30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை

-உமா (ஜேர்மனி )-

1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது.

viji 12.10

இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி,  1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது  சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது.  இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற்றியஅனைத்துப் பெண்களையும் மனந்திறந்து பேசவைத்தார் என்பதையும் பதிவுசெய்தார்.

 சந்திப்பின் முதல்நிகழ்வாக,

ஈழவிடுதலைப் போராளியான புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற ஈழப்போராட்ட வாழ்க்கை அனுபவங்களையடக்கிய நூலை தர்மினி விமர்சனம் செய்து வைத்தார். இதுவரைகாலமும் தமிழ்விடுதலைபோராட்டத்தின் தமது அனுபவங்களை ஆண்களே பதிவு செய்திருக்கிறார்களென்றும் பெண்ணால் வெளியிடப்பட்ட முதற்பதிவு என்ற சிறப்பு இந்நூலிற்கு உள்ளதென்றும் ஒரு பெண்ணாகவும் தலித்தாகவும் தனது வாழ்க்கையனுபவங்களையும் சிறையில் தான் அனுபவித்த வேதனைகளையும் பதிவு செய்திருப்பதாகவும், தனது கதையைச் சொல்வதற்கு அவர் சுவாராஸியமான மொழியைக் கையாண்டுள்ளதாகவும் புத்தகத்தை வாசிக்கும் போது அருகிலிருந்து தனது கதையை ஒருவர் சொல்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

207 பக்கங்களுடைய இப்புத்தகத்தில் கருணாகரன் 17 பக்கங்களுக்குச் சிறந்ததொரு முன்னுரையை எழுதியிருக்கிறார். எல்லாப் பெண்களுக்கும் உள்ளதைப் போல வீட்டுச்சுமைகள் அன்றாடம் அழுத்தும் போது தமக்கெனச் சற்று நேரம் ஒதுக்குவது பெரும் கடினம். புஸ்பராணி அவர்கள் தனது குடும்பப் பொறுப்புகளுக்கிடையில் பழைய நினைவுகளை மீட்டுப்பார்த்து வரிசைப்படுத்தி , வகைப்படுத்தி எழுதி அதற்கான புகைப்படங்கள் பத்திரிகைச் செய்திகளைத் தேடியெடுத்து எவ்விதக் குறிப்புகளும் இல்லாமல் தன் ஞாபகத்திலிருந்து பல்வேறு சம்பவங்களையும் நபர்கள் பற்றியும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் எழுதியது பாராட்டுக்குரியது எனவும் இறுதியில் தாம் நம்பிய இலட்சியம் ஒன்றுமில்லாமல் போனபோது ஏற்பட்ட துயர் அதிலே தமது பங்கென்ன? சகோதரப்படுகொலைகள், தப்பித்தல்கள், சுயவிசாரணைகள் என்று அகாலம் பதிவுசெய்திருப்பதாகவும் தர்மினி குறிப்பிட்டார்.

போராட்டக்காலங்களில் தான் சார்ந்த இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தில் தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முறையை சுயவிமர்சனம் செய்யும்  அதே தருணம் அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் மீதான தனது தார்மீக கோபத்தையும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் கைதியான தனது சிறைவாழ்வின் துன்பங்களுக்கிடையில் தான் சந்தித்த இனிய தோழிகள் என ஏனைய குற்றங்களைப் புரிந்த பெண் கைதிகள், ஜே.வி.பி தோழிகளுடனான உரையாடல்கள் பற்றிய பல தகவல்களையும் இப்புத்தகத்தில் எழுதியிருப்பது இவர் மனிதாபிமான பெண்ணியநோக்கோடு சிறையிலும் வாழ்ந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் அப்புத்தகத்தில் ‘தமிழ்ப்பிரதேசங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரிகளோ தமிழர்களுடைய தேசியஇனப்பிரச்சனை குறித்துப் பேசவே மறுத்தார்கள்’ என்ற புஸ்பராணியின் குற்றச்சாட்டுப் பற்றியும் தர்மினி மேலதிக விபரங்களைக் கூறமுடியுமா எனக்கேட்டார். இது அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தவர்கள்,

