– புஷ்பராணி –

muslimந்த நாடு எமக்குத்தான் சொந்தம், நாம் ஆளப் பிறந்தவர்கள், ஏனையோர் அடிமைகள், அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற ஆங்கார …எதேச்சாதிகாரமான மனோபாவம்கொண்ட இனவாதிகளாலும் ,அவர்களுக்குத் துணைபோகும் அரச படைகளாலும் சூழப்பட்டு முஸ்லீம் சகோதரர்கள் படும் இன்னல்கள் மனிதாபிமானத்தையே கலங்கடித்து நிற்கின்றது.

வேருவளை,,அளுத்கம பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் சிங்களப் பகுதிகளாலேயே சூழப்பட்டிருப்பதால் அவர்கள் இலகுவாக வெளியேறவோ, உள்ளே வரவோ முடியாது தவிப்பதாகச் செய்தியாளர்களின் உரைகளில் இருந்து கேட்கமுடிந்தது. ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லீம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன . போனபோன இடங்களில் ஆண்கள் மாட்டுப்பட்டுஅவதியுற , வீட்டிலிருக்கும் பெண்களும் ,குழந்தைகளும் இன்னல் படுவதாக ஒருவர் கதறி அழுது புலம்பியது இன்னும் காதில் ஒலிக்கின்றது. “எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா” என்று பலர் இறைவனை வேண்டிக் கதறியது பெரும் துன்பத்தைத் தந்தது.

காலத்துக்குக் காலம் சிறுபான்மையினரைக் கேட்பார் எவருமற்று கொடுமை செய்யும் ,படுபாதகப் பேரினவாதிகளோடு ஒருக்காலும் ,ஒன்றுபட்டு வாழமுடியாது என்பது மேலும் மேலும் நிரூபணமாகிக் கொண்டேயிருக்கின்றது. திட்டம் போட்டோ, திட்டம் எதுவுமின்றியோ எடுத்தவுடனேயே சொத்துகளைஎரித்துச் சூறையாடுதல், உயிர்ப்பலியெடுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை  இன்னும் என்னவோவெல்லாம் இந்தக் காடையர்களுக்குக் கைவந்த பெருங்கலை ஆகிவிட்டது.
muslim juneஎரியும் வீடுகளை விட்டு வெளியேறமுடியாமல் பரிதாபமாக அலறும் முஸ்லீம்களைக் காப்பாற்ற முனைந்த மனிதாபிமானமுள்ள சிங்களவர்களும் காடையர்களால் தாக்கப்பட்டிருகின்றார்கள்.  நடந்துமுடிந்த ஏனைய இனக்கலவரங்களின் போதுகூட  , தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த சிங்கள மக்கள் இதே மாதிரித் தாக்கப்பட்டது நாம் அறிந்ததே. கருணையையும் அன்பையும் சமாதானத்தையும் போதித்த புத்தரின் பெயரைச் சொல்லும் காவியுடை பூண்டோர் நஞ்சுடன் கக்கும் துவேசம் கொப்பளிக்கும் பேச்சுக்கள் எண்ணெய்யாக ஊற்றப்பட்டு முஸ்லீம் சகோதரர்களின் குடிமனைகளும் கடைகளும் வானளாவ எரியும் கொடுமையினைக் காணொளிகள் மூலம் கண்டு மனம் கலங்குகின்றது. மற்றும் தர்கா நகர் சென்ற சர்வதேச ஊடகமான அல்ஜசீராவின் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டதாக அறியப்படுகிறது. அதில் யாருக்கும் காயங்கள் ஏற்படாதபோதினும் அவர்கள் பிரயாணம் செய்த வாகனம் சேதப் படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டத்தைப் பயன் படுத்தி கலவரங்களை மேலும் பெரிதாக்கி முஸ்லீம்களின் சொத்துகளும் கொள்ளையடிக்கப் படுவதாகத் தெரியவருகின்றது.

tharka nager

pannanthuraiமுஸ்லீம்களின் அவலம் கண்டு குறுந்தேசியவாதிகள் மனம் மகிழ்வதுபோலிருகின்றது. எம்மை ஆதரிக்காத ….எமக்காகக் குரல் எழுப்பாத இவர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பதுபோல  எந்தவிதமான கருத்தும் கூறாது மௌனம் சாதிக்கும் இவர்தம் மனிதாபிமானமற்ற குறுகிய கோணல் புத்தியை என்னவென்பது. கதறக் கதற யாழ்ப்பாணத்தை விட்டு ஓட ஓட முஸ்லீம் சகோதரர்கள் அடித்து விரட்டப்பட்டபோதும் …அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டபோதும் இந்தக் குறுகிய புத்திதானே கோரத்தாண்டவம் ஆடியது. தாம் பிறந்து வளர்ந்த சொந்த இடங்களைவிட்டு வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அவர்களின் அகதி வாழ்வே இன்னும் முடிவுக்கு வராத போது எமக்காக எப்படிக் குரல் கொடுத்திருக்க முடியும்?ஆனாலும் முள்ளிவாய்க்காலில் இருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாகப் பசியோடு முகாம்களுக்குப் போன போது உடனடி உதவிகளாக முஸ்லிம் சகோதரர்கள் ஓடோடி வந்து உணவு சமைத்துப் பரிமாறியது அவர்களின் ஈரமனதையும் மனிதாபிமானத்தையும் காட்டியதை நாம் மறக்கவில்லை. பேரினவாதிகளின் அட்டூழியங்களால் அல்லலுறும் முஸ்லீம் சகோதரர்களுக்காக எமது ஆதரவுக் குரலைக் காட்டாது நிற்போமானால் மானுட நேயத்துக்கே அர்த்தம் இல்லாது போய் விடும்.

vaddara vijithaமுஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த வட்டரக்க விஜித தேரர் அவர்கள் கடத்தப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்டு,கொண்டுவந்து வீசியெறியப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து மீட்கப்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருப்பதாகவும் செய்திகள் கிடைக்கின்றன. மனிதாபிமானத்தோடு முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு பெளத்ததுறவிக்கு கூட உயிர் அச்சுறுத்தல் தானென்றால் அப்பாவிச் சனம் படும்பாடு என்னவென நாம் அனுமானிக்கலாம்.

தம் அழிவுக்கான வித்துக்களைத் தாமே விதைக்கறார்கள் என்பதைத் துளியேனும் சிந்தையில் கொள்ளாது சன்னதங்கொண்டு கூத்தாடும் பேரினவாதத்தின் அடங்காதவெறிக்கு முற்றுப்புள்ளி எப்போது?தொடர்ந்தும் நாமெல்லாம் இலங்கையர் எனச் சொல்லிக்கொண்டு சிறுபான்மைச்சமூகங்களை வன்முறைகளால் எதிர்கொள்வது நாட்டின் அய்க்கியத்திற்கு எப்படி வழிசமைக்கும்?

Advertisements