salmaposter
குடும்பக் கண்காணிப்புகளையும் தாண்டித் தன் இனம் ,மதம் என்பவற்றின் கட்டுப்பாடுகளையும் சுமக்கவேண்டியவளாகிறாள் பெண். தன் குடும்பம், உறவுகள், சமூகம், மதம் ,இனம் என்ற வட்டங்களை ஒவ்வொன்றாய் உடைத்தபடியோ வளைத்தபடியோ தான் பெண்கள் பொதுவெளியில் வரவேண்டும். சிறுவயதிலிருந்து தம் இலட்சியங்கள், கனவுகள், ஆசைகள் என மனதுக்குள் வளர்த்தவற்றை சகலதையும் மீறி அடைவதென்றால் அது மிகச் சில பெண்களால் தான் சாத்தியமாகிறது.தொடர்ந்து மனஓர்மையுடன் அதற்காகப் போராடியபடி வாழும் தென்பும் சந்தர்ப்பங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் அற்றவர்கள் அடையாளமற்றுப் போவது தான் நடக்கிறது.
    ராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட ஒருத்தி, ‘சல்மா’ ஆக உருவாகிய  ஆவணப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. இந்தியாவின் திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி  எனும் கிராமத்தில் பிறந்தவர்     ராஜாத்தி.  2000 ம் ஆண்டில் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதைத் தொகுப்பும் 2003ல் ‘பச்சைத் தேவதை’ என்ற மற்றொரு கவிதைத் தொகுப்பும் வெளியாகின. தொடர்ந்து 2004ல் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற நாவல் வெளியாகியது.சமீபத்தில் பதினொரு சிறுகதைகளைக் கொண்ட ‘சாபம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இவரால் படைக்கப்பட்டது.2001 தொடக்கம் 2006ம் ஆண்டு வரை பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். சமூக நலத்துறைவாரியத்தின் தலைவியாகவும் பணி செய்தார். இவரது துறை தொடர்பாக ஆவணப்படமொன்றை உருவாக்கச் சென்றவர்கள் சல்மாவின் வாழ்வில் இந்த இடத்தை அடைவதற்கு முன் அவர் எதிர்கொண்ட வாழ்க்கையை ஆவணமாக்க விருப்புக் கொண்டு ‘சல்மா’ என்ற படத்தைப் பதிவு செய்கின்றனர்.
தயாரிப்பு : Woman make movies.
இயக்குனர் : Kim Longinotto
2013 ஜனவரியில் உருவான இப்படம் 90 நிமிடங்களைக் கொண்டது.
‘சல்மா’ உலகத் திரைப்படவிழாக்களில் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டது.இந்த ஆவணப்படத்திற்கு பதின்மூன்று விருதுகள் கிடைத்தன. இதற்காக இயக்குனர் பல விருதுகள் பெற்றுக்கொண்டார்.
முதற்தடவையாக  கவிஞர் சல்மாவைச்  சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது, சென்ற மாதத்தில் அவர்  ஃப்ரான்ஸ் வந்திருந்த போதுதான் . முன்னேற்பாடுகள் எதுவுமின்றி தோழர்கள் சிலர் கூடிச் சந்திப்பொன்றில் உரையாடலாம் எனத் திடீரென ஏற்பாடு செய்தோம். அச் சந்தர்ப்பத்தில் ‘சல்மா’ ஆவணப்படத் திரையிடலும் பொருத்தமாயிருக்குமெனக் கருதி அவசரஅவசரமாக  பாரிஸ் நகரில் திரையிடலை நிகழ்த்தினோம்.
    ‘சல்மா’ ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது 90 நிமிடங்கள் ஓடிப்போனதை  உணர முடியாதளவு அதன் யதார்த்தமும் துயரமும் என்னைச் சூழ்ந்திருந்தன. ஒர் ஆளுமை நிறைந்த பெண்ணாகக் கட்சி அலுவலகம், தொலைக்காட்சி நிலையப் பேட்டி, வாகனத்தில் அலுவலகக் கோப்புகளைப் பார்வையிட்டபடி பயணிப்பவராகக் காட்சிப்படுத்தப்பட்டவர், தன் கிராமத்தின் வீட்டு யன்னலோரத்தினருகில் நின்று ‘அந்த யன்னல் இந்த யன்னலென மாறி மாறி இரண்டு தெருக்களையும் பார்த்தபடியிருந்தேன்’ என்றபடி தன் சமூகம் தனக்கிட்டிருந்த வரையறைகளை மீறியதெப்படி எனத் தன் வாழ்வை எளிமையாகவும் சரளமான உரையாடலூடாகவும் பதிவு செய்கிறார். இன்னும் அவருடன் சேர்ந்து தாய், தந்தை, சிறியதாய், மாமியார், சகோதரி ,கணவர், நண்பியொருவர், முதற்கவிதையையும் தொகுப்பையும் வெளியிட்ட காலச்சுவடு கண்ணன் மற்றும் முதன்முதலாக வாரசஞ்சிகையொன்றில் கவிஞர் சல்மா பற்றிய கட்டுரையொன்றை எழுதிய அருள்எழிலன் ஆகியோரது சாட்சியங்களும் உள்ளன.
