பெண்கள் சந்திப்பென்று வருடாவருடம் சந்திக்கின்றீர்களே அப்படி என்ன நடக்கிறது?என்று சந்திப்பு முடிந்த சில நாட்களில் நண்பர்கள் சிலர் கேட்பது வழமையாகிவிட்டது. இம்முறையும் அப்படித்தான் தொலைபேசியிலும் பேஸ்புக்கிலும் பெண்கள் சந்திப்பைப்பற்றி கற்பனை செய்ய முடியாதவர்களாக ஆர்வம் பெருகவும் ஆவலாதி பேசியும் சிலர் உரையாடுகின்றனர்.
 penkal san 5
         நான் எந்தவொரு நிகழ்வில் பங்குபற்றினாலும் அங்கே பேசப்படுபவற்றைக் குறிப்பெடுக்கும் பழக்கமில்லை. என்னை மறந்து நிகழ்ச்சிகளில் ஒன்றிப்போய்விடுவேன். அங்கே நடப்பவற்றை இரசித்துக் கொண்டிருப்பேன். பேசுபவை பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன்.ஆகவே ரியூட்டறியில் எழுதுவது போல நோட்ஸ் எடுத்துக்கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காத வேலை. நிகழ்ச்சிகளின் தலைப்புகளைப் பார்த்தவர்கள் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்று ஊகித்துக் கொள்ளலாம். இல்லையெனில் சற்றுப் பொறுமை காக்க வேண்டும்.தோழிகள் யாராவது பெண்கள்சந்திப்புப் பற்றிய குறிப்பை விரைவில் வெளியிடுவார்கள். ஆனால் ஆண்களுக்கு அதெல்லாம் முக்கியமில்லை. ஆம்பிளைகளுக்கு அனுமதியில்லாமல் அப்பிடி என்ன தான் கதைச்சினம்?என்ற குறுகுறுப்புத்தான்.  பெண்ணியம் என்று சொல்லி என்ன கதைக்கிறார்கள்? பெண்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?இவர்கள் போயிருந்து நேரத்தை மினக்கெடுத்தி என்ன பெரிசாக புரட்சி நடந்தது?எதற்காவது ஒரு தீர்வைக்கண்டார்களா?என்று கேள்விகளை வீசுகிறார்கள்.
salma hamsa penkal san
              25 வது வருடமாக நடைபெறும் சந்திப்பின் 32 வது தொடரில் இம்மாதம் 2ம் திகதி பெர்லினில் கலந்து கொண்டேன். இதுவரையிலும் பிரான்சில் நடைபெற்ற மூன்று பெண்கள் சந்திப்புகளில் தான் பங்குபற்றியிருந்தேன். முதன் முதலாக 2004 ல் இரண்டு மாதக்குழந்தையாக இருந்த என் மகனைத் தூக்கி வைத்திருந்து கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பு விமர்சனத்தை நிகழ்த்தியதும் ஞாபகத்திலுள்ளது. இம்முறை பெர்லின் சென்ற போது அந்தக்குழந்தை ‘அம்மா நாங்க வீட்டில இருப்பம் நீங்க  சந்தோஷமாகப் போய்ட்டு வாங்க’ என வழி அனுப்பினான். அண்ணனும் ரஞ்சனும் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். ஆகவே  சமையல், வீட்டுப்பராமரிப்பு போன்ற வேலைகளின்றி அந்த வார இறுதி எனக்கு மட்டுமாக இருந்தது.
             நாம்  பயணித்துக் கொண்டிருக்கும் போது புஷ்பராணியக்கா கைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்தை அனைத்துப் பெண்களுக்கும் தெரிவிக்குமாறு கூறினார். அவர் பெண்கள் சந்திப்புக்கு வருவதாக ஏற்கனவே சொல்லிப் பயண ஏற்பாடுகள் பற்றிப் பேசியிருந்தோம். ஆனால், திடீரென இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக் காரணமாக மருத்துவமனையில் 5 நாட்கள் தங்கியிருந்து ஓரளவு நலமுடன் திரும்பியிருந்த போதும் நாம் புறப்படுவதற்கு முதல் நாளிரவு அம்புலன்ஸில் ஏற்றிச் செல்லுமளவு அவரது இதயத்துடிப்புக் குறைந்து கொண்டே சென்றது.அவர் மருத்துவமனையிலிருந்து வரமுடியாத தன்னுடைய நிலையை எண்ணிக் கவலைப்பட்டார்.எமக்கு அவரது உடல்நிலையை நினைத்துப் பயம் வந்தது. புஷ்பராணியக்காவிற்கு என்று வாகனத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வெறுமை அமர்ந்திருந்தது.
