book-letters-flying-dark-backround
மைனாவும்  நண்பனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது  அடிக்கடி போட்டி போட்டு இருவரும் தம் சாதனைகளைச் சொல்லிக் கொள்வார்கள். முதலாம் வகுப்பில் தவளைப் பாய்ச்சலில் முதலாமிடம் எடுத்தேன் என்பாள். அவனும் பணிஸ் சாப்பிடும் போட்டியில் முதலாமிடம் வந்தேன் என்பான். இப்படியான வழமையான உரையாடலில் ஒரு நாள் அவளது நண்பன் சொன்னான் பதின்மூன்று வயதிலிருந்து கவிதை எழுதுகிறானாம். உடனே மைனாவால் தன்னுடைய முதற்கவிதை பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. கதைத்து முடித்த பின் அவளால் அமைதியாக இருக்கவும் முடியவில்லை. முதற்கவிதையை மறந்து போனதைத் தாங்கமுடியவில்லை. “எண்ணப் போக்கில் எதையோ எழுதி அதைக் கவிதையென எப்போது சொன்னேன்?” என ஞாபக அடுக்குகளைக் கிண்டிக்கிளறி அதைக்கண்டு பிடித்த போது ஏற்பட்ட பரவசத்தை எழுதமுடியாது. அப்போது யாருக்கும் சொல்லாத அந்தக் கதையை இப்போது எல்லோருக்கும் சொல்லும் துணிச்சல் வந்துவிட்டது. அவளது நண்பனுக்குச் சொல்லியும் தீராமல் எனக்கும் உங்களுக்கும் சொல்வது கூட மகிழ்ச்சியைத் தருகிறதென்கிறாள்.
              மைனா முதன்முதலாகப் பதினைந்து வயதில் தான் கவிதையொன்றை எழுதினாள். அனேகமானவர்களின் முதற் கவிதைக்குக் காரணமாக ஏதோ ஒரு  பரவச அனுபவமோ  அல்லது ஏதும் இழப்போ கூடக்கவிதை எழுதக் காரணமாகிடும். மைனா வாழ்விலும் அது தான் நடந்ததாம்.
     அவள் அப்போது ஒன்பதாம் வகுப்பிற் படித்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் கெட்டிக்கார மாணவி. ஆசிரியர்கள் படிப்பித்ததையே அடுத்த நாள் வந்து ‘நேற்று எங்கே விட்டேன்?” என அவளிடம் தான் கேட்பார்கள். மிகவும் ஞாபகசக்தியுடையவள். கையெழுத்து அச்சடித்தது போல இருக்கும். ஒரே நிறமான காகிதங்களில் புத்தகங்களுக்கு அழுக்குப் படியாமல் அட்டைகளைப் போட்டிருப்பாள். கீறல், கிழித்தல் எதுவுமற்று அவற்றைக் கையாளுவாள். வீட்டுப்பாடம் செய்யாத பெடியன்கள் அவளிடம் மட்டும் இரகசியமாகக் கேட்டுக் கொப்பியை வாங்கிப் பார்த்து எழுதிவிடுவார்கள். மற்றைய மாணவிகள் எக்காரணங் கொண்டும் பெடியன்களுக்கு எந்த உதவியும் செய்யத் தயாரில்லை. இரண்டாம் மூன்றாம் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராத நாட்களில் பாடம் நடத்தும் ஆசிரியையாகவும் அனுமதிக்கப்படுவாள். சின்னப்பிள்ளைகள் எல்லோரும் அவளைப் பெரியக்கா என்று தான் கூப்பிடுவார்கள். தலைமையாசிரியரின் அறைக்குள் தைரியமாக எந்த நேரமும் நுழைந்திடக் கூடிய ஒரே ஆள் அந்தப் பள்ளிக்கூடத்தில் அவள் மட்டுமே. சுருக்கமாகச் சொன்னால் அப்பள்ளிக்கூடத்தை அமைதியாக அரசாண்டு கொண்டிருந்தாள். நீங்கள் மைனாவின் உடலின் வர்ணனையை எதிர்பார்த்தால் அது இங்கில்லை. ஆளுமையை வைத்து அவளை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
           அந்தப் பள்ளிக்கூடத்தில் கணித , ஆங்கிலப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். பெரும்பாலான பாடங்களுக்கும் இதே பிரச்சனையென்றாலும் பழைய மாணவர்களைக் குறைந்த சம்பளத்திற்கு எடுத்துச் சமாளித்தபடி தான் அப்பாடசாலை நடக்கும். ஆனால் , முக்கியமான கணக்கு ,ஆங்கிலத்திற்கு எப்போதும் பிரச்சனையே. மைனா எட்டாம் வகுப்பைக் கணித ஆசிரியரின்றியே படித்து முடித்திருந்தாள். ஒன்பதாம் வகுப்புத் தொடங்கியும் நீண்ட நாட்களாகியும் கணக்குப் பாடத்தில் வகுப்பில் கதைத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. புதிதாக ஒரு ஆணோ பெண்ணோ பள்ளிக்கூடத்திற்கு வரும் போது அந்நபர் தமது கணித ஆசிரியராக இருக்கமாட்டாரா? என ஏக்கத்துடன் மாணவர்கள் பார்ப்பார்கள்.
