ஜனவரி 16-31 2014 ‘குங்குமம்தோழி’ சஞ்சிகையில் என் ஜன்னல் பகுதியில் பாரீஸ் நகரம் மற்றும் படுவான்கரை கட்டுரைத்தொகுப்பு பற்றிச் சுருக்கமாக   தர்மினி.

இடம்
அரவணைக்கும் சுதந்திரநகரம்:
10 ஆண்டுகளாகப் பாரீஸ் நகரில் வாழ்ந்து வருகிறேன்.  பல நாட்டவரும் வாழும் இந்த நகரம், என்னை அந்நியமாக உணராமல் நடமாடும் மனநிலையை ஏற்படுத்துகிறது. பல்வேறு கலாசாரங்களையும் மக்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது இந்நகர். பிரான்ஸ் காலனிகளாக வைத்திருந்த நாட்டு மக்களும், அரசியல்அகதிகளும், இந்நகரில் அடிமட்டவேலைகளிலிருந்து சொந்த நிறுவனங்கள் நடத்துவது வரையென பல்வேறு தொழில்களைச் செய்கின்றனர்.
சிறந்த எழுத்தாளர்கள் வாழ்ந்த இந்நகரம் இன்றும் கலைஞர்களுக்கு அங்கீகாரத்தையளிக்கிறது. நகரை ஊடறுத்துச் செல்லும் செயின்நதியும் அதில் பயணம் செய்வதும் மகிழ்ச்சிதரும்.ஈபில் கோபுரம்வெளிநாட்டவர் அனைவரும் பார்த்துச் செல்லும் நினைவுச்சின்னம்.தாவரவியற் பூங்கா, நவீன கலைகளுக்கான பொம்பிடோஅறிவியல் நிலையம், லூவ்ர் அருங்காட்சியகம் (உலகெங்குமிருந்து கொண்டுவரப்பட்ட ஓவியங்கள் , கலைப்பொருட்கள் சிலைகள்  ஆயிரக்கணக்கான உல்லாசப்பயணிகளை ஈர்க்கின்றன. மோனலிசா ஓவியம் அவர்களால் பெரிதும் இரசிக்கப்படுகிறது ).
மனித பரிணாம அருங்காட்சியகம், லாவிலத் அறிவியற்பூங்கா, மிகப்பெரிய நாடக அரங்கமான ஒபேரா, மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பெருஞ்சிறை பஸ்ரில் போன்றவை இந்நகரிலேயே உள்ளன.மனிதஉரிமைகளுக்கான போராட்டங்களுக்கு களம் அமைப்பதில் இந்நகரும் மக்களும் பின்நிற்பதில்லை. பஸ்ரில் சிறையுடைப்பில் கனன்ற தீ இன்றும் கூட உலகில் நடக்கும்போராட்டங்களுக்கு ஒரு முன்னுதாரணம்.12க்கும் மேற்பட்ட வீதிகள் சந்திக்கும்வெற்றிவளைவின் கீழ் நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களின் நினைவாக 1923ல் தொட ங்கி அணையாவிளக்கொன்று எரிகிறது.’சாம்ஸ்எலிசே’ உலகின் மிக அழகான சாலை என வர்ணிக்கப்படுகின்றது.800வருடங்களுக்கு முற்பட்ட நோர்த்டாம் தேவாலயமும் பாரிஸ் நகருக்குஅழகு சேர்க்கும் வேலைப்பாடுகளுடையது.
பழமையை விரும்பும் மக்கள் வீதிகளில் நெடிதுயர்ந்து நிற்கும் பழைய காலக்கட்டடங்களை பழமை கலையாமல் பராமரிக்க விரும்புகின்றனர்.
நிலக்கீழ் சுரங்கவண்டிகளும் நெடுந்தூர வண்டிகளும் சனநெரிசல் மிக்க நேரங்களில் பயணங்களைச் சுலபமாக்குகின்றன. ‘லாசப்பல்’ பகுதியில் தமிழ்ப்புத்தகக்கடைகள், மொழிபெயர்ப்பு நிலையங்கள் ,இலங்கை – இந்தியர்களின் உணவுச்சாலைகள் ஏராளமுள்ளன. இங்கு அடிக்கடி நடைபெறும் அரசியல்-இலக்கியம் தொடர்பான தமிழர்கள் கூட்டங்களும் சேர்ந்து, தாய்நாட்டை விட்டு வந்து, பாரீஸ் நகரை அண்டிவாழும்தமிழர் எவருக்கும் தாம் அந்நியம்என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பில்லாதவாறு பாரீஸ் நகரின் லாசப்பல் பகுதி தமிழர்பிரதேசம் போலவே காட்சிதரும்.
