குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலரில் பிரசுரமானது.

dreaming-blue-sky-clouds

துக்க நாளொன்றில் கசங்கிய இமைகளோடு நானிருக்க         வாழ்வின் நீள் இரவொன்று துரத்தியது.

களைத்த கால்களை தனித்த கரங்களைத் தன்னிருளின் விரல்களால் அளைந்தது.                                                                                                            மனதின் குருதிக் கறைகளைத் துடைத்தது.

தூக்கிச் செல்லப்பட்ட உடல் தரையெங்கும்  சிறகுகளை உதிர்க்க அறுந்த இரவின் மிச்சத்தில் சின்னக் கதைகள் ஒட்டிக் கிடந்தன .

முன்னொரு காலம் இம்மரங்கள் இலைகளற்று வாழ்ந்த போது சிரிப்பைப் பிய்த்துப் போட்டு வழி போனேன்.

ஒரு முறுவல் சிந்த ஆசை தான்.                                                                   நோவு தரும் உணர்வாகி வதைக்கிறது.

களவெடுத்த காசைப் போல யாராவது அதை மறைத்து வைக்க அப்படியொன்றும் பெறுமதியில்லையாம்.                                      அழகொழுகும் அவ்வோவியப் பெண் உதடுகளிலிருந்து பளபளக்கும் பூச்சைப்போல என் வாயில் உறையவில்லை  .

தசைகள் நைந்து போகின்றன.                                                                            இரத்தம் வற்றுகிறது.

உற்றுக் கவனிப்பவர்களை இரு புறமும் கைகளை விசுக்கித் துரத்துகிறேன்.                                                                                                எப்போதாவது ஒரு நாள் உம்முகம் வந்து மறைகிறது.                       அப்போது மட்டும்,                                                                                                சிரிப்பின் நுனியொன்றைச் சுழித்துவிட்டு ஓய்கின்றன என் சொண்டுகள்.

‘எல்லா நாளும் இது போல் இல்லை’ அவன் பாடுகிறான்.

நானோ சலித்துப் போன வார்த்தைகளை எழுதி எழுதி இன்றோடு  எத்தனையாவது  தடவையாகப் பைத்தியமாகிறேனோ?

தோன்றி மறைந்த கனவொன்றில் முகம் புதைக்க விழைந்து
தேய்ந்த சுவடுகளைக் கண்கள் மூடித்தேடத்தொடங்குகிறேன்.

தர்மினி

Advertisements