-கூலித்தமிழ்-விமர்சனம் – 
தர்மினி
       coolitamil-15256

         மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய ஏழு கட்டுரைகளின் தொகுப்பிது. தரமான அட்டையும் அழகான முகப்புமாக ஆவணங்களின் ஆதாரங்களுடன் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட இக்கட்டுரைகள், மலையகத்தில் எழுதப்பட்டவை அல்லது அதனோடு தொடர்புபட்டதாகவுள்ளன என்ற வகைப்படுத்தலில் அடக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. கும்மித் தொகுப்பு, நாவல்கள்,ஆங்கிலேயத் துரைமார்களுக்கான தமிழ்ப்போதினிகள், பத்திரிகையாளராகக் கருமுத்து தியாகராசர் மலையகத் தமிழருக்காகச் செய்த எழுத்துப்போர்,பெண்ஆளுமையான அஞ்சுகம் என்பவரின் திரட்டு ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
                     இலங்கைத்தீவின் மத்திய மலைநாட்டிலுள்ள கோப்பி,தேயிலை, இறப்பர் தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து கப்பல்களில் அழைத்து வரப்பட்ட சனங்களின் வாழ்வும் அவர்கள் பட்ட துன்பங்களும் இவற்றைப் படிக்கும் போது காட்சிகளாக எம்முன் விரிகின்றன. அவற்றையிட்டுக் கொஞ்சமாகவாவது சிந்திக்காமலும் புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாது.
       இலங்கையின் வடக்கிலுள்ள தீவொன்றின் கிராமத்தில் பிறந்த எனக்கு மலையகத்தைப் பார்க்கும் வாய்ப்பு இன்று வரை கிடைக்கவேயில்லை. ஆனால், அயலிலுள்ள வீடுகளில் வீட்டுவேலைகளுக்காக அழைத்துவரப்பட்டு நாள் முழுவதும் வேலை வாங்கப்படும் சிறுவர்களைப் பார்த்திருக்கின்றேன். ‘தோட்டக்காடு’என்ற சொல்லைத்தான் அவர்களைப்பற்றிக் கதைக்கும் போது ஊர்ச்சனங்கள் பாவிப்பார்கள். எப்போதாவது என் வயதொத்த சிறுமிகளுடன் கதைக்கவும் விளையாடவும் வாய்ப்புக்கிடைக்கும். அவர்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்த தவிப்பும் தனிமையும் ஒரு பக்கம் வதைக்க நாள் முழுதும் முதுகு முறியமுறிய அங்கு செய்யும் வேலைகளின் சுமைகளையும் வழங்கப்படும் தண்டனைகளையும் பகிர்வதற்குக் கூடச் சந்தர்ப்பம் கிடைப்பது அரிதிலும் அரிது. தொடர்ச்சியாக ஏவல்களும் வேலைகளும் அவர்களைத் துரத்தியபடியே இருந்தன.
       மலையகத்துக் கதைகளைக் கொண்ட நாவல்களையோ செய்திகளையோ வாசித்த போது தான் அம்மக்களின் வாழ்வும் வரலாறும் பற்றி ஓரளவு விளங்கிக் கொள்ளக்கூடியதாயிருந்தது. அப்போது வாசித்த ‘குருதிமலை’என்ற நாவல் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. இத்தொகுப்பின் மூலம் அறிந்து கொண்டவை எனக்கு மற்றுமொரு பார்வையைத் தந்துள்ளது எனலாம். மலையகத்திற்குக் கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் கோப்பித் தோட்டக்கால வாழ்வை அக்கால இலக்கியம்-சமூகம் எனக் கூலித்தமிழ் என்ற இத்தொகுப்பு வழங்கும் செய்திகளும் சான்றுகளும் மேலுமதிகமாகத் தருகிறது.
