-புஷ்பராணி-

nanaviddai thoithal

‘காலக் கரையினிலே, நினைவு அலைகளின் குதியன் குத்து’ என்ற எஸ்.பொ.வின் ஆரம்ப வரியோடு தொடங்குகின்றேன்….’நனவிடை தோய்தல்’ தந்து , எம் நினைவிடை வாழும் அற்புத எழுத்தன் தந்த இந்த அதியற்புத நினைவுக் குவியலைப் பத்து வருடங்களுக்கு முன்னே படித்துச் சுவைத்திருக்கின்றேன். மீண்டும் அதை இப்போது படிக்கும்போது ,அவரே நேரில் நின்று நக்கல் நளினத்தோடு இநகைச்சுவை ததும்பி வழிய ….கவித்துவம் மின்னி ஒளிர ….சுடர்மிகு அறிவோடு ….நமுட்டுச்சிரிப்போடு …..வார்த்தைகளைத் தங்குதடையின்றி என் முன்னே கொட்டுவது போல ஏற்பட்ட பிரமை என்னைவிட்டு இன்னும் நீங்கவில்லை. யாழ்ப்பாணத்தின் ஒவ்வோர் மூலை முடுக்குக்கும் போய் நாம் அனுபவித்த மறக்கவொண்ணாத நினைவுகளைக் கிளறி இன்னும்…இன்னும் புதிதுபுதிதான சுவை ததும்பும் நினைவுத் தடங்களை ஒரு காவியம் போல அதற்கும் மேல் எடுத்தாண்ட இவரது இயல்பான தெளிவுமிகு சொல்லாடல்களை இனி எந்தக் கொம்பனாலும் படைக்கமுடியாது.

பொதுவாகவே எழுதுபவர்களுக்கு நினைவாற்றல் அதிகம்தான். ஆனால், இப்படியும் ஒரு நினைவுத் திறனா?என்று எம்மை மலைக்க வைக்கின்றாரே ! மற்றவர்கள் நினைப்பதை நுணுகிக் கண்டுபிடித்து அதற்கான பதிலைப் பட்டென்று போட்டுடைக்கும் இவர் நுண்ணறிவு எல்லோருக்கும் வராதது.

அந்நாளைய நாணயமுறைகளைப் பற்றி இவர் விபரிக்கும் கட்டங்கள் உண்மையிலேயே எனக்குச் சிக்கலாயிருந்தது. சதம் –ரூபா-அணா –துட்டு- வெள்ளைச்சல்லி என்று சொல்ல வெளிக்கிட்டு, இதற்குச் சமன் அது……அதற்குச் சமன் இது என்று அவர் விளக்குகையில் தலை சுற்றுவது போலிருந்தது……ஒரு சதத்துக்கு மிளகாய்,மல்லி மிளகு,நற்சீரகம்,பல்லிமுட்டாசு எல்லாம் வாங்கலாம் என்று சொல்லிவிட்டு, வாசகர்கள் எண்ணம் புரிந்தவர் போல ‘இந்தத் தலை முறையினருக்கு இந்த ஒருசத மான்மியத்தைப் படிக்கும்போது நான் சிற்றெறும்பு முட்டை எடுத்து ஆகாசத்து ஓட்டை அடைக்கும் அண்டப் புளுகனோ என்ற எண்ணம் எழுந்தாலும் புதினம் இல்லை’ என்று சிரிக்கின்றார்.

எம் நினவுத்திரையில் இன்னோர் இடத்தில், இந்த நாணயங்கள் பற்றிய இன்னும் நீண்ட புதினங்கள் தந்துவிட்டு ‘பழைய காலத்திலே நனவிடை தோய்தல் செய்ய அழைப்பதாகக் கூறி, இப்படிப் பாரிய பொருளாதாரச் சிக்கல்களுக்குள் உங்களை மாட்டிவைக்கக் கூடாதுதான்….மன்னிப்பை வேண்டுகின்றேன்’ என்கின்றார்.ரூபாய் மதிப்பீடுகளை அக்கு வேறு ஆணி வேறாக இவர் விளக்குவது கண்டு பிரமிக்கும்போது ‘நான் பொருளியல் நிபுணன் அல்லன் …கற்பனையிலே ஒருவகைச் சுதிகாணும் கிறுக்கன்’ என்று அடக்கமான பதில் தருகின்றார்.