                 நண்பர்கள் தேவதாஸ் மற்றும் தங்கம் வாகனஓட்டுனர்களாக உதவி செய்ய  5 பெண்கள் பிரான்சிலிருந்து மாலை 4 மணியளவில் சந்திப்பின் எதிர்பார்ப்புகளோடு புறப்பட்டோம். வழி… வழியில் வாகனத்தை நிறுத்திக்  கபே  அருந்தி சாப்பிட்டு ஓய்வெடுத்து விடிகாலை 3 மணிக்கு பெர்லின் சென்றடைந்தோம். வாகனத்தை விட்டு இறங்கிப் பயணப்பையைக் கையில் தூக்குகின்றோம். ஜீவமுரளி வாகனத்திற்குப் பக்கத்தில் வந்து நிற்கிறார். நாங்கள் வருவதை எதிர்பார்த்து நித்திரையின்றிக் காவலிருந்து நாம் உறங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று காத்திருந்த அவரது வரவேற்பே உற்சாகத்தைத் தந்தது. உங்களுக்காக ஏற்பாடு  செய்த வீடென்று திறந்தார் அங்கே தயாராகப் படுக்கைகள் விரிக்கப்பட்டிருந்தன.ஏற்கனவே வந்து விட்ட தேவா அக்காவும் பத்மபிரபாவும் மற்றொரு அறையினுள் உறக்கத்திலிருந்தார்கள். மொத்தமாக ஏழு பெண்களுக்கு என அந்த வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த விடிகாலை 3 மணியிலும் தேவதாசையும் தங்கத்தையும் பக்கத்திலிருந்த ராகவன் என்ற நண்பரின் வீட்டு பெல்லை அடித்து எழுப்பி அவர்களுக்கு உறங்க இடங்களை ஏற்பாடு செய்தார் முரளி. அவர்களுடைய வீட்டில் ஏற்கனவே வந்துவிட்ட தோழிகளும் குழந்தைகளுமாகத் தங்கியிருந்தனர். நாங்களோ பயணக்களைப்பின்றிக் கொஞ்சநேரம் சிரிசிரியென்று சிரித்துவிட்டு காலை 9 மணிக்கு மண்டபத்தில் நிற்கவேண்டும்.ஏழு பேரும் குளித்து உடைமாற்ற வேண்டும் சில மணித்தியாலங்களாவது நித்திரையாக வேண்டும் என்ற அவசியத்தினால் கண்சொருகினோம்.
      2 நிமிடங்களில் நடந்து செல்லும் தூரத்தில் தான் பெண்கள் சந்திப்பு நடைபெறும் அரங்கு இருந்தது. மரங்கள் வரிசையாக நின்ற நடைபாதையினால் நடந்து செல்லக் காலைச் சிலுசிலுப்பு உற்சாகத்தை மேலும் ஊட்டியது. அங்கு ஏற்கனவே தோழிகள் பலரும் வந்துவிட்டார்கள். கோப்பி அருந்துபவர்களும் புறோச்சின் சாப்பிடுபவர்களும் ஒருபக்கம். இன்னொரு பக்கம் மேசைகள், கதிரைகளை ஒழுங்கு படுத்தியபடி சிலர். அவரவர் அறிமுகங்களும் ஏற்கனவே அறிந்தவர்கள் சுகநலவிசாரிப்புகள் என்று  அரவணைப்புகளும் முத்தங்களுமாக , அன்பும் நட்புமாக அன்றைய நிகழ்வின் ஆரம்பத்திற்கு முன்பே நமக்குள் புதிய பலம் உருவானதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. உமா தன்னந்தனியனாக நின்று இச்சந்திப்பை நிகழ்த்தியதற்கு இது போன்ற உணர்வுகள் தரும் பலம் தான் காரணமாயிருக்கலாம். அனைவரையும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், உணவு, மண்டப ஒழுங்குகள், தோழிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது எனச் சகலதும் அவரது பொறுப்பாகியிருந்தது.