       இதிலுள்ள ஏழு கட்டுரைகளும் வெவ்வேறு விதங்களில் எழுதப்பட்டவை.வெவ்வேறு வகைப்பட்டவை. சுவாரசியம்,கோபம்,ஆற்றாமை,திகைப்பு,வேதனை எனப் பல உணர்வுகளை இவ்வாசிப்பு தருகிறது.
கோப்பிக்கிருஷிக் கும்மி :
 
         1864ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி தோட்டக்கூலிகளை ஏற்றிச் சென்ற ஆதிலட்சுமி என்ற கப்பல் வங்காலையிலிருந்து பாம்பனுக்குச் சென்று கொண்டிருக்கும் போது புயற்காற்றின் தாக்கத்தினால் 114 பேர் பலியானார்கள் என்ற பத்திரிகைச் செய்தி இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்படுகிறது. 1864 ல் வங்காலையிலிருந்து பாம்பனுக்குத் தொழிலாளரை ஏற்றிச் சென்றது எதற்காக என்ற கேள்வி  எனக்கு எழுந்தது.தொடர்ந்து ‘இலங்கைக் கோப்பித் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து கூலிகளாகத் தமிழர்கள் மேற்கொண்ட மரண யாத்திரையில் நமக்குத் தெரிய வந்திருக்கும் முதலாவது பெரிய மனிதப்பலி இது தான்’ என்கிறார் கட்டுரையாளர். ஆகவே இங்கே பாம்பன்-வங்காலை என்ற சொற்கள் தவறுதலாக இடம் மாறியிருக்கலாமோ என்ற ஊகம் ஏற்படுகிறது.
        மலையகத்தின் முதல் நூல் என்று கட்டுரையாளரால் குறிப்பிடப்படும் இத்தொகுப்பில் 280 கும்மிப்பாடல்கள் அடங்கியுள்ளன. கோப்பிக் கிருஷிக்கும்மி 1869 ம் ஆண்டில் மத்தியமலை நாட்டில ஆங்கிலத் துரைத்தனத்திற்கான புதிய கும்மியாக எழுந்தது மலையகத்தின் பெருந்துரதிர்ஷ்டம் தான் எனினும் மலையகத்தின் எழுத்து இலக்கியத்திற்கு இதுவே ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு காலச் சரித்திரத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது என்கிறார் மு.நித்தியானந்தன்.
       ஆபிரகாம் ஜோசப் என்ற கோப்பித் தோட்டத்துக் கண்டக்டராக வேலை செய்தவரால் ஆங்கிலம் -தமிழ் என இரு மொழிகள் கொண்டதாக கும்மித் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. 1847ல் வெளியான ‘உதயதாரகை’ என்ற பத்திரிகையும் தமிழும் ஆங்கிலமும் கலந்தே இருந்தது அக்காலத்தைய வழக்கம் தான் என்ற விபரங்களுடன்1850 ல் ஆறு அச்சுக்கூடங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கின என்ற செய்தியும் தகவல்களுடன் தரப்பட்டள்ளது.
        ஆங்கிலேயத் துரைகளும் மிஷனரிகளும் வழங்கிய பணமும் ஒத்துழைப்பும் இத்தொகுப்பு வெளிவரவும் விநியோகிக்கவும் துணையாயிருந்துள்ளன என்ற விபரங்கள் அதன் சமர்ப்பணத்திலும் முன்னுரையிலும் தெளிவாய் இருக்கின்றன. அப்படி ஆள்வோரின் அடி வருடியான ஒருவர் எழுதிய பாடல்கள் மலையகச் சனங்களின் துயரத்தை ஒரு போதும் பாடியிருக்கவே முடியாது என்ற உறுதியான முடிவை நாம் எடுப்பதற்கு ஆரம்பத்திலேயே உதவி விடுகின்றன.
