Long-Live-Cinema_1140-X-500-With-You-Without-You-360x200          கடந்த 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை   ‘ஒப நெத்துவ ஒப எக்க’ எனச் சிங்களத்திலும் ‘பிறகு’ என்று தமிழிலும் ‘with you without you ‘என இங்லீஷிலும்   தலைப்பிடப்படும்  சிங்களத் திரைப்படத்தைப்  பாரிஸ் நகரின் திரையரங்கு ஒன்றில் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. முதலில் இத்திரைப்படத்தைக் காட்சிப்படுத்துவதற்கு ஒழுங்கு செய்தவர்களுக்கு நன்றி. தமிழ்-சிங்கள மக்கள் இணைந்திருந்து இதைப் பார்த்தனர். இறுதியாகத் திரையரங்கில் நிகழ்ந்த கருத்துரைகளின் போது நண்பர் ஒருவர் இரு சமூகத்தினரதும் மொழிகளில் மொழிபெயர்ப்பைச் செய்து கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவினார் என்பதும் ஆரோக்கியமான நிகழ்வாயிருந்தது.

எனக்குச் சிங்கள மொழியறிவு இல்லாதபோதும், இடையிடையே திரைப்படத்தில் நடைபெற்ற தமிழ் உரையாடல்களும் திரையில் வேகவேகமாக இங்லீஷில் ஓடிக்கொண்டிருந்த உரையாடல்களும் சிறப்பான காட்சியமைப்பும் இப்படத்தை விளங்கிக்கொள்ளவும் இரசிக்கவும் உதவின.

நீலம்-வெள்ளை நிறங்களை அதிகமும் காட்சிகளில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ப்ரஸன்ன விதானகே. அந்நிறங்கள் மனதைச் சாந்தப்படுத்தவும் அமைதியுறச் செய்யவும் முயற்சிப்பது போல் எனக்குத் தோன்றியது. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து போய் மலையகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கதையின் நாயகி பவுண்நகைகளை அடைவு வைப்பதற்காக அடிக்கடி செல்லும் போது அதன் உரிமையாளரின் அனுதாபத்தைப் பெறுகிறார்.அவர் ஒரு சிங்களவர். அவர் தன்னைத் திருமணஞ்செய்யச் சம்மதங்கேட்கும் போது உடனடியாகத் தன் ஆமோதிப்பைத் தெரிவிக்கவில்லை என்றாலும் பல நிமிடங்கள் கடந்த பின் அதற்கு அப்பெண் உடன்படுகிறார்.அடைவு வைக்க வரும் இந்தப் பெண்ணின் அந்தரிப்பும் அவலமும் காட்சிகளில் காட்டப்படுவதைப் போலவே இக்கதாநாயகனின் இறுக்கமான மனநிலையும் மௌனமும் காட்சிகளில் சிறப்பாகவும் அழகாகவும் காட்டப்பட்டுள்ளது.

தனக்குக் கிடைத்த ஆதரவை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டவளாக வாழுபளுக்குத் தன் கணவன் முன்னாள் இராணுவத்தினன் என்பதை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும் போது , அதிர்ச்சியடைவதும் அவன் மீது கோபம் கொள்வதும் வெறுப்பதும் நியாயமான உணர்வுகள் தான். இதைப்போல தன் கணவனோ மனைவியோ இல்லை தாம் நம்பிப்பழகுபவர்கள் யாராவதோ கூட ஒன்றை மறைக்கும் போது இவ்வுணர்வுகள் ஏற்படுவதும் இயல்பு தான். ஆயினும் நாட்டில் நிகழ்ந்த யுத்தத்தினால்… பெரும்பான்மையினத்தவரைக் கொண்ட இராணுவம் , கடற்படை மற்றும் விமானப்படை அச்சிறிய நாட்டில் சிறுபான்மையினத்தவர் செறிந்து வாழும் பிரதேசங்களில் குண்டுகளைப் போடுவது , எறிகணைகளை வீசுவது , சுடுவது என்று  யுத்தத்தின் எடுப்புகளைச் செய்தது. சிறுபான்மையினத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் , அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுகின்றோம் என ஆயுதங்களுடன் போராடும் ஓர் இயக்கத்தினை முன்னிட்டு , இன்னுமொரு நாட்டின் மேல் மற்றொரு நாடு யுத்தத்தை மேற்கொள்வதைப் போல தனது பிரசைகள் மீது வரைமுறையற்ற கொடுமைகளையும் கொலைகளையும் செய்ததை ஆயுதங்களைப் பிரயோகித்ததை எவ்வாறு நோக்குவது? இந்த உள்நாட்டுப்போரினால் தன் சகோதரர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதை அவளால் எப்படி மன்னிக்கமுடியும்?அந்த இராணுவத்தில் இருந்த ஒருவன் என்ற வெறுப்பும் அவனில் ஏற்படுவதை பாதிப்புற்ற அவளது இடத்திலிருந்து பார்த்தால் உணரமுடியும் என நினைக்கிறேன்.