penkal santhippu 10penkal san 5
அம்மண்டபம் கூட எனக்கு  நல்லதொரு  மனநிலையைத் தந்தது. விற்பனைக்காக ஒரு மேசை முழுவதும் புத்தகங்களும் சஞ்சிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வந்த தாய்மார்கள் கவலைப்படாமல் அவர்களை விளையாட விட்டபடி நிகழ்வுகளைக் கவனிக்கக் கூடியதாகவிருந்தது. அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்களும் புத்தகங்களும் இருந்தன. வேறு வழியில்லை தங்கள் குழந்தைகளைக் கொண்டு தான் வரவேண்டும் என்ற சூழ்நிலையிலும் இச்சந்திப்பில் நாள் முழுவதும் பெண்கள் பங்குகொண்ட  ஆர்வம் பெண்களுக்கான உரையாடல்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
toys penkal santhippu
penkal santhippu 9
                எல்லோரும் எல்லோரையும் பார்க்கும் படியாக அமர்ந்து கொள்வதென்பது வழமையாக நாம் கலந்து கொள்ளும் பல கூட்டங்களிலுமே உள்ள அமைப்பு. குத்துவிளக்கு ஏற்றல், மேடை, மாலை, மரியாதை என்பதெல்லாம் இல்லாத கூட்டங்களில் அனைவரும் சமம் தான். சிலர் தலைப்புக்குட்பட்டுப் பேசுவர்.பலர் அத்தலைப்புகளின் விடயங்களையிட்டு பேசுவர் கேள்விகளை முன்வைப்பர் என்பவை தான் வித்தியாசம். இம்முறை எந்தவொரு நிகழ்விலும் தலைமை தாங்குவது என்பது இல்லாமல் அவ்வப்போது தன் இனிமையான குரலால் ‘மைக்’ கூட இல்லாமல் ஏதாவதொரு மூலையிலிருந்து அடுத்த நிகழ்ச்சி என்ன என உமா அறிவித்துக் கொண்டிருந்தார். அதற்கு எல்லோரும் செவிசாய்த்தோம்.
uma penkal san
        முதல் நிகழ்ச்சி ஸர்மிளா ஸெய்யத்துடன் ‘ஸ்கைப்’ வழியான உரையாடலுடன் ஆரம்பமானது. ஸர்மிளாவின் தெளிவான பேச்சும் ஆளுமையும் நாம் அமைதியாக உற்றுக் கவனித்துக் கொண்டிருக்குமாறு செய்தன. தொடர்ந்து அவருடனான உரையாடலும் நேரம் போவதே தெரியாமல் நடைபெற்றது. அவ்வுரையாடலின் விவாதத்தில் , பெண்கள் சந்திப்பில் உரையாற்ற வருகை தந்திருந்த கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பெண் அரசியல்வாதியாகிய    சல்மா ஹம்ஸாவும் அமர்ந்திருந்து, ஸர்மிளா தொடர்பாக தற்போது நடைபெறும் பிரச்சனைகளையிட்டுத் தன்னுடைய கவலையை ஆற்றாமைகளை விளக்கங்களை முன்வைத்தார்.
