wrapper-akalam-02
யாழ்ப்பாணம் மயிலிட்டியில் பிறந்த புஷ்பராணி அவர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தமிழ்இளைஞர் பேரவையிலும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்திலும்(TLO)  ஈடுபாட்டோடு இயங்கியவர். தற்போது பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வாழ்ந்துவருகிறார்.

207 பக்கங்களுள்ள இப்புத்தகத்தில் 18 பக்கங்களிற்குக் கவிஞர் கருணாகரனால் எழுதப்பட்ட சிறந்ததொரு முன்னுரையுள்ளது. அவர் அம்முன்னுரையில் எழுதாத எதையும் நான் சொல்லிவிட முடியாதோ என யோசிக்கும் வகையில் இப்புத்தகம் பற்றிய தன் கருத்துகளைச் செறிவாக எழுதியுள்ளார்.

பெண்கள் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை முடித்து தங்களுக்கான நேரத்தைக் கண்டுபிடிப்பதென்பது வின்ரறில் வெய்யிலை அனுபவிப்பது போல அரிதானது அருமையானது.

தன் அன்றாடச் சுமைகளைத் தாங்கியவாறு முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களையும் அப்போது சந்தித்த மனிதர்களையும் நினைவுக்குக் கொண்டு வந்து அவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. பழைய சம்பவங்களை மீட்டெடுத்து வரிசைப்படுத்தி எழுதி அவற்றுக்கான புகைப்படங்கள் பத்திரிகைச்செய்திகளைத் தேடிச் சேகரித்து தனக்குத் தெரிந்த நிகழ்வுகளை மனிதர்களைப் பதிவு செய்து விடவேண்டுமென உற்சாகத்துடன் இதனை எழுதியிருக்கிறார்.

அவருடன் பேசியபோது அகாலம் எழுதிய தன் நாட்கள் பற்றி ‘திரும்பவும் அவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து எழுதும் போது சில இடங்களில் மேற்கொண்டு என்னால் நகரமுடியாமல் வைத்துவிடுவேன்.அழுவேன். பழைய நட்புகளை மீண்டும் தேடித்தேடி இவை பற்றிக் கதைத்தபோது அந்நாட்களில் மீளவும் நான் கரைந்து போய்விட்டேன்’ எனச் சொன்னார். அவற்றையெல்லாம் திரும்பவும் வாழ்ந்ததை போலவே மனந்நொந்தும் மகிழ்ந்தும் அனுபவித்திருப்பார்.

 

Pushparani-3புஷ்பராணி அவர்கள் தமிழரசுக்கட்சியின் கூட்டங்கள் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டவர்.பின்னர் தமிழ் இளைஞர் பேரவையில் செயற்பட்டார். ஈழப்போராட்டம் என்ற சிந்தனை அரும்பிய காலத்தில் அதை முன்னின்று எடுத்துச் சென்றவர்களுடன் தோழமையோடு பழகியிருக்கிறார். இவர்கள் தமிழர் இழிநிலை பற்றி உரையாடுகிறார்கள். தாங்கள் ஏதாவது செய்யவேண்டுமென முனைப்போடு செயற்படுகிறார்கள். புஷ்பராணி தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது மாதர் கழக அமைப்பாளராகவும் இயங்கினார்.

சமீபகாலமாக ஈழப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அதன் வரலாறும் அதில் தம் சாட்சியங்கள், எதனால் இவ்வாறு எல்லாம் நடந்து அழிந்து போயினர் என்பதையும் எழுதுகின்றனர்.இவை புத்தகங்களாகவும் இணையத் தொடர்களாகவும் வருவது நல்லதொரு மீள்பரிசோதனைக்கான அறிகுறி.போராட்டத்தை முன்னிட்டுத் தங்கள் படிப்பு, வேலை, உறவுகள், ஊர் என எல்லாவற்றையும் இழந்து போனவர்கள்.தலைவர்களின் முரண்பாடுகளும்  தவறுகளுமாகச் சிதறிப்போய் தாம் நம்பிய இலட்சியம் கைவிட்டுப் போனபோது அனாதைகளாகி வழிதெரியாமல் நின்றவர்களின் துயரங்கள்.அதிலே தமது பங்கென்ன ?சகோதரப்படுகொலைகள் மற்றும் எதை எதிர்கொண்டு இத்தனை ஆண்டுகளாகப்போராட்டம் நடைபெறுவதாக சொல்லப்பட்டதோ அவையெல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டனவா?போன்ற பல கேள்விகளையும் பதில்களையும் கொண்ட   சுயவிசாரணைகளும் ஈழப்போராட்ட வரலாறைச் சொல்வதற்கு சாட்சிகளுமாக இன்னும் எழுதப்படும் தேவை அதிகமாக உண்டு.