       கங்காணிகளை விட உயர்பதவியான கண்டக்டராக இருந்த ஆபிரகாம் ஜோசப் கூலித் தொழிலாளிகளின் எதிர்ப்புகளையோ ஆதங்கங்களையோ வெளிப்படுத்தும் கும்மிகளை எழுதியிருப்பார் என நாம் நினைத்தால் அது முழுத் தவறு. தமது திருகுதாளங்களால் சிலர் தோட்டங்களுக்கே சொந்தக்காரர் ஆகிவிடுவார்களாம். இவர் போன்றவர்கள் வெள்ளைத்துரைகளுடன் சேர்ந்து தோட்டத்தொழிலாளரை ஒடுக்குவதில் பங்கெடுத்தனர். இக்கும்மிப் பாடல்கள் எழுதப்பட்ட நோக்கத்தை விரிவாக அலசுவது தான் அக்கட்டுரையின் சிறப்பு. கோப்பிப்பயிர்ச்செய்கை பற்றிய நடைமுறைத் தகவல்களும் தொழிலாளர்கள் எசமானர்களுக்கு நன்றி விசுவாசத்தோடு பணிவாக நடக்கவேண்டுமெனவும் தோட்டங்களில் அவர்கள் வசதியாக வாழ்வதாகக் காட்டி இந்தியாவிலிருந்து இன்னும் அதிகமானோரை ஆர்வமுடன் வரச்செய்ய வேண்டுமெனவும் தந்திரங்கள்,ஏமாற்றுகள் துரைமாருக்கு அடங்கிப் போகவேண்டுமென்ற அறிவுரைகளுமாக ஏகாதிபத்தியத்தின்  பணிவுள்ள ஊழியனாகவே ஆபிரகாம் ஜோசப் இவற்றை எழுதியுள்ளார். ஆனால், தேசாதிபதிகளாக இருந்த சில மனச்சாட்சியுள்ள ஆங்கிலேயர்களின் அறிக்கைகள் தோட்டங்களை விட்டு மக்கள் தப்பி ஓடுவதையும் குழந்தைகள் ,பெண்கள் உட்பட சிறை வைக்கப்படுவதையும் பதிவுசெய்துள்ளன. 1843 – 1867 க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்றரை இலட்சம் பேர் வரை காணாமல் போயிருப்பதைப் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன எனக் கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
                தென்னிந்தியாவிலிருந்து கப்பல்களில் வந்திறங்கி கால்நடையாகக் காடுகள் ஊடாக மலையகத்துக்குக் கொண்டு  செல்லப்படுபவர்கள் வழியிலே நோய்வாய்ப்படுவதும்  இறப்பதும் பற்றிய குறிப்பொன்றை இதிலே படிக்கும் போது நடுங்குகிறது. பொய்யும் புளுகும் சொல்லி ஏமாற்றிக் கூட்டி வரப்பட்ட இம்மக்கள் தப்பியோடினால் கூட  இந்தியா வரை சென்று வாரண்டோடு பிடித்து வந்த பிரிட்டிஷ் சர்வாதிகாரத்திற்குச் சார்பான கும்மிகள் தானிவை. இக்கும்மிகள் தோட்டத் தொழிலாளி ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் பெருமையுடன் மலையகத்தின் முதலாவது நூலைக் கொண்டாடலாம். ஆனால், கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பின் களைப்பில் அதை மறக்கப் பாடிய அவர்களது நாட்டார்பாடல்களுக்கு மாற்றாக அவற்றை மறக்கடிக்கச் செய்யவதற்காகக் கோப்பிப் பயிர்ச்செய்கை பற்றிய விளக்கங்களும் மிஷனரிகளின் பிரச்சாரமுமாக கும்மிகளை எழுதிய அதே ஆண்டில்,
கோணக்கோண மலையேறி
 கோப்பிப்பழம் பிய்க்கையிலே
 ஒரு பழம் தப்புச்சுன்னு
 ஒதச்சாண்டி சின்னத்துரை-
என்ற பாடலும் தொழிலாளிப் பெண்ணொருவரால் பாடப்பட்டது எனக்குறிப்பிட்டு கட்டுரை முடிவில் இக்கும்மிகள் மறைந்து கிடப்பது காலத்தின் தீர்ப்பு என்கிறார் ஆசிரியர்.