ஊர்ப் பேச்சுவழக்கிலிருந்து இப்போது நாம் மறந்துவிட்ட பல சொற்களை மிகவும் அலட்சியமாக இவர் கலந்துகட்டிப் பேசுவதும் இரசிக்கவைக்கின்றது. சர்வ சாதாரணமாக இவர் பாவித்த பல சொற்களில் சில இங்கே…வசுக்கோப்பு , விசளம், ஆத்திகே, கலாதி , திறிக்கீசு ,உசுக்குட்டி ,படினம் பார்த்து ,சக்கட்டையன் , அதாப்பியம் பேசுதல், பரவணி, கடுக்கண்டுவிட்டாள், அழுக்கடை , புசல் மா, பொச்சம், ஆருதக்கறிகள் என்று இன்னும் நிறைய… எமக்குத் தெரியாத பல பழைய புதினங்களை இவர் சொல்லும் அழகு….ச்சாய்…வர்ணிக்க எதுவும் வரமாட்டேன் என்கின்றது.

சீனர்கள் பட்டுத்துணி விற்றுத் திரிந்தது நாம் அறியாதது. சிலுக்குத் துணிகளைப் பொட்டணம் கட்டி வீடு வீடாகக் கொண்டுதிரிந்து அவர்கள் விற்றது ‘ஒலு லூவ்வாக்கு மூணு யாலு’ என்று அவர்கள் தமிழ் பேசிய அழகு.இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு அவர்கள் வரவு நின்று போனது எல்லாவற்றையும் உசுக்குட்டியனாக நின்று கவனித்து பிசகாமல் எம்முன் ஒப்புவிக்கின்றார்.

எதுவுமே அவர் ஞாபகத் திறனில் இருந்து ஓடி ஒளியவில்லை. தேநீர் அறிமுகத்துக்கு வந்ததை நகைச்சுவை ததும்ப இப்படிச் சொல்கின்றார்.’யாழ்ப்பாண மண்ணிலே தேநீர் குடிக்கும் பழக்கத்தினை அறிமுகப் படுத்தியபோது  பால் தேத்தண்ணியும்,வெறும் தேத்தண்ணியும் இலவசமாகத் தேயிலைப் பிரச்சாரச் சபையினரால் வழங்கப்பட்டன. இலவசமாகத் தலையிடியைத்தானும் கொடுத்தாலும் ஃபோலிங் நின்று பெற்றுக்கொள்ளும் நம் மக்கள் தேநீரை விட்டு வைப்பார்களா?’என்று இந்தத் தேநீர் வழங்கும் நேரங்களில் சிங்கள பேக்கரிக்காரர்கள் சீனிப் பாண் , சங்கிலிப் பாண், பண்ஸ், கேக் வகைகள் , பிஸ்கட் வகைகள் என்று அறிமுகப்படுத்தி விற்றதையும் குறிப்பிடுகின்றார்.

அந்தக் காலத்து யாழ்ப்பாணக் கலாச்சாரத்தைப் பழைய சோற்றுக்கலாசாரம் என்றுகூடச் சொல்லலாம்.பழஞ்சோற்றுத் தண்ணீ , உலையில் வடித்த தெளிவுக் கஞ்சிக்குள் கொஞ்சம் தேங்காய்த் துருவல் போட்ட பானம் இவையே யாழ்ப்பாணத்துப் பானங்களாகப் பயன்படுத்தப் பட்டன’என்று கூறும் இவர் கோப்பி இடித்து அதை ‘மோட்டமினுக்குப்’ போத்தலுக்குள் அடைத்து வைப்பதையும் சொல்லும் அழகு தனி.