pushparani12.10

தமிழீழம் என்ற இலட்சியத்துடன் முனைப்பாகச் செயற்பட்டு, போராட்டம் தோல்வியுற்ற நிலையில் தனது போராட்டக்காலங்களில் ஒரு பெண்ணாக எதிர்கொண்ட துயரங்களின் சாட்சியங்களையும், தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மறைந்திருந்த சாதியக் கூறுகளைச்  சம்பவங்களினுடாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், சிறையில் பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளையும் , தடுப்புக்காவலில் இருந்த ஆண் கைதிகள் பொலிஸ்காவலர்கள் போன்றோரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சேட்டைகளையும் சைகைகளையும் எதிர்கொண்டது, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் தாம் பாவிப்பதற்கு துணியில்லாது தவித்த வேளையில் கிடைத்த அழுக்குத் துணியைப் பெண்கள் மாறி மாறி உபயோகித்தது போன்ற சம்பவங்கள் மூலம் சிறை வாழ்வின் கொடூரங்களை உணரக் கூடியதாகவிருந்ததாகவும் இந்நூல் மூலம் தாம் அறியாத பல விடயங்களை அறியக் கூடியதாகவிருந்ததாகவும், சரித்திர ஆவணமான இந்நூல் நிச்சயமாக ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் வெளியிடப்படவெண்டுமெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படப்பட்டன.

அந்நிகழ்வின் இறுதியாக  உரையாற்றிய புஸ்பராணி, பல பெண்கள் தனது அனுபங்களை பகிர்ந்து கொள்வதும் மிகுந்த ஈடுபாட்டுடன் கருத்துக்களைத் தெரிவிப்பதும் தனக்கு சந்தோசத்தை அளிப்பதாகவும் இப்புத்தகத்தை எழுதிய போது தான், தனது வாழ்வில் மிகவும் மகத்தானவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைத்ததையிட்டுத்  பெருமை கொண்டதாகவும் இன்னும் தனது அனுபவங்களையும் தான் வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் பதிவு செய்ய விரும்புவதாகவும் அதை ஒரு புத்தகமாக்க வேண்டுமென ஆர்வமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தான் சிறையில் வாழ்ந்த காலங்களில்  பழகிய சிங்கள நண்பிகளை ஒரு நாளாவது தனது வாழ்நாளில் சந்திக்கவேண்டும் எனும் தனது பெரும் அவாவையும் தெரிவித்தார்.

Nirmala

அடுத்த நிகழ்ச்சியான ‘பாலியல், வன்முறை, தேசியவாதம், பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேசவிருந்த நிர்மலா தவிர்க்க முடியாத காரணங்களால் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தொலைபேசி மூலம் தனதுரையை நீண்ட நேரம் வழங்கினார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வெளியில் வராது தணிக்கை செய்யப்பட்டும் தகவல்கள் குறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டுமே வெளிவருவதாகவும், அண்மையில் நடைபெற்ற மாத்தளையைச் சேர்ந்த சிறுமி மீதான பாலியல் வன்முறைச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, நாடளவில் அண்மைக்காலமாக 3500 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த டிசம்பரில் டெல்லியில் நடைபெற்றமருத்துவமாணவியை வன்கொடுமை செய்த  சம்பவத்தைத் தொடர்ந்து தென்ஆசியாவெங்கும் Anti-Rape பாலியல் வன்கொடுமைக் கெதிரான எதிர்ப்பியக்கங்கள் எழுந்துள்ளதாகவும், இவ்வியக்கங்கள் மக்கள் மத்தியில் பெண்களிற்கெதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய அறிதலையும், எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பெண்கள் ஆடைகள் அணியும் முறையைக் கண்டித்து வலதுசாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களை மறுதலித்து ‘நாம் எவ்வாறு ஆடைகள் அணிய வேண்டுமென்பதை எமக்கு கற்பிக்காதே, உனது மகனிற்கு பாலியல் வன்கொடுமை(rape)யில் ஈடுபாடாமல் இருக்க கற்று கொடு’ , ‘ அச்சமில்லாமல் நடமாடுவதற்கு சுதந்திரம் வேண்டும்’ என்னும் சுலோகங்களை முன்வைத்துச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இந்தியாவில் எழுந்த பெண்களின்   பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்ட எழுச்சியை தொடர்ந்தே இலண்டனை மையமாகக் கொண்டு Freedom Without Fear Plattform என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு ஆசிய, ஆபிரிக்க சிறுபான்மையினப் பெண்கள் சிறுமிகளுக்கெதிராக இழைக்கப்படும் ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுப்பதாகத் குறிப்பிட்டதுடன், அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கினார்.