   தமிழ்வழிகாட்டி , INGE VA! or the ‘sinnadurai’s pocket Tamil Quide , COOLY TAMIL
                                தோட்டத் துரைமாருக்குத் தமிழ் போதிப்பதற்கு எழுதப்பட்ட இக்கையேடுகள் பற்றிய சுவாரசியமான விடயங்கள் கட்டுரையிலுள்ளன. தோட்டத்துரைமாருக்கும் தொழிலாளருக்குமிடையிலான உரையாடல்களையும் கண்காணிப்புகளையும் இப்புத்தகத்தில் அவதானிக்கக் கூடியதாயிருப்பதாக உதாரண உரையாடல்கள் பலவும் தந்து அப்போதைய நிலைகளை விளக்குகிறார். ‘துரைத்தன அடக்குமுறையும் கூலித்தமிழும்’ என்ற தலைப்பிலடங்கிய விசயங்கள் ஆங்கிலேயர்களின் போலியான ஒப்பந்தங்களையும் தப்பிக்க வழியற்றவர்களின் பொறியிலகப்பட்ட வாழ்வையும் ஆராய்கின்றது. நோயுற்ற காலத்தில் அரிசியோ கூலியோ இல்லை.துரையின் அனுமதியின்றி தோட்டத்தை விட்டு வெளியேற முடியாது. சிறு தவறுகளுக்கும் தண்டனைகள் எனக்குரூரமாகக் கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
      இந்தியக் கிராமங்களிலே உழைப்பும் வாழ்வும் என இயல்பாகவும் எளிமையாகவும் இருந்த மக்களைக் கற்பனைக் கதைகளைச் சொல்லி ஏமாற்றிக் கூட்டிவந்த கங்காணிகளும் துரைகளும் அட்டைகளோடு அட்டைகளாக இரத்தத்தை உறிஞ்சினர். தோட்டத்துரைகளின் நிர்வாகத்திற்குத் தேவை என்பதாலேயே தமிழ் படிக்கும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. ‘இங்கே வா!’  மற்றும் ‘கூலித்தமிழ்’ ஆகிய இரு தமிழ்ப்போதினிகளும் ஆங்கிலத்தில் தமிழ்ப்பேச்சு மொழியை எழுதிக் கற்பிக்கப்பட்டவை. இந்தத் தலைப்புகளிலேயே அவற்றின் நோக்கம் புலனாகிவிடுகிறது.
    ஆங்கிலேயத் துரைகளின் ஏவல்களும் கட்டளைகளும் அதிகமாக அதில் எழுதப்பட்டவை. ஒரு வழி உரையாடலாகவே பெரும்பாலும் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. உதாரண வாக்கியங்கள் ‘ஒழுங்கா இருங்க’ , ‘கூப்பிட்டதுக்கு கேக்கலையா?’. அதிகாரத் தோரணைகள் தெளிவாகத் தெரிவதைப் போலவே எதிர்ப்பைக் காட்டிய தொழிலாளருக்கான வாக்கியங்களும் அவர்கள் மத்தியில் இருந்த எதிர்ப்புணர்வைக் காட்டுவதாக மு.நித்தியானந்தன் உதாரண வசனங்களுடன் நிறுவுகின்றார்.