WithYouWithoutYou-W

நாட்டில் புலிகளுடன் நடந்த சண்டை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின், அமைதியாக வீதிகளில் காவலரண்களில் நிற்கும் இராணுவத்தினர் மக்களுடன் புழங்குவதும் பெண்கள் திருமணம் செய்வதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளில் அறிந்தவை உள்ளன. இவை விதிவிலக்குகளானவையோ இயற்கையோ கூட எனலாம். இதே போல சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் போது மூர்க்கமாக முன்னேறிவந்து கிராமங்களைக் கைப்பற்றும் இராணுவத்தை மிகுந்த பயத்துடனும் வெறுப்புடனும் தான் எவரென்றாலும் எதிர்கொண்டிருப்பர். இராணுவத்தின் மீதான வெறுப்பும் பயமும் கொண்ட இப்பெண் அதிர்ச்சியடைவதையும் உண்மையை அவள் ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்தரிப்பதும் பெரும் மனவேதனையை அவளுக்குத் தருகின்றது என்ற பாத்திரப்படைப்பும் அதைத் தாங்க முடியாத மனவுளைச்சலில் உன்னை வெறுத்துக்கொண்டே என்னால் வாழ முடியாதென அவள் தற்கொலை செய்வதும் யுத்தத்தின் விளைவுகளின் பாத்திரம் தான்.

திருகோணமலையில் தமிழ்ப் பெண்ணொருவரை பாலியல் வன்முறை செய்த வழக்கு விசாரணையின் போது நண்பனுக்காகப் பொய்ச்சாட்சியமளித்ததையும் அதையிட்ட குற்றவுணர்வில் இராணுவத்திலிருந்து விலகித் தனிமையில் அமைதியாக வாழ்வதையும் ஒப்புக்கொண்ட நாயகன் ஓய்வுநேரத்தில் ட்றெஸிலிங் பார்ப்பதையும் கைத்துப்பாக்கியொன்றை மனைவிக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பதையும் ப்ரஸன்ன விதானகே காட்சிகளாக்கியிருப்பதில் இராணுவத்திலிருந்து விலகிவந்தபோதும் அதிலிருந்து அம்மனிதன் முழுமையாக விடுபட முடியாமலிப்பதையும் உணர்த்துவதைப் போலுள்ளது. அவள் மேலான காதலில் அவன் இளகிய மனிதனாகி உடைபடும் போது அவனை அவள் மன்னிக்காத போதும் நான் அவனை மன்னிக்க விரும்பினேன்.

 

with u

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத்தீவில் நடைபெற்ற அத்தனை துயரங்களும் குற்றங்களும் மன்னிப்பையம் மறப்பையும் வேண்டி நிற்பதாகத் தோன்றுகிறது. இந்த ஆணும் பெண்ணும் சிறுபான்மை-பெரும்பான்மை இனங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகளாக எனக்குத் தெரிகின்றனர். யுத்தத்தைச் செய்த இந்தப் படைகளின் மனநிலைகளும் அதன் விகாரங்களும் , வறுமையால் இராணுவத்திற்கு வேலைக்குப் போகும் சிங்கள இளைஞர்களின் வாழ்க்கையிலும் விளைவுகளை ஏற்படுத்துவதையும் கருத்திலெடுக்கலாம். ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் படையை விட்டுத் தப்பியோடியதும் நாம் கேள்விப்படாதவையல்ல. பெரும்பான்மையினத்தவர்கள் செய்த அநியாயங்களை கொடுமைகளை அதனால் பாதிப்புற்ற சிறுபான்மையினம் எக்காரணங்கொண்டும் மன்னிக்காது  எனக் கதாநாகியின் தற்கொலை சொல்லவருகிறதென  நினைக்கலாமா?

