அம்மாவைப் பிரிந்து பதினைந்து வருடங்களா ?
ரயில் நிலையத்தில் வைத்து போய்வருகிறேன் எனச் சொன்னபோது உறுதியாக எனக்குத் தெரியும்.
இம்முறை ஏஜென்சி ஐரோப்பிய நாடொன்றில் இறக்கிவிடுவார்.
எத்தனை வருடங்களின் பின் அம்மாவைப் பார்ப்பேனோ?
நினைத்தபடி பயணப்பையோடு இருக்கையில் அமர்ந்தேன்.
யன்னலால் பார்த்தபடி நிற்கும் அம்மாவைக் கொஞ்சி
அணைத்திருக்கலாமோ ?                                                                                                                                                                                                                                                                      ரயில் நிலைய மேடையோடு அம்மா நிற்க                           அய்ரோப்பாவில் அகதியாக இறங்கி நின்றேன்.

பார்க்க வந்த சொந்தங்கள் கட்டியணைத்து முத்தமிட்டனர்.
பின்னும் சில நாட்களில்
அகதிமுகாமில் அறிமுகமான நட்புகள் ஓடோடிவந்து இறுக்கிக் கன்னங்களில் முத்தமிட்டனர்.
இன்னும் சில நாட்களில் மொழி படிப்பித்த ஆசிரியையும் கண்டவுடன் முதுகணைத்து முத்தமிட்டார்.

என் துணைவனைச் சந்தித்துக் கதைத்த போது
நானே தான் முதன் முதலாகத் தன்னை முத்தமிட்டதாக இப்போதும் ஞாபகமாய் சொல்கிறார்.
பிறகு                                                                                                                               அதிகாலையில் எழுந்து  வேலைக்குச் செல்பவரை                         கதவருகே முத்தமிட்டு அனுப்புவது நாளாந்தம் தொடர்கின்றது.             இடைநேரத்தில்  தொலைபேசியில் அழைத்தால்                                          கதைத்து முடித்து Bisous சொல்வதும் வழமை தான் .

‘பள்ளிக்கூடம் போய்வருகிறேன் அம்மா’ என பிள்ளைகள் விடை பெறும் போது,                                                                                                                                      கை வேலைகளை விட்டோடி வந்து கொஞ்சி வழியனுப்புகிறேன்.

எப்போதாவது அறிந்தவர்களை பஸ்ஸிலோ வீதியிலோ பார்த்தால் கூட, வணக்கம் சொல்லி முத்தமிடுவேன்.

விழா எதுவொன்றிலும் தெரிந்தவர்களை ஊரவர்களை வரிசை வரிசையாக முத்தமிட்டுக் கடந்து போகின்றேன்.

வீட்டுக்கு வரும் எவரையாயினும் இரு கன்னங்களிலும் இவ்விரண்டு தடவைகள் முத்தமிட்டு வரவேற்கிறேன்.

 தர்மினி

 

 

 

Advertisements