        சல்மாவின் குழந்தைப்பிராயமும் ஏக்கத்தோடு தான் கழிந்திருக்குமோ என எண்ணும் வகையில் அவர் நான்காவது பெண்ணாகப் பிறந்ததை வெறுத்த தந்தையின் காரணமாக தாயைப் பிரிந்து அவரது தாயின் குடும்பத்தால் வளர்க்கப்படுகிறார்.5 வயதான பின் வீட்டுக்குத் திரும்பி வரும் அவர் பருவமடையும் வரை பள்ளிக்கூடம் செல்கிறார். தங்கள் பெண்குழந்தைகள் பருவமடைந்ததும் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாதெனத் தடுப்பதும் பாடசாலையிலிருந்து மறிப்பதும் என்ற வழக்கத்தைக் கொண்ட துவரங்குறிச்சி என்ற அந்தக் கிராமத்தின் முஸ்லிம் சமூகத்தில் பிறந்த தான் எவ்விதமாக இந்த அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டேன், அதிலிருந்து வெளிவரப்போராடினேன் என சல்மா சொல்லும் போது இதைப் போன்ற மூலையில் இருத்தி வீட்டுக்குள் வைத்திருந்த துன்பத்தை அனுபவிக்காதவர்கள் தாம் எதிர்கொள்ளும் குடும்பத்தின் சமூகத்தின் வேறு பலவிதமான சட்டதிட்டங்களை மீறித் துணிந்து ஏன் போராடவில்லை என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்வார்கள்.  இலட்சியமோ விருப்பமோ எதுவாயினும் இதைப்போன்ற பிடிவாதத்துடன் நான் இருக்கிறேனா என்ற கேள்வியை என்னிடம் நானே கேட்டேன்.
     தனக்கும் பருவமடையும் வயதாகும் போது சினிமாவுக்குப் போகமுடியாது, பள்ளிக்கூடம் போகமுடியாது என்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டுமென்ற எண்ணமே அவரை நிம்மதியிழக்கச் செய்தது.தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் போல தன்னால் இருக்கமுடியாதென முடிவெடுத்த சல்மா சாப்பிடாமலும் அழுது அடம்பிடித்தும் தன் கோபங்களையும் எதிர்ப்பையும் காட்டுகிறார். அவரது அம்மா , சிறியதாய் போன்றவர்களின் உரையாடல்களில் ‘எதுக்கு இந்த வாழ்க்ககை? ‘ என்ற வெறுப்பும் கேள்விகளும் இருந்தபோதும் அதை விட்டு எங்கே போவது? என்ற கேள்வி மௌனமாக இருக்கச் செய்கிறது. இக்கேள்விகள் முஸ்லிம் சமூகப் பெண்களுக்கல்ல பொருளாதார வலிமையற்ற பல பெண்களுக்கும் பொருந்திப்போகிறது.இச்சமூகத்தை நம்பி, இருக்கின்ற குடும்பம் என்ற அமைப்பின் பாதுகாப்பையும் விட்டு எங்கே போவது என்பது அடுத்ததாக ஏற்படும் கேள்வியாகிறது.
