-தர்மினி-
thevathasan excibision
கடந்த ஓகஸ்ட் 4ம் திகதியிலிருந்து 22ம் திகதி வரை திரு.தேவதாசனின் ஓவியங்கள் பாரீஸ் நகரிலுள்ள Le salon Indien ல் ‘மனிதாபிமானம்’ என்னும் தலைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தேவதாசன் 1980களிலிருந்து புலம்பெயர்சஞ்சிகைகளில் ஓவியங்களை வரைந்துள்ளார்.இவர் நாடகம், எழுத்து, ஓவியம் போன்ற கலைகளில் ஈடுபாட்டுடன் செயற்படுபவர்.
               கண்காட்சியின் இறுதிநாளான 22ம் திகதியன்று மாலையில் கலை ஆர்வலர்களான நண்பர்கள் பலரும் ஒன்றுகூடிச் சுவர்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படைப்புகளை ஆர்வமுடன் பார்வையிட்டு இரசித்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்து தங்களது அபிப்பிராயங்களையும் அபிமானத்துக்குரியவைகளப் பற்றியும் சுவாரசியமாக உரையாடினர்.
ex3
                 அச்சிறு அரங்கின் நாற்புறச் சுவர்களும் தேவதாசனின் படைப்புகள் தொங்கின. அவற்றில் பிரதானமாக முகங்களும் கண்களும் கருப் பொருளாயிருந்தன. விதவிதமான முகங்கள்.வண்ணவண்ணமான முகங்கள். அவற்றில் பெரிதாக முழித்தபடி கண்கள். பாதி மூடிய விழிகள். முகங்களில் கோடுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கண்களுக்கான இடங்கள்.பெரிதும் சிறுதுமாக முகங்களும் விழிகளும் என்னை உற்றுப்பார்த்தன. நிறங்கள் கடுமையாகவும் மென்மையாகவும் உபயோகப்படுத்தப்பட்டிருந்தன. அதேயளவு கோடுகளும் எண்ணங்களைப் பிரதிபலித்தன.அங்கே வைக்கப்பட்டிருந்தவற்றில் அதிகமானவை நீர்வர்ணங்கள் உபயோகித்து வரையப்பட்டிருந்தன. அவை அழகாகவும் கலையுணர்வோடும் சட்டகத்தில் தீட்டப்பட்டிருந்தன. கருமை, சிவப்பு,மஞ்சள், செம்மஞ்சள் ,பச்சை  போன்றவை அதிகமும் உபயோகப்படுத்தப்பட்டிருந்தன.
thevathas
            பார்வையிடலின் நிறைவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தவை பற்றிய கருத்துரைகளும் விமர்சனங்களும் ஆர்வமுடன் அங்கு வைக்கப்பட்டது. தேவதாசனின் ஓவியம் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகத் தங்கள் வீட்டை அலங்கரிக்கிறது எத்தனை வீடு மாறிப்போனாலும் சுவருக்கு வண்ணங்கள் தீட்டினாலும் அப்படம் தங்களால் பெருமையாகப் பேணப்படுவதாக கலைஆர்வலர் ஒருவர் தெரிவித்துப் பாராட்டிப் பேசினார். அதே போலவே மற்றொருவரும் தங்களது வீட்டின் வரவேற்பறையைப் பல வருடங்களாகத் தேவதாசனின் ஓவியம் அழகுபடுத்துகிறது எனத் தன கருத்தை முன்வைத்தார்.
                  ஓவியர் வாசுகன் தனது கருத்துரைப்பில் இதுவொரு ஆசியப்பிராந்தியப் படைப்பாளியின் படைப்புகள் என்ற தனித்த தொனியை இங்குள்ள ஓவியங்கள் தருகின்றன. இது ஓவியரின் ஆளுமையின் பிரதிபலிப்பு என்ற பாராட்டைத்  தெரிவித்தார். அத்தோடு குறிப்பிட்ட சில ஓவியங்கள் சர்ரியலிசத்தின் தாக்கத்தால் வரையப்பட்டவை என்பதையும் சுட்டிக்காட்டியவர் இறுதியாக வரையப்பட்ட பல ஓவியங்கள் அவற்றிலிருந்து மாறுபட்டு வேறு பாணியைக் கொண்டிருப்பதாகவும் பேசினார்.
 நவீன ஓவியச்செயற்பாடுகளிலிருந்து இலங்கை இந்திய ஓவியர்கள் பின்தங்கியிருப்பதாக வாசுகன் சுட்டிக்காட்டியபோது , அக்காட்சியறையிலிருந்து இக்கருத்தை மறுதலித்து கருத்துகள் வைக்கப்பட்டன. நமது குகை ஓவியங்களுக்கும் ஐரோப்பிய ஓவியங்களுக்குமான ஆரம்பம், பின்னணி ,காலநீட்சி பற்றி விவாதம் எழுந்தது.
        மிகச்சுவாரசியமான அப்பொழுதில் வெளியே மழையும் தூறிக் கொண்டிருந்தது. நண்பர்களும்  வண்ணங்களும் வாதங்களும் வானத்திரையின் சொட்டுகளும் கதகதப்பையும் களிப்பையும் தந்தன.
               கடந்த இருபது வருடங்களாக ஓவியம் வரைவதை பெரிதாக ஈடுபாட்டுடன் செய்யாமல் தன் காலங்கள் போயின எனவும் இதனைச் சாத்தியமாக்கி உற்சாகப்படுத்திய வாசுகனின் ஒத்துழைப்புக்குத் தன் நன்றியைத் தேவதாசன் தெரிவித்தார்.
குறிப்பேடோ ஒலிப்பதிவுக்கருவியோ நான் கொண்டு செல்லாத காரணத்தால் ஞாபகத்திலிருப்பவற்றை மட்டும் இங்கே பதிவிட்டுள்ளேன் என்பதையும் குறிப்பிடுகிறேன்.
            ஓவியங்களின் பார்வையிடலின் நிறைவில் இவற்றின் விலை என்ன என்பதை அவற்றினருகில் குறிப்பிட்டிருக்கலாமே எனக் கேட்டபோது ‘அவை விற்பனைக்கல்ல’ என்றார் தேவதாசன். அவரால் அதன் பெறுமதியைச் சொல்லமுடியவில்லை. நமக்கோ அது ஒரு பெறுமதியான மாலையாகக் கழிந்தது.
நன்றி :ஆக்காட்டி (இதழ் : புரட்டாதி-ஐப்பசி 2014 )
Advertisements