31 penkal santhippu

பெண்கள் சந்திப்பானது, பெண்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான தனித்த ஒரு வெளியின் அவசியத்தை  உணர்ந்த புகலிடப் பெண்களின் முயற்சியில் 1990 களில் உருவானது.

ஆரம்ப காலங்களில் ஜேர்மனியில் மட்டுமே நடைபெற்றுவந்த இச்சந்திப்பானதுகாலப் போக்கில் ஐரோப்பாவின் ஏனையநாடுகளுக்கும், கனடாவிற்குமாக விரிவடைந்தது.
சுமார் 24 வருடங்களாக இடம்பெற்றுவரும் இப்பெண்கள் சந்திப்பானது, இதுவரை 31 சந்திப்புக்களை நிகழ்த்தியுள்ளது.  இறுதியாக , பிரான்சில் நடந்த 30 வது தொடரைத்
தொடர்ந்து அதன் 31 வது தொடர் லண்டனில் இவ்வாண்டு ஜுலை மாதம் 26, 27 ம் திகதிகளில் நிர்மலா, ராணி போன்றோரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்வில் பிரிட்டனில் வாழும் பெண்ணியச் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமாகிய அம்ரித் வில்சன் அவர்கள் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெற்றது.
பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் பற்றியும் அவற்றை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றியும் விளக்கமளித்தார். அவர் பேசுகையில் “ஆசியாவின்  எந்தப் பகுதியில் இருந்து வந்த பெண்ணாக இருந்தாலும் சரி ஆசியப் பெண்கள் எல்லோரும் ஒரே மாதிரியான அடக்கு முறைக்குட்படுத்தப்படுகின்றனர். ஏனெனில், எல்லாச்
சமூகத்திலும்  பெண்கள் உடமையாகவே கருதப்படுதலே காரணம். பெண்களின் கற்பு சம்பந்தமாக, பெண்களை வேலைக்காரியாக கருதுதல், சகிப்புத்தன்மை கொண்டவர்களாக,
பாதுகாக்கப்பட வேண்டியவர்களாக கருதுதல் போன்றவிடயங்கள் எங்கும் ஒரே மாதிரியே பேணப்படுகின்றது. இதனாலேயே பெண்கள் மிக மோசமான முறையில் தாக்கப்படுகின்றார்கள். அதிலும் உடல் ரீதியான பாதிப்பைவிட உள நலம் சார்ந்த பாதிப்பையே மிக அதிகமான பெண்கள் அனுபவிக்க நேரிடுகிறது” என்றார்.

இந்த நிலையில் ஆசியப் பெண்களின் நிர்க்கதியற்ற நிலையினை, அதாவது தங்களின் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், அதிலிருந்து மீள்வதற்கான  வழிமுறைகளை தெரிந்து கொள்வதற்குமான ஒரு இடமாகவே  தான் சார்ந்த பெண்ணிய அமைப்பினைத் தோற்றுவித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் “இங்கு வாழுகின்ற எமது
ஆசியப் பெண்களுக்கு தங்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன? அவற்றை எவ்வாறு அடைவது என்கின்ற விடயங்கள் எதுவும் தெரியாத நிலையிலேயே உள்ளார்கள். இதற்கு மொழி,
நெருங்கிய உறவுகள் இன்மை, வெளிவிடயங்கள் அறியாதிருப்பது போன்ற பல காரணங்கள் உள்ளன.

ஆரம்பத்தில் எந்தவித பண உதவியும் இன்றியே இதைச் செய்யமுனைந்தோம். தொடர்ச்சியாக இயங்கப் பணம் தடையாக இருந்த போது உதவிபெறுவதற்கு முடிவுசெய்தோம்.
உதவி பெறும்போது சில கட்டுப்பாடுகளும் சேர்ந்துவரும் என்று தெரிந்திருந்தும் முடிந்தவரை சேவையை மனதில் கொண்டு பணியாற்றுகின்றோம். இந்த அமைப்பில் முக்கியமாக இரண்டு விடயங்களை நாங்கள் கடைப்பிடிக்கின்றோம்.

1 – பிரச்சனைக்குரியவர்களின் அந்தரங்கம் பேணப்படுதல்.
2 – எல்லோரையும் சரிசமமாக கணித்தல். போன்றவையாகும்.