ஒரு திங்கட்கிழமை பத்தரைக்கு தண்ணீர் குடிக்கும் இடைவேளையில் வகுப்பிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்கள். வேர்த்து வழிய அவசரமாக ஒரு இளைஞன் தலைமையாசிரியரது அறையை நோக்கிப்போனான். இவர்கள் எல்லோருக்கும் ஸ்ரைலான அந்த இளைஞன் யார்? என்ற கேள்வி.
        மைனாவின் வகுப்பில் சற்றும் எதிர்பார்க்கவில்லை ‘இவர் பெயர் வாசன்,  இனிமேல் உங்களுக்குக் கணக்குப் படிப்பிப்பார்’ என்று தலைமையாசிரியர் வகுப்பில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தினார். அவரோ தன் முதலாவது ஆசிரிய அனுபவத்தில் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தார். வகுப்பிலிருந்த பிள்ளைகளைப் பார்த்து ‘உங்களை விட எனக்கு ஏழு வயதே அதிகம்’ என்றார்.
         அதுவரை காலமும் கடினமான பாடமென்றால் கணக்குத் தான் என்று நினைத்த மைனாவுக்கு இப்போது அதுவே மிகமிகப் பிடித்த பாடமாகிவிட்டது.கணிதப்புத்தகமும் கொப்பியுமாகவே எப்போதும் இருந்தாள். வீட்டுப்பாடக் கணக்குகளை இரசனையுடன் அழகாகத் தெளிவாகச் செய்வாள். அவளது அம்மாவோ எப்போதும் கணக்கு மட்டுமே படிக்கக் கூடாது மற்றைய பாடங்களும் படிக்க வேண்டுமெனச் சொல்லத் தொடங்கிவிட்டார்.
           வாசன்  ஸேருக்கும் , மைனாவை உதாரணம் சொல்லிப் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுமளவிற்கு  அவளைப் பிடித்து விட்டது. பாடம் நடத்த ஆரம்பிக்கையில் அவளிடம் வந்து புத்தகம் வாங்கிப் பாடம் நடத்துவார். வீட்டுப்பாடம் செய்தால்அவளையே முதலில் கூப்பிட்டுத் திருத்துவார். திருத்துவதற்கும் சிவப்புப்பேனையை அவளிடமே கேட்பார். பல வேளைகளில் நீலப்பேனை ,பென்சில், அழிறேசர்,சோக், தண்ணீர் இப்படித் தொட்டதெற்கெல்லாம் அவளைத் தான் கேட்டார். மைனாவுக்கோ பள்ளிக்கூடத்தில் இவ்வளவு காலமும் செய்த வேலைகளை விட இவை தான் மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஆனால் வாசன் ஸேரோடு வாய் திறந்து கதைப்பதென்றால் அவளுக்குப் பயமோ வெட்கமோ வந்துவிடும்.கணித பாடம் நடக்கும் போது வகுப்பில்  பரவச மனோநிலையிலும் கனவுக்குள் சிக்கிவிட்டவளைப் போலவும் மைனா இருப்பாள்.
          வாசன் ஸேர் அவளிடம் வாங்கும் பேனைகளை அடிக்கடி தனது பொக்கற்றில் செருகிக் கொண்டு போய்விடுவார். அடுத்த நாள் திருப்பித் தருவதுமில்லை. இதனால் பேனைக்கு மை முடிந்ததாகப் பொய் சொல்லி வீட்டில் அப்பாவிடம் ஐந்து ரூபாய் கேட்பாள்.  ‘பேனை மையைக் குடிக்கிறாயா?’  என்று அப்பாவிடம் திட்டு வாங்க வேண்டிய நிலைமை. இப்போதெல்லாம் ஸேர் எப்ப பேனையைத் திருப்பித் தருவார் என்பதில் அவள் குறியாயிருக்க வேண்டியிருந்தது.
