uoolikkalam தர்மினி
 இப்புத்தகத்தைப் படித்துக் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. தற்போது கையிலும் இல்லை. ஆனாலும் ஞாபகத்திலிருக்கும் விடயங்களை முன்வைத்து ஊழிக்காலம் பற்றி எழுதிப் பகிரவேண்டுமென அடிக்கடி அந்நினைவு வந்து குறுக்கிடுகிறது.
          இவ்வளவு கனதியான புத்தகத்தைப்பற்றி எவ்விதம் எழுதுவது? எதை எடுப்பது? எதை விடுவது என்ற திகைப்பு ஏற்படுகிறது. கனமென்று குறிப்பிடுவது அதிலடங்கியுள்ள நிகழ்வுகளை, காலத்தை,  வாசித்தபின் மனதில் ஏற்படும் பாரங்களை, சம்பவங்கள் பற்றிய தமிழ்க்கவியின் வாக்கியங்களை … எனச்சொல்லிக்கொண்டு போகலாம்.
        இராணுவத்தின் விசாரிப்பில் பார்வதியின் பழைய நினைவுகள் பின்னோக்கிச் செல்ல நாவல் தொடங்குகிறது. வன்னிமக்கள் வாழ்ந்த வீடுகளிலிருந்து 2008 ம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஓடத்தொடங்கினார்கள். அதைப்போலவே தமிழ்கவி குறிப்பிடும் சுறுசுறுப்பும் விவேகமும் நிறைந்த பார்வதி என்ற வயோதிபப் பெண்ணும் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து ஓடத்தொடங்குகிறார்.
 நாம் இடம்-புலம் பெயர்ந்து இன்னோரிடத்தில் வாழ்வதைக் கூட இலகுவாக எடுத்துக்கொண்டு வாழப்பழகி விட்ட மக்கள் தான். ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கொரு தரம் மிதிவண்டிகள் ,உந்துருளிகள், உழவுவாகனங்கள் , மாட்டுவண்டில்கள் என்பவற்றில் தமது வாழ்வுக்குத் தேவையான பொருட்களையும் வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் , கர்ப்பிணிகளெனச் சுமந்து அலைதல். வருமானம் எதுவுமில்லாதவர்களாகி உணவுக்கு வழியற்றிருப்பது. கிடைக்கும் சொற்பப்பொருட்களும் பற்பல மடங்காக விற்கப்படுகிறது. அப்படியும் பணம் வைத்திருப்பவர்கள் என்ன விலை கொடுத்தாவது வாங்கத் தயாரென்றாலும் உணவுக்குத் தட்டுப்பாடு என்ற சூழ்நிலை.
            வழியெங்கும் எறிகணைகள் விழவிழ உறவுகளை காயங்களுடன் இடைவழிகளில் மருத்துவமனைகளில் விட்டுச்செல்லுதல். பிணமாகக் கடந்து செல்லுதல். நிம்மதியான நித்திரை கூட இல்லாத அந்த இடப்பெயர்வின் துன்பங்களும் வேதனைகளும் ஷெல்விழாத-குண்டுகள் விழாத துப்பாக்கிச் சன்னங்கள் பறக்காத ஒரு நிழல் தேடி அவர்களை ஓடச்செய்தது.   காயப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் மருந்துத் தட்டுப்பாடு. இரத்தம் வழிய வழிய அனாதைகளாகிக் கிடப்பது. மரணமடைந்த உறவுகளை தெருக்களில் கைவிட்டுச் செல்லுதல் என்று அவர்களின் அந்தரிப்பும் எவரையும் உலுப்பாமல் போகாது.