இருந்தும் இங்கிருக்கின்ற  ஆசிய அமைப்புகளுக்கிடையேயே இனவாதம், தேசியவாதம் என்பது பெண்களுக்குள் காணப்படுகின்றது. இந்த வேற்றுமைகளை விடுத்து எல்லோரும்
சேர்ந்து வேலைசெய்கின்ற போதுதான் இந்த பெண்களுக்கெதிரான வன்முறைக்கெதிராகப் போராடமுடியும் என்று நினைக்கின்றேன்” எனத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதுடன்,
தொடர்ந்து உரையாடல்களும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தமிழ் சமூக நடுவத்தில் நீண்டகாலமாக இணைப்பாளராக கடமையாற்றும்
ராணி அவர்கள் அமைப்பின் செயற்பாடுகளையும், தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
அவர், தான் எப்படி இந்த அமைப்பில் வேலைசெய்யத் தொடங்கினேன்,  எடுத்த பயிற்சி, சந்தித்த பிரச்சனைகள் பற்றி நேர்த்தியாக எடுத்துக் கூறினார். முதலில் வயது போனவர்களே தங்களது பிரச்சனைகளை பேசத்தொடங்கினர். அதன் பின்னரே இளம் பெண்களும் வரத்தொடங்கினர். இருந்தும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள்மீதான பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி பேசுவது இன்றும் மிகவும் கடினமாகவே உள்ளதை
உணர்ந்தோம். இந்த நிலையில்தான் பெண்களை வரப் பண்ணுவதற்காகவே இந்த அமைப்பில் நாங்கள் ஐசிங், ஆங்கிலம், தையல், நடனம்  போன்ற வகுப்புக்களை செய்கின்றோம்.
ஏனெனில், இந்த வகுப்புகளுக்கு மட்டுமே ஆண்கள் பெண்களை அனுமதிக்கின்ற நிலைமை இன்னும் காணப்படுகின்றது என்றும், தாங்கள் சந்தித்த பெண்களின் பிரச்சனைகளையும்
அந்தப்பெண்களுக்கு என்ன எதிர்காலம், சட்ட ரீதியாக என்ன செய்யமுடியும், எவ்வாறான பிரச்சனைகளை இவர்கள் சந்திக்க நேரும் என்கின்ற விடயங்களை தனது அனுபவங்களுடன் ஒரு
பயிற்சி பட்டறையாக நடாத்தினார்.

இந்நிகழ்வு பெண்கள் சந்திக்கின்ற வன்முறைகளையும் அதிலிருந்து விடுபட முனையும்போது சந்திக்கின்ற பிரச்சனைகளையும்,
ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கெதிரான சட்டங்கள் பற்றியும்,
அவற்றை பயன்படுத்துவதில் உள்ள அறியாமை பற்றியும் பல பெண்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

முதல்நாள் நிகழ்வுகளின் இறுதியாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.கலைநிகழ்வில் இளம் யுவதிகள் ஓவியா, அனாமிகா ஆகிய இருவரும் இணைந்து இரண்டு நடனங்களையும்,

நிர்மலா, கீதா, மஞ்சு போன்றவர்கள் பல விழிப்புணர்வுப் பாடல்களையும் பாடினார்கள்.
penkal santhippu 2
மறுநாள் மதிய உணவின் பின்னர் தொடங்கிய பெண்கள் சந்திப்பில்  சுய அறிமுகத்தைத் தொடர்ந்து பிரான்சில் வாழ்கின்ற புஸ்பராணி அவர்களால் எழுதப்பட்ட தன்வரலாற்று நூலான ‘அகாலம்’ லண்டனில் வாழ்கின்ற நவஜோதி அவர்களால் ஆய்வு செய்யப்பட்டது. அவரது ஆய்வில்  ‘அகாலம்’ ஈழப்போராட்டத்தின் அவலங்களை சந்தித்த
ஒரு பெண்ணின் வரலாறு.  ஒரு குடும்பத்தின் வரலாறு. ஒரு சமூகத்தின் வரலாறு. ஒரு இனத்தின் வரலாறு என பலவிதமாக உணரப்படவேண்டும் என்கின்ற கருணாகரனின் முன்னுரையை
விதந்துரைத்தார்.  இந்நூலை வாசிக்கும்போது புஸ்பராணி அவர்கள் சிறையில் அனுபவித்தகொடுமைகள் மனதை மிகவும் தாக்குகின்றன. முக்கியமாக பெண்களின் மாதவிடாய்
காலங்கள் பற்றிய குறிப்பு மனதை உலுப்புகின்றன.   இந்நூல் தமிழினத்தின் விடிவுக்காக போராட சென்று போராடிய காரணத்தால் சிறைவாசம் அனுபவித்து வெளிவந்த
ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல, இது ஒரு யாழ்ப்பாணத்து சாதிய ஒடுக்குமுறைகளின் கதையாகவும்,  ஈழப்போராட்டத்தின் ஒரு குறுக்கு வெட்டு முகமாகவும்   கொண்ட பல
பரிமாணங்கள் இந்நூலில் காணக்கிடைப்பதை எடுத்துரைத்தார்.