மலையத் தமிழருக்காகக் குரல் கொடுத்த முதற் பத்திரிகையாளர் : 
                         மலையகத்தின் சமூக அரசியல் வரலாற்றில் முதன்மையானவர் கருமுத்து தியாகராசர். காரைக்குடியிலிருந்து வணிக நோக்கோடு இலங்கை வந்த செட்டியார்களில் இவரது சகோதரரும் ஒருவர். பொருளாதார வளத்தோடு இருந்த அச்சமூகத்திலிருந்து பத்திரிகையாளராக ஏதிலிகளாக நின்ற இம்மக்களுக்காக போராடிய முதல் மனிதர் இவரென்பதைக் கட்டுரையாசிரியர் தருகின்ற செய்திகளும் ஆவணங்களும் நிரூபிக்கின்றன. இளவயதில் பன்னிரண்டு வருடங்கள் இலங்கையில் வாழ்ந்த இம்மனிதர் அம்மக்களுக்காகப் பிரிட்டிஷ் நிர்வாகத்தோடு போராடியது அன்றைய காலத்தில் மிக மிக அவசியமான பணி.சேர்.பொன்னம்பலம் அருணாசலத்துடன் இணைந்து தொழிலாளர் நலன்களுக்கான அமைப்பொன்றை ஏற்படுத்தினார் என்ற செய்தியையும் படிக்கும் போது அக்காலத்தில் இம்மனிதர் செய்த வேலைகள் தொழிலாளருக்குப் பெரும் உதவியாயிருந்திருக்குமெனத் தெரிகிறது.
           திருச்சி -மதுரை- நாமக்கல்- அறந்தாங்கி -பெரம்பலூர் -முசிறி- துறையூர்- விழுப்புரம்- புதுக்கோட்டை- தஞ்சாவூர் -திண்டுக்கல் -மண்டபம் -திருநெல்வேலி- சேலம்- ஈரோடு-ஆத்தூர் -வேலூர் -செங்கல்பட்டு -அரக்கோணம் -தூத்துக்குடி -சென்னை -தனுஷ்கோடி  போன்ற ஊர்களிலிருந்து திரட்டப்பட்ட தொழிலாளர்கள்  மண்டபம் முகாமில் நோய்த் தடுப்புக்காக ஏழு நாட்கள் தங்க வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் கப்பலில் மிருகங்கள் போல ஏற்றிச் செல்வது அவலமானவை என ஆங்கிலப் பிரசுரமொன்று வெளியிட்டு அதற்கெதிராகப் போராடியிருக்கிறார். மேலும்,  கன்னட – மராத்தியத் தொழிலாளர்கள் கூட இரத்தினபுரிக்குச் சென்றனர் என்ற விபரத்தை இக்கட்டுரையிலிருந்து  அறிந்து கொண்டேன்.
     பத்திரிகைகளில் எழுதிய தலையங்கங்கள், நீதிமன்றத்தில் வழக்குகள்,அறிக்கைகள் போன்றவற்றுடன்  1918 ம் ஆண்டு கொழும்பில் தொழிலாளர்களின் துயரங்கள் பற்றி சாட்சியமளிப்பதையும் அவை தொடர்பாக மூன்று பிரசுரங்களை வெளியிட்டதாகவும்  கருமுத்து தியாகராசரின் பணிகள் போராட்டங்கள், பிரசுரங்களின், உள்ளீடுகள் எனச் சிறப்பானதொரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மலையகத்தின் முதல் நாவல் எனப்படும் -சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி- :
         மஸ்கெலியாவிலிருந்து ஆ.பால் என்பவரால் எழுதப்பட்ட இந்நாவல் 1937ல் வெளிவந்துள்ளது. கொழும்பிலிருந்து அப்போது வெளிவந்த ‘வீரகேசரி’ பத்திரிகையின் ஆசிரியர் எச்.நெல்லையா 1934 லிருந்து 1941 வரை ஐந்து நாவல்களை எழுதியுள்ளார். இந்நாவல் போன்றே அவரது நாவல்களின் பெயர்கள்  எல்லாவற்றிலும் ‘அல்லது’ என இரு தலைப்புகள் அடங்கியதாகத் தான் உள்ளன. இது அக்காலகட்டத்தின் ஸ்ரைல் தானோ தெரியவில்லை. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவலின் தலைப்பும் ஞாபகத்திற்கு வருகிறது.
