-புஷ்பராணி-

Modern Art101

ஈழத்தில்    இருந்து   புலம்  பெயரும்போது ,உறவுகள், சொத்துகள் , வீடுவாசல்கள்….அழிக்க   முடியாத   பல   நினைவுத்தடங்கள்    என்று   எல்லாவற்றையும்  தடாலடியாக  அங்கேயே   விட்டுவிட்டு வந்த   நம்மவர்கள் சாதியையும் அதனோடு    சேர்ந்து   விடுவிக்கமுடியாத   வீணாய்ப்போன   கலாசாரங்களையும் ,மேலோங்கி   எண்ணங்களையும்   முன்பிருந்ததைவிட மிக   அதிகமாகவே   புதையல்   போலப்  பொத்திக்கொண்டு  வந்து தாம்   தஞ்சமடைந்த   நாடுகளிலும்   பேணி  வளர்க்கும்   அநாகரிகத்தை  மிக   உன்னதமாக   நினைத்துப்  பெருமை   வேறு  கொள்கின்றார்கள்.
                 இதுபற்றி   எழுதும்போதே என்   காதில்   விழுந்த   …கண்ணால்   கண்ட   பல   சம்பவங்கள்  வரிசை  கட்டிக்   கண்முன்னே   விரிகின்றன…தாம்   வாழும்     நாடுகளிலுள்ள   பலவித   பழக்கவழக்கங்களை   முக்கித் தக்கிப் பின்பற்றி  நாகரிக   நடைபோடப்   பிரயத்தனப்படும்   இத்தகையோர் ,தம்  பிள்ளைகளின்   திருமண  விடயங்களில்   மட்டும்  விடாப்பிடியான   பலவந்தத்   திணிப்பு   முறையைக்   கையாண்டு   வெற்றியும்  பெறுகின்றனர். சில வேளைகளில்  பிள்ளைகளின்    மௌனமான    எதிர்த்தாக்குதலால்   நிலை  குலைந்து  ,தற்கொலை  செய்யும்   அளவுக்கே  சிலர்  போய் விடுகின்றனர்.
                               நோர்வேயில்  வசித்த   ஓர்  இலங்கைத்  தமிழர் ,  தன்  மகன், தம்மால் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒரு  பெண்ணைத்   திருமணம்   செய்ததற்காகத்   தூக்கு  மாட்டிச்  செத்திருக்கின்றார்.  அவ்வளவு ஆழமாகப்   பிற்போக்கான   எண்ணங்களும் ,சாதியின   உணர்வும்   இவர்களின்   இரத்தத்திலேயே    ஊடுருவி   விட்டது.
                                பல   பெற்றோர்கள்   ,தமது   பிள்ளைகளின்    திருமணம்   பற்றித்   தமக்குள்ளேயே   ஒரு  வரம்பு  கட்டி ,நிம்மதியற்று   அலைவதையும்   அறிந்திருக்கின்றேன்.    தம்மால் ஒடுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லது   வேற்று   இனத்தவரையோ    தம்  பிள்ளைகள்   காதலித்து   விடுவார்களோ    என்ற   பயத்தில் ,  படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று தங்கள் தங்கள் சொந்தக்காலில் இந்தப் பெண்கள் வாழத்தொடங்குவதற்கு முன்னரே அவசர  அவசரமாகச்  சின்ன  வயதிலேயே  ,தமது  சாதியிலோ ,உறவுக்குள்ளேயோ    அவர்களுக்குத்   திருமணம்   செய்து   வைத்து   மகிழ்கின்றனர்.