இன்றைய இளைய சமூதாயத்தினர்   ‘ஒரு பகுதி போராட்ட வரலாறு ‘ மட்டுமே தெரிந்துள்ளார்கள். அவர்களை
நோக்கி இதுபோன்ற அனுபவப்பதிவுகள் இன்னும் இன்னும் வெளிவரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, தமிழ்கவி அவர்களால் எழுதப்பட்ட ‘ஊழிக்காலம்’ நாவல் லண்டனில் வாழ்கின்ற மீனா அவர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. தமிழ்கவி அவர்கள் 20 வருட தமிழீழப் போராளி, பல இழப்புகளையும் சந்தித்தவர். இவர் ஆரம்பகாலங்களில் புலிகளின் குரலில்  கட்டுரை, கவிதை, கதை என்பவற்றை எழுதி வாசித்து வந்தவராவார்.  இதற்கு முன்னர் இரண்டு நாவல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
‘ஊழிக்காலம்’  300 பக்கங்களை கொண்டுள்ளது.
இதில் இவர் தன்னை பார்வதி என்கின்ற பாத்திரத்தினூடு நகர்த்துகின்றார். இந்நாவல் முழுவதும்  இடப்பெயர்வின்போது இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் மக்கள் எவ்வாறு கஷ்ரப்பட்டார்கள் என்பதையே  எடுத்துக்கூறுகின்றது. இடப்பெயர்வு தொடங்கியபோது பார்வதி வாழ்ந்த இடத்தில் இருந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் பட்ட துன்பங்கள், கொண்டுவந்த பலவற்றை விட்டுச்செல்வதும், கூட வந்த பலர் இறந்துவிட  மீதியாக இருப்பவர்கள் தொடர்ந்து பயணிப்பதையும் இறுதியாக முள்ளிவாய்க்காலில் மக்கள் அனுபவித்த கொடுமைகளையும் இவர் தத்ரூபமாக எழுதியிருப்பது உள்ளத்தை உறையவைக்கின்றது.எம்மால் கனவில் கூட நினைத்துப்பார்க்கமுடியாத அளவு மக்கள் திண்டாடியுள்ளார்கள். இந்நாவலை இந்த அகோர யுத்தத்தில் இலங்கை அரசு தமிழ் மக்களை அழித்ததற்கான ஒருசாட்சியமாக
மட்டுமன்றி, புலிகள் சொந்தமக்களையே கொன்றொழித்தற்கு அத்தாட்சியாகவும் கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, நடந்த இலங்கையில் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட சர்மிளா
செயித் எழுதியுள்ள “உம்மத்” என்ற நாவல் ஜேர்மனியிலிருந்து கலந்து கொண்ட  உமா அவர்களால்
விமர்சிக்கப்பட்டது. அவரது உரையில் “உம்மத்” என்ற நாவல் குறிப்பாகப் பெண்களை, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களாயினும் சரி, சமூகசேவையில் ஈடுபட்ட பெண்களாயினும் சரி
இந்த யுத்தம் இவர்களை எவ்வாறு பாதித்துள்ளது, அவர்களது வாழ்க்கையை எவ்வாறு சூறையாடியுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நாவலாகவே உள்ளது. குறிப்பாக பெண்கள் போராளிகளாக இயக்கங்களில் இருக்கும்போது அதிகாரத்துக்குப் பயந்தும், ஆயுதமோகத்தாலும் போற்றிய சமூகம், அவர்கள் மீண்டும் சாதாரண வாழ்வுக்குள் நுழையும்போது அவர்களை ஏற்றுக்கொள்ளாமையும், அவர்களை நிராகரிப்பதையும் அழகாகக் காட்டுகிறது.  இதில்
வெவ்வேறுவகையான வாழ்வு நிலையைக்கொண்ட மூன்று பெண்களின் வாழ்வை, இந்த யுத்தமானது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ எவ்வாறு பாதித்துள்ளது என்பதைச் சித்தரிப்பதோடு, முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் இருந்த நல்லுறவு எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவதாகவே இந்நாவல் அமைந்துள்ளது எனவும்
குறிப்பிட்டார்.