என்னைப்போல வருடக்கணக்காக அரசியல் அகதியாக, பிறந்துவளர்ந்த நாட்டையும் உறவுகளையும் திரும்பவும் ஒரு முறை பார்க்கமுடியாமல் வாழும் அகதிகளுக்கு பாரிஸ் நகரும் அதன் அரவணைப்பும் அது தரும் சுதந்திரமும் இதமானதே.
நூல்
Paduvankrai-copy
போருக்குப் பின்னே:
நோர்வேயில் புலம்பெயர்ந்து 27ஆண்டுளாக வாழும் ‘படுவான்கரை’ நூலாசிரியர்  சஞ்சயன் 2012 ல்இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள படுவான்கரை ‘என்ற பிரதேசத்தில் தன் பயணத்தின் பல நாட்களைக் கழிக்கிறார்.அங்கு அநாதரவாகக் கைவிடப்பட்ட மனிதர்களைத் தேடித்தேடிச்சந்தித்த அனுபவங்களைக் கட்டுரைகளாக்கித் தொகுத்திருக்கிறார்.
இலங்கைத்தீவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் அதில் பாதிப்புற்று  மனப்பிறழ்வானவர்களாகவும அங்கவீனர்களாகவும்உறவுகளை இழந்தவர்களாகவும் நிற்கும் முன்னாள்போராளிகளின் நிலை ஏன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது? போராட்டத்திற்கு ஆயுதங்களை வாங்க அள்ளியள்ளிக் கொடுத்தவர்களும் அதைச்சேகரித்தவர்களும் இவர்களைக் கண்டும் காணாமல் கைவிட்டதன் காரணம் என்ன? புலம்பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழ்ந்து கொண்டு மீண்டும் தொடரும் மிடுக்கு பற்றிப் பேசுபவர்கள் இவர்களை மறந்த காரணம் என்ன? என்று கேட்கிறார் சஞ்சயன்.
கவனிக்காமல் விடப்பட்ட ஊனமுற்ற போராளிகளும் குடும்பங்களும் தம் துன்பங்களைப் பகிர்ந்து கொண்டு யாராவது தம்மைக் கைதூக்கி விடமாட்டனரா என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் என்பதை  ஒவ்வொரு கட்டுரையிலும் படிக்க முடிகிறது. ‘புலம்பெயர் தேசங்களில்ஆடம்பரங்களாகச் செய்யப்படும் நினைவு தினங்களில் உயிரோடு வாழும் இவர்களை நினைத்துப்பார்க்கிறார்களில்லை? என ஆதங்கத்தோடு,  அன்றாடத் துயரங்களையும் சமூகத்தின் புறக்கணிப்புகளையும்  நம்முன் வைக்கிறார் சஞ்சயன்.  ‘இவை எவ்விதப்புனைவுமல்ல.இந்த மனிதர்கள் துயரங்களைச் சுமந்தபடி இரத்தமும் சதையுமாக என் முன்னால் இருந்து உரையாடியவர்கள்’என்கிறார் நூலாசிரியர் சஞ்சயன்.
கிராமத்துப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஈரோஸ் இயக்கத்திலிருந்தவர், பாலியல் தொழிலை செய்யவேண்டிய நிலையில் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைக்கப்பட்ட ஒரு பெண்போராளி தன் ஊனமுற்ற கால்களுடன் குழந்தைகளைப் பராமரிக்கவேண்டிய நிலையில் வாழ்வது, தற்கொலைக்கு முயற்சிக்கும் போராளிகளான தம்பதிகள் என்று சிலரின் கதைகளைப் படிக்கும் போது நம்மிடமிருந்து எழும் குற்றவுணர்வு இவர்களைப் பற்றிக் கொஞ்சமேனும்சிந்திக்க வைக்கிறது.யுத்தம் துப்பிப் போட்ட சக்கைகளாக மீதிக்காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும்இவர்களைப்போன்ற பலரின் வாழ்க்கைக் கதைகள் இன்னும் எழுதாமலும் சொல்லாமலும்எராளமுண்டு.
வெளியீடு : எழுநா ஊடகநிறுவனம்
Advertisements