              மஸ்கெலியாவிலிருந்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே எழுதியது என்ற வகையில் இது மலையக முதல் நாவல் என்ற பெருமைக்குரியது எனவெழுதும் கட்டுரையாளர் அந்நேரம் இந்தியாவிலிருந்து வெளியான மர்மநாவல்களின் பாதிப்பும் ஆ.பால் அவர்களைப் பாதித்துள்ளது எனக் கூறுவதில் நியாயமுண்டு. இந்நாவலின் கதை சுருக்கமாக இத்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. அதில் சம்பவங்கள், இடங்கள், காலங்கள் எது பற்றிய கவலையுமின்றி கண்டபாட்டுக்குப் பாய்ந்தோடியிருக்கிறது அவரது கற்பனைக் குதிரை.
              மலையகத்தையோ அம்மக்களையோ பார்த்திராத புதுமைப்பித்தன் துன்பக்கேணி(1935) எழுதி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே ஆ.பால் இப்படியொரு நாவலை எழுதியது மிகப்பெரிய நஷ்டம் என்கிறார் நித்தியானந்தன். உண்மை தான் கற்பனையான நாடு, அரசர்கள், மாளிகை எனக் கதையை வாசிக்கும் போது மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் பட்டபாடுகள் ஏன் இவரது கதையாகவில்லை?எனக்கேட்கத் தோன்றுகிறது தான்.
கண்ணனின் காதலி :
அதியற்புதக் கற்பனையும் யதார்த்தமும் கொண்ட நாவல் இது என்கிறர் கட்டுரையாசிரியர். மலையகப் புனைவு இலக்கியத் துறையில் முக்கியமான ஒன்றாக இதை எடுக்கலாம் என்று தன் ஆய்வுப் பார்வையை நம்முன் வைக்கிறார்.
             1940 ல் வெளியான கண்ணனின் காதலியை எழுதியவர் ஜி.எஸ்.எம்.சாமுவேல்.இவர் தோட்டப் பாடசாலையொன்றின் ஆசிரியர்.இது இரத்தினபுரியிலேயே அச்சிடப்பட்டுள்ளது. இதன் கதைச்சுருக்கமும் அதன் குணாம்சங்களும் ஆராயப்படும் போது அக்காலகட்டத்தின் சமூக நாவலிது எனக் கூறுவதில் பிழையில்லை.
             சாதியப் பிரிவினையைக் கொண்ட இந்தியக் கிராமமொன்றில் கதாநாயகனும் நாயகியும் பிறந்து வளர்ந்து காதலாகின்றனர். அதன் பின் நாயகியின் குடும்பம் வறுமையின் காரணமாக மலையகத்திற்கு வருகிறது. அங்கு தோட்டத்தில் அடக்குமுறையும் பாலியல் துன்புறுத்தலும் தோட்டத்தை விட்டுத் தப்பித்த அக்குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளுமாகக் கதை சென்று கண்ணன் இலங்கை வருவதும் சந்திப்பதுமாகக் கதை செல்கிறது. ஒடுக்கப்பட்ட சமூக இளைஞனே கதையின் நாயகனாவதும் சாதிப்பிரச்சனை எழும்புவதும் கண்ணம்மா படிப்பறிவு பெற்றவளாயிருப்பதுமென எழுதப்பட்ட கதை பின்பு ஃபன்ரஸிக் கதைகளைப் போல நகருவதும் மர்மக்கதை போல இருப்பதுமென இறுதிப்பகுதி அமைந்துள்ளது. ஆயினும், சாதியஒடுக்குமுறை,கலப்புமணம்,தோட்டத்தில் தொழிலாளர்களின் துன்பங்கள்,கங்காணி, தோட்டத்துரையின் சர்வாதிகார நிர்வாகம் என இம்மக்களின் பிரச்சனைகளை 1940ல் எழுதியது மலையகத்திலிருந்து வெளியான நாவலில் என்பது பாராட்டிற்குரியது.