இந்த அகாலம் பற்றி ‘இது ஒரு அரசியல் ஆவணமல்ல.புஷ்பராணி என்ற எளிய மனிசியின் வாழ்வில் நடந்தவைகள்’ என்கிறார். இது அரசியற் தரவுகள், ஆண்டுகள், திகதிகளை மட்டும் கொண்டு எழுதப்பட்டதில்லை. சிறுவயதில் தான் வளர்ந்தவிதம்,குடும்பம் , ஊர்ச்சூழ்நிலை,அங்கு சாதியைச் சொல்லி நடந்த புறக்கணிப்புகள்,பாடசாலை ,வாசிப்பு,எழுத்து,அரசியல் ஈடுபாடு ஏற்படுவதற்கான காரணிகள் அதனைத் தொடர்ந்து தமிழ்இளைஞர் பேரவை ,கைது,சித்திரவதைகள்,சிறைவாழ்வு, மனிதாபிமானமுள்ள சக சிறைக்கைதிகள் பற்றிய நோக்கு,பத்திரிகைச்செய்திகள், சகோதரன் புஸ்பராஜாவின் போராட்டப் பங்களிப்பு போன்றவையும்   ஈழப்போராட்டத்திற்காக முன்னின்று செயற்பட்ட தோழர்களுடனான நட்புகள்,துரோகங்கள்,கோழைத்தனங்கள் ஆகியவை பற்றியும் எழுதியுள்ளார்.

மேலும், அப்போது ஏராளமான பெண்களும் தமிழர் விடுதலைப்போராட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் பற்றி விரிவாகவும் எழுதியிருக்கிறார். சம காலத்தவர்களான பத்மநாபா, வரதராஜப்பெருமாள், கி.பி.அரவிந்தன் என்றழைக்கப்படும் பிரான்சிஸ், பாலகுமாரன்,தவராஜா, காசி ஆனந்தன்,பேபிசுப்பிரமணியம் போன்றோர் பற்றிய தகவல்களும் அடங்கியுள்ளன.

அத்துடன் தான் கைதாகி  அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் காவலர்களின் நடவடிக்கைகளையும் எழுதியிருக்கிறார். சிறைச்சாலையில் ஜே.வி.பி தோழிகளுடனான வாழ்வு மற்றும் பெண்கைதிகளின் நட்பு என விபரிப்பதும் கூட சுவாரசியமாகவும் அதே நேரம் துயரடையச்செய்பவையாகவும் இருக்கின்றன. ஆரம்பகாலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்ப்போராளிகள் எவ்வாறு நடத்தப்பட்டனர் போன்ற விபரங்களுமாக நாம் அறிய நிறையவேயுண்டு. அக்காலகட்டத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட கணவனைக் கொலை செய்த கோகிலாம்பாள் அச்சிறையிலிருந்து சிறிது காலத்திற்கு முன் தான் விடுதலையாகியிருந்தார்.அங்கே அவரைப் பற்றிய கதைகள் உலவின. ‘கோகிலாம்பாளை துரோகத்தின் சின்னம் என்பதா ?அல்லது காதலின் அடையாளம் எனச் சொல்வதா ?’ என இவர் ஒரு பெண்ணாக கோகிலாம்பாளின் இடத்திலிருந்து யோசிப்பது நெகிழச்செய்கிறது.அவரது வாழ்க்கையின் அனுபவிப்புகளைப் படிக்க, பிரமிப்பும் துயரமுமான உணர்வுகள் மாறி மாறி நம் அனுபவங்களாகச் சூழ்ந்து வாசிப்போடு அக்கால யாழ்ப்பாணத்திற்குச் சென்று விடுவதைப் போல தோன்றும்.

