-புஷ்பராணி-    05.07    இந்தப் பாலியல் வன்கொடுமை….பாலியல் வன்கொடுமை என்று இன்று கூக்குரலிட்டுப் பேசப்படுகின்றதே..ஏதோ இது இப்போதுதான் நடப்பது போன்ற மாயை பெரும் வலையாகப் பின்னப்பட்டு முன்பெல்லாம் நடக்காதது போன்ற பிரமை இருக்குமாயின் அதைத் தூக்கி வீசிவிடுங்கள். இது தலைமுறை..தலைமுறையாக எப்போதும் நடந்துவரும் இருள் படர்ந்த பெருங்கொடுமை நிறைந்த ….உண்மை என்பது தெரிந்தும் மறைத்து மூடி வைப்பது ஒரு  நியதி ஆகி இந்தக் கொடுஞ் செயலாளர்களை உரம் போட்டு வளர்த்து வந்திருக்கின்றது. இது பற்றிப் பேசுவதே அவமானம் என்று கருதப் பட்டதெல்லாம் மலையேறி இன்று ஊடகங்கள், சமூக இயக்கங்கள், பொதுமக்கள்,  சம்பந்தப்பட்டோர் என்று பலராலும் வெளிப்படையாகப் பேசப்படும் காலத்தின் துணிவு மிக்க மாற்றமே இது போன்ற சம்பவங்களின் முகமூடி கிழிக்கப்பட்டு , தயக்கமின்றிப் பலரையும் வாய் திறக்க வைத்துள்ளது.  எமது சிறுவயதிலே நாம் அனைவருமே இத்தகைய சீண்டல்களுக்கு தடவுதல், கண்ட இடங்களிலும் கிள்ளுதல், காது கொடுத்துக் கேட்கமுடியாத ஆபாச வார்த்தைகளைப் பேசுதல், திறந்து காட்டுதல்(?) (என்று என்னென்னவோ) ஆளாகியிருக்கின்றோம். இதெல்லாம் தவறான செயல்கள் என்று தெரிந்தும் நாம் வீட்டில் வாய் திறப்பதேயில்லை. சொன்னால் எங்களுக்குத் தான் அடி விழும் என்ற பெரும் பயம். எவ்வளவு பொத்திப் பொத்தி வளர்க்கப் பட்டும் எல்லோரின் கண்களையும் கட்டிவிட்டு இத்தகையோரின் வக்கிரம் பெரும் தீயாகச் சுட்டெரித்துக் கொண்டே இருந்தது ….இன்னும் இருக்கின்றது. ஆனால், இன்றைய குழந்தைகள் மிகத் தெளிந்தவர்களாக இருக்கின்றார்கள். இப்போதைய பெற்றோரின் சொல்லிக் கொடுத்தல் மூலம் பிள்ளைகள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனாலும் என்ன இத்தகைய செயல்கள் குறைந்து முடியாதபடி அவை வேரோடி ஊன்றிவிட்டதைப் பத்திரிகைகள் மூலமும் ஏனைய ஊடகங்கள் மூலமும் அதிர்ச்சியோடு அறிகின்றோமே. இன்னும் இறுக்கமான …மிக மிக இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அவை நேர்மையுடன் கடைப்பிடிக்கப் பட்டாலன்றி இந்தக் குற்றங்கள் படர்ந்து ஓங்குவதை நிறுத்தவே முடியாது. சமூக இயக்கங்களும் இன்னும் பலரும் கத்திச் சொல்வதைத்தான் நானும் சொல்கின்றேன்……தயவு செய்து குழந்தைகளை அதுவும் முக்கியமாகப் பெண் குழந்தைகளை தெரியாதவர்களிடம் நம்பி விடாதீர்கள். அவர்கள் கொஞ்சி விளையாடுகின்றார்கள் என்று கண்டவர்களிடமும் கொடுக்காதீர்கள். அனுபவப்பட்டவள் சொல்கின்றேன்….இன்னும் எழுதுவதற்கு என்னிடம் நிறைய …நிறைய இருக்கு.! கட்டாயம் இன்னொரு நாள் விரிவாக எழுதுவேன் …காத்திருங்கள்.

Advertisements