திரும்பத்திரும்பக் கூடாரமடிக்க இடந்தேடுவது.  உணவு தேடித்திரிவது. காணாமற் போனவர்களைத் தேடுதல் எனத் தேடித்தேடியலைதல். ஓடுதல். அலறல்கள். சாவுகள். ஏமாற்றங்கள் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. திடீர்த்திடீர் திருப்பங்களுடன்  இப்புத்தகம் எழுதப்படவில்லை. ஆனால் வாசித்து முடிக்காமல் இப்புதினத்தை வைத்துவிட இயலாது. அத்தனையும் கடந்த ஐந்து வருடங்களாகப் பத்திரிகைகள், உறவினர்கள், ஊரவர்கள், அறிந்தவர்களென இந்தச்சுடுகாட்டிலிருந்து உயிர்ப்போடு தப்பி வந்தவர்களின் வாயால் நாங்கள் கேட்டவைகள் தான். அவை ஒரு தொகுப்பாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
                   அந்தப் பேரவலத்தின் சாட்சியமான ஒருவர் விமர்சனங்களோடும் கேள்விகளோடும் எளிமையான விதத்தில் எழுதிய இப்புத்தகம் அந்த வரலாறின் சாட்சியங்களில் ஒன்று. ஈழம், போராட்டம் , பேரினவாதம், சண்டை, சமாதானம் என்று  தொடர்ந்தும் பேசிக் கொண்டிருப்பவர்கள்  கற்றுக் கொள்ள  விசயங்கள் இதிலுள்ளன.
tk
‘சனங்கள் யாவராலும் கைவிடப்பட்டனர்’ என்ற வரியைப் படிக்கும் போது பூடகமாகத்  தமிழ்க்கவி எதைச் சொல்கின்றார் என்றும் விளங்காமல் போகாது. சிற்சில இடங்களில் நேரடியாகவே  விமர்சிக்கும் விடயங்களை வாசிக்கலாம்.65 வயதான தமயந்தி தன்னிரு மகன்களையும் புலிகளில் சேர்ந்து சாகக்கொடுத்த பின் புலிகளில் சேர்ந்து நாடகங்கள் வானொலி நிகழ்ச்சிகள் கலைநிகழ்வுகளில் பங்குகொள்கிறார். அதன் மூலமாக சனங்கள் மத்தியிலும் புலிகளிடையிலும் பிரபலமானவராகிறார். தமிழ்க்கவி என்பவர் தான் பார்வதி என்று ஊகிக்கமுடிகிறது.
  பார்வதி என்ற ஊழிக்காலத்தின் கதைசொல்லி தன் மகளையும் மருமகளையும் பேரக்குழந்தைகளையும் பொருட்களையும் காவிச் செல்வதும் காப்பாற்றிக் கொள்ளப்படும் துயரமும் நம்மால் சுமக்க முடியுமோ என்று திகைக்க வைக்கிறது. அவரது உந்துருளி இதிலே முக்கிய பங்கு வகிக்கிறது. பொருட்களை ஏற்றி இறக்குவதும் கூடாரமடிக்க வசதியான இடமுள்ளதா என்ற தேடித்திரிவதற்கும் ஒரு வாகனங்கூட இல்லாத சனங்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்தேன். போகுமிடமெல்லாம் நினைக்க முடியாதளவு விலை கூடிய பொருட்களை வாங்குவதற்கு கையிலே காசில்லாதவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று பதட்டம் ஏற்பட்டது. தொலைக்காட்சியிலும் புலிகள் இயக்கத்திலுமிருந்த பலராலும் அறிந்து கொள்ளப்பட்டவராயிருந்ததால் செல்லுமிடங்களில் சில தேவைகளை இலகுவாகப்பெற்றுக் கொள்கிறார். ஆட்கள் அடையாளங்கண்டு கொண்டு உதவுகின்றனர்.இவையெதுவுமற்ற இடம்பெயர்ந்தோடும் சனத்திரள் என்னபாடுபட்டிருக்குமென்று ஒரு சில நிமிடங்கள் புத்தகத்தை வாசிப்பதை நிறுத்தி யோசிக்காமல் பக்கங்களைப் புரட்டஇயலாது.