1974ல் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் ஏற்பட்டதின் சாட்சியமாகவும் இதிலே அச்சம்பவங்கள் மற்றும் பொன். சிவகுமாரன் போன்றவர்கள் பற்றிய தகவல்களுமாக மிகுந்த ஞாபகசக்தியோடு பதிவுகளைச் செய்திருக்கிறார் ஆசிரியர்.

புஷ்பராணியின் பேச்சுத்திறன்,தனக்குச் சரியெனப்படுவதை வெளிப்படுத்தும் துணிச்சல், நண்பர்களுடன் அரசியற் கருத்துப் பரமாற்றங்கள் செய்வது, பத்திரிகை நிருபராகவும் செயற்பட்டது போன்றவை இந்த அகாலத்தை வாசிக்கும் போது, இப்போதும் அவரை அவ்வாறான பண்புகளைக் கொண்ட தெளிவுடையவராக நமக்கு காட்டுகின்றது.  சமகால நிகழ்வுகளையும் அவர் உற்றுக் கவனித்தபடியே வாழ்வதும் புலனாகும்.சோர்வற்ற எழுத்துநடையும் சரளமான சொற்பிரயோகங்களும் இலகுவான வாக்கிய அமைப்புகளுமென இத்தன்வரலாறு தன்னை எழுதிச் சென்றுள்ளது.வெறும் சொற்களாகவோ தகவற் திரட்டுகளாகவோ இல்லாமல் மனதின் இரகசியங்களைத் தனியாக நம் அருகமர்ந்து ஒருவர் கதைப்பதைப் போன்ற நெருக்கத்தை இதன் வாசிப்பனுபவம் கொடுக்கிறது.

அகாலத்தின் முதலாவது அத்தியாயத்தை இப்படியாக ஆரம்பிக்கின்றார் ‘மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். தமிழீழத்தை நோக்கிய போராட்டப்பாதையில் நெடிய நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன.என்னுடைய பொது வாழ்வுக்கும் வயது அதுதான்.இருபது வயதில் ஈழப்போராட்டத்தில் இணைந்து கொண்ட எனக்கு இப்போது அறுபது வயது’

ஈழப்போராட்ட வரலாறில் சிறை சென்ற முதற் பெண்கள் என்று கூறப்படும் இருவரில் ஒருவரான இவர் இந்நாற்பதாண்டு கால அரசியற் போராட்டச் சம்பங்களை எழுதியது மட்டுமல்ல அக்காலச் சமூகத்தின் மனநிலைகளையும் இதிலே பதிவு செய்திருக்கின்றார். ஒரு பெண் குடும்பத்தில் அனுமதி பெற்று கூட்டத்திற்கோ ஆர்ப்பாட்டத்திற்கோ செல்லவேண்டிய நிலமை யாழ்ப்பாணத்தில் நாற்பது வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்குமென்று உணரமுடிகிறது.சாதியும் இனமும் இவரை ஒடுக்கியதும் அவற்றின் அடையாளங்களைத் தனதென்று கர்வமுடன் ஏற்று இன்றுவரை வாழ்வதுமென இது ஒரு போராட்டகுணமுள்ள பெண்ணின் சுயசரிதமாகவும் இருக்கிறது.

இதுவொரு பெண்ணின் வாழ்வு.ஒரு குடும்பத்தின் கதை.சமூகத்தின் பதிவு. இனத்தின் வரலாறு என சம்பவங்கள் ஊடுபாவி நெய்யப்பட்டுள்ளது.

பக்கம் 46 ல் ‘தமிழ்ப் பிரதேசங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரிகளோ தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்துப் பேசவே மறுத்தார்கள்’ என்ற விமர்சிப்பும் ‘வடபகுதியில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்பட்ட சிறியளவிலான ஆயுதப்போராட்டமும் தமிழ்இளைஞர்களுக்கு ஓர் உந்துதலைக் கொடுத்திருந்தது’ என்பவை போன்ற  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் நிறையவே அகாலத்தில் உள்ளன.