          சல்மாவின் சிறிய தாயார் தான் பருவமடைந்ததை ஏழு நாட்களாகச் சொல்லாமல் மறைத்ததாகக் குறிப்பிடுகிறார்.’வீட்டுக்குள்ளபுடிச்சு வைச்சிட்டா’ என்ற பயம் காரணமாக அப்பெண்களுக்கு இயல்பாக உடலில் நடைபெறும் மாற்றத்தை ஏற்றுக்கொள்வதே நடுக்கத்தைத் தருகிறது என்கின்றார். சல்மா ‘வயதை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை வழியனுப்புவது’ என்ற கவிதை வரியைச் சொல்லி ,அந்த வயதுக்கான வாழ்க்கையை நாம் வாழ மறுக்கப்பட்டோம் என்றவர் ,யன்னலோரம் நின்றபடி ‘லேசான வெளிச்சம் வருகுது.இந்த யன்னலுக்கு அக்காவும் நானும் சண்டை’ என்கிறார்.படிப்பு இடை நிறுத்தப்பட்டு ,திருமணம் செய்து வைக்கப்படுவது தங்கள் விதி என ஏற்றுக்கொண்டு வாழ்வை வாழவேண்டியது தான் என மௌனமாகிவிடும் அச்சூழலிலிருந்து வாசிப்பதில் ஆர்வமும் கெட்டித்தனமும் சுயசிந்தனையும் கொண்ட சல்மா இதையெல்லாம் மீறி வாழ்ந்தே தீருவேன் என்ற தீர்மானத்தைப் பெரும் போராட்டங்களுடன் இன்றுவரை மேற்கொள்வது ஒடுக்கப்படும் பெண்களுக்கு முன்மாதிரிகை.
        இந்த ஆவணப்படம் பற்றிய சில கருத்துகளைப் படம் பார்ப்பதற்குச் சில காலங்களின் முன்னரே வாய்மொழியாகவும் எழுத்திலும் அறிந்திருந்தேன்.’யாரும் சிறையிலடைத்ததைப்போல இருட்டறையில் போட்டு அடைத்தார்களா?’ என யாரோ கேட்ட கேள்வியொன்று எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. -வயதுக்கு வந்த பிறகு பள்ளிக்கூடமே போகக்கூடாது.ஆம்பிளைகள் வீட்டுக்கு வந்தால் முன்னால் போகக்கூடாது. வெளியே தனியே உலவமுடியாது.சினிமாவுக்குப் போகக்கூடாது. தன் திருமணம் பற்றிய தீர்மானத்தைத் தானே எடுக்கமுடியாது. விரும்பியவாறு ஆடை உடுத்தக்கூடாது.- வீட்டினுள்ளே இருந்து யன்னல்களால் மட்டும் பொழுது போகக் குறுகலான தெருவைப் பார்த்தவாறிருப்பதென்பது சிறையில்லாமல் வேறென்ன?சல்மா எழுதிய  –பயணத்திற்குப் பிந்தைய வீடு- என்ற கவிதையிலிருந்து சில வரிகளை இங்கு பகிர்வது பொருத்தமாகும்.
எப்பொழுதும் 
என் மனப் பிறழ்வுகள்
ஆரம்பமாவது 
இந்த வீட்டின் ஒழுங்குகளுக்குள் 
தனது எல்லா வர்ணங்களும்
உதிர்ந்து விட்ட பிறகும் கூட
மயானத்திற்கு ஈடான அமைதியுடனும்
இறுமாப்புடனும் இருக்கிறது
என் வீடு-
                   வயதுக்கு வந்த பின்  பள்ளிக்கூடம் போக அனுமதிக்கப்படவேயில்லை. அதை நினைத்து வருந்தாத நாளேயில்லை என்கிறார் சல்மாவின் சகோதரி.இது ஒரு குடும்பத்துக் கதையல்ல.அந்தப் பெண்களின் பிரதிநிதிகளாகத் தம் கதைகளை இவர்கள் சொல்கின்றனர். நாலு சுவருக்குள் தான் வாழ்க்கையா?’கல்யாணம், குழந்தைகள் பின்னர் செத்துப்போவது தானா நானும்? ‘ என்ற சல்மாவின் கேள்விகள் வந்த வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போவது தான் என்று,அவரை முற்றுப்புள்ளியிட விடவில்லை. நெருக்கடிகளுக்கிடையிலும் தொடர்ந்த அவரது கவிதை எழுதும் மனதாலும் திறமைகளாலும் தன் மனநெருப்பை அணையவிடாமல் வளர்க்கிறார். ஊராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றதுடன் சிறுவயதில் அவர் அவாவுடன் வேண்டி விரும்பிய சுதந்திரமான பெண்ணாக வாழும் வாழ்க்கையை இன்றும் கூட பிடிவாதமும் துணிவும் கோபமும் கொண்டவராக வாழ்கிறார்.