அவர் மேலும், தந்தைவழிச் சமுதாயத்தில் பெண்களின் பாலியல்சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களின் அதிகாரக்கட்டமைப்பில் வேரூன்றியுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். பெண்கள் மீது பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் வன்முறை வடிவங்கள், பண்டைக்காலந்தொட்டு பெண்கள் எவ்வாறு ஆண்களின் உடமைகளாக்கப்பட்டிருந்தார்கள், தற்போது நவதாராளவாத பொருளாதாரமுறைமையால் பெண் வெறும் பண்டமாகக் கணிக்கப்படுதல் என்பவற்றையும் குறிப்பிட்டார். யுத்த காலங்களிலும், இனப்பிரச்சினைகளின் போதும் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வதைக்கு இலக்காகிறார்கள். அதேசமயம் தேசியவாதமும் தமது பிரச்சாரங்களிற்கும் பெண்களின் உடலையே உபயோகிக்கிறார்கள். இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இடம் பெற்ற யுத்தங்களின் போது  நிகழ்ந்தவற்றை உதாரணம் காட்டியதுடன், தான் இலங்கையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பல பெண்களைச் சந்தித்தது, அவர்கள் தமது வாழ்வை மீளமைத்துக் கொள்ளும் முகமான முயற்சிகளிற்காக இணைந்து செயற்படுவதாகவும்,அதன் அவசியத்தையும் எடுத்தரைத்தார்.

மேலும் தேசியவாதிகள், வலதுசாரிகள், இடதுசாரிகள், ஆன்மீகவாதிகள், கலாசார காப்பாளர்கள் போன்ற எல்லோரும் இந்த பாலியல் பலாத்காரத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது.  உதாரணமாக, தேசியவாதிகளை எடுத்துக் கொண்டால் தேசியம் என்பது தாய்க்கு ஒரு பெண்ணுக்கு சமமானதாக கட்டமைக்கப்படுவதும், அப்பெண் வன்முறைக்கு உட்படுத்தப்படும்போது தேசியம் மாசுபடுத்தப்படுவதாக உணரப்பட்டே இதற்கெதிராகக் குரல்கொடுப்பார்கள். மாறாக அதற்குள், அத்தேசியத்துக்குள் நடக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் (சீதனம், குடும்ப பாலியல் வன்முறை…)குறித்து இத்தேசியவாதிகள் எந்த அக்கறையும் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் பெண்ணியவாதிகள் அவ்வாறில்லை. அவர்கள் இனம், பால்நிலை, வர்க்கம், சாதி கடந்த பெண்கள்மீதான வன்முறைகள் அனைத்துக்கும் எதிராக குரல்கொடுப்பவர்களாக இருப்பர். ஆகவே, நாம் தான் இப்போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனவும் கூறினார்.