போர்த் தேங்காய் அடிபற்றிப் பெரிய ஆராய்ச்சியே பண்ணியிருக்கின்றார். யாழ்ப்பாணத்து மக்களின் விளையாட்டுகள், பழக்கவழக்கங்கள் அனைத்துமே அச்சுப் பிசகாமல் இவர் மனத்திரையில் அழுத்தமாக வரையப்பட்டிருக்கின்றது என்பதற்கு இந்த அத்தியாயமே பெரும் சாட்சி! போர்த் தேங்காய்களை ஊர் ஊராகச் சென்று வாங்கி(மாத்தறைக்குக் கூடப் போய் வாங்கியிருக்கின்றார்கள்) அவற்றைக் கிணற்றடியில் நனைய வைத்து தெரிவு செய்த தேங்காய்களை வகை பிரித்து வெள்ளோட்டம் பார்த்து……சின்னஞ்சிறுசுகள் முதல் பெரியோர்வரை இந்தப் போர்த்தேங்காய்ப் போட்டி பற்றியே பேச்சாக அந்த நினைவிலே மூழ்கி……. போட்டி முடிவடைந்ததும் வெற்றி பெற்றோர் எக்களிப்பில் குதித்தாட… அப்பப்பா……..இந்தப் போட்டியை நேரில் சென்று பார்த்ததுபோல் எம்மையும் உணரவைத்த எஸ். பொ.வை எப்படிப் பாராட்ட?

எஸ். பொ.வின் உசுக்குட்டி வயது ஞாபகங்கள் ருசி மிக்கவை. ஒவ்வொரு ஒழுங்கைகள், வீதிகள்,குளங்கள், தோட்டங்கள் என்று அடுக்கிக் கொண்டே எம்மைத் திணற வைக்கின்றார். அபாரமான இவரது நினைவாற்றல் இனிக்கவும் செய்கின்றது. சின்னவயதில் அவர் பார்த்த காத்தவராயன் கூத்தில் வரும் ‘நாவல் பழம் போல் கறுப்பியம்மா….’என்ற பாடல் வரியை அவர் குறிப்பிட்டபோது ’பெண்களைச் சாப்பிடும் போகப் பொருளாக நினைத்துப் பழங்களை உதாரணம் காட்டியே ஆண்கள் வர்ணிக்கின்றார்கள்’ என்று பேசிய அம்பையின் நினைவு எனக்கு வந்தது.

அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசி ஓட்டை அடைப்பவர்கள், குடைகட்டுபவர்கள் மற்றும் வேலிக்கலாச்சாரம் பழைய தட்டிவான்கள் ….அந்த நாளையக் கார்கள்…..சைக்கிள்கள். சைக்கிள் ஓட்டுவோர் என்று எவரையும் எதையும் அவர் விட்டு வைக்கவில்லை.இவரின் ஞாபக அடுக்கில் நிரம்பி வழிபவை ஏராளம்….ஏராளம்.!….

தட்டி வான்களில் பஞ்சமர்கள் உட்காரத் தடை இருந்ததையும் அப்படி உட்கார்ந்த பலர் அடிவாங்கியதையும் மறக்காமல் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பட்டம்….காற்றாடி….கொடி …என்ற ஒரே பொருள் கொண்டு ஆகாசத்திலே பறந்து பரவசப்படுத்திய கொடி ஏத்துகின்ற விளையாட்டுப்பற்றி வர்ணிக்கவே சில பக்கங்கள் ஒதுக்கியிருக்கின்றார்.’ஆடிக் காத்திலே அம்மியும் பறக்கும் என்பார்கள். அம்மி பறந்ததை நான் கண்டதில்லை….அம்மி போன்ற பாரமான கொடிகள் பறந்ததைக் கண்டிருக்கிறேன் …..கொடி பார்க்கிற காலத்திலை காற்று எப்படி வீசும் தெரியுமே ?….அது ஒரு காத்துத்தான்…….பாம்புக்கொடி இபருந்துக்கொடி ..கொக்குக்கொடி பெட்டிக்கொடிஇ சானாக்கொடி ….எத்தனை நிறங்கள்….எத்தனை வகையான கொடிகள் பறந்துகொண்டிருக்கும்’ இப்படி எஸ்.பொவின் கொடி ஆலாபனை நீளுகிறது…. அதே வேளை , விளையாட்டின் கை வண்ணம் அன்று ஒங்காரமிட்ட அந்த யாழ்ப்பாண வானிலே இன்று தமிழ் உயிர்களைப் பலிகேட்டுHelihopter கள் உறுமித் திரியும் செய்தியைக் கேட்கும்போது மனம் வியாகூலம் அடைகின்றது. மீண்டும் அந்த வானிலே பிரமாண்டமான ஆள்கொடிகளையும் எட்டு மூலைக்கொடிகளையும் பறக்கவிட்டு அழகு பார்க்கவேண்டும். என்கின்ற என் இனிய தமிழ்க்கனவினை யாரால் கலைக்கமுடியும்?atleast  கனவு காணும் உரிமையாவது தமிழனுக்கு இல்லையா ?’ என்று ஏங்கவும் செய்கின்றார்.