            இப்புத்தகத்தைப்படித்துக் கொண்டிருக்கும் போது இடையிடையே நிறுத்தாமல் என்னால் வாசிக்க முடியவில்லை.  அந்தப் பேரவலத்தில் கற்பனைக்கும் அப்பாற்பட்டவைகளாக நமக்குத் தோன்றுபவை. அவர்களுக்கு நாளாந்த வாழ்வாயிருந்தது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம் -உடையார்கட்டு மைதானத்தில் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்படுகிறது. வரிசைகளில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் என மூன்று மாவட்ட மக்களும் தனித்தனி வரிசைகளில் நின்றனர். காலை 11 மணியளவில் அவ்விடத்தில் ஷெல் விழத்தொடங்குகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. யாரும் வரிசையை விட்டுக் கலைந்து ஓடவில்லை.சிலர் சற்று நெளிந்து கொடுக்கிறார்கள்.கீழே இருக்கிறார்கள்.படுக்கிறார்கள்.உயிரை விட உணவு அவர்களுக்கு முக்கியமாயிருந்தது.-என்ற இந்தச் சம்பவம் சனங்களின் துணிவையல்ல, எதுவும் நடக்கட்டும் என்ற சலிப்பையும் அவ்விடத்தில் உணவின்றி உயிர்வாழ்ந்தென்ன பயன் ?என்ற கருத்தையுமல்லவா சொல்கிறது.
மக்கள் ஓடும் வழியெங்கும் பார்த்த துன்பங்கள் அதிகம். பார்த்த சடலங்கள் எண்ணிக்கைகளற்றவை. அனாதைகளான வயோதிபர்களும் குழந்தைகளும் அந்நாட்களின் பசியிலும் காயங்களின் வலியிலும் மரண பயத்திலும் கைவிடப்பட்ட நிர்க்கதியிலும் நின்றார்கள். அவரவர் தன்னைப் பாதுகாக்கவே இயலாத நிலையில்  யாருக்கு யாரால் உதவமுடியும் என்ற நிலை.
இன்னுமொரு இடத்தில் துவக்குச் சன்னங்கள் விஷ் விஷ் என்று பறக்கின்றன சனங்கள் முதுகை வளைத்துக் குனிந்தபடி கடந்து செல்கின்றனர். இப்படியான நேரத்திலும் கூட பிள்ளைகளைப் பிடிப்பவர்களுக்குப் பயந்து தம் பிள்ளைகளைக் காப்பாற்றப் போராடுகின்றனர் பெற்றோர்.எல்லாம் கைவிட்டுப் போன நிலையிலும் நடமாடும் அலுவலகங்களும் புலிகளின் இவ்வாறான நிர்வாகமும் இடம்பெயர்ந்தபடியே நடக்கிறது. ‘இறாஞ்சிக் கொண்டு போன ‘ பிள்ளைகளுக்குப் பயிற்சிகள் கொடுக்கக் கால அவகாசமில்லாத நிலை இருந்த போதும் முன்னரங்கிற்கு ஆமிக்கு ஈடுகொடுக்க அனுப்பப்படுகின்றனர். அவ்வாறான நிலையிலும் முக்கிய பொறுப்பிலுள்ள புலித்தலைமைகள் தங்களது குடும்பத்திற்குப் பதுங்குகுழி வெட்டவும் பொருட்கள் ஏற்றிப் பறிக்கவும் பயிற்சிகள் பெற்ற போராளிகளை உபயோகித்தனர் என்பதையும் தமிழ்க்கவி பெரும்விசனத்தோடும் விமர்சனத்தோடும் முன் வைக்கிறார்.
ஏன் ஊழிக்காலத்தை நாவல் எனக் குறிப்பட்டார்கள்? இவையெல்லாம் தன் சாட்சியமாகப் பதியப்பட்டிருக்கலாமே எனத் தோன்றுகிறது.
ஆன்ஃபிராங் நாட்குறிப்புகளாக எழுதி  வைத்திருந்தது நாஸிகளின் இனவழிப்புக்குச் சாட்சியமானது. அந்த நாஸிகளை வெற்றி கொண்ட ரஷ்யச்செம்படைகள் ஜேர்மனியில் என்ன செய்தனர் என்பதற்குச் சாட்சியமாக அனொனிமா என்ற பெயரற்றவளாக ஒரு பெண் தன் நாட்குறிப்புகளை எழுதி வைத்தார். அவ்வாறான ஒரு யுத்தச் சாட்சியமாக இந்நூல் நாட்குறிப்பு வடிவில் எழுதப்பட்டிருக்குமானால் அது மிகக்காத்திரமான ஒரு சாட்சியமாயிருக்கும்.