நிர்மலா நேரில் கலந்து கொள்ளாத நிலையிலும் பலர்  ஆர்வமாகத் தமது கருத்துகளை பரிமாறியதுடன்  அக்கலந்துரையாடலை ஒரு காத்திரமான நிகழ்வாக்கினார்கள்.

navajothi12.10

புகலிடத்தில் பெற்றோரும் குழந்தைகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய நவாஜோதி, தமிழ்மக்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த காலகட்டங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , அக்காலகட்டங்களில் அவர்கள் வெவ்வேறுவிதமான சூழலில் வாழ நேர்ந்தமையால் பிள்ளைகளின் வாழ்வியலை அவர்களது  அக மற்றும் புறச்சூழலே தீர்மானித்தது, பெற்றோர் பிள்ளைகளின் கைகாட்டி மரம் போல அவர்களைச் சரியான பாதையில் நடத்திச் செல்லல் வேண்டும், புகலிடத்தில் வாழும் பிள்ளைகள் வீட்டிலும் பாடசாலையிலும் வெவ்வேறு விதமான சூழல்களிற்குள் வாழநேரிடுகிறது, குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்கு அவர்களின் உலகத்திற்குள் புகுந்து, அவர்காளகவே  மாறுதல் அவசியம், அதை நமது பெற்றொர் செய்யத் தவறுவதோடு, பிள்ளைகளின் தேடுதல்களைப் புறக்கணித்து அலட்சியம் செய்கிறார்கள், அவர்களுடன் குறைந்த நேரத்தை செலவளிப்பதுடன் அவர்களது கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் போதியளவு கவனம் செலுத்தாதவர்களாகவே காணப்படுகிறார்கள், பெண் பிள்ளைகளின் அபிப்பிராயம் கேட்காது பாரிய செலவில் பூப்புனித நீராட்டுவிழாக்களை நடாத்தி, அப்பிள்ளைகளை அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார்கள்,  பெற்றோர்கள் பிள்ளைகளிற்கு சிறுவயது முதற் கொண்டு மற்றவர்களின் சாதிகளைச் சொல்லிக்கொடுத்து வேற்றுமையுணர்வோடு வாழப் பழக்குகிறார்கள், தாம் சார்ந்த மதத்தை குழந்தைகளின் புரிதலின்றி அவர்களிற்குள் புகுத்தி மூளைச்சலவை செய்து அவர்களின் சுயமான தெரிவுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள், முக்கியமாக  பெற்றோரின் விருப்பத்திற்கே  திருமணம் செய்துவைப்பதால் புரிதல் இன்றி குடும்ப வாழ்வில் பிரச்சனைகள், குழந்தைக்கு முன்னால் பெற்றோரின் நடைமுறை போன்றவையும் பிள்ளைகளை மிகவும் தாக்குகின்றன. மற்றும் பிள்ளைகள் தாய்மொழியை தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தினை  தனிப்பட்ட அனுபவங்களினுடாகவும், உதாரணங்களுடனும் விளக்கினார்.

Jeya 12.10

‘பெண்ணியவாதிகளும் அவர்களது செயற்பாடுகளும்’ என்ற தலைப்பில் ஜெயா பத்மநாதன்  பெண்கள் வீட்டிலும், வெளியிலும் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள், சமூகவலைப்பின்னல்கள் மூலம் பெண்கள் மீது தொடரப்படும் அச்சுறுத்தல்கள், அவற்றிலிருந்து மீள்வதற்கு அவர்கள் மேற்கொள்ளக் கூடிய எதிர்நடவடிக்கைகள்  என்பவற்றைத் தெரிவித்ததுடன், எழுத்துலகில் முற்போக்கான கருத்துக்களை வெளியிடும் ஆண்கள் தமது சொந்த வாழ்வில் பெண்களைத் துன்புறுத்துபவர்களாகவே உள்ளனர் என்றும் இவர்களது நடவடிக்கைகளை புகலிடத்திலுள்ள பெண் எழுத்தாளர்களோ பெண்கள் சந்திப்போ கண்டனத்துக்குள்ளாக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். இப்பெண்கள் வாழ்வில் விரக்தியடைந்து சோர்வுறாமல் தமக்கொரு வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்ந்து காட்ட வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தார். மேலும் பெண்கள் சந்திப்பு தனித்து பெண்களிற்காக நடாத்தப்படாமல் ஆண்களையும் இணைத்து, பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை அவர்களுடன் கலந்தரையாடுவதன் மூலம் தான் ஒரு தீர்வைக் காணலாமென்றும் தெவிவித்ததுடன், பெண்கள் சந்திப்பு இதுவரை சாதித்தது என்னவென்றும், பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள்  விலகியதன் காரணம் என்ன? போன்ற கேள்விகளையும் எழுப்பினார்.

