1

குரலிலிருந்து உருவாகும் நீ

விசிறிப்பறக்கும் என் சிற்றூரின் மணற்துகள்களைப் போல் சொற்களை இறைக்கிறாய்

கருகிச் சாகும் என் தோல் .

சில நேரம்

முற்றத்து மாமரத்தின் கீழ் நிற்கத் துளித்துளியாய் மழை பெய்த மிச்சம் என்னுடல் மீது

விழுகின்ற குளிர்நீரே குரலாகியும் தெறித்து நனைக்கிறது

மழையில் கிணறு தளும்பி வழியும்

விடிந்ததும் புல் வளர்ந்து நிற்கும்

வேலியோரம் புதுசான கொடி படர்ந்து போகும்

தோட்டுப்பூ வெள்ளை ,மஞ்சள் ,ஊதாவாகப் பரவிக்கிடக்க

எனக்காக ஒரு பொழுது

குரலோடு உடலாகி என் முன் நீ நிற்க எவரோ யாரோவென என் மனது கேட்கிறது.

 

2

பத்தரை ஆகப் பகல் தோய்ந்த இரவுக்கோடை சலிக்கிறது

வண்ணத்துப்பூச்சியொன்று கூட என் தலைமுடி நுனி மேலாவது

இந்த வருசத்தின் முதற்தீண்டலோடு பறப்பைச் செய்யவில்லை

முற்றிச் சொரிந்த அயல்வீட்டுச் செரிப்பழங்கள் அழுகிக்கிடக்கின்றன

தேய்ந்து கறுக்கத் தொடங்கியது நாள்

அங்கிங்கே அலைந்த மனிதர்கள் வீடு நுழைகின்றனர்

தனித்த வெளி என் கதவூடு தெரிகிறது

இனியொரு காட்சியில்லை  பல்கனியில்

கருமென்ற வீட்டினுள் ஓடப்போகின்றேன்.

சன்னலோரக் கிளை நுனி மொட்டொன்று விடிந்ததும் பூவாயிருக்கும்

நனைந்த கதிரவன் மெதுவென படரும் விடிய

சிலநேரம் ஒரு கனவு துயில் கலையாது இன்பமாய் தோன்றலாம்

காலை என் கடுதாசிக்குப் பதில் வரலாம்.

கணிணி ஒளியில் மினுமினுக்கிறது வீடு

கதிரைச் சிம்மாசனம் எனக்கிருக்க

காலையும் மாலையுமாகி  முடிந்தது இரவு

அடுத்த நாள் பொழுதும் விடிந்தது
தர்மினி

நன்றி : ‘ஆக்காட்டி’  இதழ் 2  (புரட்டாதி-அய்ப்பசி)

Advertisements