     இருபத்தொரு வயதில் திருமணஞ் செய்து வைக்கப்பட்ட சல்மா கணவரின் மிரட்டல்கள், அடிகள் என எதிர்ப்புகளை எதிர்கொண்டு தான், தன் கோபங்களை ஆற்றாமைகளைக் கவிதைகளாக்குகிறார். இரவில் அருகில் கணவன் உறங்கிக்கொண்டிருக்கும் போது தோன்றும் சிந்தனைகளை எழுத இயலாமல் காலையில் எழுந்து எழுத நினைத்தால் மறந்து போய்விடும்.பின்னர் மலசலகூடத்தில் நாட்காட்டித் தாளில் எழுதி ஒளித்து வைத்ததாகவும் அதுவும் காணமல் போய்விடும் எனவும் தான் கவிதை எழுதத் தனிமையான ஒரு பொழுது கிடைப்பதற்காகப் பட்ட துயரத்தைச் சொல்லும் போது அவரது மறுக்கப்பட்ட வாழ்வு  இடையறாத போராட்டத்தைச் செய்யும் வேகத்தை தடுத்தபோதும் சல்மாவின் உறுதி பெரிதென தோன்றுகிறது.
அதே கணவர் இப்போது தனது சாட்சியத்தையும் சொல்கிறார். தனது பெற்றோர்கள் இவர் புர்கா போடாமல் நடமாடுவது ,கவிதைகள் எழுதுவது ,வாசிப்பதை விரும்பவில்லை.ஆகவே, தான் வேண்டாமென மறுத்ததாகவும் இதனால் பிரச்சனைகள் அவர்களிடையில் ஏற்பட்டதாகவும் கூறி இப்போது சல்மாவுக்குத் தொடர்ந்தும் இவற்றில் ஆர்வம் இருப்பதால் தான் விட்டுவிட்டதாகவும் சொல்கிறார். முன்னர் தற்கொலை செய்வேன், ஆசிட் ஊற்றுவேன் என்று சொன்ன கணவனே ஒரு பெண்ணின் செயற்பாடுகளின் தீவிரத்தாலும் பெற்ற வெற்றிகளாலும் மனம்மாறி ஆதரவாக இருப்பதென்பது சல்மா என்ற பெண்ணின் தொடர் போராட்ட வாழ்வின் வெற்றி தான். தன் மார்க்கத்தில் பற்றும் நம்பிக்கையும் கொண்ட ஓர் ஆண் மாறியது இந்தப் பெண்ணின் தீவிரமான திறமையான செயற்பாடுகளாலன்றி வேறென்ன? இதைக்கூட ஒருவர் வேறு மாதிரியான பார்வையில் எழுதியிருந்ததாக என் ஞாபகத்துக்கு வருகிறது. ‘சல்மா இப்படிப் பகிரங்கமாக கணவரைக் குற்றம் சாட்டியபின் வைத்து வாழ்கிறதே அந்தக் குடும்பம்’ என்று எழுதியிருந்தார். தன்னைச்சுற்றியுள்ள ஒரு சிலரையாவது மாற்ற முடியாவிட்டால் , போராட்டமான இந்த வாழ்க்கையின் அர்த்தமென்ன? பிரயோசனமில்லை.மாமியார் சல்மா தலையை மூடாதது தான் தனக்கு குறை எனவும் இதிலே பதிவு செய்கிறார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லல் இங்கு அவசியமாகிறது.
      இங்கே அவரது தாயாரின் ஒத்துழைப்பும் ஆதரவும் கவிதைகளைத் தபாலில் சேர்க்க உதவியதெனப் பதிவு செய்யப்படுகிறது.அப்படித்தான் முதற்தொகுப்பு வந்ததெனவும் ஒரு கல்யாணத்திற்கு மெட்ராஸ் பொவதாகக் கூறி புத்தகவெளியீட்டுக்குக் கூட செல்கின்றனர்.பொதுவில் இந்த ஆவணப்படத்தில் பார்க்கும் போது பெண்கள் படிக்க விரும்புகின்றனர்.இன்னொரு பெண் அடக்கிவைக்கப்படும் போது துயரடைகின்றனர். அவர்கள் வெளியே வர உதவவிரும்புகின்றனர். காலச்சுவடு கண்ணனின் சாட்சியத்தில் சல்மாவின் கஸின் பிறதர் வந்திருந்தார் ஒரு நோட்புக் கொண்டு வந்து காட்டினார்.எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த பெண் எழுதியிருந்த கவிதைகள் பிடித்திருந்ததால் தொடர்ந்து காலச்சுவடில் பிரசுரித்ததாகவும் குறிப்பிடுகிறார். பத்திரிகையாளரான அருள்எழிலன் சல்மாவின் கவிதையைப் படித்து ஈடுபாடு வந்து சல்மா யாரென விசாரித்தறிந்து துவரங்குறிச்சி சென்று பேட்டி கண்டதை பதிவு செய்வதும் சல்மா என்ற எட்டாம் வகுப்பு படித்த பெண் எவ்விதம் தான் தனித்துவமானவள், சம்பிரதாயங்களுக்குள் அடங்கமறுப்பவள் தன் சமூகத்துப் பெண்களின் துயரங்களைப் பதிவு செய்து அவர்களை ஓரளவாவது விழிப்படைய உதவ முயல்பவளாகிறாள் என்று இன்றைய கவிஞர் சல்மாவை நாம் அடைய இவை உதவுகின்றன.