இத்திரைப்படத்தையிட்டு ஏன் இந்தியாவில் தடைகளும் பிரச்சனைகளும்  ஏற்பட்டதென்று காட்சியிடல் முடியப் பலரும் பேசிக்கொண்டனர். இயக்குனர் ஒரு சிங்களவர் என்ற அடையாளம் மட்டுமே வெறுப்புக்குக் காரணமா? இல்லையென்றால் செய்திகளில் வாசித்தது போல உன் சகோதரர்கள் தீவிரவாதிகளாக இருந்திருப்பார்கள் என்று சொன்ன வசனமா? இலங்கை இராணுவத்திற்கு அப்படித்தான் கேட்டுப் பழக்கமாயிருக்கும். ‘கொட்டியா’ என்றும் சொல்வதும் உண்டு. ஆனால் அந்த வார்த்தையை இயக்குனர் இங்கு உபயோகிக்கவில்லை. 15க்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்ற இப்படத்தைத் திரையிடவிடாமல் இலங்கையில் தடைசெய்யப்படுகின்றது. இவ்வாறான விமர்சிப்புகளும் கேள்விகளும் எழும்போது அது சொல்லும் அரசியல் எவருக்கு உடன்பாடில்லாமல் போகின்றது ?என்ற கேள்வி ஏற்படுகிறது. ஒரேயொரு தடவை பார்த்து இதைப்பற்றி சொல்ல முடியாதளவு காட்சிகளும் கதைகளும் விடயங்களும் ஒன்றரை மணிநேரப்படத்தில் நுணுகிக் கிடக்கின்றன.

நாட்டில் நடந்த சண்டைகளால் பாதிப்புற்ற இரு இனத்தவர்கள் ஒன்றிணைந்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியாமல் தத்தளிப்பதையும் மன்னிக்கமுடியாத மனவெறுப்புகளையும் கொண்ட யதார்த்தமான வியாபாரத்தனங்களற்ற ஒரு சினிமா அதைக் கலைநயம் சேர்த்து நம் முன் வைக்கும் போது குறுகிய மனத்துடன் முன்அனுமானங்களுடன் அதைப் பார்ப்பது கலையைக் கலையாகப் பார்க்காத எம் மனங்களின் வரட்சியைக் காட்டுகிறது.

பாலியல் வன்கொடுமைகளையும் அப்பாவிப் பாடசாலைப் பிள்ளைகளைச் சுட்டுக்கொல்வதைப் போன்ற குற்றங்களையும் பொய்ச்சாட்சிகளில் தப்பிவிடுவதையும் அரசபடைகள் செய்கின்றன என ஏற்றுக்கொள்ளும் வாக்குமூலமாகக் கூட இதை எடுத்துக்கொள்ளலாம். பெரும்பான்மையினத்திலிருந்து நாட்டின் போர்ச்சூழலையிட்டு ஏற்பட்ட வேதனைகளையும் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை எதிர்த்து நியாயங்கேட்பதுமென மனச்சாட்சியோடு தம் படைப்புகளை முன்வைத்த படைப்பாளிகளின் பத்திரிகையாளர்களின் குரல்களில் இவரதும் ஒன்றென எடுக்கலாம். இப்பங்களிப்பையும் புறந்தள்ள இயலாது.

அஞ்சலி பாட்டீல் என்ற இந்திய நடிகையும் ஷியாம் பெர்ணாண்டோ என்ற தென்னிலங்கை நடிகனும் பாத்திரங்களை உணர்ந்து நடித்ததையும் இயற்கையான ஒலிகளைப் பின்னணியில் ஒலிக்கவிட்டதையும் பாராட்டவேண்டும்.

இறுதியாக, இப்படைப்பு யுத்தத்தை ஆதரித்தவர்களையும் அதைச் செய்தவர்களையும் இனங்களுக்கிடையிலான வெறுப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் வன்முறைச் சமுதாயம் ஒன்றை உருவாக்கியவர்களையும் மனம் வருந்தச் செய்திருந்தால் செய்தால் அது இக்கலையின் விலையாகும்.

-தர்மினி-

Advertisements