jaune chien 2

தர்மினி                                                                                                                                                                                                                                                                                                               

2005ம் ஆண்டில் வெளியாகிய இந்த ஆவணப்படத்தின் மூலமொழிகள் டொச் மற்றும் மங்கோலி. பிரெஞ்சுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் நான் பிரெஞ்மொழி கற்கும் வகுப்பில் எனக்குக் கிடைத்தது.                                                                                                                                          Hampton சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதைக்கான விருது மற்றும் 2006 ல் ஜெர்மனியில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது. பெற்ற  இந்த ஒன்றரை மணிநேர ஆவணப்படத்தில் மங்கோலியாவில் வாழும் ஒரு நாடோடிக் குடும்பத்தின் சில நாட்கள் இயல்பான வெளிச்சமும் வாழ்வுமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இதன் இயக்குனர் Byambasuren Davaa.                                     இயற்கை. அதனுடன் இயைந்த நாட்களும் நிரந்தரமற்ற இருப்பிடமும் அவர்களது எளிமையான வாழ்வுமாக அந்தத் தாய், தந்தை, மூன்று குழந்தைகளடங்கிய குடும்பத்தின்சில நாட்களை ஆவணப்படுத்தியுள்ளார் இயக்குனர். நான்ஸால் என்ற 6 வயதுடைய அக்குடும்பத்தின் மூத்த குழந்தையின்மனவுணர்வுகளுக்கூடாக நானும் இப்படத்தில் உடன் பயணிக்க முடிந்ததாய் உணர்ந்தேன். அவர்கள் ஆகக்குறைந்த தேவைகளுடன் உழைக்கும் மக்கள்.அவர்களின் வசிப்பிடத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு கூடாரத்தைக் காண முடியவில்லை. மலை, புற்தரை , நீரோடை , குதிரைகள் ,செம்மறியாடுகள், எருமைகள், விரிந்த வானமென்று காட்சிகள். மெல்லிய இசையும் நாடோடிப்பாடல்களும் அதனோடு சேர்ந்து நாம் வேறொரு சூழலை அனுபவிக்கச் செய்கின்றன. குழந்தைகள் உட்பட எவருமே கமராவோடு வேற்று மனிதர்கள் தம்மைப் பதிவு செய்வதைப்  பொருட்  படுத்த வேயில்லை.

வட்டவடிவமான அவர்களது கூடாரத்தில் சமையல், தையல், வழிபாடு ,நித்திரை ,பாற்கட்டிகளைத் தயாரித்தல் என அனைத்துக்கும்இடம் ஒதுக்கி வைத்துள்ளனர்.அச்சிலநாட்களில் ஒன்றிரண்டு உடைகளைத் தவிர வேறெதுவும் அணியவில்லை அக்குடும்பம்.பாலைக் காய்ச்சி அருந்துவதும்.புத்தரை வழிபடுவதும் ஒயாமல்  வேலை செய்து கொண்டேயிருக்கும் தாயும் உலரவைத்த மிருகங்களின் தோல்களை விற்கச்சென்று சில நாட்களின் பின் வீடு திரும்பும் தகப்பனின் எளிய பரிசுகளுமெனக் காட்சிகள். தூரத்துப் பள்ளிக்கூடம் சென்றவளை பழைய வாகனம்  கொண்டுவந்து இறக்கிவிடுகிறது. இறக்கிவிடப்படும் நான்ஸால் உடைமாற்றிக் கொண்டு குதிரையிலேறி மேய்ச்சலுக்குப் போன தம் கால்நடைகளைச் சாய்த்துவருகிறாள்.பாற்கட்டித் தயாரிப்பில் கூடாரத்தை பிரித்து அடுக்குவதில் சகோதரர்களைப் பராமரிப்பதிலென்று அக்குழந்தையின் வேலைகளும் அவளது தாயாரின் வேலைகளுமென்று பார்க்கும்போதே நாம் களைத்துவிடுமளவு இருக்கிறது.நான்ஸால் கற்பாறைகளிடையில் ஒரு நாயைக் கண்டுபிடித்து வீட்டுக்கு வளர்க்கக்கூட்டிவந்ததை அவளது தந்தை விரும்பவில்லை. மிகுந்த ஆசையுடன் வளர்க்கத் தொடங்குகிறாள்.தகப்பனாரோ அதை விரட்டிவிடுவதில் முனைப்பாயிருப்பதும் அச்சிறுபெண் அதை ஒளித்து வைத்து வளர்க்க விரும்புவதுமாக அவளுக்கும் நாய்க்குமான பாசம் இப்படத்தில் ஊடாடுகிறது.                                                                                                                                                                                                                                                                                                      Jaune chienஅக்குடும்பம் அவர்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தைத் தேடிப் போகவேண்டிய நிலையில் கூடாரத்தைப் பிரித்து அடுக்கி வண்டிகளைப்பிணைத்துப் பயணத்துக்கு ஆயத்தம்செய்த போது அந்த நாயை ஓரிடத்தில் கட்டிவிட்டுச்செல்கிறார் தந்தை.                                                                                                               சிலமணிநேரங்களின் முன் அங்கொரு குடும்பம் வாழ்ததற்கான அறிகுறியாக பெரிய வட்டமாக புற்கள் செம்மஞ்சளாகக் காட்சி தருகின்றன.                                                          அந்த மஞ்சள் நிற நாயைப் பிரிந்த கவலையில் மிகுந்த துக்கத்துடன் பயணிக்கும் நான்ஸால், வரிசையாகப் பிணைத்தபடி செல்லத் தொடங்கும் வண்டியிலிருந்து  அவளது கண்காணிப்பிலிருந்த  தம்பி மெதுவாக இறங்கியதைக் கவனிக்கவில்லை.                                                                                                     இடைவழியில் குழந்தையைத் தேடித் தந்தை பழைய கூடாரமிருந்த இடம்நோக்கிக் குதிரேயிலேறிப் போகும்போது கட்டவிழ்த்த நாய் கழுகுகளிடமிருந்து அக்குழந்தையைக் காப்பாற்றிக் காவல் செய்கிறதைக் காண்கிறார் .                                                              நான்ஸாலின் தகப்பனார் நாயினால் காப்பாற்றப்பட்ட அக்குழந்தையின் காரணமாக அந்த நாயையும் அழைத்துவருகிறார்.நான்ஸாலின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மிருகங்களின் தோல் , பாற்கட்டி விற்பது என கால்நடைகளை நம்பிய வாழ்வில் புற்தரைகளைத் தேடித் தேடி அலையும் அவர்களின் நிரந்தரமற்ற வசிப்பிடம் வண்டிகளில் மிருகங்களால் சுமந்து செல்வதும் ஒரு நாளில் தமது சொற்பமான பொருட்களுடன் இடம்பெயர்ந்து போவதுமான நாடோடி வாழ்வு இயற்கையை நேசிக்கும் எளிய மனிதர்களின் மென்னுணர்வுகள் என ஒன்றரை மணிநேரம் கடந்து  விடுகிறது.                                                                               குங்குமம் தோழிக்காக எழுதியதன் விரிவு.                                                                           நன்றி : குங்குமம் தோழி

Advertisements