அவரிடம் பொக்கற்றில் ‘பென்’ இருந்தால் கூட மறந்து விட்டது போல அவளிடம் கேட்பார். கொடுக்கும் போது சில நேரங்களில் சூடான அவர் விரல்கள் தொடுவதை உணருவாள். இப்போதெல்லாம் மற்ஸ் மாஸ்ரர்  வகுப்பு முடிந்து போகும் போது வெட்கத்தை விட்டு “சேர் என்ர பேனை ” என்று எழுந்து நின்று கேட்கத் துணிந்து விட்டாள் மைனா அல்லது அடுத்த நாள் கேட்கும் போது ‘என்ர பேனை உங்களிட்ட” எனச் சொல்லப் பழகிவிட்டாள்.ஏதோ வகுப்பில் வேறு யாரிடமும் பேனை இல்லாதது மாதிரியிருக்கும் அவரது நடவடிக்கை.
           போயா , சனி , ஞாயிறு , தவணை லீவுகளை வெறுக்கத் தொடங்கிவிட்டாள் மைனா. மற்ஸ் படிக்காமல் ஒரு நாள் கழிவதும் கூட நரகம் போலிருந்தது. பத்தாம் வகுப்பிலும் இதே தொடர்ந்தது. வாசன் ஸேர் வகுப்பில் அவளையே பார்த்தவாறு படிப்பிப்பதும் தலை குனிந்து எழுதி நிமிர்கையிலும் சடாரென வேறு பக்கம் பார்வையைத் திருப்புவதுமாக இருப்பார். மைனாவுக்கு அவர் செயல்கள் பெரும் கோழைத்தனமாகத் தெரிந்தன.
            வாசன் ஸேர் ஒவ்வொரு நாட்களும் அவளிடமிருந்து வாங்கிப் படிப்பிக்கும் கணக்குப் புத்தகத்துக்குள் எதையாவது எழுதி வைக்கலாமெனத் துணிச்சலாக முடிவெடுத்தாள். என்ன எழுதுவது? என்று யோசிக்கையில், தன் முதற்கவிதையை மைனா எழுதத் தொடங்கினாள்.
              மைனா அப்போது வாசித்த கதைப்புத்தகமொன்றின் தாக்கத்தில்  கவிதை  போலச் சில வரிகளைப் கையெழுத்தை மேலும் அழகாக்கி  எழுதத்தொடங்கினாள். மைனா எதையோ வெளிப்படுத்த வேண்டும் என்ற தவிப்பிலிருந்தாள்?
 அடுத்த நாள் அதைப் புத்தகத்தில் வைத்து  வாசன் ஸேரிடம் கொடுத்தும் விட்டாள். பிரித்ததும் அவள் எழுதிய காகிதத்தைக் கையில் எடுத்து வாசித்தார். வாசன் ஸேர் அவளைப் பார்த்து, (வகுப்பில் பெரிய சத்தமாக எல்லாப்பிள்ளைகளுக்கும் கேட்கும்படி) ‘கவிதை நல்லாயிருக்கு. ஆனால் இனிமேல் எழுதிப் புத்தகத்தில  வைக்காமல் வீட்டில வைச்சிட்டு வரவேணும்’ என்றார்.
 பின்னர்,  சில நாட்களில் மாற்றலாகி வேறு பள்ளிக்கூடத்துக்கும் போய்விட்டார். போகும் போது ஸ்பெஷலாக ஒரு கண் பார்வையை அவளை நோக்கி எறிந்துவிட்டுப் போனதாக மைனாவுக்குத் தோன்றியது.
 அவள் எழுதிய கவிதையை எனக்குச் சொல்லுமாறு கேட்டபோது,
மைனாவின் ஞாபகத்திலுள்ளவை  புத்தகத்தினுள் எழுதி வைத்த வரிகளிலிருந்து சில சொற்கள் மட்டுமேயென்றாள்.
அவை…
சிவப்பு ரோஜாக்கள், கண்ணீரும் செந்நீரும், கதைக்க முடியாத கதைகள்,
-தர்மினி-
Advertisements