அதைத்தெடர்ந்து நடைபெற்ற கலந்தரையாடலில், நீங்கள்  ஆரம்பத்திலிருந்த  கருத்தோட்டத்திற்கும், சந்திப்பில் கலந்து கொண்டதன் பிற்பாடும் மாற்றமேற்பட்டுள்ளதாவென்று  எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ஆம் மாற்றம் இருக்கிறது என்று பதிலளித்தார். பெண்கள் அவர்கள் விரும்பும் பட்சத்தில் மாத்திரமே  ஒரு ஆணுடன்டன் சேர்ந்து வாழவேண்மென்றும், சமூகத்திறகாக  ஒரு உறவைத்தேடிக் கொள்ளத் தெவையில்லையென்றும்,  உடலுறவின் அவசியத்திற்கு திருமணம் செய்து கொள்ளவெண்டுமென்ற அவசியமில்லையென்றும், குடும்ப வாழ்வு பெண்களின் செயற்பாடுகளை முடக்கி அவர்களது முன்னேற்றத்திற்கு தடையாக  இருப்பதாகவும்  பெண்களிடமிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பெண்கள் சந்திப்பு பற்றி ஜெயாபத்மநாதனால் வைக்கப்பட்ட கருத்துகளிற்கு, பெண்கள் இதை ஆரம்பித்தன் நோக்கம், அதன் தனித்துவம், அதன் கடந்கால நடவடிக்கைகள் பற்றிக் கூறப்பட்டதுடன், பெண்கள் சந்திப்பானது ஒரு அமைப்பு வடிவத்திற்குள் நின்று இயங்காத பட்சத்தில்  அதற்குரிய கூறுகளை அது கொண்டிராது எனவும், அதில் கலந்து கொள்வதும், விலகுவதும் அவரவர் சுதந்திரத்திற்கு உட்பட்டதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

tharmini 12.10

 ‘சுனிலா அபயசேகர மானுடத்திற்கான ஒரு குரல்’ என்ற நிகழ்வினை ஜேர்மனியில் இருந்து கலந்துகொண்ட உமா அவர்கள் நிகழ்த்தினார்கள்.  சமீபத்தில் தனது 61 வயதில் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணித்த மனிவுரிமைவாதியும் , பெண்ணியவாதியுமான சுனிலா அபயசேகரவினால் இலங்கையிலும், சர்வசேவ ரீதியாகவும்  மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் கலைச் செயற்பாடுகள் பற்றியும், குறிப்பாக Global campaign for human rights, Women and Media, INFORM,  Centre for Women Global Leadership ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றியும், இனப்பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் முகமான சமாதான உடன்படிக்கைககளின்போது பெண்களின் சமபங்களிப்பு, யுத்தங்களின்போது பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்துவதை வலியுறுத்தும் 13.25வது பிரேரணையை ஐ.நாவின் பாதுகாப்புச் சம்மேளனத்தில் அமுலாக்குவதில்  முன்னுழைத்தவர்களில் சுனிலாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் கிராமிய மட்டங்களிலுள்ள பெண்களிடம் சென்று  அவர்களின் பிரச்சினைகளிற்கு செவிமடுத்து, அவர்களை அமைப்பாக்குவதிலும், அரசியல் மயப்படுத்துவதிலும் கூடிய அக்கறை செலுத்தியதோடு, 1980களின் இறுதிக்காலகட்டங்களில் இலங்கையில் அரசினாலும், ஜே.வி.பியினராலும் இழைக்கப்பட்ட மனிவுரிமை மீறல்களிற்கு எதிராகவும், அவற்றைச் சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்துவதற்கும் சுனிலா கொலை மிரட்டல்களையும் மீறி செயற்பட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும்  அண்மைக் காலம் வரை தற்போதைய மகிந்த ராஜபக்சவின் ஜனநாயக விரோத அரசின் மனிவுரிமை மீறல்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், போர் குற்றங்கள், கொலை  என்பவற்றை கண்டித்து ஐ.நாவின் மனிதவுரிமை சம்மேளனத்திலும், சர்வதேச ரீதியாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், இலங்கையில் தொடர்ச்சியாக காணாமல் சென்றவர்களின் தகவல்களை  நாடெங்கும் சென்று திரட்டி அவற்றை ஆவணப்படுத்தியதோடு அவர்களிற்காகச் சர்வதேச ரீதியாக குரல் கொடுத்தாரெனவும், அதுமாத்திரமின்றி சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஓரினச்சேர்கையாளர்கள் போன்றவர்களின் உரிமைகளிற்காகவும் குரல் கொடுத்தாரெனவும் பதிவுசெய்தார்.