penkal santhipu vasippuபின்னர் ஒவ்வா கவிதைத் தொகுப்பும் கடைசி நிகழ்வில்   மதிப்புரைக்கப்பட்டது பொருத்தமாக அமைந்தது. அத்தொகுப்பின் பிரதிகள் விஜியினால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தன. அங்கே விற்பனைக்கு வைத்திருந்த அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பதைக் குறிப்பிடவேண்டும். எனது வாசிப்பிற்கென்று வீட்டிலிருந்து எடுத்துச் சென்றிருந்ததையும் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கவிதைப்புத்தகங்கள் விற்பனையாகாது… கவிதைகள் வாசிக்க அலுப்பு… என்றெல்லாம்ஆட்கள் சொல்லும் கதைகள் அப்போது பொய்த்துப் போயின. சந்திப்பில் ஐந்து கவிதைத்தொகுப்புகளிலிருந்து கவிதைகள் வாசித்தலும் அத்தொகுப்புகள் பற்றிய அறிமுகங்களும் செய்யப்பட்டன. புத்தகவிமர்சனங்கள் வாசிப்பதற்கான ஆர்வத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எழுத்தாளர்களுக்கும் தமது எழுத்துகள் கவனிக்கப்படுகின்றன என்னும் போது உற்சாகம் ஏற்படுகின்றது. தொடர்ச்சியாகப் பெண்கள் சந்திப்பு புத்தக விமர்சனங்களைச் செய்து வருவது   பங்குபற்றுபவர்களது வாசிப்பின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றது.
penkkal santhippu 8
 எம் அனைவருக்குமான உணவை ஜீவமுரளியும் நண்பர்களும் சமைத்துக் கொண்டிருந்தனர். வீட்டில் அந்த வேலையுடன் ஓரளவு வளர்ந்த பிள்ளைகளைக் கவனிப்பதையும் அவர்கள் செய்தனர்.  மதிய இடைவேளை நேரத்தில் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றனர். சுவையான கறிகளுடன் சோறைக் கூடிக்கூடிஅமர்ந்தும் ….திரிந்தும் சாப்பிட்டோம்.
           32 th penkal santhippu     நிகழ்ச்சிநிரலில் அறிவிக்கப்பட்டவற்றில் கேஷாயினி இலங்கையிலிருந்து வர முடியாமல் போனதைத் தவிர்த்து அனைத்தும் திட்டமிட்டபடியே நிகழ்ந்தன.
பேச்சுகள், உரையாடல்கள் தவிர்ந்து றிலாக்ஸாக நடன அசைவுகளுடன் கூடிய ஒரு நிகழ்வையும் லண்டனிலிருந்து வந்திருந்த சமூகச் செயற்பாட்டாளர் ராணி நடாத்தினார். ஆசனங்களை மேசைகளை ஒதுக்கி எல்லோரும் நிற்கக்கூடிய இடமொன்றை ஏற்படுத்தினோம். அதிலே வயது வரைமுறையற்று அங்கிருந்த பெண்களனைவரும் கலந்து கொண்டு மேலும் உற்சாகமானோம்.
nirmala song
நிர்மலா பாய்மரக்கப்பல் ஏறியே வந்தோம் என்ற மலையகப் பாடலைப் பாடியதும் அனைவராலும் இரசிக்கப்பட்டது. இப்பாடல் மீனாட்சி அம்மாவால் 1940ல் எழுதப்பட்டதாகும்.
            நிகழ்ச்சிநிரலின்படி உரைகளும் கேள்விகளும் புதிய தீர்மானங்களுமெனப் பிரயோசனமாக அன்றைய நாள் அமைந்தது என்பது சம்பிரதாயமான எழுத்தல்ல. நிறைவான ஒரு நாளாக அங்கு வந்திருந்த பெண்கள் அனைவராலும் உணரப்பட்டது. அவ்வாறு ஆளுக்காள் மனநிறைவைப் பரிமாறிக்கொண்டோம்.  மாலை நேரச் சிற்றுண்டிகளும் தேநீரும் இரவு உணவுமென உபசரித்த பெர்லின் நட்புகளுக்கு நன்றிகளைச் சொல்ல வேண்டும். வாடகை, உணவு போன்ற செலவுகளை ஈடு செய்வதற்காக குறைந்தது 10 யூரோவை விரும்பியவர்கள் தரலாம் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டது.இயலுமானவர்கள் 10 யூரோவை விட அதிகமாகவும் வழங்கித் தம் தாராள மனதால் உதவினர். அன்றைய நிகழ்வுக்கான செலவுகளை அது பூர்த்திசெய்தது.
penkal santhippu
              முதன்முதலாகப் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இரு பெண்கள் பேசிக்கொண்டது என் காதுகளில் கேட்டது. இவ்வாறு….’ஆண்களுடன் கலந்து கொள்ளும் கூட்டங்களை விட இந்த மனநிலை நல்லாயிருந்ததல்லவா?’ என்றனர். ‘இது வித்தியாசமான மனநிலையைத் தந்தது. எங்களுக்குப் பிடித்திருந்தது’ என்றனர்.