எத்தனையோ மறந்து போன நிகழ்வுகளை ஞாபகப் படுத்தும் சுதியுடன் எம் நினைவுகளைக் கிளறிப் புதைந்து கிடப்பில் கிடக்கும் பல பழைய நினைவுகளைத் தலையில் தட்டி உசுப்பேத்தி வெளியே கொண்டு வரும் அவருடைய அசாத்தியத் திறமை நான் எவரிடமும் காணாதது! பரியாரிகள் தரும் மருந்தைக் குழந்தைகளுக்கு முலைப்பாலில் கலந்து கொடுப்பதற்குப் பலர் குஞ்சுச்சிரட்டையோடு திரிந்ததை இவர் சொல்லும் விதம் இருக்கின்றதே…..எப்படி அய்யா இதையெல்லாம் நினைவில் பதித்து வைத்திருந்தீர்கள் ? என்ற ஆச்சரிய வினா எனக்குள் பீறிட்டது. இந்தக் குஞ்சுச் சிரட்டை விவகாரம் இப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. என் அம்மாவிடமும் பலர் மருந்துக்கு முலைப்பால் பெற்றுச் சென்றிருக்கின்றர். அது மட்டுமல்ல அம்மா பல தாயில்லாத குழந்தைகளுக்குப் பாலூட்டி அரவணைத்ததும் ஞாபகத்துக்கு வருகின்றது. எங்கள் வீட்டிலும் பொட்டுச் சிரட்டைகளோடு குஞ்சுச் சிரட்டையும் இருந்திருக்கின்றது.

இடியப்பம் ,தோசை,பாலப்பம், புட்டு என்று இவர் ஒவ்வோர் பலகாரங்களையும் வர்ணிக்கும் விதம் சுவையோ சுவை! அவற்றின் செய்முறைகளைக் கூட அந்த உசுக்குட்டி வயதில் கூர்ந்து கவனித்து…..அவற்றை எப்படிச் சாப்பிட்டால் ருசிக்கும் என்ற விளக்கம் வேறு தருகின்றார். ஐம்பதுகளின் காலப் பகுதிகளில் தமிழ் நாட்டு ஹோட்டல்களில் இடியப்பம் கிடைக்காது என்றும் தற்போது சரவணாஸ் உட்படப் பல இடங்களில் தாராளமாகக் கிடைக்கின்றது என்ற விவரத்தையும் சரியாகத் தருகின்றார்.இலங்கைத் தமிழர்கள் இங்குள்ள அரசியல் பிரச்சினைகளால் தமிழ்நாட்டில் குடியேறிய பின்பல மாற்றங்கள் கலந்திருப்பதை நானும் கவனித்து வருகின்றேன். டீ குடிக்கும் பழக்கம் பெருகியது.பாட்டி என்பதற்குப் பதில் அம்மம்மா என்று அழைப்பது……சொதி வைத்துச் சாப்பிடுவது என்று இன்னும் பல யாழ்ப்பாணத்தாரின் பழக்கவழக்கங்கள் தமிழ் நாட்டில் ஊடாடிவிட்டது. வயல் வெளிகள் எல்லாம் கொங்கிரீட் கலாச்சாரத்தின் அரக்கத்தனத்துக்குள் மூச்சுத் திணறுவது கண்டு என் கண்கள் பனிக்கின்றன’ என்கிறார். நாளுக்கு நாள் புதியபுதிய கட்டிடங்கள் முளைப்பது கண்டு நானும் எனக்குள் ‘இந்தப்பூமி இதனை எத்தனை நாளைக்குத் தாங்கப் போகின்றது ?’ என்று யோசிப்பதுண்டு.