பெண்ணியவாதியும் செயற்பாட்டாளருமான சுனிலா அபயசேகர அவர்கட்கு ஐ.நா. சபையின் மனிதவுரிமைவாதிகளுக்கான விருது 1998 இலும், 2007 இலும்  கிடைக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.

malika 12.10

அந்நிகழ்வின் நிறைவாக மல்லிகா, சுனிலா அபயசேகர  பற்றித் தான் எழுதிய ஆங்கில மொழிக் கவிதையை வாசித்தார்.

archuni12.10

பெண்களின் இறுதிநிகழ்வாக நாம் எதிர்கொள்ளும் இரட்டைக் கலாச்சார சூழல் என்ற நிகழ்வில் புகலிடத்தில் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த அர்ச்சுனி, பிருந்தா, சிந்து, மது, வேர்ஜினி மற்றும் வேறு சிலரும் தமது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தனர். முதலில் கருத்துத் தெரிவித்த அர்ச்சுனி பிரான்சில் வாழும் தமிழ்ப் பிள்ளைகள் இரட்டைக் கலாசாரங்களிற்கிடையில் சிக்கித் தவிர்க்க வேண்டியவர்களாகவே உள்ளனரென்றும், வீடுகளில் புறச்சூழலிருந்து அந்நியப்பட்டு தமிழ்ச் சூழலிற்குள் வாழ்வதால் பாடசாலையில் ‘பிரான்ஸ்’ சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்படும் போதோ அல்லது நண்பர்களுடன் கதைக்கும் போதோ தமிழ்ப் பிள்ளைகளால் அவர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கான தகவல்கள் போதமையினால் அவர்களின் உரையாடல்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. பெண் பிள்ளைகளிற்குப் பெரியளவில் செலவளித்துப் பூப்புனித நீராட்டுவிழாக்களைக் கொண்டாடுவது, பிள்ளைகளை மன ரீதியாக பாதிக்கின்றது, அதன்பிறகு சிறுவயதில் அணிந்த மாதிரி ஆடைகளை அணியவிடாது கட்டுபடுத்தப்படுவதோடு, சமையலறையில் உதவிகள் செய்வதற்காக விட்டு விடுவார்களெனவும், வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் பிரெஞ்சுத் தோழிகளுடன் வெளியிடங்களிற்கு செல்லும் வேளைகளில் பெற்றோர்கள் தொடர்ச்சியாக தொலைபெசி மூலம் தொடர்பு கொள்வது  நண்பர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது, காதலிக்கும் போது காதலர்களுடன் சுற்றுலா அல்லது விடுமுறையை கழிப்பதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை, தாலி கட்டித் திருமணம் செய்த பின்புதான்  அதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும், திருமணங்களின் போது சாதிவேறுபாடு பேணப்படுவதோடு மற்றும் சீதனம் போன்ற பிரச்சினைகளிற்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் எனவும், சில பெற்றோரே வலிந்து பணம், வீடு போன்றவற்றை தமது கௌரவத்தை பேணுவதற்காக வழங்கி, சீதனத்தைப் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் பேணுகிறார்களெனவும்  கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரான்சில பிறந்து வளர்ந்தவர்களாக  இருந்தாலும் காதல் அல்லது திருமணம் என்று வரும் போது தமிழ் இளைஞர்களைத் தெரிவு செய்வதேன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த பிருந்தா, தாம் இரட்டை அடையாளங்களுடன் வாழ்வதாகவும் ,இங்கு வேலை செய்யும் இடங்களில் தம்மை இலங்கையராகவே பார்ப்பதாகவும், அதே வேளையில் இலங்கைக்குச் செல்லும் போது பிரான்ஸ் அடையாளத்தை தம்மேல் பொருத்திப் பார்க்கிறார்களென்றார். ஆனால் குடும்ப வளர்ப்புமுறை,தமிழர்கள் சுற்றியமைந்த சூழல், உணவுமுறை, இரசனைகள் தமிழ் இளைஞர்களுடன் ஒன்றிப்போகின்றன எனத் தெரிவித்தார்.