                 உண்மை தான். பெரும்பாலான கூட்டங்களுக்குச் செல்லும் பெண்களின் தொகை ஆண்களுடையதை விட மிகச் சிறு தொகையாகவேயிருக்கின்றது. அது புத்தகவெளியீடாக இருந்தாலென்ன? எழுத்தாளர் சந்திப்பாயிருந்தாலென்ன?அரசியற் கலந்துரையாடல்கள், அஞ்சலிக்கூட்டங்கள் போன்ற இடங்களிலும் மூன்றோ நான்கோ பெண்கள் தான் தொடர்ந்து கலந்துகொள்வதுண்டு. அங்கு ஆண்களின் குரலும் கைகளும் ஓங்கியிருக்கும். ஆனால்,பெண்கள்  பங்குபற்றும் போது அவர்களிடையில் விட்டுக்கொடுப்புகளும் அனுசரிப்புகளும் இருக்கும். அதே நேரம் மறுப்புகளும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் நடக்கும். ஆயினும் அவை வித்தியாசமானவை. நான் பங்கு கொண்ட பெண்கள் சந்திப்புகளின் அனுபவங்கள் இதையொத்தவை. நட்புறவையும் நம்பிக்கையையும் நம்மிடையே உருவாக்குவது புலம்பெயர்ந்து தனித்தவர்களாய் உணரும் பெண்களுக்குச் சக்தியைத் தருகிறது. அங்கு சந்தித்த பெண்ணொருவர் மனம்திறந்து என்னிடம் சொன்னார்  ‘சென்ற தடவை பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது எதிர்கொண்ட சில கேள்விகளால் இன்று என் வாழ்வு மாறியிருக்கிறது. இந்த மகிழ்ச்சியான வாழ்வுக்கு அன்றைய உரையாடல்கள் தான் காரணம்’ என்றார். எனக்கோ இதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சி.
               ‘ஆண்களும் வந்தலென்ன? பார்வையாளர்களாய் எங்களை விட்டாலென்ன? ‘என்று கேட்கும் நண்பர்களுண்டு. நான் ஒன்று கேட்கிறேன்….எல்லாக் கூட்டங்களிலும் ஆண்களும் பெண்களுமாகத் தானே அமர்கின்றோம். வருடத்தில் ஒரு முறையாவது நாங்கள் தனியாக அமர்ந்து பேசினால் என்ன? இதனால் உங்களுக்கு என்ன நட்டம்? இன்னுமொரு கேள்வியுமுண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் கருத்தரங்கொன்றிற்கு  நாற்பது பெண்கள் அதுவும் கூட சிலர்  குழந்தைகளையும் சுமந்தபடி வருவார்களா?  என் அவதானிப்பில் பாரிசில் நடந்த பெண்கள் சந்திப்பில் வேறு அரங்குகளில் சந்தித்திராதவர்களைச் சந்தித்தேன். அவர்கள் பாரிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஏனைய நிகழ்வுகள் அவர்களை ஈர்ப்பதில்லை. பெண்கள் சந்திப்பென்பது பெண்களால் விரும்பி வரவேற்கப்படும் நிகழ்வு. அது நிரந்தரத் தலைமையற்று அங்குமிங்கும் அலைந்து கொண்டியங்கும் பெண்களுக்கான வெளி.
             இதையெல்லாம் நான் மனதிலிருந்து எழுதினேன். அன்றைய உரையாடல்கள் பற்றிய குறிப்புகளோடு  மற்றொரு பதிவும் விரைவில் பெண்கள்சந்திப்புப் பற்றி வெளிவரும்.
தர்மினி