அகத்தி, தூதுவளை, தவசி , முருங்கை, முல்லை, முசுட்டை, திராய் , சண்டி, வல்லாரை, குறிஞ்சா,பொன்னாங்காணி, முளைக்கீரை,குப்பைக்கீரை, சட்டிக்கீரை என்று கீரைகள் பற்றியும் பாரை , திரளி ,ஒட்டி, ஓரா,வாவல்,கயல் ,கிளாக்கன் ,விளை,சுறா, சூடை , காரல் என்று மீன் வகைகள் பற்றியும் இவர் கூறும் வரிசைக்கிரமங்கள் எம்மைத் திகைக்க வைக்கின்றனவே….. பழைய சோறு சாப்பிடுவதைப் பற்றி இவர் விலாவாரியாக ….நகைச்சுவை ததும்ப ‘மசிய அவிஞ்ச மரவள்ளிக் கறிஇ கூட்டரைச்சு இசைய அவிஞ்ச பழைய விளைமீன் குழம்பில் ……பிசைஞ்சு குழைச்சு……பழஞ்சோறு உருண்டை திரட்டிப் பூவரசம் இலையிலே ஆச்சியிடக் கவ்வும் சுவை கனவே’ என்ற அவரின் வரிகளே எம்மைப் பழைய சுவையுலகுக்கு அழைத்துச் செல்கின்றன. வேலிகளில் இருந்து பூவரசம் இலைகள் புடுங்கி ஓடோடி வந்து அம்மா குழைத்துத் தரும் பழைய சோற்றுத் திரணை உண்டு களித்த அந்த நாள் நினைவுகள் நெஞ்சில் மூட்டம் போட்டு அதிலிருந்து மீள முடியாமல் நான் கரைந்துபோகின்றேன் .

எதை விட்டு வைத்திருக்கின்றார் ?பனை வளங்களில் இருந்து பெறப்படும் ..பனங்காய் , நுங்கு , கள்ளு ..கருப்பநீர்….பனங்கட்டி,பினாட்டு, பெட்டி,கடகம், உமல், குஞ்சுப்பெட்டி; அடுக்குப்பெட்டி, பறிகள், பாய்கள் என்று வகை பிரித்துத் தொகை தொகையாக வர்ணித்து……..அதனூடே ஒரு சேதியும் சொல்லுகின்றார்.’பிளாஸ்டிக் உபயோகத்தினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகின்றது என்று மேற்கு நாடுகளிலே பச்சைச் சமாதானவாதிகள் சன்னதமாடுகின்றனர் .பனையோலைச் சாமான்கள் பிஞ்சு போனால் அடுப்புப் பத்தவைக்கமுடியும். நிலத்திலே உக்கினால் நல்ல உரம்.’ இது அவரின் சுதேசப் பற்றை மட்டுமல்ல பன்முகத் தெளிவையும் காட்டுகின்றது. யாழ்ப்பாணத்தின் தென்னை வளங்கள் பற்றியும் அதிலிருந்து பெறும் பயன்கள் எவை எவை என்று விளக்கமாக எழுதத் தவறவில்லை.