                              இந்த மனப்போக்கால் அதிகமும் பாதிக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதும் பெண் பிள்ளைகள் தான். பல்கலைக்கழகம்   சென்று  படித்துக்கொண்டிருந்த  ,இந்த  நாட்டில்  பிறந்து  வளர்ந்த    பல   பெண்  பிள்ளைகளுக்கு அவர்களது விருப்பங்கள் , ரசனைகள் , காதலை மதிக்காமல் , தமது   சாதியில்   பிறந்த   தகுதிக்காக  மட்டுமே  ஓர் ஆளைக் கல்யாணம்  செய்து  வைத்து  அந்தப்   பிள்ளைகளின் ,விருப்பங்கள், உணர்வுகள், துள்ளல்  எல்லாவற்றையும்  ‘சாதிவெறி’ என்ற சகதியில் குழிதோண்டிப்   புதைத்து  வீராப்புப்  பேசும்  பலரை   வெறுப்போடு   கவனித்திருக்கின்றேன்.  ஒரே இனம் ஒரே சாதி என்பதைத் தவிர வேறு அப்பெண்ணுக்கு வேறு எவ்விதத்திலும் ஒத்துவராத ஒருவரை கல்யாணம் கட்டி வைப்பதன் மூலம் தங்களின் கெளரவம் பேணப்பட வேண்டுமென்பதைத் தவிர வேறொன்றுமில்லை.என்னுடன்  பேசும்போது ஒருவர்   சொன்னார்   ‘எங்கள்   சாதியில்   கல்யாணம்   செய்துவைப்பது    எங்கள்   உரிமை’   என்று  ….. அப்படியென்றால்   என்ன   இதில்  ஏதாவது   அர்த்தம்  இருக்கின்றதா?
                  இன்னொன்றையும்   இங்கு    குறிப்பிட்டே   ஆக  வேண்டும்.  மாப்பிள்ளைக்குக்  கொடுக்க  வேண்டிய   சீதனப்  பணம்   கொடுத்தேயாகவேண்டும்.[சீதனம்   வேண்டாதவர்கள்    இதைக்   கணக்கில்  எடுக்க  வேண்டாம்.]    இதுபற்றி   என்  அயலில்  வசிக்கும்  நண்பரிடம்  பேச்சுக்  கொடுத்தபோது,’ஆம்பிள்ளக்குக்  கட்டாயம்   சீதனம்   கொடுக்கத்தானே   வேண்டும்’ என்ற  நிலைப்பாட்டை எவ்விதத்   தயக்கமோ,  கூச்சமோ  இன்றி  மறுமொழியாகத்   தந்து ‘ ஐரோப்பிய நாடொன்றில் இத்தனை வருடங்களாக வாழ்ந்தும் கூட  இப்படியா?’ என்று   என்னைத்   திகைக்கவைத்தார்.
                        இங்கு உதாரணங்களாக   சில  சம்பவங்களைச்   சொல்கின்றேன். எனக்குத்   தெரிந்த   குடும்பமொன்றில்  ,  பதினேழு   வயதுப்பெண்   காதல்கொண்டிருப்பது   வீட்டில்   தெரிந்துவிட்டது.    பெண்ணின்   தாய் ,மகளின்   காலில்   விழுந்து ,சாமி  படத்தின்  முன்  வைத்து, காதலித்தவனை   மறக்கும்படி   சத்தியம்   கேட்டிருக்கின்றார்  மகளும்   சம்மதித்து    அவனை   மறப்பதாக    வாக்குக்   கொடுத்துவிட்டாள். மகிழ்ந்த  பெற்றோர்,தமது   சாதியில்   ஒருவனைப்   பார்த்துத்    திருமண   அலுவல்களில்   மும்முரமாக   இறங்கிவிட்டனர். எல்லாவற்றுக்கும்  தலையாட்டி மௌனமாக   இருந்த   மகள்   18  வயது   பூர்த்தியானதும்   காதலித்தவனோடு   போய்  விட்டாள் .
                      அதன்பின்  நடந்த   கூத்தை   என்னவென்பேன்!  அவர்கள்   வீட்டில்  ஒரே  ஒப்பாரிதான்.தெரிந்தவர்கள் ,உறவினர்கள்   எல்லாம்  துக்கம்  விசாரிப்பதுபோல  விடுப்புப்  பார்க்க   வந்துவிட்டனர். தாய்க்கு   வலி  வந்து   மயங்கிவிழுந்து  …பிரச்சனை மற்றவர்களின் கேலிக்காகிவிட்டது. வந்தவர்களையெல்லாம்    தாய்க்காரி   கட்டிப்பிடித்து   அழுதது    ஏன்  என்று  புரியவேயில்லை! அவ்வளவு   சாதித்திமிர் !எட்டுவருடங்கள்    ஆகியும்   அந்தப் பெண்ணைப்   பெற்றோர்   வீட்டில்   எடுக்கவேயில்லை.