நாளாந்தம் குறிப்பு எடுக்கும் வகையில் அவர்களின் நாட்களில்லை. கையில் காகிதமோ ஒரு பென்சிலோ வைத்திருந்து எழுத அவகாசமில்லை. உண்மை தான். ஆனாலும் இவ்வாறு ஒரு நாவலெனக் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்ட இந்த விபரங்களை, ஞாபகத்திலிருந்து விலக்க முடியாத சம்பங்களை மாதங்களை முன்னிட்டோ அல்லது கூடாரமடித்துத் தங்கியிருந்த இடங்களின் படி அத்தியாயங்களைப் போல பிரித்தோ நினைவுக்குறிப்புகளாக எழுதப்பட்டிருக்குமானால் வரலாற்றின் பக்கங்களில் முப்பது வருடத் தமிழரின் ஆயுதப்போராட்டம் முடித்து வைக்கப்பட்ட விதம் பதியப்பட்டிருக்கும். ‘ஊழிக்காலம் ஒரு நாவல் ‘ என்று சொல்லப்படும் போது அதிலே உண்மைகளும் புனைவுகளும் கலந்திருப்பதனால் நேரில் இத்துயரங்களைப் பார்த்து அனுபவித்த ஆசிரியரின் சாட்சியங்கள் புறந்தள்ளப்பட்டுவிடக்கூடுமோ என்ற கவலை ஏற்படுகிறது.
 2009 ன் வன்னிச் சம்பவங்களின் சாட்சியங்களின் தொகுப்புகள், அறிந்து கொண்ட தகவல்கள் என்பவற்றைக் கொண்ட கோர்டன் வைஸின் ‘கூண்டு’ மற்றும் ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின்  ‘சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்’ ஆகிய புத்தகங்களை இதை வாசிப்பதற்கு முன்னரே வாசித்திருந்த போதிலும் 317 பக்கங்களுடைய இந்த ஊழிக்காலம் இன்னுமின்னும் அதிகமாக அக்காலப்பகுதியை அறியச்செய்கிறது.
                   இந்த நெருப்புக்குழியிலிருந்து தப்பித்து அக்கரையில் இராணுவத்திடமாவது போய்விடவேண்டுமென்று ஓடுகின்றனர். பின்னால் துரத்தும் எறிகணைகள், தலைமேல் விழும் குண்டுகள், அலைபோல் வரும் வெற்றி வெறியோடு வரும் இராணுவம்., யாருக்காகப் போராடுகிறொமென்று சொன்னார்களோ அவர்களின் முதுகிலே சுடும் புலிகள் இவற்றையெல்லாம் தாண்டிச் சென்றனர்.எறிகணைகளும் விமானக்குண்டுகளும் துரத்தித்துரத்திக் கலைக்க ஓடிஓடிப்போய் இந்தக் குண்டுகளையும் எறிகணைகளையும் வீசிக்கொண்டிருந்த இராணுவத்தின் இடம் அடைகிறார்.
                   பல மாதப் பசி கிடந்து வந்தவர்களை நோக்கி எறிந்த உணவுப்பொதிகளிற்காக ஏங்கி நின்றனர் அவர்கள். அங்கும்  தொடர்ந்தது. குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டுப் புனர்வாழ்வு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள். தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட இளம்பெண்கள்.
  ‘இன்னுமொரு நாட்டுக்குள் வந்த உணர்வு மனதெங்கும் பரவ அந்த வெக்கையிலும் உடல் சில்லிடத் தொடங்கியது.’ என்ற இறுதி வரிகளில் அவர்களுக்கு ஏற்பட்டது அந்நிய உணர்வு. அனைவராலும் கைவிடப்பட்ட தங்கள் நிலை. தன் நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த சனங்களில் ஒரு பகுதியினர் மீது குண்டுகளைக் கொட்டியும் எறிகணைகளைப் பொழிந்தும் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளை பாவித்தும் பொதுமக்களைத் துரத்தித்துரத்திக் கொன்று அங்கவீனமாக்கியும் அனாதைகளாக்கியும் புலிகளை முறியடிப்பதே இலக்கு என்று செயற்பட்ட இராணுவத்தின் அனுதாபத்தை எப்படி அவர்களால் நம்ப முடியும்?
வெளியீடு : தமிழினி பதிப்பகம் .
விலை. ரூ.270
Advertisements