முருங்கைக்காய் ,முருங்கையிலை பற்றியும் ஒரு புராணமே பாடியிருக்கின்றார். ‘யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பயணம் செய்பவர்கள் மறக்காமல் முருங்கைக்காய்க் கட்டு ஒன்றையும் எடுத்துச் செல்வார்கள். ‘சும்மாசொல்லக்கூடாது. யாழ்ப்பாண முருங்கை நல்ல ருசி…நீளமும் நீளம்தான்….கழியும் கழிதான்….சுவையும் சுவைதான்…’என்று நகைச்சுவையுடன் கூறுகின்றார். எனது அண்ணன் கொழும்பு புகையிரதப்பிரிவில் வேலை பார்த்தபோது, லீவில் வந்து திரும்பும் போதெல்லாம் முருங்கைக்காய்க் கட்டுடன் திரும்பிச் செல்வது நினைவுக்கு வந்து சிரிக்கின்றேன்.

யாழ்ப்பாணத்தின் தேசிய உணவான பிரபலம் மிகுந்த ஒடியற் கூழ் பற்றி அவர் எழுதியவற்றை இங்கு குறிப்பிடாவிடில் என் எழுத்துகள் சமாதானம் கொள்ளாது. எப்படிக் கூழ் காய்ச்சுவது?அதற்கு என்னென்ன தேவை என்பதை அணுவணுவாக இரசித்து இவர் கூறும்போதே எமது வாயில் நீர் ஊறுகின்றது.கூழ் காய்ச்சுவது பற்றி எழுத எஸ்.பொவை விட்டால் யாருமே இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்.

அவர் கூழ் பற்றி எழுதியதில் கொஞ்சம் இங்கே…… வெள்றால் வகைககள், நீலக்கால் நண்டு, சதைப்பிடிப்பான கலவாய் அல்லது பெரும் விளை ,பெருமுள்ளுள்ள பொடி மீன்கள், மீன்தலை, (சப்பித் துப்ப) பயித்தங்காய், மாப்பிடிப்புள்ள மரவள்ளிக் கிழங்கு , ஒரு துண்டு வரிக்கன் பலாக்காய் இவற்றோடு காரமும்,புளிப்பும் சுள்ளிட வேண்டும் ……கூழின் சுவைக்கு தண்ணியாகவும் இருக்கக்கூடாது , கட்டிபடவும் கூடாது. ஒவ்வொரு வாய்க்கும் பருக்கைகள் கடிபடவேண்டும்……என்றெல்லாம் கூறிக்கொண்டே போய் ‘இதுதான் யாழ்ப்பாணத்தின் தேசிய உணவு’ என்று ’கட்டியம் கூறும் இவர் ‘நான்கு கண்டங்களிலே பரிமாறப்படுகின்ற அத்தனை தேசிய உணவுகளையும் சுவைத்துப் பார்த்துவிட்டேன்….ஆனால், எங்கடை கூழுக்கு இணையான ஓர் உணவு வகையைத் தயாரிக்க இன்னோர் கோக்கி பல நூற்றாண்டுகள் கழித்தும் பிறப்பானோ என்பது ஐமிச்சமே ‘ என்று மார் தட்டுகின்றார். மிக இளம் வயதில் பெண்களுடன் இவர் விட்ட திறிக்கீசுகளையும் (இவர் பாசையில்) நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகின்றார்.ஒரு பெண்ணால் இப்படிப்பட்ட திறிக்கீசுகளை வெளியில் சொல்ல முடியுமா?அப்படிச் சொன்னாலும் சமூகம் நகைச்சுவையாக ஏற்றுக்கொள்ளுமா?இது எனக்குள் எழுந்த சந்தேகம்.

இவர் எழுதியவற்றுள் எதை எழுத? எதை விட?… எல்லாவற்றையும் சுவைத்துப் படித்து அதனுள்ளேயே அமிழ்ந்துவிட்டதால் எல்லாவற்றையும் எழுதவேண்டும் என்ற தீராத ஆவல் என்னை உலுப்பினாலும்.. . நீங்களும் தோய வேண்டும் என்பதால் விட்டுவிடுகின்றேன்.

நன்றி : ஆக்காட்டி (இதழ் 4)

Advertisements