மது அவர்கள் தமது கருத்தைத் தெரிவிக்கையில், நாங்கள் பெரிய பெண்கள் ஆகியவுடன் நாங்கள் எங்கு போகின்றோம், யாருடன் கதைக்கின்றோம், என்ன செய்கின்றோம் என்பவற்றை எல்லாம் வேவுபார்க்கின்றார்கள், அதைவிட எல்லாவற்றையும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள். எங்களுடன் படிக்கின்ற ஏனையவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்காவது சந்தோசமாக விடுமுறையை கழித்துக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எமது பெற்றோர் அந்த விடுமுறைக்கால வேலையையும் சேர்த்து எடுத்து வேலை செய்துகொண்டிருப்பார்கள். அவ்விடுமுறைக் காலத்தை நாம் பூட்டிய வீடுகளினுள்ளே கழிக்கிறோம் எனக் கூறி, தமிழ்ப் பெற்றோரின் வேலை வேலை என்று அலையும் போக்கை மனவருத்தத்துடன் பதிவு செய்தார்.

வேர்ஜினி  அவர்கள் தமது கருத்தைக் கூறும்போது, நான் பூப்புனித நீராட்டு விழாவை மிகவும் விரும்பினேன், ஏனெனில் அப்போது தான் உறவினர்கள் எல்லோரும் வீட்டுக்கு வருவார்கள், அழகழகான உடைகள் அணிவதையும் நான் விரும்பினேன். ஆனால் போட்டோக்கள் விதம் விதமாய் செயற்கைத் தனத்துடன் எடுக்கும் போதுதான் கொஞ்சம் அவமானமாய் உணர்ந்தேன் என்று மிகவும் வெளிப்படையாகப் பேசிய அவர் சில விடயங்களைப் பெற்றோர் திணிப்பதில்லை, அதை நாங்களாகவே ஏற்றுக்கொள்கின்றோம். உதாரணத்துக்கு பொட்டுவைப்பது எனக்கு விருப்பமானது எனவும் கூறினார்.

மேலும் சிந்து அவர்கள் பேசும்போது, ஒவ்வொரு வீட்டுப்பின்னணிதான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணமாகிறது. உதாரணமாக எனக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையும் எனது அம்மா விதித்ததில்லை. அது அவரது வாழ்க்கையில் இருந்து அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்.

vanaja 12.10

கலந்து கொண்ட ஏனையோரும் தமது அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர்.  புகலிட வாழ்வின் இரண்டாந் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகள் பெண்கள் சந்திப்பில் இணைந்து கொண்டது  இச்சந்திப்பு தொடர்ந்து நிகழ்வதற்கு வலு சேர்க்கும் காரணியாகவே கொள்ளவேண்டும்.

அடுத்த பெண்கள் சந்திப்பு நிர்மலாவின் வேண்டுதலுக்கிணங்க லண்டனில்  நடைபெறுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

12.10.13 penkal santhippu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s