சல்மா-ஆவணப்படம்

 

salmaposter

-புஸ்பராணி-

ல்மாவின் எழுத்துகளைப் படிக்க எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவரோடு பழகும் போது அவரே ஒரு கவிதைபோல மென்மையாக ,இனிமையாக ,அழகாகவும் இருக்கின்றார்.
அவர் எத்தனை மென் சோகங்களைத் தன்னுள் அடக்கி வைத்திருந்தார் என்பது அவரின் ஆவணப் படம் மூலம் மிகமிகத் துல்லியமாகப் புறப்பட்டு எம்முள்ளும் அந்த உணர்வுகளின் தாக்கம் ஊடுருவி நீண்ட நேரம் மௌனநிலையில் எம்மை வைத்துவிட்டது.
பெண்ணாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்தால் ,அவளின் உத்வேகம் ,திறமையின் எழுச்சிகள் , அனைத்துமே ஆணாதிக்கம், சமூகக்கட்டுப்பாடு , மதம் … என்ற தடித்த போர்வைகளால் மூடி அமுக்கப்பட்டுத் திணறிக் கண்ணீர் சிந்தவோ குரல் எழுப்பவோ கூடச் சுதந்திரம் அற்றவர்களாக அதைப்பற்றிச் சிந்திக்கவும் நேரம் கிடைக்காவண்ணம் சின்னஞ்சிறு வயதிலேயே திருமண பந்தத்தில் பூட்டி வைக்கப்படும் அடக்குமுறையின் உச்ச கட்டத்தைத் தன் சுய கதையில் ஆரம்பித்து ,வேறு பல பெண்களின் ஊடாக மிக அருமையாக ‘சல்மா’ என்ற இந்த ஆவணப் படத்தின் வழி வெளிக் கொணர்ந்திருக்கின்றார்.
பெண்கள் பருவமடைந்தவுடன் வெளியுலகத்தைப் பார்க்க மறுக்கப்பட்ட ஒரு கிராமத்தில் பிறந்து , வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த சல்மா இன்று உலகமே இவரைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மௌனமாகவே போராடி வென்றிருப்பது பெரும் சாதனையே.

ஒரே கூட்டுக்குள் இருந்துகொண்டு சமரசம் ஏதுமின்றிக் கணவன், மனைவி ஒன்றாக வாழ்வது எத்துணை கடினமானது என்பதை நன்கு தெரிந்து அனுபவப்பட்டவள் நான். தன் கனிவான இயல்பினால் என்று நினைக்கின்றேன்.கடும்போர் புரிந்து விலகிப் போகாமல் பனிப்போர் செய்தே இயன்றளவு சாதித்து இவ்வளவு தூரம் தாண்டியிருக்கின்றார் என்பது இந்த ஆவணப் படத்தின் ஒவ்வொரு துளியிலும் தெரிகின்றது.

பெண்களின் உயர் கல்வி மறுக்கப் படுவதை அடியோடு வெறுக்கும் இவர் அதற்காக எடுக்கும் பல முயற்சிகள் வீணாகப் போவது கண்டு மனம் வெதும்புவது அப்பட்டமாக இப்படத்தில் பதியப்பட்டிருப்பதை எம்மால் உணரமுடிந்தது.

இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்ட முஸ்லீம் சமூகத்தில் இருந்துகொண்டு அதன் இருப்பையும் மீறிப் புறப்படும் இவர் எழுத்தாற்றல் , அதை எழுதுவதற்கே அவர் படும் சிரமங்கள் அதையெல்லாம் தாண்டி இன்று அவர் ஒரு புகழ் கொண்ட பிரபலமான கவிஞராக ,சமூக ஆர்வலராக எம் முன்னே தெரிவதற்கு முன் ,இன்றும் கூட அவர் கண் முன்னே தடைகள் எக்கச்சக்கம்.
தன் தாய் ,சகோதரி , உறவுப் பெண்களின் வாய் வழிப் பேச்சுக்கள் மூலமும் பெண்கள் …அதுவும் முஸ்லீம் பெண்கள் எப்படி எல்லாம் மனதுக்குள் கிடந்து குமைந்து புளுங்குகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.வெளியுலகைக் கண்குளிரப் பார்க்கத் துடிக்கும் அவர்களின் ஏக்கம் எம்மை நெகிழவைக்கும் வண்ணம் , காட்சிகள் மிக இயல்பாக நகர்த்தப் படுகின்றன .

தந்தை ,கணவன் ,மகன் என்று எல்லாத் தலைமுறை ஆண்களும் பெண்கள் அடங்கி நடப்பதையே விரும்புகின்றார்கள் என்பதும் மிக அழுத்தமாக . இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உறவினர்கள், தந்தை என்று அவர்களின் சூழலில் வளர்ந்த அவரின் மகன்களே பெண்கள் அடங்கி வாழ வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்களாகவே ஊட்டி வளர்க்கப்பட்டிருப்பதையும் சல்மா சொல்லத் தயங்கவில்லை.
இன்னொரு உறவுப் பையன் ‘பெண்கள் தம்மை மூடியே ஆடைகள் அணியவேண்டும் ..அது அவர்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதுகாக்கின்றது ‘என்று ஆணித்தரமாகச் சொன்னது , வர வர உலகம் பின்னோக்கிப் போகின்றதே என்ற கவலையைத் தந்தது.
முஸ்லீம் பெண்களுக்காக மட்டுமல்ல .பல இந்துப் பெண்களுக்காகவும் குரல் எழுப்பிப் பல இந்துச் சிறுமிகளின் பால்ய மணங்களைச் சட்ட உதவிகொண்டு இவர் நிறுத்தியதையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் முஸ்லீம்களின் சட்டதிட்டங்கள் வேறாக இருப்பதால் அதில் தலையிட்டு எதுவும் செய்யத் தன்னால் முடியவில்லை என்பதையும் சல்மா வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றார்.

மொத்தத்தில் இப்படிஓர் ஆவணப்படத்தை எடுப்பதற்குத் துணிச்சல் கொண்டு சம்மதித்த சல்மாவை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
உண்மைகளை உறங்கச் செய்வதாலேயே பெண்களின் எழுச்சிகள் புதைக்கப்படுகின்றன. அவரது போராட்டக்குணம் இன்று , வீழ்ந்து கிடக்கும் பெண்கள் பலருக்குப் புத்துணர்ச்சி பீறிட வழிசமைக்கும் முன்மாதிரியாக அமையட்டும் என்று சொல்லி இந்த வெளிப்படையான முயற்சிக்கு வாழ்த்தையும் தெரிவிக்கின்றேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s