                                   வேறு   சில  பெற்றோருக்கு    இன்னோர் விதமான    பேராசை. இங்குள்ள   பணம்   இலங்கையில்   கூடுதல்   பெறுமதி   ஆனதால் ,ஊருக்குப்  போய் டொக்டர் , இஞ்சினியர்    என்று   மாப்பிள்ளை  பார்த்து   மகள்களுக்கு   மணம்  முடிக்கவேண்டும்   என்று   தாமாகவே முடிவெடுத்து விடுகின்றனர். இங்கு   பிறந்து  வளரும்   பிள்ளைகளின்   உளவியல் ,சிந்திக்கும்   மனோபாவம்   எதுவுமே  பெற்றோருக்கு   ஏன் தான்    விளங்குவதில்லையோ   தெரியவில்லை.
                                                       இலண்டனில்  வசிக்கும்   எனக்கு   நன்கு  தெரிந்த   வழக்கறிஞர்   ஒருவர்   தனது   மகளுக்கு   நிறையச்  சீதனம்  கொடுத்து  ,இலங்கையில்  வசிக்கும்   டொக்டர்   மாப்பிள்ளைக்கு   மணம்  செய்து   வைத்தார்.  ஆயிற்று  ..மாப்பிள்ளையும்    இலண்டன்  வந்தாச்சு.வந்த   கொஞ்ச   நாட்களிலேயே    மாப்பிள்ளையின்   மனதில்  சந்தேகப் பேய்  புகுந்து   உலுப்பத் தொடங்கிவிட்டது. மனைவியைப்  பலவழிகளில்   சித்திரவதை   பண்ண   ஆரம்பித்துவிட்டார்.மனைவியும்   ஒரு   டாக்டர்தான்.பிரச்சனை   வெடித்து’இவனோடு   என்னால் வாழ   முடியாது’ என்று மகள்   கதறியழத்   தந்தை   திகைத்துவிட்டார்.  முடிவு? விவாகரத்தில்  போய்    நின்றது. இதே   போன்றொரு   சம்பவம்   பிரான்சிலும்   எனக்குத்   தெரிந்தவரின்   மகளுக்கும்  நடந்தது.   எனக்குத் தெரியாமல் இன்னும்   எவ்வளவோ?
                             எம்மவர்  மத்தியில்  மட்டுமல்ல இந்தியா ,பாகிஸ்தான் ,பங்களாதேஷ்  போன்ற   நாட்டைச்  சேர்ந்தவர்கள்  மத்தியிலும்   இத்தகைய   சம்பவங்கள்   நடைபெற்றுக்  கொண்டுதான்  இருக்கின்றன. சில நாட்களுக்குமுன்   இலண்டனில்   வசிக்கும்   பாகிஸ்தானியக்  குடும்பமொன்று மகளுக்குப்  பலவந்தமாகத்  தமது  நாட்டில்  திருமணம்   செய்து  வைப்பதற்காக  மகளுக்கு   மயக்க  மருந்து  கொடுத்து   விமானத்தில்  பயணம்  செய்திருக்கின்றனர். மகள்   நோய்வாய்ப்பட்டு   மயங்கியிருப்பது போலப்    பாவனை   செய்திருக்கின்றனர்.கொஞ்ச  நேரத்தில்  மயக்கம்  தெளிந்த அப்பெண்   சிறுநீர்   கழிக்கப்  போவதாகச்   சொல்லிப்  பெற்றோரை   விலக்கிவிட்டு   எழுந்து  போயிருக்கின்றாள்…….போன   பெண் ,விமானப்  பணிப்பெண்ணிடம்    நடந்ததைக்  கூறித்   தன்னைக் காப்பாற்றும்படி   கேட்டிருக்கின்றாள்  பின்னர்   அந்தப்  பெற்றோர்   சிறை   வைக்கப்பட்டதாகப்    பத்திரிகைகளில்   பார்த்தேன்.  இங்கு  பிறந்து  வளர்ந்து  ,இங்கேயே  படித்துக்   குடியுரிமையோடு   இருக்கும்   பெண்பிள்ளைகளைப்    பலவந்தமாகத்   தம்  நாட்டுக்குக்  கொண்டுபோய்  திருமணம்   செய்துவைத்து  ,மாப்பிள்ளையை   இங்கு  வரவழைகின்றபோது ,அந்த  மாப்பிள்ளையோடு   ஓட்டிக்கொண்டே   ஆணாதிக்கமும்  வந்து  சேர்கின்றது.  இங்கு   வந்து  சேரும்   அவர்கள்   தாழ்வு  மனப்பான்மையால்   மனைவியை   அடக்கிவைக்கவே   விரும்புகின்றனர்.