2000ம் ஆண்டில் வெளியாகிய’ ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற முதலாவது கவிதைத் தொகுப்பின் முதற் பதிப்பின் முன்னுரையில் சல்மா,  ‘என்னுடைய கலாச்சார வாழ்விற்குப் பொருந்தாத இலக்கிய ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தி எனது இந்த வாழ்வோடு பொருந்த முடியாமல் போனதற்குக் காரணமாக ஹமீதையே(மனுஷ்ய புத்திரன்) சொல்லவேண்டும்’ என எழுதியிருப்பதோடு எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ஞானி ஆகியோர் பாராட்டித் தன்னை எழுத வைத்தவர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த ஆவணப்படத்தில் அவர்களது கருத்துகளும் பதிவு செய்யப்பட்டிருந்தால் சல்மாவின் ஆரம்பகால எழுத்துகள்,போராட்டங்கள் பற்றிய நிறைவான பார்வை கிடைத்திருக்குமோ எனவும் எனக்குத் தோன்றியது.
       மேலும், அவரது அரசியல் வாழ்வின் பக்கங்கள் மிகச் சிறு அளவே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தோன்றியது.அந்த அரசியற் பிரவேசமன்றி துவரங்குறிச்சி என்ற அக்கிராமத்தை விட்டு வெளியேறுதல் சாத்தியமாகியிருக்குமா எனும் கேள்வியும் எனக்கு எழுந்தது. ஆனாலும் கிராமத்தில் பெண்களைச் சந்தித்துக் குறைகளை , பிரச்சனைகளைக் குடும்பத்தில் ஒருவர் போல கேட்டறிந்து தீர்வுகள் பற்றி ஆலோசிப்பதும் அறிவுரைகள் சொல்வதும் போன்ற சம்பங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் பெண்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்லி அறிவுறுத்துவதும் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததையும் குறிப்பிடவேண்டும.சிறுவயது இந்துக் கல்யாணங்களைத் தடுத்து நிறுத்துவது பற்றியும் இஸ்லாமியச் சமூகத்தின் தனிப்பட்ட சட்டங்களால் தன்னால் அவற்றில் தலையிட முடியாதிருப்பதாகவும் வேதனையைப் பதிவு செய்துள்ளார் சல்மா.
 தன் குடும்பம் சார்ந்த ஆண்குழந்தைகளின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக அவர்களைச் சூழ்ந்துள்ள சமுதாயத்தின் தாக்கத்தையும் அவர்களுக்குத் தன்னையிட்டு வருத்தமிருப்பதாகவும் குறிப்பிடும் சல்மா வெளியுலகில் பாதுகாப்போ அன்போ கிடைக்குமா? அங்கே இன்னுங்கூட மோசமான தனிமையை எதிர்கொள்ள நேரிடும்
என்கிறார்.இறுதியாக மெல்லிய இருளில் சுவரில் தனியே அமர்ந்தபடி சல்மா சொல்லும் இந்தக் கவிதையுடன் ‘சல்மா ஆவணப்படம்’ நிறைவடைந்தது.
“இன்றைக்கு இல்லையெனில் நாளை
நாளைக்கு இல்லையெனில் இன்னுமொரு நாள்
இப்படித்தான் தெரியும் இந்த வாழ்வை
நினைவு தெரிந்த நாள் முதலாய்”…….
தர்மினி
நன்றி : ஆக்காட்டி (இதழ் 3) கார்த்திகை- மார்கழி 2014
Advertisements