 
அஞ்சுகம் அம்மையார்:
      ‘அஞ்சுகம் :மலையக இலக்கியத்தின் முதற்பெண் ஆளுமை’ என்ற ஆய்வுரை இறுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது.தேவதாசிகள் பரம்பரையில் பிறந்த அஞ்சுகம் என்ற பெண்மணி தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்கி தங்களின் ஆறு தலைமுறைப் பெண்களின் வரலாறை எழுதினார். அப்பதிவின் பெயர் ‘உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு’.இது 1911ல் வெளியிடப்பட்டுள்ளது. ‘இவர் மலையக இலக்கியத்தின் முன்னோடிப்பெண் ஆளுமை’  என மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதியிருப்பது எக்காரணங்கொண்டு என்ற கேள்வி எனக்குள் ஏற்பட்டது.
       இந்தியாவின் குளித்தலையிலிருந்து 1850ல் யாழ்ப்பாணம் கைதடி விக்னேசுவராலய கோயில் நிர்வாகத்தினரின் அழைப்பிற்கிணங்க அழைத்து வரப்பட்டவர் அஞ்சுகம் அம்மையாரது தாயார் கமலாம்பிகை. பின்னர், கொழும்பு சிவாலயத்தில் கணிகையாக மூத்த மகளான சந்தானவல்லியைப் பொட்டுக்கட்டிவிடுகிறார். தொடர்ந்து கொழும்பில் வாழும்போது பிறந்த அஞ்சுகம் பொன்னம்பலவாணேசுரர் ஆலயப் பணியில் பன்னிரண்டு வயதில் பொட்டுக்கட்டி ஈடுபடுத்தப்பட்டார். பரதம்,இந்துஸ்தானி இசை, வாய்ப்பாடு,வீணை போன்றவற்றைக் கற்ற இவர் சில காலங்களின் பின் கொழும்பிலுள்ள வர்த்தகர் சின்னையாபிள்ளையின் அபிமான ஸ்திரீயானார். இந்த அஞ்சுகம் தான் தங்கள் கணிகையர் குலத் தலைமுறை வரலாறையும் எழுதியவர் என இக்கட்டுரையில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. இவர் எழுதிய உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு அஞ்சுகம்அம்மையாருக்கு ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் பெரும்பாராட்டைப் பெற்றுத் தந்தது என அறியப்படுகிறது என்ற விபரங்கள் அக்காலத்தில் வாழ்ந்த விளிம்பு நிலைப் பெண்ணொருவரது  அறிவையும் பெருமையையும் அறியக்கூடியதாயுள்ளது
             தனது குலமரபை முற்று முழுதாக ஏற்றுக் கொண்டதுடன் உடன்கட்டையாக வேகுதலையும் ஆதரிக்கின்றார். இந்து சனாதனப் புராணப் புனைவுகளை மெய்யென்று ஏற்றுக்கொண்டார் என்பது கூட ஒரு பக்கம் வைக்கப்பட்டாலும் மலையக இலக்கியத்தின் முதற்பெண் ஆளுமை என்ற அடைமொழி இவருக்கு எவ்வாறு பொருந்துகிறது? ஒரு பெண்ணின் இலக்கிய ஆளுமையைப் பாராட்டுவதில் தவறில்லை. ஆனால் கொழும்பின் பிரபல ஆலய கணிகை.பிரபல வர்த்தகரின் விருப்பத்திற்குரிய பெண்ணாக இறுதிவரை அன்போடு நடாத்தப்பட்டுச் சகல கலைகளும் கற்பிக்கப்பட்டுத் தனது பரம்பரையின் வரலாறை எழுதிய இப்பெண்மணியை மலையகத் தோட்டங்களில் கொத்தடிமைகளாயிருந்த பெண்களின் இடத்தில் வைத்து ஒப்பு நோக்கி முதலிடத்தை வழங்கலாமா? அல்லது இந்தியாவிலிருந்து வந்தவர்களைப் பொதுவில் வைத்து நோக்கும் பார்வையில் இருந்து இவரும் இந்திய வம்சாவழி என்பதைக் காரணமாகக் கொண்டு மலையகத்தவர் எனக் கட்டுரையாளரால் குறிக்கப்படுகிறாரா?
