john-atkinson-grimshaw-midsummer-night-80837

வழமை போலத்தான் வீட்டுவேலைகள்
கிழமை நாட்கள், ஞாயிறு, சனி வேறில்லை.
எப்போதும் உப்பில்லாச் சவ நாட்கள்
அவ்வப்பொழுதில்
வெருட்ட வெருட்ட ஒருத்தி அவளுள்ளிலிருந்து பிய்ந்து பறப்பாள்
எட்டிப்பிடிக்க இவளுக்கு விருப்பெதுவுமில்லை
உள்ளிருந்து அய்யோ என்றொரு -அம்மாக்குரல்- எழும்பும்
தட்டிப் பறந்தலையும் பாதியிவள்
கள்ளமாய் சில செய்வாள்
கசங்கிய கடதாசியில் கிறுக்குவாள்
தனிமையின் நாவுகளுடன் தொலைவுக்கு கதை சொல்வாள்.
அப்பாதியவள் ஒன்றாகி மெய்யிலும் மெய்யாகி அப்போது உருவாவாள்
கரி இருளில் எவர் பார்ப்பார் இவள் கனவுகளின் சரி பிழைகளை.
***********************************************************************
தனிமையும் மென்னிருளும் தருகின்ற சுதந்திரம்
காகிதமும் மையுமாக என்னோடு இரகசியம்
கறுப்பு-வெள்ளைப்படப் பாடல்கள்
உறங்காமல் கழிக்கும் இரவு
எவரும் இடை வராத நேரம்
மெழுகுதிரி உருகிவிட்டது
உங்களை இடையூறு செய்தமைக்கு மன்னிப்பு.
-தர்மினி-

 

Advertisements