                            எனக்குத்   தெரிந்த   உறவினர்  ஒருவர்   மிகச்  சின்ன  வயதிலேயே  பிரான்சுக்கு   வந்து  ,நல்ல  வேலையில்  இருந்த   தன்  தங்கைக்கு ,மணமகன்   தேட  வெளிக்கிட்டபோது எதிர்ப்பட்ட   சிரமங்களைக்  கண்டு   சோர்ந்தே  போய்விட்டார்.  சீதனம்  கொடுப்பதில்   அவருக்கு   விருப்பமில்லாத    போதிலும்  ,தங்கையைக்   கரையேற்றும்   துடிப்பில் தனது   பிடிவாதத்தைத்   தளர்த்திச்   சீதனப்  பணம்  கொடுக்கச்   சம்மத்தித்தார்.அந்தத்  திருமணப்  பதிவுக்கு   நானும்  சென்றிருந்தேன். சீதனப்  பணத்தைக்   கைநீட்டி  வாங்கியதே   மாப்பிள்ளைதான்.  அருவெருத்துப் போனேன். ஓர்   இளைஞன்   இப்படிக்  கேவலமாக   இருக்கின்றானே   என்று   அவனை   நிமிர்ந்து   பார்த்தபோது   ஓர்  அசிங்கமான   புழுவைப்  பார்ப்பது  போன்ற   உணர்வே   எனக்கு   ஏற்பட்டது.   இப்போது   அப்பெண்னின்   நிலவரம்   என்னவென்று  அறிய  ஆவலா? வேலைக்குப்  போனால்   தன்னை  மதிக்கமாட்டாள்  என்ற  கீழ்த்தரப் புத்தியோடு   மனைவியை  வேலைக்கும்   விடாமல், கார்   ஒட்டவும்   விடாமல் ,ஓர்  அடிமை  போல  நடத்துகின்றான்.
                               இன்னோர்   கதை   இதுவும்   எனக்கு   நன்கு   தெரிந்த   குடும்பத்தில்   நடந்தேறியது. இவர்களை  ஊரிலேயே   எனக்குத்   தெரியும். இந்த வீட்டின்   இரண்டாவது   மகள்   படித்துக்  கொண்டிருக்கும்போது , தான்  காதலித்த   பையனுடன்   வீட்டுக்குத்   தெரியாமல் போய்விட்டாள். இதனால்   மனமுடைந்த  தந்தை   பண்ணிய   அட்டூழியத்தைக்  கேளுங்கள் ‘என்னால்   துக்கம்   தாங்க  முடியவில்லை.கொஞ்ச  நாட்கள்   ஊரில்  போய்   நிற்போம்’ என்று    மனைவி ,பிள்ளைகளை   அழைத்துக் கொண்டு  இலங்கைக்குப்   போய்விட்டார் .ஏற்கனவே  ,மனைவி  ,பிள்ளைகளுக்குத்  தெரியாமல் ஊரில்  இருந்த  தன்  தமக்கையோடு   பேச்சு  வார்த்தை  வைத்திருக்கிறார்.   ஊருக்குப்   போன   சில   நாட்களிலேயே   தன்  மூத்த  மகளுக்கும்  [பிரான்சிலுள்ள   பல்கலைக் கழகம்  ஒன்றில்   படித்துக் கொண்டிருந்த   பெண்ணிவள் ]தன்   அக்காவின்  மகனுக்கும்   உடனே  திருமணம்  என்று  அறிவித்துவிட்டார். மனைவியும்  ,மகளும்   கதறியழ  ஆரம்பித்துவிட்டனர். ‘என்னடி   இவளையும்    எவனோடாவது    ஓடவிட   ஆயத்தமாடி?’ என்று  மனைவியைப்  போட்டு  அடித்துவிட்டு  மகள்   அழ ….அழக்  கல்யாணத்தை   நடாத்தியே   விட்டார்.   சில   மாதங்களுக்குள்   மாப்பிள்ளையை    பிரான்சுக்கு    அழைப்பதாகக்   கூறி ,அக்காவின்   குடும்பத்துக்கு  வாக்களித்துவிட்டு   எல்லோரும்   பிரான்சுக்கு   வந்துவிட்டனர்.