      இதே தொகுப்பிலுள்ள -சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி -என்ற கட்டுரையில் ஓரிடத்தில் ஆசிரியர் கீழேயுள்ள பந்தியை எழுதியுள்ளார். அது இப்படியாக….
‘மலையக நாவல் இலக்கியம் தொடர்பில் து.தொ.சு.இராசம்மாள் ‘சத்யமித்ரன்’ பத்திரிகையில் தொடராக எழுதி 1929ல் ‘சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி’என்ற தலைப்பில் நூலாக வெளியான நாவல் குறிக்கப்படுகிறது. து.தொ.சு. இராசம்மாள் கொழும்பில் வாழ்ந்த உயர்பொலிஸ் அதிகாரியின் மகளாவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் எழுதிய நாவலும் மலையகம் சார்ந்ததல்ல. அந்த நாவலின் களம் பெருமளவில் தமிழகமாகவேயுள்ளது. அவரை மலையக இலக்கியப் பரப்பில் அடையாளம் காண்பதற்கில்லை’
ஆம். இது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. மாற்றுக்கருத்தில்லை.
                எழுத்துப் பிழைகளேயற்ற ஒரு தொகுப்பு எனப் பாராட்டக்கூடியது ‘கூலித்தமிழ்’.  34ம் பக்கத்தில் ஆண்டுப்பிழையொன்று தென்பட்டது. ‘ 1834 – 1986 க்கு இடைப்பட்ட ஐம்பதாண்டு காலத்தில்….” என்ற வரியில் இலக்கங்கள் 8 மற்றும் 9 இடங்கள் மாறியிருப்பதை மறு பதிப்பிடக் கூடிய நேரத்தில் திருத்தும் போது கவனத்தில் கொள்வதற்காக இங்கு சுட்டுகிறேன்.
                     தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் என்னென்ன விதமாகவெல்லாம் பொய்களைச் சொல்லி நம்ப வைக்கப்பட்டு கப்பல்களில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டார்கள் என்ற துயர் தரும் விபரங்கள், பயணம் பற்றிய தகவல்கள் என இக்கட்டுரைகள் அறியாத பல விடயங்களை நமக்குத் தந்துள்ளன. மலையக மக்களது உழைப்பில் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை பெரும் அந்நியச் செலாவணியையும் ‘சிலோன் ரீ’ என்ற பெருமைமிகு அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்த போதும் அவர்களது இருப்பிடங்கள், கல்வி வாய்ப்புகள், சம்பளம் என்று முன்னேற்றங்கள் எந்தளவில் ஏற்பட்டது? நாட்டின் ஏனைய பிரதேச மக்களால் இவர்கள் இன்றுவரை எவ்விதமாகப் பார்க்கப்படுகின்றனர்? அத்தொழிலாளரது உழைப்பில் ஈட்டும் அந்நியச்செலாவணி அவர்களைச் செழிப்பாக்குவதற்கு ஓரளவாவது உபயோகப்படுகின்றதா?இவை போன்ற ஏராளங் கேள்விகளை ஏற்படுத்தியது இத்தொகுப்பின் வாசிப்பு. கூலித்தமிழ் அவசியமான ஒரு பதிவைச் செய்துள்ளது.
 *
ஆசிரியர் :மு.நித்தியானந்தன்
கூலித்தமிழ்
வெளியீடு : க்ரியா
முதற்பதிப்பு :ஒக்ரோபர் 2014
பக்கங்கள் : 179
விலை : ரூ.400
*
நன்றி : ஆக்காட்டி   மார்ச்-ஏப்ரல் 2015 (இதழ் 5)
Advertisements