பெண்கள் சந்திப்பில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இம்மூன்று நூல்களும் உண்மையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருந்தன. சுமார் 30, 35 வருடங்களாக
நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஆரம்பகாலம், யுத்த காலம், யுத்தத்திற்கு பின்னரான காலம் போன்ற வெவ்வேறு காலங்களை சித்தரிப்பனவாக முறையே இம்மூன்று
நூல்களும் அமைந்திருந்தன.
மிக ஆரம்பகாலங்களிலேயே போராட்டத்தில் இணைந்து போராடிய ஒரு போராளிப் பெண்ணின் அனுபவத்தையும், ஆதங்கத்தையும் ‘அகாலம்‘ கொண்டுவர, சுமார் 20 வருடகாலம்
போராட்டத்திற்கு தன்னையும், தனது குழந்தைகளையும் அர்ப்பணித்த ஒரு பெண்ணின் கதையாகவும், இறுதி யுத்தத்தின் கொடுமைகளின் கண்ணாடியாகவும் ‘ஊழிக்காலம்’
பிரதிபலிக்க, இந்த அகோர யுத்தமானது முடிந்துபோன பின்னரும், எமது சமூகத்தை, முக்கியமாக பெண்களை எவ்வாறு பாதிப்படைய வைத்துள்ளது என்பதை ‘உம்மத்’என்ற நாவலும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளது. 

இவ்வகையான நூல்கள் ஒரு வரலாற்று ஆவணமாக,
யுத்தத்தின் சாட்சியங்களாக பெண்களிடம் இருந்து வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.இதுபோன்று எமது பெண்களிடமிருந்து இன்னும் இன்னும்
படைப்புகள் வெளிவரவேண்டும். அதுவே எதிர்கால சந்ததியினருக்கான ஆவணங்களாகவும்,
அனுபவத் திரட்டுகளாகவும் எதிர்காலத்தில் பேணப்படும். இம்மூன்று நூல்களையும் அறிமுகமும், விமர்சனமும் செய்ததில் பெண்கள் சந்திப்பு பெருமையடைகிறது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வாக  ”பெண்களும் மனநல உளவியலும்” என்ற தலைப்பின் கீழ் “MIND” என்கின்ற அமைப்பில் இருந்து வந்து கலந்து கொண்ட
மருத்துவரான ஜோசே கில்டன் அவர்கள் மிக நீண்ட உரையாற்றினார்.

MIND அமைப்பானது கறுப்பின, ஆசிய சிறுபான்மையின மக்களுக்கான அமைப்பாகும். இவர்களுடைய உள நல வளம் பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றது. உலகத்தில்
ஆண்களை விட 2 மடங்கு அதிகமாக உளநலம் பாதிக்கப்படுபவர்களாக பெண்களும், குழந்தைகளுமே உள்ளார்கள்.  இப்பாதிப்புக்கு பிரதான காரணமாக வறுமையும், அதை
தொடர்ந்து யுத்தம், குடும்ப வன்முறை, கலாச்சாரம் என்கின்ற போர்வையில் நடைபெறும் மூடத்தனமான நிகழ்வுகள் போன்றவையும் காரணமாகின்றன. மனஅழுத்தம், பதட்டம், தாழ்வு
மனப்பான்மை  போன்றவை முதலாவது அறிகுறியாகவும் இருக்கும். ஆனால் இன்னுமொரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். மனோதத்துவ நிபுணர்கள் வியாதிகளை இனங்காண்பதற்கு அறிகுறிகளுக்கான ஒரு பொதுவான பட்டியலை வைத்திருப்பார்கள்.இப்பட்டியல் வட ஐரோப்பிய கலாச்சாரத்தை கொண்டதாகவே அமைந்திருக்கின்றது. இதையே ஆபிரிக்க, ஆசிய கலாச்சாரத்தை கொண்ட அனைவருக்கும் பயன்படுத்தும் போது
பிழையான முடிவுகள் எடுக்கும் சந்தர்ப்பமும் உருவாகின்றது. ஏனெனில் துயரம், அச்சம்,பயம் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் வேறுபடும்.
ஆகவே, எல்லோருக்கும் ஒரேவிதமான பட்டியலை வைத்திருக்க முடியாது. இதற்கெதிராக இப்போது பல குரல்கள் எழுகின்றன.  மற்றும் பலவிதமான ஆராய்ச்சிகளின் பின்பு
மனநோயானது பரம்பரையாக கடத்தப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு வருகின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இறுதியாக,  இலங்கையில் ‘யுத்தத்திற்கு பின்னான பெண்களின் நிலை’பற்றி நிர்மலா, விஜி  போன்றோர் உரையாடினர். முதலில் கருத்துத் தெரிவித்த நிர்மலா அவர்கள்,பொதுவாகவே இலங்கையில் பெண்களுக்கு தங்கள் விடுதலைபற்றிய எந்தவித விழிப்புணர்வும் இல்லை. யுத்தத்தின் பின்னர் பெண்கள் மீதான வன்முறை பல வழிகளிலும் அதிகரித்துள்ளது.  இதற்கு முக்கிய காரணம் அரச ஒடுக்குமுறையாகும். இன்று குறிப்பாக
வடமாகாணத்தில் நடந்து வரும் இராணுவமயமாக்கல் பெண்களுக்கு மிகவும் பயங்கரமான சூழலை ஏற்படுத்துகின்றது. மற்றும்  வடகிழக்கு மாகாணங்களில் இவ்வளவு காலமும் அதிகாரத்தை செலுத்தி வந்த எல்.ரி.ரி.ஈ யிடமும்  பெண்கள் விடுதலை நோக்கிய எந்தவிதமான வலுவூட்டல் செயற்பாடுகளும் இருக்கவில்லை. தமிழ் தேசிய வாதமானது பெண்களின்
பிரச்சனைகளைப் பயன்படுத்தி  தேசியவாத உணர்வையே மெருகுபடுத்துகின்றது. மாறாகத் தமிழ்த் தேசியவாதிகள் எவரிடமும் பெண்களின் விடுதலை குறித்து எவ்வித செயற்திட்டங்களோ,முன்னெடுப்புகளோ எதுவுமே இல்லை. ஆகவேதான் எமது பெண்கள் தேசியத்தின் பெயரில்
பாவிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் கூறினார்.