                                பிரான்சுக்குத்  திரும்பியதும்   அந்தப்  புத்திசாலி   மகள்   என்ன  செய்தாள்  தெரியுமா?இலங்கை-பிரான்ஸ்   தூதரகங்களோடு    இரகசியமாகத்   தொடர்புகொண்டு   ,’விடுமுறைக்கு   இலங்கைக்குப்   போன  இடத்தில்   தந்தையையும்  [தகப்பனை  மாட்டிவிடக்   கூடாதென்பதில்   அவதானம்]    தங்களையும்  வற்புறுத்தித்   தன்  விருப்பமின்றி  நடந்த   அந்தத்   திருமணப்  பதிவை இல்லாமல்  பண்ண  வேண்டுமென்று  கூறியிருக்கிறாள். முடிவு   பெண்ணுக்குச்   சாதகமாகவே   நடந்திருக்குமென   நினைக்கின்றேன்.  இதையெல்லாம்    தொலைபேசியில்    அழுது  புலம்பியது    பெண்ணின்   தாயே.
                       எனக்குத்  தெரிந்த  தோழியொருத்தி   தன்  மகளுக்குச்  சீதனம்   கொடுக்காமல்   திருமணம்   செய்துவைக்க    அரும்பாடு  படுகின்றார்.  இது  எவ்வளவு   சிரமம்  என்பது  தெரிந்தும்   அவர்  தன்  பிடியைக்  கைவிடவேயில்லை.
                புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்  பல  ஆண்கள்   மணமுடிக்கப்   பெண்  இல்லாது  துவண்டு  போயிருக்கின்றனர். அப்படியிருந்தும் ,சீதன  எதிர்பார்ப்புக்   கொஞ்சமும்    குறையாதது   வேடிக்கையே.  இங்கு  வளரும்    பெண்பிள்ளைகள்   சரியில்லை  என்று மறுவளத்தால் இவர்கள் சொல்வதும் நாட்டிலிருந்து இந்நாடுகளின் சட்டதிட்டங்கள் சலுகைகளை அறியாத பெண்களைத் திருமணஞ் செய்து அழைத்து வந்து வீட்டுக்கள் பூட்டி வைத்திருப்பதும் நடக்கவே செய்கின்றன.
                          விடுமுறைக்கென்று  இலங்கைக்குப்  போகும்  சில பெற்றோர்கள்   ஒரு வித்தியாசமான    உள்  நோக்கத்துடனே   செல்கின்றனர்  என்பதை அறிந்திருக்கிறீர்களா? உறவினர்களைப்   பார்க்க  வேண்டும் ,ஊரைப்பார்க்க  வேண்டும்  என்பதைவிடப்  பிள்ளைகளுக்குத்  துணையை  நன்கு பழக்கப்படுத்தவேண்டும்  என்ற  தலையாய ஆசையையே  முக்கியமாகக் கருதிப்  பிள்ளைகளையும்  கூட்டிக் கொண்டு  வருடா வருடம்  சென்று வருகின்றனர். எனக்குத் தெரிந்த  பெண்ணின் மகளுக்கு  இப்போது  பதின்மூன்று வயது. அங்கே உறவுக்குள்ளேயே  ஒரு மாப்பிள்ளை  பார்த்துப்  பேசி முடித்தாயிற்று.’ஒவ்வொரு  வருடமும்  பிள்ளையைக் கூட்டிக்கொண்டு  போய்   பெடியனைக்  காட்டிப்  பழக்கப் படுத்தினால்   அவள்  ,இங்கு வேறு  யாரையும்  மனதில் நினைக்கமாட்டாள்’ இது   அந்தச் சிறுமியின்  தாய்  எனக்குச் சொன்ன  அற்புதமான விளக்கம்  .இதற்கு   என்னத்தைச்   சொல்ல?