ஐந்தாவது அத்தியாயத்தில் தமிழ் இளைஞர் பேரவையைக் கூட்டணியினர் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முனைந்தது.ஆனால் ஆயுதமேந்திய போராட்டமே தமிழின விடுதலைக்கான ஒரே தீர்வு என்பதில் உறுதியாக இருந்தோம் எனச் சாட்சி பகரும் இவரது நேர்மையும் பாராட்டவேண்டியது.

அதையடுத்து 52ம் பக்கத்தில் போராட்டப் பாதையின் அரசியல் தத்துவார்த்த சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்த்து ஆயுதங்களின் மேலே கொண்ட அதீத மோகமே சுத்த இராணுவவாதமே எங்களது தோல்விக்கான முதன்மைக்காரணி எனத் தன் மனச்சாட்சி சொல்வதை எழுதியிருக்கும் துணிச்சலும் இந்தத் தன்வரலாற்றின் சிறப்பு.

சமீப ஆண்டுகளின் துயரங்களையும் வேதனையோடு அலசுகிறார். அகாலத்தின் இறுதியில் ஒரு பந்தியில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.’வெறுமனே இயக்கத் தலைமையால் மட்டுமே ஈழத்தமிழ் மக்களின் விதி தீர்மானிக்கப்பட்டது.எமது மக்கள் போராட்ட வரலாறிலிருந்து வலுக்கட்டாயமாக ஒதுக்கிப் பொம்மைகளாக வைக்கப்பட்டார்கள்.எமது மக்களின் வரலாற்றை பிரபாகரனோ அல்லது மகிந்த ராஜபக்ஷவோ எழுதிவிடமுடியாது.அவர்கள் எழுதும் வரலாறு அவர்களின் வரலாறே தவிர அது மக்களின் வரலாறாக இருக்காது.புலிகளின் ஆதரவுத் தமிழினத் தேசியவாதிகளிற்கோ இலங்கை இனவாத அரசாங்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் அரசியற் சந்தர்ப்பவாதிகளுக்கோ தமிழகத்தின் சீமான் நெடுமாறன் போன்ற ‘இருண்டது விடிந்தது’தெரியாதவர்களுக்கோ எமது மக்களின் வரலாறையும் அரசியற் திசை வழியையும் நிர்ணயிக்க எந்த உரிமைகளும் கிடையாது ‘ என அதிகார மையங்களை விமர்சிக்கும் கோபமும் பக்கச்சார்பற்ற நியாயங்களுமென புஷ்பராணி அவர்கள் இன்றுவரை ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நின்று பேசுகின்றார்.

இன்னும் சகோதர இயக்கப் படுகொலைகளை செய்தவர்கள் எந்த இயக்கமென்றாலும் அவர்களை வன்மையாகக் கண்டித்தும் மனம் வெதும்பியும் தன் எண்ணங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார். நடுநிலையோடு எதையும் நோக்கும் இவரது பார்வை அகாலமான நம் காலங்களின் சாட்சியங்களுள் ஒன்றாக அகாலத்தையும் படிக்கலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

இன்றைய இளைஞர்கள் இது போன்ற புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக ஆரம்பகால அரசியல் பிரச்சனையின் வரலாறை அறிவதற்கும் முயற்சிக்கவேண்டும். அகாலமும் நம் போராட்ட வரலாறு சொல்லும் ஆவணங்களுள் ஒன்றாக வைத்து நோக்கப்படவேண்டிய புத்தகம்என்பது எனது கருத்து.

வெளியீடு : கருப்புப்பிரதிகள்- 2012 மே

குறிப்பு : இக்கட்டுரை ‘அகாலம்’ புத்தகத்தை முன்வைத்து பாரீஸில் கடந்த வருடம் நடைபெற்ற 30வது பெண்கள் சந்திப்பில்  பேசியதன் எழுத்துவடிவமாகும்.

தர்மினி

Advertisements