தொடர்ந்து, பிரான்சில் இருந்து கலந்துகொண்ட விஜி கருத்துரைக்கையில்,
யுத்தத்திற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளை விபரித்தார். அவற்றுள்  பெரும் பிரச்சனைகளாக அண்மைக்காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்ற மதுப்பாவனை, வட்டிக்கொடுமைகள் போன்றன இருப்பதனை
சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவிற்பனை நிலையில் மிகவும் அதிகரித்துள்ளது. சில்லறை மது விற்பனை நிலையம், மது விற்பனை நிலையங்களுடனான
விடுதிகள், மதுவுடனான உணவகம் என்று மொத்தம் 60 மது விற்பனை நிலையங்கள் உள்ளன. இன்று மதுப்பாவனை அதிகரித்துள்ளதால் குடும்பங்களில் வன்முறைகளும்
அதிகரித்துள்ளன. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம், உடல், உளரீதியான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.  இதைவிட யுத்தத்தில் ஆண்களை இழந்த
பெண்கள் தனித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு
உள்ளாக்கப்பட்டிருப்பதால், தற்போது காளான் போல் முளைத்துள்ள உயர்வட்டிக்கடன்களைப் பெறுகிறார்கள். இதனால் பலவிதமான நெருக்கடிகளையும், அவமானங்களையம் சந்திக்க
நேரிடுகின்றது. இதனால் பெண்கள் தற்கொலை முயற்சிகள் கூட நடைபெறுகின்றன.இதற்கெதிராக பெண்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டாலும் எவ்விதமுன்னேற்றமும் அற்ற நிலையே காணப்படுகின்றது என கூறினார்.

penkkal santhippu3
சுமார் 40 இற்கும் மேற்பட்ட பெண்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டதுடன், பரஸ்பர உரையாடல்களும் விவாதங்களும், அனுபவப்பகிர்வுகளும் ஆரோக்கியமாக இடம்பெற்றன.

புகலிடப்பெண்கள் சந்திப்பின் வளர்ச்சியும், உறுதியான இருப்பும் மென்மேலும் நம்பிக்கை தருகின்றது எனச் சந்திப்பில் கலந்துகொண்ட பல பெண்கள் கருத்துரைத்தமை முக்கியமானதொன்றாகும்.

அடுத்த பெண்கள் சந்திப்பு பேர்லினில் நடாத்துவதற்கு உமா அவர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டதுடன் பெண்கள் சந்திப்பு நிறைவு பெற்றது.

-விஜி – பிரான்ஸ்

நன்றி :ஆக்காட்டி (புரட்டாதி-அய்ப்பசி)