                                  புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த  தமிழ்ப்  பெற்றோர்கள்  இங்கு வந்தும் குலம் ,கோத்திரம்  கவனிப்பதிலேயே  குறியாக   இருக்கின்றனர். கல்வியையும் ,பல கலைகளையும்  கற்க  வைத்து  உயர்ந்த   இடத்தில்  வைக்க ஆசைப்படுவோர் , மாப்பிள்ளை   பார்க்கும்   விடயத்தில்  மட்டும் , அந்தப் பிள்ளைகளின்    சுயசிந்தனை ,அறிவியல்  கண்ணோட்டம், விருப்பு  வெறுப்புகள்   எல்லாவற்றையுமே   ஒன்றுமேயற்ற   சூனிய   வெளிக்குத்   தள்ளிவிடுகின்றனர்.  திருமணத்துக்குமுன்-திருமணத்துக்குப்  பின்  என்ற   இரு வேறு  சூழ்நிலைகளை   உருவாக்கித்   தம்  பிள்ளைகளை   வாழ வைக்கின்றோம்  என்று சொல்பவர்கள்,  தம்மையே   ஏமாற்றுகின்றோமே  என யோசித்தும் பார்க்க விரும்புவதில்லை.
                      அப்பெண்ணுக்குத் திருப்தியற்ற  திருமண  பந்தத்தால்   உருக்குலைந்த    மன  நிலைக்குத்   தள்ளப்பட்டுப்   பிள்ளைகள்   துடிக்கும்போது    கூடச்   சில  பெற்றோர்கள்    வரட்டுக்  கெளரவத்தையே   பிரதானமாக   எண்ணி   யதார்த்தத்தைப்  புரிந்துகொள்ள  மறுக்கின்றார்கள். என்னதான்  அன்பைக்கொட்டிச் சீராட்டி   வளர்த்தாலும்  , புரிந்துணர்வு   கொண்ட  … நன்கு  தெரிந்த   ஒரு   துணையைத்   தேடும்   விடயத்தில்   மட்டும்,பெற்றோர்   முட்டுக்கட்டை   போட்டு  முள்வேலி   இடுவது   ஏன் ?அவர்கள்   வாழ்க்கை   நன்றாக   இருக்க   வேண்டும் ,அழிந்து  போகக்கூடாது   என்ற  அதீத   அக்கறையா?அப்படியானால்   பெற்றவர்கள்    பார்த்துவைத்த   மாப்பிள்ளைகளோடு  அத்தனைபேரும்  ஒருமித்து  அன்புடன்  வாழ்கின்றார்களா   என்ன? இத்தகைய    விருப்பற்ற   கட்டாயத்   திருமணங்களால்   எம்   பெண்கள்   தற்கொலை செய்வதும்  மனச்சிதைவோடு    நடைப்பிணமாக   அடிமைகளாக    வாழ்வதைக்   கண்டும் ,அது  பற்றிச்   சிந்திக்க   மறுப்போருக்கு  எது  சொன்னாலும்   காதில்   ஏறாது. பெண்பிள்ளைகளின்  மனவுணர்வுகளின்   சுதந்திரத்துக்கு   மதிப்புக்   கொடுக்க  முன்   வருவார்களா?அல்லது தாம் நாட்டிலிருந்து travelling bagல்  காவிக் கொண்டு வந்த சாதியையும் பெண்ஒடுக்குமுறைகளையும் கட்டிப் காபந்து செய்யப்போகின்றார்களா?
நன்றி : ஆக்காட்டி இதழ் 5 (மார்ச்-ஏப்ரல் 2015)
Advertisements