pengall

பெண் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காகச் செய்த ஊர்வலங்கள், போராட்டங்கள் என்பதைத் தொடர்ந்து வருடாவருடம் மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேசப் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பெண்தொழிலாளர்கள் தங்களின் ஊதியஉயர்வு -வேலை நேர வரையறை-வாக்குரிமை போன்றவற்றிற்காகப் போராடத்தொடங்கி நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டபோதும் சமூகத்தில் இன்றுவரை அவர்களது நிலை என்ன? தற்போதும் அவர்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்து வீதிகளில் இறங்கி அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் இச்சமுதாயத்தில் அவர்கள் வெறும் பாலியல் பண்டமாகக் கையாளப்படுகின்றார்கள்.

நாளாந்தம் சமூகஊடகங்களில் பெண்கள் மீதான பாலியல்வன்முறை என்ற செய்தி வெளியிடப்படுகிறது. இதோ…இன்று 14 மார்ச் இத்தலையங்கத்தை எழுதுவதற்குச் சற்று முன்னர் கூட வாசித்த செய்தியொன்று மனவுடைவை ஏற்படுத்துகிறது. இன்று இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் எழுபத்தொரு வயதான கன்னியாஸ்திரியொருவர் மீது கூட்டாகப் பாலியல் வன்முறை நடாத்தப்பட்டது என்ற செய்தி எதைச் சொல்கிறது? இது வெறும் செய்தியாகக் கடந்து போய்விடக்கூடிய ஒன்றா?ஆறு மாதக்குழந்தையிலிருந்து எழுபது வயதைத் தாண்டிய மூதாட்டி வரை அவர்கள் பெண்ணுறுப்பைக் கொண்ட ஒரே காரணத்திற்காக வன்முறைக்கு ஆளாகின்றனர்.

ஆடைக்குறைப்பும் உடற்கவர்ச்சியும் இரவில் வெளியே போய்வருவதும் எனப் பெண்கள் மீதே குற்றத்தைத் திருப்பிவிட்டுத் தப்பிக்கும் இதைச்செய்யும் குற்றவாளிகளும் மௌனமாக இதை ஏற்றுக்கொள்பவர்களும் இவ்வன்முறையாளர்கள் அதிகமும் குழந்தைகள் மீது வக்கிரத்தைக் காட்டுவதை எவ்விதம் சாட்டுப்போக்குச் சொல்வர்? மடத்தை உடைத்து எழுபது வயதைத் தாண்டிய பெண்துறவி ஒருவரை வன்புணர்வு செய்யும் இச்சமுதாயப் பிரதிநிதிகள் நமக்கிடையில் தான் ஒளிந்து மறைந்து நிற்கின்றனர்.

கடந்த மாதம் கனகராயன்குளம் மன்னகுளத்தைச் சேர்ந்த 15 வயதுச்சிறுமி சரண்யா இறந்த பின் அவர் கூட்டுப்பாலியல் வன்முறை செய்யப்பட்டது தெரியவந்தது. இவை மிகச் சமீபத்திய செய்திகள்.இச்சஞ்சிகை அச்சடிக்கப்பட்டு உங்கள் கைகளில் கிடைப்பதற்கு முன்னர் இன்னும் எத்தனை செய்திகள் இவை போல வருமெனச் சொல்லமுடியாத நிலை தான் நிலவுகிறது.

நவீனங்களும் தொழினுட்பங்களும் அவசியமானவை.ஆனால் அவற்றைப் பிரயோசனமாகக் கையாளவேண்டிய இளந்தலைமுறை அநியாய வேலைகளுக்குத் தம் அறிவையும் நேரத்தையும் செலவழிக்கின்றனர். கமராக்கள் பெண்களை அவர்கள் அறியாமல் கண்காணிக்கின்றன. பெண்ணுடல்கள் இணையங்களில் தரவேற்றப்படுகின்றன. இவற்றைக் கொண்டு அவர்கள் மிரட்டப்படுவதும் நடக்கின்றன.உள ரீதியாகப் பெண்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் துன்புறுத்தும் இன்னுமொரு வடிவம் இது.

இன்னும் …..இன்னும் பெண்கள் விழிப்படையவும் ஒன்று திரண்டு போராடவும் வேண்டிய சூழ்நிலைகள் அதிகரித்தவாறுள்ளன. சமூகத்தின் ஒரு பகுதியான பெண்ணினம் ஒடுக்கப்படும் போது அச்சமுதாயம் முன்னேறிவிட்டதெனவும் நாம் நாகரிகம் அடைந்து விட்டோமென்றும் எவ்வாறு சொல்லிக்கொள்வது?

நன்றி : ஆக்காட்டி இதழ் 5

Advertisements