமில்லை. அவர் அய்ம்பது ஆண்டுகளாகப் பொது வாழ்வில் இருந்த போதும் எந்தவொரு பதவியையும் பெற்றதில்லை என்பதும் அவரது சமுதாயப் பணியின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.
மஹாத்மா காந்தியின் கவனம் பெற்றவர், கதர் விற்றது, பெரியாரோடு காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தில் உடன் பணி செய்தது, குடியரசு இதழில் ஏராளமான கட்டுரைகளை எழுதிப் பகுத்தறிவைப் பரப்பப்பாடுபட்டது, மாநாடுகளை ஊர் ஊராக நடாத்தி வீடு வீடாகப் பெண்களைச் சந்தித்துப் பொட்டுக்கட்டாமல் காப்பாற்றி
மறுவாழ்வுக்கு உதவுவது, அவ்வீட்டு ஆண்களிடம் தம் பெண்களையோ சகோதரிகளையோ பாலியல் தொழில் செய்ய விடுவதில்லையென வாக்குறுதி வாங்கி, தன் சமூகத்தினர் இடர் செய்த போதிலும் அவர்கள்மீதான வாஞ்சையுடன் தீவிரமாகப் போராடி வாழ்நாளெல்லாம் சமூகத்திற்காக வாழ்ந்த அப்பெண்மணியின் வரலாறு நாம் படிக்க
வேண்டியதும் கற்க வேண்டியதுமாகும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்,                                                            பா. ஜீவசுந்தரி,
வெளியீடு: மாற்று

நன்றி : குவர்னிகா | 41வது இலக்கியச் சந்திப்பு மலர்


3 thoughts on “தேவதைகளின் தேவதை

  1. இந்த பதிவிற்கு மிக்க நன்றி. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நூல். மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, நமக்குப் படிப்பிக்கப்பட்ட பாடப்புத்தக வரலாறுகளுக்கும் மாற்றான முடிந்தவரை முழுமை என்ற குறிக்கோளை நோக்கிச் செல்ல இயலும், பன்மையை அழித்து ஒருமுகமான பதிவுகளை முன்வைக்கும் பாணியை எதிர்க்கும் வரலாற்று வழக்காடுகளைத் தமிழில் இன்னனும் காண வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s